ரமளான் வந்து விட்டது

Vinkmag ad

ரமளான் வந்து விட்டது

-திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தார்

thahiruae@gmail.com

Mob  .974 + 66928662

பாவங்களே வாழ்க்கையாகி விட்ட மனித சமூகம் தம்மை பரிசுத்தப் படுத்திக் கொள்ள காலம் நெருங்கி விட்டது. இந்நிரந்தரமற்ற இவ்வுலகிலிருந்து விடைபெற்று செல்லும் மறுவுலகில் சுவனத்திற்கு தம்மை முன்பதிவு செய்யும் தருணம் வந்து விட்டது. பூமிப் பந்து முழுவதும் இன்னும் சில நாட்களுக்குள் ரமளானுக்குள் நுழைய இருக்கிறது. இவ்வுலகிற்கே -நேர்வழிக் கிடைத்த மாதம் வரப் போகிறது இதோ! இவ்வுலகம் மாறப் போகிறது.

ரமளான்  மாதம் பற்றியும் அதில் நோன்பு நோற்க வேண்டியது பற்றியும்  இதோ குர்ஆன் கூறுகிறது

ரமளான் மாதம் எத்தகையதென்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். ஆனால் எவரேனும் நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால், அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும், அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காக நீங்கள் அவனுடைய மேன்மையைப் போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்குக் காண்பிக்கப்படுகிறது!) (குர்ஆன் 2:185)

நோன்பின் நோக்கம் பற்றி பின்வரும் குர்ஆன் வசனம் இவ்வாறு கூறுகிறது  “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)

ரமளானின் நோக்கம் மனிதன் தன்னை பாவத்தை விட்டும் தன்னை பரிசுத்தத் படுத்திக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!  (அறிவிப்பாளர் .அபூஹூரைரா (ரலி). நூல் புகாரி )

மறுவுலகில் ரமளான்  மாதம் செய்யும் அமல்களால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,

“ ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 619)

“போர்க்களத்தில் கேடயம் கொண்டு எப்படி உங்களை பாதுகாத்துக்கொள்கிறீர்களோ அது போன்று நோன்பு நரகத்திலிருந்து உங்களை பாதுகாக்கும் கேடயமாகும்”. (நபிமொழி -அஹ்மத்)

‘ரமளான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின்  வாயில்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன” – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

ரமளானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்

ரமளானில் இரவுத் தொழுகைகள்.

ரமளான்  மாதத்தில் பகலில் நோன்பு நோற்பது மட்டுமல்ல இரவு காலங்களில் நின்று தொழுவதும் நபி (ஸல்) அவர்களால் அறிவுறுத்தப் பட்டுள்ளது என்பதை ஹதீஸ்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.

“ரமளான்  மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 2157 )

ரமளான்  மாதம் இரவுகளில் உமர் (ரலி) அவர்கள்  காலத்தில் மக்கள் 23 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர்.(அறிவிப்பாளர் : யஸீத் இப்னு ரூமான் முஅத்தா, பைஹகி 1-496, ஷரஹுன்னியாயா

கலீபா அலி (ரலி) அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழுவிக்கும் படி பணித்தார்கள். வித்ரை ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள்.
அறிவிப்பாளர் :அப்துர் ரஹ்மான் ஸலமி, நூல்
சுனன் பைஹகி

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொழுகை எப்படியிருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ரமளானிலும் மற்ற மாதங்களிலும் அவர்கள் பதினொரு ரக்அத்துகளுக்கு அதிகமாகத் தொழுததில்லை. (முதலில்) நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே. பிறகு மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் வித்ரு (மூன்று ரக்அத்கள்) தொழுவதற்கு முன்னால் உறங்குவீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘என் கண் தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று பதிலளித்தார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) புகாரி

