பெற்றோர்களைப் பேணுவோம்!

Vinkmag ad

 Scan (1)

கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.( 055-70 62 185 )

உங்களி்ன் இந்த அபரிதமான வளர்ச்சிக்கு யார் காரணம்? என்ற கேள்விக்கு எனது தாயும், தந்தையும் தான் என லட்சக்கணக்கானோர் கூடியிருந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நன்றிப் பெருக்குடன் உரத்துக்கூறியது வேறு யாருமல்ல, இரட்டை ஆஸ்கர் விருது நாயகன் நமது ஏஆர் ரஹ்மான் தான்!.

தனது பெற்றோர்களின் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதையினால் தான் இறைவன் இந்த உயர்வை ஏஆர் ரஹ்மானுக்கு வழங்கினான். அதனால் தான் தமது பேச்சின் முடிவில் எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக்கூறி நிறைவு செய்தார்.

பெற்றோர்களின் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளும் எந்தப் பிள்ளைகளும் இறைவனால் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். அதில் ஒரு உதாரணம் தான் ஏஆர் ரஹ்மான்!.

உங்களை பெற்ற தாய், தந்தையரை பார்த்து சீய்… என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாதீர்கள் என இறைவன் அல் குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தை எச்சரிப்பதுடன்,பெற்றோர்களிடம் பேசும் போது கண்ணியமாக பேசுங்கள் என்றும் இறைவனே சொல்லித் தருகிறான்.

வயதான தாய், தந்தையரோ அல்லது இருவரில் ஒருவரையோ அடைந்து அவர் (பெற்றோர்)களின் கோபத்திற்குள்ளாகி எவன் சொர்க்கம் நுழையவில்லையோ? அவனும் நாசமடைவானாக என்று வானவர் கோமான் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறியபோது ஆமீன்! அப்படியே நடக்கட்டும் என நானும் பிரார்த்தனை செய்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு தமது கைகளை உயர்த்தி மூன்று முறை ஆமீன் கூறிய நிகழ்வில் ஒன்றாய் பெற்றோர்களை கண்ணியம் செய்வதை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

மரணத்திற்குப் பிறகு நீ எங்கே செல்ல ஆசைப்படுகிறாய்? என யாரிடத்தில் கேட்டாலும் நல்லவர், தீயவர் என்ற பாகுபாடில்லாமல் சொல்லக்கூடிய ஒரே பதில் சொர்க்கம் என்பது தான்! காரணம் அங்கு தான் எவ்வித வேதனையில்லாமல் சுக போகமாக வாழ்வதற்குரிய சூழ்நிலை உள்ளதாக இறைவனும் இறைத்தூதரும் அறிவித்துள்ளார்கள்.

இப்படி ஆசைபடுவதில் தவறில்லை! அதே நேரத்தில் நாம் அதற்கு தகுதியானவர்களா? என்று சிந்திக்க வேண்டுமா? இல்லையா?

ஒருவர் சொர்க்கம் செல்ல வேண்டுமென நினைத்தால் அதற்குரிய அடிப்படை தகுதியே பெற்றோரிகளின் மனம் குளிரும் படியாக வாழ்ந்திருக்க வேண்டும். பெற்றோர்களின் உயர்வைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “பிள்ளைகளாய் இருப்போரே, தாயின் காலடியில் தான் உங்களுக்கான சொர்க்கம் உள்ளது” எனக் கூறுகிறார்கள்.

அதாவது தாயின் காலடி என்பது தாயின் மன திருப்தியை குறிக்கிறது என்பதாக அறிஞர்கள் கருத்துரைக்கிறார்கள். நாம் சொர்க்கம் செல்வதற்கு காரணமாய் இருக்கும் பெற்றோர்களையே முதியோர் இல்லம் என்ற நரகத்தில் தள்ளி விடுவது எவ்வளவு பெரிய அபத்தம்!

முன்பொரு காலத்தில் மூலை முடுக்கெல்லாம் பெட்டி கடைகள் தானிருக்கும். இன்றோ ஊர்தோறும் முதியோர் இல்லங்கள் உருவாகி வருகின்றன. இதெல்லாம் அதிகப்படியான மனிதர்கள் சொர்க்கத்தை விட்டு விட்டு நரகத்தை நோக்கிய தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறோம்! “முன் செய்யின் பின் விளையும்” என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும்.

இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டுமென்பதை இதோ, இறைவனே கூறுகிறான்: “எங்கள் இறைவா, நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த போது எங்களின் பெற்றோர்கள் எப்படி எங்கள் மீது இரக்கம் காட்டினார்களோ, அதேபோல் எங்கள் பெற்றோர்களின் மீதும் நீ இரக்கம் காட்டுவாயாக” என்ற இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்து வர வேண்டுமென்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இரக்கம் எனற் வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்களாய் நாமிருக்கும் போது பெற்றோர்களின் பெருமையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியம்?

நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பாலூட்டிய தாய் தனக்கு பிடித்த உணவு தன் பிள்ளைக்கு ஒத்துக் கொள்ளுமா? என யோசித்து பிள்ளைக்கு ஆகாது என தெரிந்ததும் ஆசைபட்ட உணவுகளை உண்ண மறுத்துவிடுகிறாள். கருவை வயிற்றில் சுமப்பதற்கு முன்பு வரை மிகவும் விரும்பி உண்ட உணவையெல்லாம் கருவை சுமந்ததற்குப் பின் விஷமாக்கி கொண்டது யாருக்காக? எதற்காக?

