மொழி பெயர்ப்புத் துறையில் தமிழக முஸ்லிம்கள்

Vinkmag ad

 

              ( மெளலவி ஏ. ஹாஜா முஹ்யித்தீன் )

ஒரு மொழியில் உருவான ஆக்கங்களை வேறு ஒரு மொழியில் மொழி பெயர்த்து தத்தெடுப்பது என்பது அகிலம் வாழ் அறிஞர்களிடையே இயங்கி வரும் செயலாகும்.

நாடுகள் தோறும் பாசைகள் வேறு வேறாக இருப்பினும் இலக்கியமானது நாடுகளையும் மொழிகளையும் கடந்து ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து ஓர் அணியில் பவனிவரும் காட்சிகளை வரலாற்றின் பதிவுகளும், பக்கங்களும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஞாலத்தால் போற்றிப் பாதுகாத்து வரும் கருத்துப் பேழையான இஸ்லாமிய திருவேதமாம் திருக்குர்ஆன் ஷரீபையும், அம்மறையை இறைவனிடமிருந்து அவனியோருக்குப் பெற்றுத் தந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களது வாழ்வும், வாக்குமான ஹதீஸ்களையும், இறைமறையும், நபி உரையும் இணைந்து வார்த்துத் தந்த மார்க்கக் கடமைகள் பற்றிய மார்க்க சட்ட திட்டங்களையும் அவை சம்பந்தப்பட்ட அறிவியலும், அறிவுறுத்தலும் கலந்து வெளியான உண்மை வரலாறுகளையும் அவை உருவான மொழியிலிருந்து உலகில் உலவி வரும் அனைத்து உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, தாய் மொழியிலேயே இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இன்று அதிகம் ஏற்பட்டுள்ளது. செம்மொழியாம் தமிழ் மொழிகளில் மேற்கண்ட ஆக்கங்களின் மொழிபெயர்ப்பு வெளியீடுகள் கடந்த 50 ஆண்டுகளாக வரத் தொடங்கியுள்ளன.

‘மொழி பெயர்ப்புத் துறையில் தமிழக முஸ்லிம்கள்’ என்ற தலைப்பில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உலக மொழிகளில் திருக்குர்ஆன்:

மேற்கத்திய மொழிகளில் முதன் முறையாக திருக்குர்ஆனை மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம் பிரான்ஸ் நாட்டு அறிஞரான ‘பத்ரஸ் நராபுலுஸ்’ என்பவருக்கு உதயமாயிற்று. அவர் அதன் மொழிபெயர்ப்பை இலத்தீன் மொழியில் தொடங்கி வைத்தார். ஆனால் அவர் கி.பி.1157 ஆம் ஆண்டில் மரணமடைந்து விட்டதால் அவர் தொடங்கிய திருப்பணி பூர்த்தியடையவில்லை.

பின்னர் அதனை மிஸ்டர் ‘ராபர்ட்டீனியா’ என்ற ஆங்கிலேயரும் ‘ஹர்மன் ஆவர்’ என்ற ஜெர்மானியரும் இணைந்து கி.பி.1242 இல் நிறைவு செய்தார்கள். இருந்தும் அம்மொழிபெயர்ப்பு ஏதோ சில காரணங்களால் சுமார் 400 ஆண்டுகளாகியும் வெளியிடப்படாமலிருந்து கி.பி.1543 ஆம் ஆண்டில் ‘டியூட் பீலி இண்ட்’ என்பார் சுவிட்சர்லாந்திலிருந்து முதன் முறையாக அதனை அச்சிட்டு வெளியிட்டார்.

பிறகு இம்மொழிபெயர்ப்பை இத்தாலி ஜெர்மன், டச்சு ஆகிய நாட்டு அறிஞர்கள் அவரவர் நாட்டு மொழிகளில் வெளியிடலாயினர்.

அதன்பின் 1293 இல் சிந்தி மொழியில் ‘அஸீனத்துல்லாஹ்’ என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டு 1318 இல் மும்பையில் முஹம்மது சித்தீக் அப்துர் ரஹ்மான் என்பவரால் நூல் வடிவில் வெளிவந்தது.

தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு அறிஞர்கள் 1648 லும், இத்தாலி நாட்டவர்கள் 1547, 1612, 1847 ஆண்டுகளிலும் டச்சுக்காரர்கள் 1661, 1799, 1860 ஆம் ஆண்டுகளிலும் ‘ஸ்பானிய’ மொழியில் 1844 லிலும் ‘பெர்த்காலி’ மொழியில் 1882 லும் ‘ஸ்ரூபாயி’ மொழியில் 1895 ஆம் ஆண்டிலும், டென்மார்க், அர்மீனி, பில்கேரி, பூசிமியா, ரூமாணீ, ஹங்கேரி நாட்டவர்கள் அவரவர் மொழிகளிலும் மொழிபெயர்ப்புகளை வெளியிட; ஜாவீ, ரஷ்யமொழி, அர்கோணி, துருக்கி, பஞ்சாபி, பார்ஸி, ஆங்கிலம், உர்து போன்ற பன்னூற்றுக்கணக்கான மொழிகளிலும் திருக்குர்ஆனுக்கான மொழிபெயர்ப்பு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் :

இக்கால கட்டத்தில் தமிழகவாழ் மக்களுக்காக தமிழில் திருக்குர் ஆனின் மொழிபெயர்ப்புகள் வெளியாகும் நேரம் உதயமாகியது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சேர்ந்த மவுலானா நூஹ்லெப்பை ஆலிம் அவர்களால் ‘தப்ஹீஸீல் பத்ஹுல் கரீம்’ என்ற பெயரில் அரபுத் தமிழில் ஓர் மொழிபெயர்ப்பு வெளியாயிற்று.

தமிழ் மொழியில் முழுமையாக வெளிவந்த முதல் தமிழ் மொழிபெயர்ப்பு கி.பி. 1926 ஆம் ஆண்டில் அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் திருக்குர்ஆனுக்கு ‘தர்ஜுமா’ – மொழிபெயர்ப்பு செய்ய முயற்சி செய்து கி.பி.1949 இல் இரண்டு பாகங்களில் வெளியிட்ட தர்ஜுமத்துல் குர்ஆன் – பி அல்தபில் பயான்’ என்ற மொழிபெயர்ப்பு நூலாகும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற (அரபி) திருவசனத்திற்கு “அளவற்ற அருளாளனும் – நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்…” என்ற சொற்றொடைரைத் தூய தமிழில் அமைத்துத் தந்த பெருமை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களையே சாரும்.

மவுலானா ஆ.கா. அ. அவர்கள் திருக்குர்ஆனுக்குரிய தர்ஜுமாவை வழங்குவதற்காக செய்த பிரயாசைகளும், பிரயாணங்களும் பிரமிப்பு ஊட்டக்கூடியதாக உள்ளது.

இனிய தமிழில் எளிய நடையில் பிற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பாமரர்களும் கூட படித்து விளங்கிக் கொள்ளும் வகையில் வடிவமைத்துத் தந்துள்ளார்கள்.

பல பக்கங்களில் எழுதி புரிய வைக்க வேண்டிய விவரங்களை மூல உரைக்கு ஊறு ஏற்படா வண்ணம் மொழிபெயர்த்து நாம் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கங்களை திருவசனங்களிடையே இணைக்கப் பெற்றிருக்கும் பிறைவளைவு கோடுகளுக்குள் (brackets) வழங்கி இருக்கும் முறை புதுமையானதாகும்.