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ரமளான்  தொடங்கியதுமே தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்களின்  எண்ணிக்கைப் பற்றிய சர்ச்சை சமூகத்தில் தொடங்கி சண்டை சச்சரவில் முடிகிறது. அறிஞர்கள் இதில் இரு கருத்துடையவர்களாக இருக்கின்றனர். பெரும்பாலான அறிஞர்கள் எட்டு ரக்அத்து பற்றிய ஹதீஸ் எல்லா காலத்துக்குமான பொதுவான இரவு தொழுகையான தஹஜ்ஜத்தை குறிக்கிறது.இது அல்லாமல் ரமளான்  இரவுகளில் இருபது ரக்அத்தும் தொழுக வேண்டும் என்று உமர் (ரலி) மற்றும் மற்ற சஹாபாக்கள்,இமாம்கள்  ஆகியோரின் நடைமுறைகளைக்  காட்டுகின்றனர்.எட்டு ரக்அத்து தொழுகை மட்டுமே ரமளான்  இரவுத் தொழுகை என்ற அறிஞர்களில் சிலரைத் தவிர அனைவரும் அதை விட அதிகமாக தொழுவதை அவர்கள் எதிர்க்க வில்லை. இது நபிலான வணக்கமாக இருப்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் தொழலாம்.இன்னும் சொல்லப் போனால் இருபதை விட அதிகமாகவும் தொழுது வந்துள்ளனர். கலீபா உமர் (ரலி) அவர்களின் காலத்தின் இது முறைப் படுத்தப் பட்டு இருபது  ரக்அத்து என வகுக்கப் பட்டு இமாம் ஏற்ப்படுத்தப் பட்டு தொழுகை நடத்தப் பட்டது. நம்மை விட நபிக்கு மிகவும் நெருக்கமான நேரில் நபியிடம் மார்க்கம் கண்ட உமர் (ரலி) அவர்களின் கருத்து  அனைவரது கருத்தை விடவும் மிகச்சிறந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது..ஒவ்வொரும் ரமளான் இரவுகளில் கட்டாயம் நபிலான தொழுகைகள் தொழ வேண்டும் என்பதே நாம் மேற்கண்ட விஷயங்களில் இருந்து பெரும் கருத்தாகும்.. யாரும் தன்னிடம்   சண்டையிட வந்தால்  நோன்பாளி என்று கூறி பிரச்சினையில் இருந்து தவிர்க்க  வேண்டும்  என்று  நபி (ஸல்) அவர்கள்  கூறியிருக்க நோன்பு  மாதத்திலேயே  தொழுகையின் பெயரால்  சண்டையிடுவது  நோன்பின்  நன்மைகளை  பாழாக்குவதாகும் .

ரமளானில் குர்ஆன் ஓதுதல்

ரமளானில் குர்ஆன் ஓதுவதும் ஓர் முக்கிய அமலாகும். ஒவ்வொரு ஆண்டு ரமளானிலும் நபி (ஸல்) அவர்களிடம்  ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து குர்ஆனை ஒரு முறை முழுவதும் ஓதிக் காண்பிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் விடை பெரும் முன் வாழ்ந்த கடைசி ரமளானில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருமுறை குர்ஆன் முழுவதையும் ஓதிக் காண்பித்தார்கள்.இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ரமளானில் குர்ஆனை ஓதுவதும் ஓதக்  கேட்பதும் நன்மையாகும்.

ரமளானில் தர்மம்

நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமளான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி,வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமளானின் ஒவ்வொரு இரவும் -ரமளான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.( நூல் புகாரி)

எனவே அதிகமதிகம் தர்மம் செய்வதும் இம்மாதம் செய்யும் சிறந்த அமலாகும்.தர்மம் என்றதும் பலரும் நோன்பில் ஜக்காத் கொடுப்பதையே நோன்பில் செய்யும் தர்மமாக நினைக்கின்றனர். ஜக்காத் பொருள் நம்மிடம் வந்ததில் இருந்து ஒரு வருடம் மீதம் கணக்கிட்டு கொடுக்க வேண்டிய கட்டாய அமலாகும்.இது அதையும் தாண்டி உபரியாக செய்ய வேண்டிய அமலாகும். இந்த மாதத்தில் என்று பிரத்தியேகமாக செய்ய வேண்டிய இந்த தருமத்தை செய்பவர்கள் அதற்க்கு முன் கடமையான ஜக்காத் விஷயத்திலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

ரமளானில் உம்ரா

ரமளானில் நிறைவேற்றப்படும் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகராகும்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.(புகாரி, முஸ்லிம்). இந்த ஹதீஸின் படி  ரமளானில் உம்ரா செய்வது மிகுந்த நன்மை தரும் அமலாகும்.அதே நேரத்தில் பணம் இருக்கிறது என்பதற்காக வருடா வருடம் ஆயிரக்கணக்கில் செலவு செய்வது உம்ரா செய்பவர்கள் தம்மை சுற்றி வறுமையில் அல்லாடும் குடும்பங்கள், ஏழ்மையின் காரணத்தால் திருமணமாகாமல் இருக்கும் முதிர்கன்னிகள், படிக்க வசதியின்றி கஷ்டப்படும் ஏழை மாணவர்கள் ஆகியோரையும் கருத்தில் கொள்ள வேண்டும்.ஒரு தடவையுடன் நிறுத்திக் கொண்டு அடுத்த அடுத்த ஆண்டுகளில் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.ஏன் என்றால் வறுமையின் காரணமாக இவர்கள் வழி தவறவோ, மதம் மாறவோ வாய்ப்புண்டு. அப்படிப் பட்ட நிகழ்வுகள் நடப்பதைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் அறிஞர்கள் ஹஜ் ஒரு தடவையோடு நிறுத்தி இவர்களுக்கு உதவ வேண்டும் என்று  கூறியுள்ளதை இதற்க்கு முன்னுதாரணமாக சொல்லலாம்.

