மனிதனும் உணவும்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
81. மனிதனும்  உணவும்
உலகில் உள்ள பல்வேறு உயிரினங்கள் மாமிசம் உண்ணும் வகையைச் சார்ந்தது. இவை ‘மாமிச உண்ணிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இன்னும் சில உயிரினங்கள் தாவர வகைகளை உண்ணக்கூடியவை. இவை ‘தாவர உண்ணிகள்’ எனப்படும். மாமிச உண்ணிகள் தாவரத்தை உண்பதில்லை. தாவர உண்ணிகள், மாமிசத்தை சாப்பிடுவதில்லை. ஆனால் இருவகை உணவுகளையும் உண்ணும் வகையில் மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.
தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால், அவை அத்தகைய உணவை உண்பதற்கு ஏற்ற வகையில் தட்டையான பற்களைக் கொண்டுள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை மாமிச உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் கூரிய பற்களைப் பெற்றுள்ளன.
மனிதர்களைப் பொறுத்தவரையில் மாமிச உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் கூரிய பற்களும், தாவர வகை உணவுகளை உண்பதற்கு ஏற்ற வகையில் தட்டையான பற்களும் அமைந்துள்ளன.
தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு, தாவர வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு, மாமிச வகை உணவுகளை மட்டுமே செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளது. ஆனால் மனிதனின் செரிமான அமைப்பு மட்டுமே, மாமிச வகை உணவுகளையும், தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
மனிதன் தாவர உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணி இருந்தால், மனிதனுக்குத் தட்டையான பற்களை மட்டுமே கொடுத்திருப்பான். கூரிய பற்களைக் கொடுத்திருக்கமாட்டான். மேலும் இருவகை உணவுகளும் ஜீரணமாகும் வகையில், செரிமான அமைப்புகளை அமைத்திருக்க மாட்டான்.
‘அவன் கால்நடைகளையும் படைத்தான். அவற்றில் உங்களுக்கு உடையும் இருக்கிறது. உணவும் இருக்கிறது. இன்னும் பல பயன்களும் இருக்கின்றன’ (16:5) என்றும்,
‘நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளில்  உள்ளவற்றில் இருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்’ (23:21) என்றும்,
‘(பின்னால்) உங்களுக்குக் கூறப்படுபவை தவிர (மற்ற ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன’ (5:1) என்றும் இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
மிருகங்கள் மற்றும் பறவைகளின் இறைச்சியை உண்பதற்கு இஸ்லாம் அனுமதித்து இருந்தாலும், அதற்கு பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது. மிருகங்களில் அசை போட்டு மெல்லுகின்ற தன்மையுடைய மிருகங்களைத் தவிர, இதர மிருகங்களின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை அசைபோடும் பழக்கமுடையவை. இந்த மிருகங்களை மட்டுமே அதுவும் முறைப்படி அறுக்கப்பட்ட நிலையில் உணவுக்காகப் பயன்படுத்தலாம் என்பதே இஸ்லாமிய வழிமுறையாகும்.
இதன்படி சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய், குள்ளநரி போன்ற விலங்குகளின் மாமிசத்தை உண்பது மனிதர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று, இரையைத் தன் காலில் மிதித்துக் கொண்டு, அதை இழுத்துத் தின்கின்ற பறவைகளின் இறைச்சியை உண்ணக்கூடாது. சான்றாக, கழுகு, பருந்து, வல்லூறு போன்றவை அத்தகைய ரகத்தைச் சார்ந்தவை. அவற்றின் இறைச்சியை உண்ண இஸ்லாம் தடை விதித்துள்ளது. கோழி, புறா, காடை, கவுதாரி போன்ற பறவைகள், இரையை அலகினால் கொத்தித் தின்பவை. இவற்றை சாப்பிட அனுமதி உண்டு.
அசை போடும் மிருகங்கள் மற்றும் அலகினால் கொத்தித் தின்னும் பறவைகளின் இறைச்சியை உண்ணலாம் என்று இஸ்லாம் அனுமதி அளித்திருப்பதற்குக் காரணம், அவற்றின் இறைச்சி தீங்கற்றவை. மேலும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு  நாளைக்கு உலகில் கோடிக்கணக்கான ஆடுகளும், மாடுகளும் அறுக்கப்படுகின்றன. இருந்தபோதிலும் அந்த இனங்கள் குறைவுபடவில்லை. மாறாகப் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை உண்பதில்லை என்ற முடிவுக்கு மனிதன் வந்து விட்டால் என்ன நிகழும் என்பதை எண்ணிப் பாருங்கள். நாடு முழுவதும், ஊர் முழுவதும் ஆடு, மாடுகளின் நடமாட்டத்தையே அதிக அளவில் காண முடியும். அதற்காகத்தான் இறைவன் இத்தகைய ஏற்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறான்.
‘புரோட்டீன்’ என்ற சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்று அர்த்தம். புரோட்டீன் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது; முதன்மையானது. உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. இது தவிர, சில நோய்கள் வராமல் புரோட்டீன் தடுக்கிறது.
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் அவசியம். ஆதலால் உணவில் புரோட்டீன் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே புரோட்டீன் சத்து என்பது உடம்புக்கு தினமும் தேவைப்படும் ஒரு இன்றியமையாத சத்தாக இருக்கிறது.  புரோட்டீனை ‘புரதம்’ என்று கூறுவர். நமது உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை மாமிசத்தில் உள்ள புரோட்டீன்களில் இருந்து நாம் தயாரித்துக் கொள்கிறோம். மாமிச உணவு நமது உட லுக்குத் தேவையான அத்தனை புரோட்டீன் களையும் தருகிறது. சைவ உணவில் சோயா பீன்சில் மட்டுமே புரோட்டீன் உள்ளது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை அது மனிதர்களை அசைவ உணவே உண்ண வேண்டும் என்று வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ இல்லை. எத்தகைய  உணவுப் பழக்கத்தை ஒரு மனிதன் தேர்ந்தெடுக்கிறான் என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அது அவன் சார்ந்துள்ள மதம்-மார்க்கம் தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது அவனது வாழ்விடம் சார்ந்ததாக அமையலாம். அல்லது அவனது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.

News

Read Previous

நமது புனித பூமி

Read Next

சொல்ல முடியாத சொல் – அப்துல்ரகுமான்

Leave a Reply

Your email address will not be published.