1913 இல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பி.வி. காதிர் முகைதீன் ஆலிம் சாஹிபு அவர்கள் ‘அம்மயத்’ பாகத்தை மட்டும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். வளுத்தூரைச் சேர்ந்த           அ. முஹம்மது தாஹிர் சாகிபு அவர்கள் ‘குர்ஆன் ஷரீபு’ என்ற பெயரில் அரபு மூலமில்லாமல் முதல் மூன்று அத்தியாயங்களை மட்டும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

‘ஜவாஹிருல் ஃபுர்கான் ஃபீ தர்ஜூமத்தில் குர்ஆன்’ என்ற பெயரில் ஜனாப். பா. தாவூது சாஹிபு அவர்களால் ஒரு மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. இது லாகூரைச் சேர்ந்த முஹம்மது அலி சாஹிபு அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தழுவி எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஆம் ஆண்டில் குர்ஆன் மஜீது எனும் பெயரில் சென்னை டாக்டர் எஸ். முஹம்மது ஜான் அவர்களால் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இப்பொழுது ஜான் டிரஸ்ட் மூலம் தொடர்ந்து மொழிபெயர்ப்பு (திருமறை) நூல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இம்மொழிபெயர்ப்பின் ஒரு பக்கத்தை இரு பிரிவாக்கி அதில் ஒரு புறத்தில் அரபியில் உள்ள திருவசனங்களும் அதன் மறுபுறத்தில் அவ்வசனங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பும் தேவையான இடங்களில் சிற்சில திருவசனங்களுக்கு அடிக்குறிப்புகளும் வரையப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

1992 ஆம் ஆண்டில் சென்னை ‘திரீயெம்’ பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் மெளலானா, மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப், மெளலானா, மெளலவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ, மெளலானா, மெளலவி ஆர்.கே. அப்துல் காதிர் பாகவி ஆகிய மூன்று ஆலிம் பெருமக்களைக் கொண்டு ‘குர்ஆன் தர்ஜமா’ என்ற பெயரில் முதல் பதிப்பு வெளியிடப்பட்டு, தொடர்ந்து பல பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

1992 ஆம் ஆண்டில் மெளலவி கே. இக்பால் மதனி அவர்களின் தலைமையில் இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களின் குழு ஒன்று, ஒன்று சேர்ந்து ‘சங்கைமிக்க குர்ஆன்’ எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததை சவூதி அரசாங்கம் தம் சார்பில் வெளியிட்டுள்ளது.

ஐகுகூ என்னும் இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் மெளலானா ஸையித் அபுல் அஃலா மெளதூதி அவர்களது உர்து மூல நூலை அடிப்படையாகக் கொண்டு 1996 ஆம் ஆண்டில் திருக்குர்ஆன்  (தமிழாக்க விரைவுரை ) என்ற பெயரில் மொழிபெயர்ப்பை வெளியிட்டது.

2002 ஆம் ஆண்டில் திண்டுக்கல் மெளலானா மெளலவி அ. சிராஜுத்தீன் நூரி அவர்களால் தர்ஜமா அல் குர்ஆனில் கரீம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் மொழி பெயர்ப்பை சென்னை பஷாரத் பப்ளிஷர்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டனர். இம்மொழி பெயர்ப்பின் சிறப்பு என்னவெனில் திருவசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி, அது சம்பந்தமான நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதே.

2002 ஆம் ஆண்டில் மெளலவி பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள் எழுதியுள்ள 400 விளக்கக் குறிப்புகளுடன் கூடிய திருக்குர்ஆன் எனும் தமிழ் மொழிபெயர்ப்பு சென்னை மூன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

’தப்ஸீர் என்னும் தமிழ் விரிவுரைகள் :

திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்புடன், திருவசனங்களுக்கான தெளிவான நீண்ட விளக்க உரைகள் அரபிமொழியில் ஏராளமாக வெளிவந்துள்ளன. தவிர அரபிமொழியில்லாத பிற மொழிகளிலும் விரிவுரைகள் நிறையவே வெளிவந்துள்ளன. தமிழ் மொழியில் சமீப காலத்தில் தான் திருக்குர்ஆனுக்கான விரிவுரைகள் (தமிழ் தப்ஸீர்கள்) வெளிவரத் தொடங்கியுள்ளன.