இஃதிகாஃப் இருத்தல் 

.ரமளானின் கடைசிப் பத்தில் ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் வீட்டிலும் இஃதிகாஃப் இருக்க வேண்டும் ஏனென்றால் “’நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசி பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும்வரை இஃதிகாஃப் (பள்ளியில் தங்கி) இருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத்)

‘நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்துக்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்)

 

லைலத்துல் கத்ர் இரவு வணக்கங்கள்

ரமளானின் கடைசிப் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப் படையான இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவை தேடுவதும்,அதாவது நின்று வணங்குவதும் நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்திச் சொல்லப் பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் ரமளானின் சாரமே இந்த இரவுகளை மனிதன் அடைந்து மிக உயர்ந்த நிலையை அடைவதில்தான் இருக்கிறது.

குர்ஆன் கூறுகிறது “ நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம் (97:1)

சூரா பகராவில் குர்ஆன் ரமளான்  மாதம் இறக்க பட்டதை பற்றி கூறும் அல்லாஹுத் தஆலா அது இறங்கிய நேரத்தை பற்றி மேற்க் கண்ட சூரா கத்ரில் குறிப்பிடுகிறான்.

நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவை தேடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள் அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்: புகாரி,

.அந்த இரவுகளில் “அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன் மன்னிப்பையே விரும்புபவன் எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக) என்ற துஆவை ஓதுமாறு பணித்துள்ளார்கள்.  ( அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூலகள்:இப்னுமாஜா)

இன்று ரமளான் இருபத்து ஏழு இரவு மட்டும் சிலரின் அனுமானத்தின் பேரில் லைலத்துல் கத்ர் இரவை அனுஷ்டித்து அன்று மட்டும் அமல் செய்வது மார்கத்தில் ஏற்கத் தகுந்ததல்ல. மேலும் அன்றைய இரவுக்கென்று பிரத்தியேகமாக பள்ளிவாசல்களை மின் விளக்குகளால் அலங்கரிப்பது,இனிப்பு பரிமாறுவது ஆகியனவெல்லாம் பிற்காலத்தில் மார்கத்தில் ஏற்ப்படுத்தப் பட்ட புதிய விஷயங்களாகும்.எனவே இவற்றையெல்லாம் தவிர்த்து அன்றைய இரவு உட்பட கடைசிப் பத்தின் ஒற்றைப் படையான இரவுகளின் அவசியமான தூக்கத்தை தவிர ஒவ்வொரு நிமிடத்தையும் பாவமன்னிப்பிலும் தொழுகையிலும்,குர்ஆன் ஓதுதலிலும் கழித்து அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டும்.

நோன்பில் செய்யக் கூடிய  ஒரு அமலுக்கு  எழுபது என்று அபரிதமான  நன்மைகள் கிடைக்கும் என்று இருக்க  இந்த பொன்னான நேரங்ககளில் ஜவுளிக் கடைகளில் துணி எடுப்பதையே அமல் போல கருதி கடைகளில் ஏறி இறங்குவது  அமல்கள்  செய்யும்  நேரத்தை இழக்க காரணமாகி விடும் .

நோன்பின்  நோக்கமே மனிதன் பொய்யான  விஷயங்களில் இருந்து  தவிர்ந்து  கொள்ள வேண்டும்  என்று  என்று  நபி (ஸல்) அவர்கள்  சொல்லியிருக்க இ நோன்பு காலங்களிலும் புறம் பேசுவது, சினிமா படங்கள் பார்ப்பது ,வீண் அரட்டை அடிப்பது ஆகியன நோன்பின் நோக்ககத்தையே தகர்ப்பதாகும் .

யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவர் மன்னிப்பு பெற வில்லையோ அவர் நரகம் நுழைவார்.அல்லாஹ்வின் அருளை விட்டும் அவர் தூரமாகிவிடட்டும் என்ற ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறி நபி (ஸல்) அவர்கள் ஆமீன் கூறியது நம் அனைவருக்கும் எச்சரிக்கையாகும்

ரமளானில் செய்யக் கூடிய ஒவ்வொரு அமலுக்கும் எழுபது மடங்குக் கூலி கிடைக்கும் என்பதும், “ரையான்” என்னும் பிரத்தியேகமான சுவனம் நோன்பாளிக்கு கிடைக்கும் என்பதும் அவருடைய அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப் படும் என்பதும்  ரமளானை அடைந்து அதை நற்செயல்களில் கழித்தோர் பெரும் சுபச்செய்தியாகும்.

******************************************************************************

 

News

Read Previous

பிஸ்கெட் என நினைத்து எலி மருந்து தின்ற குழந்தை சாவு

Read Next

பிறை கூறும் சேதி

Leave a Reply

Your email address will not be published.