மாற்றங்கள் மலர இஸ்லாம் ஒன்றே வழி !

Vinkmag ad

மாற்றங்கள் மலர இஸ்லாம் ஒன்றே வழி !

ஆலிமா A. பாத்திமா தமீம் சித்தீகியா

 

இன்று நம் சமுதாயம் பல சீர்கேடுகளினாலும், பல கொடுமைகளினாலும் போர்த்தப்பட்டு இருக்கின்றது. இன்றுவரை இந்தத் தீமைகளை யாராலும் களைய முடியவில்லையே ! ஏன்? ஏனென்றால் மனிதர்களால் இயற்றப்படுகின்ற சட்டம். மனித குலத்திற்கே பொருத்தமற்றவை என்பதனால் தான். காலத்திற்கு காலம் சட்டங்கள் மாற்றப்படுகின்றன. இன்றளவும் பல சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. ஆனால் குற்றங்கள் குறைகின்றனவா? குற்றங்கள் குறைந்து நமது சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்கின்றனவா?

உதாரணமாக திருட்டு என்பதை எடுத்துக் கொள்வோம். திருட்டுக்கள் அதிகமாக நிகழும் நாடுகளில் முதல் இடத்தை வகிப்பது அமெரிக்காவும் 2 –வது இடத்தைப் பிடிப்பது நமது பாரத நாடான இந்தியாவுமாகும்.

உயிர்காக்க வேண்டிய மருத்துவரின் நல்லாசியுடன் உயிருக்கு உலை வைக்கும் கிட்னி திருட்டு தொடர்ந்து நடைபெறுகிறது என்றால் நமது நாட்டில் குற்றவியல் சட்டத்தில் காணப்படும் ஓட்டைகள் தான் காரணமாகும். இன்றைய சட்டத்தின்படி ஒருவன் திருடினால் என்ன தண்டனை நிறைவேற்றப்படுகிறது? 5 அல்லது 6 மாதம் சிறை தண்டனைதான். திருடுபவன் திருடுவதற்குக் காரணம் வறுமை. ஆனால் அவனுக்கு சிறையில் 3 வேளை நல்ல சாப்பாடு. பொழுது போக்கிற்கு சினிமா. உயர்தரமான மருத்துவ வசதி போன்றவைகள் செய்து தரப்படுகின்றன. இப்படி இருந்தால் திருட்டுக்கள் எப்படி குறையும்? மாறாக இந்தத் தண்டனைகள் அவனை திருடுவதற்குத் தூண்டுகின்றன எனலாம்.

தண்டனை கொடுப்பது எப்படி இருக்க வேண்டும்?

1.குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் அவனைக் குற்றம் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும்.

  1. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்வதற்கு அஞ்ச வேண்டும். அதனால் தான் இஸ்லாம் திருட்டிற்கு தண்டனையாக, “ஆணோ – பெண்ணோ திருடிவிட்டால், அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாய் அவ்விருவரின் கைகளை துண்டித்து விடுங்கள்” (அல்குர்ஆன் 5:58) என்று கூறுகிறது.

விபச்சாரம் செய்தவனுக்கு இன்றைய தண்டனை என்ன? அரசாங்கமே அங்கீகாரம் வழங்கி ‘ரெட் லைட்’ ஏரியா என்ற ஒரு பகுதியை தனியாக ஒதுக்கிக் கொடுத்து விபச்சாரம் செய்கின்றவர்களுக்கு லைசன்ஸ் கொடுக்கும் அவல நிலையைக் காண்கின்றோம். ஆனால் இதற்குத் தக்க தண்டனையாக இஸ்லாம் கூறுவதென்ன? “விபச்சாரி, விபச்சாரன் இவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டோராக இருப்பின், அல்லாஹ்வின் மார்க்கத்தில் விதிக்கப்பட்டதை நிறைவேற்றுவதில் அவ்விருவரின் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். இன்னும் முஃமின்களில் ஒரு குழுவினர் அவ்விருவரின் தண்டனையை நேரில் பார்க்கவும்.” (அல்குர்ஆன் 24:2)

இந்த இடத்தில் ஏன் இஸ்லாம் நம்பிக்கை கொண்ட ஒரு கூட்டத்தாரை தண்டனையை பார்க்கச் சொல்கிறது என்று நாம் சிந்திக்க வேண்டும். ஒரு கூட்டத்தாரின் முன்பு தண்டனையை ஏற்றவர்கள், ஒரு காலமும் மீண்டும் அந்தக் கேவலமான செயலில் ஈடுபடமாட்டார்கள்.

இன்னொரு வேதனைக்குரிய விஷயம், நம் நாட்டில் கருக்கலைப்பு என்ற பெயரில் ஆண்டுதோறும் 50 லட்சம் பெண் சிசுக்கொலைகள் நிகழ்கின்றன. உலகில் வேறு எங்காவது இந்த அளவிற்கு பெரும் எண்ணிக்கையில் பெண் சிசுக்கொலை நிகழ்கின்றதா? இந்த கருவறை கதறலுக்கு பதில் சொல்லப்போவது யார்? ஆனால் இஸ்லாம் இதை முறியடிக்கும் விதமாகத்தான் ஓர் அழகான நற்செய்தியை கூறுகிறது.