உத்தமபாளையம் பெற்றுத் தந்த சன்மார்க்க மூதறிஞர் அல்லாமா எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதிர் பாகவி அவர்களால் 1937 ஆம் ஆண்டில் தொடங்கி 1961 ஆம் ஆண்டு வரை ‘தப்ஸீருல் ஹமீது ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன் மஜீது’ எனும் பெயரில் எழுதியதை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஹாஜி எம்.ஏ. ஷாஹுல் ஹமீது & சன்ஸ் பதிப்பகத்தார் வெளியிட்டனர். 7000 பக்கங்களில் ஏழு பாகங்களாக வெளிவந்த விரிவுரையே தமிழில் முதன் முதலில் வெளிவந்த முழுமையான தமிழ் தப்ஸீர் ஆகும். இது ‘ரூஹுல் பயான்’ என்னும் அரபித் தப்ஸீரின் விரிவுரையைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

1955 ஆம் ஆண்டிலிருந்து கூத்தாநல்லூர் ஆதம் டிரஸ்ட் நிறுவனத்தார் ‘அன்வாருல் குர்ஆன்’ எனும் தமிழ் விரிவுரையை தென்காசி மெளலானா மெளலவி இ.எம். அப்துல் ரஹ்மான் அவர்களைக் கொண்டு எழுத வைத்து 30 பாகங்களும் சில ஆண்டுகளில் வெளியாக்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டு முதல் வேலூர் அல்பாக்கியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி ‘தப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன்’ என்னும் பெயரில் ஆலிம் குழு ஒன்றைக் கொண்டு திருக்குர்ஆனுக்கான விரிவுரையை தமிழில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

சமீப காலமாக சென்னை ரஹ்மத் அறக்கட்டளையின் பெருமுயற்சியில் ‘தப்ஸீர் இப்னு கஸீர்’ எனும் தமிழ் தப்ஸீர் எட்டு பாகங்களில் வெளியிடத் திட்டமிட்டு 2003 இல் முதல் பாகம் வெளியானது. தொடர்ந்து இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்துவிட்டன. மொழி பெயர்ப்புக் குழுவுக்கு தலைவராக        அ. முஹம்மதுகான் பாகவி அவர்கள் இருக்கிறார்கள்.

ஹதீஸ்கள் என்னும் நபிமொழித் தொகுப்புகள் :

திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக (விளக்க) ஆதாரமாக விளங்குவது அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்குமான ‘ஹதீஸ்கள்’ என்னும் நபி மொழிகளாகும். அரபி மொழியில் பன்னூற்றுக் கணக்கான நபி மொழித் தொகுப்புகள் இருந்தும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படாமல் நீண்டகாலம் கடந்து விட்டது உண்மையான செய்தி.

இந்நிலையில் உத்தமபாளையம் அறிவுப் பேரொளி அல்லாமா எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் ‘தஜ்ரீதுல் ஜாமிஇஸ் – ஸஹீஹுல் புகாரீ என்னும் பெயரில் புகாரீ ஷரீஃபின் நபிமொழித் தொகுப்பை முதலில் தமிழ் மொழியில் வெளியிட்டார்கள். இதன் அரபி மூலப்பிரதிக்கு உரியவர் ஹுஸைன் இபுனு முபாரக் அஸ்ஸுபைதி (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.

மூன்று பாகங்களாக அல்லாமா அவர்களால் எழுதப்பட்ட அத்தொகுப்பின் மூன்றாவது பாகம் 1957 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

துபை இஸ்லாமிய மையம் IAC சார்பில் மெளலவி கே. முஹம்மது இக்பால் மதனீ அவர்கள் எழுதிய ‘முக்தஸர் ஸஹீஹ் முஸ்லிம்’ என்னும் நபிமொழித் தொகுப்பினை 1989 இல் வெளியிடப்பட்டது. இதனுடைய அரபி மூலத்தை தொகுத்துத் தந்தவர் ஹாஃபிள் அப்துல் அளீம் அல்முன்திரி (ரஹ்) அவர்களாவர். அது வெளியான காலம் 1279 ஆம் ஆண்டாகும். இதன் தமிழாக்கம் நான்கு பாகங்களாகும்.

