பெருநாளும் சமூக வாழ்வும்

Vinkmag ad
அக்ரம் நளீமி
akramnaleemi@gmail.com
இஸ்லாமிய பெருநாள் கொண்டாட்டங்கள் என்றும் தனிச்சிறப்பு மிக்கவை, இஸ்லாம் அதனையும் ஒரு வணக்கம் என்றே கூறியுள்ளது. ஆம்,  பெருநாள் ஒரு சமூக வணக்கம். அதனால் தான் பெருநாள் கொண்டாடுதல் பற்றிய தீர்மானத்தை சமூகத்தலைமையே பெறவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. பெருநாள் கொண்டாட்டத்திற்கு வணக்கம் என்ற பெறுமானத்தை வழங்குவதன் ஊடாக இஸ்லாம் ஒரு தனிச்சிறப்பு மிக்க சமூக வாழ்வை கட்டமைக்கிறது. அங்கு ஒற்றுமை,  சமாதானம், பரஸ்பர உதவி,  போன்ற சமூகப் பண்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
பெருநாள் தினம் குறித்த நபியவர்களது சுன்னாக்களை அவதானிக்கின்ற பொழுது இந்த உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது. எல்லோரையும் ஒன்றிணைக்கின்ற வகையில் பெருநாள் தொழுகை ஒரு பரந்த வெளியில் நடாத்தப்பட்டிருக்கிறது,  அன்றைய தினம் மாதவிடாய் உள்ள பெண்களையும் கலந்து கொள்ளுமாறு நபியவர்கள் வலியுறுத்தினார்கள். மழைபெய்த சந்தர்ப்பங்கள் தவிர பெருநாள் தொழுகை பள்ளிவாயலிலன்றி,  பரந்த வெளியிலேயே நடாத்தப்பட்டிருக்கிறது. பள்ளிவாயலுக்கு அனுமதிக்கப்படாத மாதவிடாய் பெண்களும் இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்,
 இந்த ஏற்பாட்டைப் பார்க்கின்ற பொழுது,  இது ஊரின் ஒரு பொதுக் கொண்டாட்டம்,  இதில் எல்லோரும் கலந்து கொள்ளவேண்டும், எல்லோருக்கும் பொதுவான ஓரிடத்தில் அது நடைபெறவேண்டும்,  எல்லோரையும் உள்ளடக்கக் கூடிய வகையில் அந்த இடமும் விசாலமானதாகக் காணப்பட வேண்டும்,  போன்ற விடயங்கள் இங்கு கருத்தில் கொள்ளப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இது சமூக வாழ்வில் ஒற்றுமை எனும் உயர் பண்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஓர் அழகிய ஏற்பாடாகும்.
அடுத்து,  பெருநாள் தின வாழ்த்துப் பரிமாற்றம் ஒரு முக்கிய சுன்னா. அல்லாஹ்தஆலா உங்களையும் எங்களையும் அங்கீகரிக்கட்டும் என்ற துஆவாக அந்த வாழ்த்து அமைகிறது. சந்திக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இதனைப் பரிமாறிக் கொள்வது சிறந்த சுன்னா. இந்த துஆ முஸாபஹா எனும் கைலாகுடனும்,  முஆனகா எனும் ஆரத்தழுவிக் கொள்ளலுடனும் இணைந்து காணப்படுமாக இருப்பின் அது மிகவும் ஏற்றமானதாகும்.
அத்துடன் நபியவர்கள் வீட்டிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வது ஒரு வழியாகவும் திரும்பி வருவது வேறு ஒரு வழியாகவும் காணப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை அதிகமானவர்களைச் சந்திக்க வேண்டும்,  அதிகமானவர்களது வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடைமுறைகளை அவதானிக்கும் பொழுது உறவுகள் வளர்க்கப்பட வேண்டும்,  பகைமைகளும் கோபதாபங்களும் மறக்கப்படவும் மன்னிக்கப்படவும் வேண்டும்,  ஒரு சுமூகமான சமூக வாழ்கை தோன்ற வேண்டும் போன்ற விடயங்கள் நோக்கமாகக் கொள்ளப்பட்டிருப்பதைக் காணலாம். இது இஸ்லாம் வலியுறுத்தும் சமாதானம் எனும் உயர் சமூகப் பண்பாடல்லவா?
மற்றது,  நோன்புப் பெருநாளைக்கேயுரிய ஒரு விஷேட வாஜிப் ஸகாதுல் பித்ர். பெருநாள் தேவைக்கு மேலதிகமாக வசதிகள் இருக்கும் ஒவ்வொருவர் மீதும் இது கடமையாகும். பெருநாள் தொழுகைக்கு முன்னரே இது செலுத்தப்பட வேண்டும். செலுத்தப்பட வேண்டிய தொகை சிறியது என்பதால் பெரும் தொகையானவர்கள் இதில் ஈடுபடுவதற்கு வாய்ப்பேற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் நோக்கம் அன்றைய தினம் எல்லோரும் சந்தோசமாக பெருநாள் கொண்டாடுவதற்கான வழியேற்படவேண்டும். இமாம் அபூஹனிபா அவர்களுடைய அபிப்ராயப்படி இது பணமாகவும் செலுத்தப்பட முடியும். இது தனிப்பட்ட வடிவிலன்றி கூட்டாக நடைபெறுவது பயன்மிக்கது என்பதும் பல அறிஞர்களது கருத்தாகும்.
இவற்றை அவதானிக்கின்ற பொழுது ஸகாதுல் பித்ர் என்பது ஒரு நாளைக்குரிய பொருளாதார கூட்டுறவு முறைமை.  பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் ஒரு ஊரில் ஒரு நாளின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாக இஸ்லாம் இதனை முன்வைத்துள்ளது. இது இஸ்லாம் முன்வைக்கும் சமூகக் கூட்டுறவு எனும் உயர் சமூகப் பெறுமானமாகும்.

 

ஒற்றுமையும் சமாதானமும் சமூகக் கூட்டுறவும் இன்று காலத்தின் தேவை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். இவற்றை நோக்கி நாம் செயற்பட வேண்டும் என்பதை நோன்புப் பெருநாள் எங்களுக்கு ஞாபகமூட்டிச் செல்கிறது. இதனை இவ்வருட நோன்புப் பெருநாள் செய்தியாக உங்களுடன் பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

News

Read Previous

நபிமார்களும் அவர்கள் முதலாவதாக செய்த செயல்களும்

Read Next

மூக்கில் கயிற்றைக் கட்டி 5 ஆட்டோக்களை இழுத்து சாதனை

Leave a Reply

Your email address will not be published.