எல்லாம் பிள்ளைகளாய் இருந்த நமக்காகத்தானே, நமது ஆரோக்கியத்திற்காகத் தானே, அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல் முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் அடைக்கலம் தேடிக்கொள்ள வைப்பது எவ்வளவு பெரிய கொடுமை!

ஒரு முறை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து கொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் யாசகம் கேட்ட போது நடந்த சந்திப்பு தான் அது!

அவர் எதிர்பார்த்ததை நான் கொடுத்துவிட்டு, ஏம்மா இந்த வயதான காலத்தில் இப்படி திரிகிறீர்களே, உங்களுக்கு குடும்பம், பிள்ளைகள் இல்லையா? என பரிவோடு கேட்டதும் தான் தாமதம் பொலபொலவென வடிந்த கண்ணீர் துளிகளை துடைத்து கொண்டே கூறினார்,

தம்பி, எனக்கு நான்கு ஆண், இரண்டு பெண் என ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள்.

என் பிள்ளைகள் சிறுவர்களாயிருக்கும் போதே எனது குடிகார கணவனின் இம்சை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு நானும் விஷம் சாப்பிட்டு செத்துவிடலாம் என முடிவு செய்து கணவன் வீடு வராத ஒரு இரவில் திட்டமிட்டபடி விஷத்தை சாதத்தில் கலந்து பிள்ளைகளுக்கு ஊட்ட முயன்ற போது அவர்களின் பிஞ்சு முகத்தை பார்த்ததும் கைகள் நடுங்கி விஷ சாதத்தை தூக்கியெறிந்து விட்டு என் பிள்ளைகளை கட்டிப்பிடித்து கதறினேன்.

ஒவ்வொரு பத்து மாதமும் என் பிள்ளைகளை சுமந்த கஷ்டம் எனக்குத் தானே, தெரியும்! குடிகார கணவனால், கைவிடப்பட்ட நான் வைராக்கியமாய் வீடு வீடாக போய் பத்து பாத்திரம் கழுவி கொடுத்து அதன் மூலம் வரும் சொற்ப வருவாயில் என் ஆறு பிள்ளைகளையும் வளர்த்தேன்.

ஒரு கட்டத்தில் இட்லி, வடை செய்து தெரு தெருவாய் கூவி கூவி விற்றும் என் பிள்ளைகளை வளர்த்தேன். என் மூத்த மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரைக்கும் எனது இட்லி, வடை வியாபாரம் தொடர்ந்தது.

படிப்பில் என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள். அதனால் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப் மூலமே மேற்படிப்பும் என் பிள்ளைகளுக்கு இலவசமாக கிடைத்தது. பிறகு எல்லாரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அவரவர்களுக்குரிய துணையை தேடி திருமணமும் முடித்துக் கொடுத்து அவரவர் தனி குடித்தனம் போய்விட்டனர்.

நான் மட்டும் என் மூத்த மகன் வீட்டிலேயே இருந்து கொண்டேன். என் மகன் செய்யும் ஊதாரித்தனமான செலவுகளை சுட்டிக்காட்டி அவ்வப்போது பழசை நினைவு படுத்தி புத்திமதி கூறுவேன். இது பிடிக்காத அவன் என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டான். பிறகு வாரம் ஒரு வீடு என மற்ற பிள்ளைகளை தேடி போக ஆரம்பித்தேன்.

எனது கடைசி காலத்தில் என்னை சோற்றுக்கு வழியில்லாத பிச்சைக்காரியை போலத்தான் நினைத்தார்களே தவிர பெற்றெடுத்தவள் என்றோ அல்லது நமக்கு மறுபிறவி கொடுத்தவள் என்றோ நினைக்கவில்லை. (சாதத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சித்தது என் பிள்ளைகளுக்கு தெரியாது) பெற்ற பிள்ளைகளோ என்னை பிச்சைக்காரியை போல் பார்க்கும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் தான் முகம் தெரியாத ஊரில் இன்று உண்மையான பிச்சைக்காரியாக உன் முன் நிற்கிறேன் என அந்த மூதாட்டி கூறிய போது உழைத்து தேய்ந்து போயிருந்த அவரது கைகளை பார்த்ததும் எனக்குள் பீறிட்டு கிளம்பிய அழுகையை அடக்க முடியாமலும், அந்தம்மாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாமலும், அநியாயமாக இந்தம்மா பெற்று ஆறு பிள்ளைகளும் நரகத்திற்குரியவர்களாகி விடுவார்களோ என்ற கவலையாலும், நன்றி மறந்த அந்த பிள்ளைகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோபத்துடனுமே அந்தம்மாவை விட்டு விலகினேன்.

பெற்றோர்களுக்கெதிரான சமூக கொடுமைகள் தலைவிரித்தாடுவதற்கு நன்றி கொன்றல் ஒன்றே தான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளாய் இருப்போரே! நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களை பேணுவோம். அவர்களது மன திருப்தியை பெற்றுக் கொள்வோம்!

வாசகர்களே,உங்களது விமர்சனங்களை jahangeerh328@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.
 

News

Read Previous

மணமகள் தேவை

Read Next

2015ம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பை இணையதளம்

Leave a Reply

Your email address will not be published.