வாழ வழிவிடுங்கள் !

Vinkmag ad

வாழ வழிவிடுங்கள் !

மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்ஃபில்.,

திருமணத்தின் நோக்கங்களுள் தலையான ஒன்று இனப்பெருக்கம். உயிரினங்கள் யாவும் கூடிக் குலாவி இன்பம் துய்ப்பதன் பலனாக உண்டாவதே இனப்பெருக்கம். இது எவ்வுயிர்க்கும் இன்பம் பயப்பதாகும். அதை முற்றிலும் இன்பமாக வரவேற்பது மனித இனமாகும். தனக்கென ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயும் தந்தையும் அடையும் இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. பிணங்கிக் கொண்டிருக்கிற தம்பதிகளின் உள்ளங்களில் மகிழ்ச்சியை விதைத்து அவ்விருவருக்கிடையே ஓர் இணக்கத்தை ஏற்படுத்துவது குழந்தைச் செல்வமே என்றால் மிகையில்லை. தம்பதிகள் இருவரும் இணைந்து ஈன்றெடுத்த பிள்ளையாயிற்றே ! அதனால் தம்பதிகளுக்குள் முன்னைக் காட்டிலும் அன்பும் காதலும் மிகுதியாவது இயல்பே.

பிள்ளைப்பேறு என்பது உயர்ந்தோன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்ற ஓர் அருட்கொடையாகும். அல்லாஹ் திருக்குர் ஆனில் கூறுவதைப் பாருங்கள்: இனி இருள் நீங்கி விடியற்காலை புலர்ந்துவிட்டது என்று உங்களுக்குத் தெளிவாகும் வரை (நோன்பின் இரவு நேரங்களில் உங்கள்) மனைவியருடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். (2:187) மனைவியருடன் கூடிக் குலாவுவதே சந்ததியைப் பெருக்கிக் கொள்வதற்காகத்தான் என்பதை இந்த இறைவசனத்தின் மூலம் தெள்ளென விளங்குகிறது. மற்றொரு வசனத்தில், ”உங்கள் மனைவிகள் உங்கள் விளைநிலங்கள். ஆகவே உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்களுடைய பிற்காலத்திற்கு (வேண்டிய சந்ததியை)த் தேடிக் கொள்ளுங்கள்” (2:223) என்று கூறுகின்றான். மனைவியரை வேளாண்மைத்தளத்திற்கு ஒப்பிட்டு, விவசாயிகள் நிலங்களில் விதைகள் விதைத்துப் பயிர்களை அறுவடை செய்வதைப் போன்று நீங்கள் உங்கள் மனைவியருடன் இணைந்து குழந்தைகளை ஈன்றெடுத்துக் கொள்ளுங்கள் என்று நுட்பமாக உரைக்கின்றான்.

அதேநேரத்தில் எல்லோருக்கும் இவ்வரிய பாக்கியம் கிடைத்து விடுவதில்லை. எல்லோரும் தாயாக ஆகிவிடுவதில்லை. அதற்கு அல்லாஹ்வின் கருணைப் பார்வை அவசியமாகும். உயர்ந்தோன் அல்லாஹ் யார் யாருக்குத் தாய்மைப்பேற்றை வழங்கி, என்னென்ன குழந்தைகளை வழங்க நாடுகின்றானோ அவ்வாறே வழங்குகின்றான். அது குறித்து ஓர் இறைவசனம் திருக்குர்ஆனில் இடம்பெறுகிறது: “அவன் விரும்பியவர்களுக்கு பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். மேலும் அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான்.” (42:49-50)

ஒரு பெண்ணைப் பொறுத்தமட்டில் பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகும் குழந்தைப்பேறு இல்லையென்றால் அது அவள் மீது குற்றமில்லை. அல்லாஹ் அத்தகைய பாக்கியத்தை அவளுக்கு நாடவில்லை என்பதுதான் பொருள். அவ்வளவுதான். குழந்தைப்பேறு இல்லை என்பதற்காக அவளை ஒரு குற்றவாளியைப் போன்று பார்ப்பதோ, அவள் ஒரு பாவி அதனால்தான் அல்லாஹ் அவளுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் ஆக்கிவிட்டான் என்று குறை கூறுவதோ மக்களின் அறியாமையாகும்.

