பெண்ணுக்கு விஷேடமான ஒரு பணி இருக்கின்றதா?

Vinkmag ad

பெண்ணுக்கு விஷேடமான ஒரு பணி இருக்கின்றதா?

இது இந்தத் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான கட்டுரை. இதனை கீழ்வரும் கிளைத் தலைப்புகளின் ஊடாக நோக்கலாம் என்றிருக்கிறேன்.

  1. சோடியமைப்பிலான படைப்பின் மக்ஸத்.
  2. பெண்ணின் பிரத்தியேகமான பணி.
  3. சமநிலை எங்கே இருக்கிறது?

சோடியமைப்பிலான படைப்பின் மக்ஸத்

ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தில் இஸ்லாம் எந்த வேறுபாட்டையும் வைக்கவில்லை. அந்தவகையில் மனிதன் என்ற பாத்திரத்தின் அடிப்படையிலும் முஸ்லிம் என்ற பாத்திரத்தின் அடிப்படையிலும் இருவரும் சமமான உரிமைகளையே பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஆண் என்ற படைப்பும் பெண் என்ற படைப்பும் ஒரே வகையானவை அல்ல. இரண்டும் வெவ்வேறான படைப்புக்கள்.

இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது. “ஆண் பெண்ணைப் போன்றவன் அல்ல” (ஆல இம்ரான்-36) என்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உயிரியல் ரீதியான வேறுபாடுகள் இந்த உண்மையைத் தெளிவாய் உணர்த்துகின்றன. அந்தவகையில் மனிதன் மற்றும் முஸ்லிம் என்ற பாத்திரங்களில் ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டாலும்,  ஆண் என்ற பாத்திரத்தையும் பெண் என்ற பாத்திரத்தையும் தனித்து எடுத்து நோக்கினால் அங்கு வேறுபாடுகள் இருக்கின்றன. கலாநிதி அலி கரதாகி அவர்கள் கூறுவது போல்,  இந்த வேறுபாட்டின் நோக்கம் ஆணை விடவும் பெண் சிறந்தவள் என்பதுவோ அல்லது பெண்ணை விடவும் ஆண் சிறந்தவன் என்பதுவோ அல்ல. மாற்றமாக இந்த வேறுபாட்டின் அடிப்படையில் ஆணுக்கான பணியும் பெண்ணுக்கான பணியும் வெவ்வேறானவை என்பதை அடையாளப்படுத்துவதுவே நோக்கம் என்கிறார்.

அதனடிப்படையில் அல்லாஹ்வின் படைப்பில் உள்ள ஒரு உயர்ந்த மக்ஸத் புரிந்து கொள்ளப்படுகிறது என்கிறார். அதுதான் பரஸ்பர ஒத்துழைப்பும் முழுமைப்படுத்தலும் என்ற மக்ஸத். அல்குர்ஆன் ஆணையும் பெண்ணையும் ‘ஸெளஜ்’ எனும் இரட்டை அல்லது சோடி எனும் சொல்லின் மூலம் தான் அடையாளப்படுத்தியிருக்கிறது. மனிதன் எனும் ஒரே வகையின் இரண்டு கூறுகள்தான் ஆணும் பெண்ணும்,  என்பதே இங்கு ஸெளஜ் என்பதன் மூலம் விளங்கப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு கூறுகளினதும் இணைந்த தொழிற்பாடுதான் இந்த உலக வாழ்வு. ஆண் தனது பணியையும் பெண் தனது பணியையும் மேற்கொள்ளும் போது உலக வாழ்வு முழுமை பெறுகிறது. இவ்வாறு தான் உலகில் மனிதப் பிரதிநிதித்துவம் நிறைவேற்றப்படுகிறது.

ஷெய்க் ஸாலிம் அஷ்ஷெய்கி அவர்கள் இக்கருத்ததை விளங்கப்படுத்தும் போது,  ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறவு குறித்து உலகில் மூன்று வகையான நிலைப்பாடுகள் இருக்கின்றன. முதலாவது,  ஆணை மையப்படுத்திய சிந்தனைப் போக்கு,  இது அதிகமாக கீழைத் தேய உலகின் சிந்தனையாகும்,  இங்கு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையலான உறவு,  ஆண் பெண்ணைப் பயன்படுத்தல்,  ஆளுதல் என்ற வகையிலேயே காணப்படும். இரண்டாவது,  பெண்ணை மையப்படுத்திய சிந்தனைப் போக்கு,  இது அதிகமாக மேற்குலகின் சிந்தனையாகும்,  இது பெண்ணிலைவாத சிந்தனைகளின் விளைவு,  இங்கு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறவு மோதலும் போட்டியும் என்ற வகையிலேயே காணப்படும். மூன்றாவது இஸ்லாத்தின் சிந்தனை,  இது மனித வாழ்வை மையப்படுத்திய சிந்தனை,  இது நடுநிலையானது,  இங்கு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறவு ஒத்துழைப்பும் முழுமைப்படுத்தலும் என்ற வகையிலேயே காணப்படும்,  என்கிறார். இக்கருத்தை முடிக்கும்  போது,  துரதிஷ்டவசமாக அறபுலகம் கூட இன்னும் மிகச்சரியாக இஸ்லாத்தின் சிந்தனையைப் பிரதிபளிக்கவில்லை,  அங்கு அதிகமாக ஆண் மையப்பட்ட சிந்தனையே வெளிப்படுகிறது,  என்கிறார்.