உத்தமபாளையம் மெளலானா மெளலவி முஹம்மது இபுறாஹீம் பாகவி அவர்கள் ‘ஷமாயிலுத் திர்மிதீ’ என்னும் அரபி நபிமொழித் தொகுப்பைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

‘ரியாளுஸ் ஸாலிஹீன்’ எனும் நூலும் தமிழ் அறிஞர்கள் பலரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

ஹாஃபிள் இபுனு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கி.பி. 1377 ஆம் ஆண்டில் தொகுக்கத் துவங்கி கி.பி. 1448 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘புலூகுல் மராம்’ என்னும் நபிமொழித் தொகுப்பை 1999 ஆம் ஆண்டில் தமிழுலகம் பெற்றுக் கொண்டது.

சென்னை ரஹ்மத் அறக்கட்டளை மூலம் ‘ஸஹீஹுல் புஹாரீ யின் தமிழாக்கம் ஏழு பாகங்களாகவும், ஸஹீஹுல் முஸ்லிம் உடைய தமிழ் பெயர்ப்பு நான்கு பாகங்களாகவும் அரபி மூலம், தமிழாக்கம், அடிக்குறிப்புகளுடன் கூடிய நிலையில் பல பதிப்புகள் வெளிவந்து விட்டன.

தவிர, மேற்படி ரஹ்மத் அறக்கட்டளை மூலம் இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் ‘ஸிஹாஹ் ஸித்தா’ எனப்படும் ஆறு நபிமொழி நூல்களான புகாரீ, முஸ்லிம் நீங்கலாக (ஏற்கனவே இவைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் வெளிவந்து விட்டபடியால் ஏனைய) தொகுப்புகளான திர்மிதீ, நஸயீ, அபூதாவூது, இப்னுமாஜா ஆகிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுதிகள் வெளிவர இருக்கின்றன.

மார்க்க சட்ட நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

ஃபிக்ஹு எனப்படும் மார்க்கச் சட்ட நூல்கள் அரபியிலும் பிற மொழிகளிலும் அதிகம் வெளிவந்துள்ளன. ஆனால், தமிழிலோ மிகக் குறைந்த அளவில்தான் மார்க்கச் சட்டம் சம்பந்தப்பட்ட தமிழாக்க நூல்கள் வெளிவந்துள்ளன.

உத்தமபாளையம் பெருந்தகை அல்லாமா எஸ்.எஸ். அப்துல் காதிர் பாகவி அவர்கள் 1968 ஆம் ஆண்டில் அரபியில் ‘கன்ஸுத் தகாயிக்’ என்றிருந்த சட்ட நூலை அதே பெயரில் தமிழ்ப்படுத்தி வெளியிட்டார்கள். தவிர ‘தஅலிமுல் இஸ்லாம்’ தொழுகை, ரமலான் நோன்பு, ஹஜ்ஜு கடமைகள் சம்பந்தப்பட்ட சட்ட நூல்களையும் அல்லாமா அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

’ஃபத்ஹுல்முயீன்’ என்னும் அரபி மார்க்கச் சட்டநுலைத் தழுவி ஷாபிய்யி மத்ஹபின் ஃபிக்ஹு சட்டக் களஞ்சியம் எனும் நூலை மெளலானா ஆதம் முஹ்யித்தீன் பாகவி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள்.

கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் எழுதப்பட்ட ஷாஃபிய்யி மார்க்கச் சட்ட நூலான ‘மஃகானீ’ என்னும் நூலை கீழக்கரை மவுலானா அப்ஸலுல் உலமா டாக்டர் ஸுஐபு அவர்கள் தமிழாக்கி வெளியிட்டுள்ளார்கள்.

மதுரை குர்ஆனியா புக் டிப்போ மூலம் வெளியிடப்பட்ட ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம்’ பிரபலமான முறையில் விற்பனையான நூல். இதனை தேவதானப்பட்டி மெளலவி அப்துல் கரீம் ஆலிம் அவர்கள் எழுதி உருவாக்கினார்கள்.