அதே நேரத்தில் ஓர் ஆணைப் பொறுத்த வரை அவனுக்குத் தன்னுடைய ஒரு மனைவி மூலம் குழந்தைப்பேறு கிடைக்கவில்லையென்றால் மற்றொரு பெண்ணை முறைப்படி மணமுடித்துப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் பல ஆண்டுகளாகியும் எந்தக் குழந்தையையும் ஈன்றெடுக்காத மனைவியோடு வாழ்கின்ற ஓர் ஆண் மற்றொரு பெண்ணை இரண்டாம் தாரமாக மணமுடிக்க இயலாத நிலையே சமுதாயத்தில் நிலவுவதைக் காண்கிறோம்.

இத்தகைய நிலையைத் தம் வாழ்வில் சந்தித்துள்ள தம்பதிகள் இப்ராஹீம் சார்ரா (அலை) தம்பதிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தால் அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இப்ராஹீம்-சார்ரா தம்பதியருக்குப் பல்லாண்டுகளாகக் குழந்தைச் செல்வம் இல்லை. இதை எண்ணி வருந்திய சார்ரா அம்மையார் தம் அடிமைப்பெண் ஹாஜிர் (அலை) அவர்களுக்கு மனமுவந்து கொடுத்து இவள் மூலம் நீங்கள் வாரிசை உண்டாக்கிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். அதன் பிறகு இப்ராஹீம்- ஹாஜிர் (அலை) இருவருக்கும் பிறந்தவர்தாம் இஸ்மாயீல் (அலை) அவர்கள். பல்லாண்டுகளாகக் குழந்தைப் பேறற்ற சார்ரா அம்மையாரின் விட்டுக்கொடுத்தல் எனும் தியாகத்திற்குப் பிறகுதான் அல்லாஹ்வால் நற்செய்தி கூறப்பட்டு, இப்ராஹீம் – சார்ரா தம்பதியருக்கு இஸ்ஹாக் (அலை) அவர்கள் பிறந்தார்கள்.

பல்லாண்டுகளாகப் பிள்ளைப்பேறற்ற சார்ரா அம்மையார் குழந்தை பாக்கியம் பெற்றது எப்போது? அவர் தம் வாழ்க்கையை மற்றொரு பெண்ணுக்காக விட்டுக்கொடுத்ததால் மலடியாக இருந்த மங்கையை மாதாவாக ஆக்கினான் இறைவன். இது விட்டுக்கொடுத்தலால் கிடைத்த பயன் அல்லவா? விட்டுக்கொடுத்தோர் கெட்டுப்போவதில்லை எனும் முதுமொழி இங்கு நினைவு கூரத்தக்கது. தாய்மைப்பேற்றைப் பெறமுடியாத பெண்கள் தம் கணவரின் மகிழ்ச்சிக்காகத் தம் வாழ்க்கையை மற்றொரு பெண்ணுக்கு விட்டுக்கொடுத்து, கணவன் மற்றொரு பெண்ணை மணந்துகொள்ள மனப்பூர்வமான திருப்தியை வெளிப்படுத்தி, அதற்கான ஆர்வத்தைத் தூண்டி, அவர் மற்றொரு மங்கை நல்லாளை மணந்துகொள்ள இயன்றவரை முயன்றால் அதன் பயனாகத் தாய்மைப்பேறற்ற பெண்டிரும் தாயாகும் வாய்ப்புக் கிடைக்கலாமல்லவா? மற்றொரு பெண்ணுக்குப் பிறந்த தம் கணவரின் பிள்ளைகளைத் தம் பிள்ளைகள் என்றெண்ணி, தாலாட்டி வளர்த்தால், அதன் பயனால் தாயாகும் பாக்கியம் அவர்களுக்கும் கிட்டலாமல்லவா?