“பெண் குழந்தை பிறப்பது அவனுக்கு நற்செய்திதான். அவனுக்கும் சரி, அவன் குழந்தைகளுக்கும் சரி நாமே உணவளிக்கின்றோம்” என்று இறைவன் கூறுகின்றான். இன்னும் இந்தியாவில் வரதட்சணை தடை சட்டம் 1961 –லிருந்தே நடைமுறையில் இருந்தாலும் அதை செயல்படுத்துபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். எப்படியும் ஒரு ஆண்டுக்கு 50,000 வரதட்சணை கொலைகள் நிகழ்கின்றன. இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் இஸ்லாம்,

“நீங்கள் மணந்து கொண்ட பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் என்னும் மணக்கொடையை மகிழ்வோடு கொடுங்கள்” என்று இளைஞர்களுக்கு அழகான கட்டளை இடுகின்றது.

அடுத்ததாக இஸ்லாம் நமக்கு வட்டியை ஹராம் என்று கூறுகிறது.

உண்மையில் நம் நாடு தனது வருவாயின் பெரும் பகுதியை தனது முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த முடியாமல், வட்டிக்கு வட்டி என்று சுமையால் அழுந்தி தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர கடமைப்பட்டிருக்கிறோம்.

இறைவன் கூறும்போது, “வியாபாரத்தை ஹலால் ஆக்கி வட்டியை ஹராமாக்கியுள்ளான்” என்றும் வட்டி வாங்குபவர்கள் “நரகவாதிகளே” என்று கூறுகின்றான். (2 : 275)

மேலும் ஜாதி, மத வேறுபாடு கருதி தீண்டாமையைக் கடைபிடித்து, நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று பேதம் காட்டி மக்கள் தமக்கிடையே வெட்டு – குத்து போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஜாதி மத வேறுபாடுகளைக் களைவோம். ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று கூறி விட்டு பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை சேர்க்கும் போது அவர்கள் முதலில் கேட்கும் கேள்வியே என்ன ஜாதி? என்று தான். ஆனால் இஸ்லாமோ-

“உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தோம்” என்று கூறி கண்ணியப்படுத்துகிறது. ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

மேலும் நாடெங்கிலும் போலிச்சாமியார்களும், பாதிரிகளும் ஆசிரமம் என்ற பெயரில் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டு தெய்வீக – ஆன்மீக சேவை என்ற பெயரில் பெண்களை மயக்கி கற்பழித்து வருகின்றனர். இதற்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. இஸ்லாமியச் சட்டத்தின்படி, சவூதி அரேபியாவில் 4 வயது சிறுமியைக் கற்பழித்து கொன்ற ஹம்சா நிகல் சாரா என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தலை எடுக்கப்பட்டது.

இன்னும் இஸ்லாம் பெண்களை நோக்கி ‘ஹிஜாப்’ என்னும் திரையை அணிய வேண்டும். அந்நிய ஆணுடன் தனித்திருப்பது கூடாது. தனியாக மூன்று நாட்களுக்கு மேலே பயணம் செய்வது கூடாது. வெளியில் செல்லும் போது கண் கவர் ஆடைகளையும், வாசனை திரவியங்களையும் பூசுதல் கூடாது. ஓசையை எழுப்புகின்ற கொலுசுகளை அணிவது கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றது.

மேலே சொன்ன கட்டுப்பாடுகளுடன் இஸ்லாமிய வழியில் ஒரு பெண் நடந்தால் அவளுக்கு இன்றைய சமுதாயத்தில் பல இன்னல்கள் நிகழுமா? ஈவ் டீஸிங், கற்பழிப்பு போன்ற அவலங்கள் நிகழுமா? கண்டிப்பாக நிகழாது.

இஸ்லாம் மற்ற மனிதர்களுடன் அவன் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக இருந்தாலும் சரி நீதமாகவும் நேர்மையாகவும் நடக்கச் சொல்கிறது. இன்னும் உனக்கு முதல் அன்பர்களே உன் தாய், தந்தையர்கள் தான் என்று கூறி முதியோர் இல்லத்திற்கு முற்றப்புள்ளி வைக்கிறது இஸ்லாம்

ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் நம் நாட்டில்

ஒவ்வொரு 24 நிமிடத்திலும் ஒரு கற்பழிப்பு

ஒவ்வொரு 54 நிமிடத்திலும் ஒரு பாலியல் பலாத்காரம்

ஒவ்வொரு 10 நிமிடத்திலும் ஒரு வரதட்சணை தீவிபத்து

ஒவ்வொரு 4 நிமிடத்திலும் ஒரு கடத்தல்

நடந்து கொண்டிருக்கிறது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. ஏன் இந்த அவலம்?

நம் நாட்டில் 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் சாசன சட்டங்களினால் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

தீமைகளினால் தான் ஒரு சமுதாயத்தில் சீரழிவுகள் ஏற்படுகின்றன. கலாச்சாரங்கள் என்ற பெயரில் பல அனாச்சாரங்களும், தீமைகளும், அவலங்களும், கொடுமைகளும் நிகழ்கின்றன.

இப்படி அரசாங்கமே தீய செயல்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வரை, எந்த தீய செயல்களையும் தடுத்து நிறுத்த முடியாது. தீய செயல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி நற்போதனைகளைக் கூறும் இஸ்லாமியச் சட்டம் அமலுக்கு வரும்போது தான் இவ்வுலகத்தில் அமைதியையும், நேர்மையான ஆட்சியையும் பார்க்க முடியும். எனவே சீரான மாற்றங்கள் மலர சீரிய மார்க்கமான இஸ்லாம் ஒன்றே வழி !.

 

 

News

Read Previous

கோவையில் இப்தார் நிகழ்ச்சி

Read Next

இவர்கள் சந்தித்தால் ….

Leave a Reply

Your email address will not be published.