‘ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்’ ‘இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் பார்ஸி மொழியில் எழுதி முடித்த இஹ்யா உலூமித்தீன்’ நூல் அரபியிலும், உலகின் பிற மொழிகளிலும் பிரசுரமாகி உள்ளது. அதன் ஹிந்தி அல்லது உர்துமூலத்தில் உள்ள தொகுப்பை நெல்லிக்குப்பம் மெளலவி அப்துர் ரஹ்மான் சாகிபு அவர்கள் தமிழாக்கம் செய்து எழுதிட, சென்னை எம்.ஏ. ஷாஹுல் ஹமீது & சன்ஸ் பதிப்பகத்தார் 4 பாகங்களாக வெளியிட்டுள்ளார்கள். இதன் ஐந்தாம் பதிப்பு 1958 ல் வெளியாகி உள்ளது. ‘ஸிம்துஸ் ஸுப்யான்’ போன்ற அரபுத்தமிழ் சட்ட நூல்களும் வெளியாகி உள்ளன.

அமல்கள் எனும் அனுஷ்டானங்கள் :

அமல்கள் எனும் மார்க்க அனுஷ்டானங்களைப் பொறுத்த வரையில் தமிழில் அறிஞர்கள் பலர் அநேக நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர். அமல்களின் சிறப்புகளை ஷைகுல் ஹதீஸ் மெளலானா முஹம்மது ஜகரிய்யா ஹழ்ரத் அவர்கள் உர்துமொழியில் எழுதியுள்ள பல நூல்களைத் தமிழக ஆலிம் பெருமக்கள் பலர் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர். ஹழ்ரத் அவர்களின் ‘தஃப்லீக்’ சம்பந்தப்பட்ட அநேக நூல்களை சென்னை ஸலாமத் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வரலாற்றுத்துறை :

வரலாற்றுத்துறையைப் பொறுத்தவரை மிகக் குறுகிய எண்ணிக்கையில் தான் வரலாற்று நூல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன.

உத்தமபாளையம் அல்லாமா எஸ்.எஸ்.அப்துல் காதிர் பாகவி அவர்கள் முஹம்மது ரிஸா (ரஹ்) அவர்கள் எழுதிய முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) என்ற அரபு நூலை மையமாக வைத்தும், எகிப்தின் வரலாற்று மேதை முஹம்மது ஹுஸைன் ஹைக்கல் (ரஹ்) அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ‘ஹயாத்து முஹம்மது மஆலிமு தாருல் ஹிஜிரா’ என்ற நூலை மையமாக வைத்தும், உர்துவில் வெளிவந்த ‘தாரீக்குள் இஸ்லாம், ஸீரத்துந் நபவீ, ரஹ்மத்துன் லில் ஆலமீன் போன்ற நூல்களை மையமாக வைத்தும் இன்னும் பிற ஆங்கில நூல்களையும் தேர்வு செய்து, அவற்றை மையமாக வைத்து, ஆய்வுகளை மேற்மொண்டு ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற பெயரில் 1962 ஆம் ஆண்டில் ஒரு வரலாற்று நூலை வெளியிட்டார்கள்.

2004 ஆம் ஆண்டில் வெளியான ‘அர் ரஹீகுல் மக்தூம்’ என்னும் நபி (ஸல்) அவர்களின் வரலாற்று நூல் மெளலானா ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி அவர்களால் அரபியில் எழுதப்பட்டு மெளலவி அ. உமர் ஷரிஃப் காசிமி அவர்களால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ‘ரஹீக்’ என்னும் பெயரில் தாருல் ஹுதா என்னும் நிறுவனம் வெளியிட்டு விற்பனையில் உள்ளது.

அவை தவிர ஹைகுல் ஹதீஸ் மெளலானா ஜக்ரிய்யா ஹழ்ரத் அவர்களால் உர்துவில் எழுதப்பட்ட சஹாபாக்கள் வரலாறு திருச்சி பேராசிரியர் சையித் இபுறாஹீம் M.A.L.T. அவர்களால் எழுதப்பட்ட கலீபாக்கள் வரலாறு R.P.M. கனி, M.R.M. அப்துர் ரஹீம், ஹஸன், கவிஞர் மு. மேத்தா, வலம்புரிஜான் போன்ற தலைசிறந்த எழுத்தாளர் பெருமக்களால் பல ஆய்வு நூல்களும் நவீனங்களும் வெளிவந்துள்ளன.