அதேபோல் ஒரு பெண்ணுக்குத் தாய்மையடையும் எல்லா வாய்ப்புகளும் சீராக இருந்தும் அவளுடைய கணவனின் ஆண்மைக்குறைவால்தான் அவள் குழந்தையை ஈன்றெடுக்க முடியவில்லையென்றால் அத்தகைய கணவனிடமிருந்து மணமுறிவைப் பெற்றுக்கொண்டு மற்றோர் ஆடவனை மணந்து, அவள் அவன் மூலம் குழந்தைகளைப் பெற்று, மகிழ்ச்சியோடு வாழ்க்கையைத் தொடர இஸ்லாமிய மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. இத்தகைய சூழலில் உள்ள ஒரு கணவன் தானே முன்வந்து தன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்று தன் மனம் விரும்புகின்ற ஓர் ஆடவனை முறைப்படி மணந்துகொண்டு வாழ வழிவிட வேண்டும். மாறாக சமுதாயப் பழிப்புரைக்கு அஞ்சியோ, சுயகெளரவத்திற்காகவோ ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சீரழிக்க முனையக் கூடாது.

ரிஃபாஆ அல்குரழீ (ரளி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் ரிஃபாஆவிடம் (அவருடைய மணப்பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்குச் செய்து மணவிலக்கை முடிவானதாக்கி விட்டார். ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரளி) அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைப் போன்றதுதான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதைய உன் கணவரான) அவரது இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உனது இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது” என்று கூறினார்கள். (நூல் : புகாரீ: 2639)

அதாவது அப்பெண்மணி தம்முடைய முந்தைய கணவரிடம் வாழ்ந்து மூன்று தலாக்கைப் பெற்று விட்டார். இரண்டாவதாக மணமுடிக்கப்பெற்ற கணவர் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸபீர் என்பவருக்கு ஆண்மையில்லை என்பதை ஆடையின் நுனியைப் போன்று எனும் உவமையால் தெரிவித்து, தாம் இவரிடமிருந்து பிரிந்து சென்று முதலாம் கணவரையே மீண்டும் மணந்துகொள்ள அனுமதி கேட்டபோது “இரண்டாம் கணவரிடம் தாம்பத்ய உறவுகொண்டு அவர் உம்மை மணவிலக்குச் செய்தால் நீர் முதலாம் கணவரை மீண்டும் மணந்து கொள்ளலாம்” என்று கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முறைப்படி அப்பெண்மணிக்கு அனுமதி வழங்கினார்கள். ஆக, ஒரு பெண் தன் கணவனின் ஆண்மையின்மையைக் காரணம் காட்டி அவனிடமிருந்து மணவிடுதலை (குலா) பெற்று, தான் விரும்பும் மற்றோர் ஆடவனை முறைப்படி மணந்துகொண்டு வாழ இஸ்லாமிய ஷரீஅத்தில் எந்தத் தடையுமில்லை என்பதையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமையையும் நாம் விளங்கிக்கொள்ளலாம்.

கணவன் ஆண்மையற்றவனாகவோ, இல்லறத்தில் ஈடுபட இயலாதவனாகவோ, தாம்பத்திய உறவில் நாட்டமில்லாதவனாகவோ, தீராத நோயாளியாகவோ இருந்தால் அத்தகையவனுக்கு வாழ்க்கைப்பட்டுள்ள ஒரு பெண் ‘விதியே’ என்று வாழவேண்டிய அவசியமில்லை. (அப்படி வாழ்ந்தால் அது அவளின் பொறுமைக்குச் சான்றாகும்; மறுமையில் நன்மை கிட்டும்; அது வேறு.) பிரிந்து சென்று வேறொருவனை முறைப்படி மணந்துகொண்டு மகிழ்வோடு வாழ இஸ்லாம் இனிதே வழிகாட்டுகிறது.

ஆக, குறைபாடுள்ள ஒரு பெண்ணோ ஆணோ தன் துணையின் மகிழ்வான வாழ்விற்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். தன் துணையின் மகிழ்ச்சியான இல்வாழ்விற்கு எவ்விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது. அதுவே இஸ்லாம் காட்டும் அழகிய வாழ்வியல் நெறிமுறை. அதை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் கட்டாயம் கடைப்பிடிப்போமாக !

 

நன்றி : இனிய திசைகள்

அக்டோபர் 2014

News

Read Previous

ஆற்றாமையின் ஆறாம் தேதி!

Read Next

அதிக விலைக்கு யூரியா: மக்கள் மறியல்

Leave a Reply

Your email address will not be published.