ஆன்மீகமும், இலக்கியமும் கலந்து புதினங்களான மெளலானா ரூமியின் மஸ்னவி ஷரிபும், இமாம் ஸ்அதியின் குலிஸ்தான் கவிதைகளும் வெளிவந்துள்ளன.

மாற்று மொழியில் உள்ள வரலாற்று புதினங்கள் தமிழில் இன்னும் அதிக அளவில் மொழிபெயர்ப்பு செய்து பதிப்பிக்கப்பட வேண்டும் என்பது என் போன்ற வரலாற்று பிரியர்களின் ஆவலாக உள்ளது.

வாழ்வியல் துறை :

வாழ்வியல் சம்பந்தப்பட்ட இன்னும் உளவியல் சம்பந்தப்பட்ட நூல்களில் பலதை எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் போன்ற அறிஞர்கள் ஆங்கில மொழியிலிருந்து தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளார்கள். இஹ்யா உலூமித்தீனின் பற்பல தலைப்புகளை வகைப்படுத்தி நாகூர் மெளலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் தொகுத்து எழுதிட அவற்றை யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சுலைமானியா பப்ளிஷர்ஸ், தஞ்சை காஜியார் புக் டிப்போ போன்ற வெளியீட்டு நிறுவனங்களின் மூலம் பல பதிப்புகள் வெளியாகி தமிழ் சமுதாய மக்களிடையே பவனி வந்து கொண்டிருந்தது.

டாக்டர் மாரீஸ் புகைல் அவர்கள் பிரெஞ்சு மொழியில் எழுதிய ‘விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும்’ என்ற நூல் ஆங்கிலத்தில் வெளிவர, அதனை இஷா அத்துல் இஸ்லாம் பணித்துறையைச் சேர்ந்த வாவா நகரப்பெருந்தகை ஜனாப் சதாகத் அவர்கள் 1982 இல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். மிகவும் பரபரப்பாக விற்பனையான இந்நூல் இஸ்லாமியர்களிடம் மட்டுமல்லாது கிருத்துவ பெருமக்களுக்கு மத்தியிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.

இன்னும் இலக்கியம், ஆன்மீகம், அறிவியல் சம்பந்தப்பட்ட ஆக்கங்கள் சிற்சில தமிழில் வெளிவந்தாலும், தமிழ் ஆர்வலர்களுடைய பசிக்கு அவை போதாதென்றே கூற வேண்டும்.

இஸ்லாமிய இலக்கிய கழகம் இது போன்று நன்னூல்களை மொழிபெயர்ப்பு செய்யும் அறிஞர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, மேலும் பன்னூற்றுக்கணக்கான படைப்புகளைத் தமிழுலக மக்கள் அடைந்து கொள்ள ஆவன செய்ய வேண்டும் என வேண்டியவனாக நம் தமிழ் மக்களிடையே ஓர் உண்மை நிலையை எடுத்துக்காட்டி இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மொழிபெயர்ப்புக் கலை இன்று மிகச் சிறப்பான நிலையை அடைந்துள்ளது. அரபி மற்றும் பிற மொழிகளிலிருந்து தூய்மையான தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றல் மிகுந்த அறிஞர் பெருமக்களுக்குச் சமுதாயத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரபி மொழியை அறிந்தவர்களுக்குத் தூய தமிழ் தெரியவில்லை. தமிழ் அறிந்த அறிஞர்களுக்கு அரபி மொழி தெரியவில்லை.

இந்நிலை மாற, அரபிக் கல்லூரிகளில் மொழிபெயர்ப்புக்கென தனிப்பிரிவை ஏற்படுத்தி மாணவர்களுக்கு அதற்கரிய பயிற்சியை சரியாக வழங்கிட வேண்டும்.

 

 

நன்றி :

ஸில்மி மாத இதழ்

மார்ச் – ஏப்ரல் 2013

 

 

News

Read Previous

தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம்

Read Next

தத்துவ தேரோட்டம்

Leave a Reply

Your email address will not be published.