இந்த ‘ஒத்துழைப்பும் முழுமைப்படுத்தலும்’ என்ற மக்ஸத் மனிதப் படைப்புக்கு மாத்திரம் உரியதல்ல. மாற்றமாக பிரபஞ்சத்தின் அனைத்துப் படைப்புகளுக்கும் பொதுவானதாகும். அதனால்தான் பிரபஞ்சத்தின் அனைத்துப் படைப்புகளும் சோடிகளாகப் படைக்கப்பட்டுள்ளதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. “பூமியில் முளைப்பவை,  மனிதர்கள்,  மனிதர்கள் அறியாத ஏனைய படைப்புக்கள் அனைத்திலும் சோடிகளைப் படைத்த அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்’ (யாசீன் – 36) என்று அல்குர்ஆன் கூறுகிறது. இந்த சோடிகளின் ஒத்துழைப்பில் தான் பிரபஞ்சம் இயங்குகிறது. மின்சாரத்தில் நேரும் எதிரும் இருக்கின்றன. அவற்றின் ஒத்துழைப்பில்தான் ஒளியும் சக்தியும் பிறக்கின்றன.

பெண்ணின் பிரத்தியேகமான பணி

பெண்ணுக்குப் பிரத்தியேகமான ஒரு பணி இருக்கின்றதா? அது குறித்த அல்குர்ஆனின் பார்வை என்ன? என்ற ஒரு கேள்வியைத் தொடுத்துப் பார்க்கின்ற பொழுது,  பெண்ணின் பணியை அல்குர்ஆனுடைய அல்லது சுன்னாவுடைய ஒரு வசனத்திலோ அல்லது சொல்லிலோ தேடுவதை விடவும்,  அல்குர்ஆனின் மொத்த சிந்தனை ஓட்டத்தைப் புரிந்து கொள்வதன் மூலமே கண்டு கொள்ள முடியும். அல்குர்ஆனின் மொத்த சிந்தனை ஓட்டத்தை அவதானிக்கின்ற பொழுது அல்குர்ஆன் பெண்ணுக்குப் பிரத்தியேகமான ஒரு பணியை அடையாளம் காட்டுகின்றது என்பதுவே உண்மை.

கலாநிதி ஸலாஹ் சுல்தான் அவர்கள் கூறுவது போல் பெண்ணுக்கு வீடு சார்ந்த ஒரு விஷேட பணி இருக்கின்றது. இதனை ‘வீடு காத்தல்’ என்ற சொல்லின் மூலம் சிலர் விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். வீடு காத்தல் எனும் பிரயோகம் பல சமயங்களில் ஒரு எதிர்மறையான விளக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது பெண்ணை வீட்டுடன் மட்டுப்படுத்தி சமூக வாழ்வில் அவளுக்குப் பங்கில்லை என்று சொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் அந்த சொல்லில் பலருக்கு உடன்பாடு இல்லாதிருக்கலாம். ஆனால் அந்த பிரயோகத்தினுள் பெண் குறித்த ஒரு உயர்ந்த தத்துவம் மறைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். குடும்பத்தின் அச்சாணியாய்த் திகழ்பவள் பெண். அவள் சறுக்குகின்ற பொழுதுதான் குடும்பம் சிதைவடைகின்றது. குடும்பத்தின் உருவாக்கப் பொறுப்பை தாங்கி நிற்பவள் பெண். பெண்ணின் இந்தப் பெறுமானத்தைத்தான் ‘வீடு காத்தல்’ எனும் பிரயோகம் உணர்த்துவதாய் நினைக்கிறேன்.

இக்கருத்தை வலியுறுத்தும் வகையில்தான் கலாநிதி கமாலுத்தீன் இமாம் அவர்களது பின்வரும் கருத்தும் அமைந்துள்ளது. அவர் சொல்கிறார் பெண்ணை மேற்குலகம் எவ்வாறு வரையறை செய்கின்றது எனின் அவள் சமூகத்தில் தொழிற்படும் ஒரு அலகு என்றுதான் நோக்குகிறது. அதுதான் அவளது பணி என்கிறது. ஆனால் இஸ்லாம் பெண் என்பவள் மனித இனத்தைப் பாதுகாக்கும் இன்றியமையாத மையநிலைப் பணியைச் செய்பவள். அப்பணி வீட்டிலிருந்து ஆரம்பித்து சமூகத்தில் சென்று முடிகிறது என்கிறார். இதனால்தான் பெண்ணைப் பாதுகாத்தல்,  பராமரித்தல்,  செலவழித்தல் போன்றன ஆணின் கடமையாக அமைகின்றது. மேற்குலகம் பெண்ணின் வீட்டுக் கடமையைக் குறைத்து மதிப்பிடுவதற்கு பெண் குறித்த அவர்களது தவறான மதிப்பீடுதான் காரணமாக உள்ளது. அவளை சமூகத்தின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கின்றனர். அந்தவகையில் ஆணை விட்டும் அவள் வேறுபடவில்லை. அவளுக்கு ஒரு மையநிலைப் பணி இருக்கிறது என்று அவர்கள் நோக்கவில்லை.

எனவே,  பெண் வீட்டில் தொழிற்படுவது அவளுக்கு நிகழும் அநியாயமாகப் பார்த்தனர். அவள் வீட்டை விட்டு வெளியில் வருவது மட்டும்தான் சுதந்திரம் என்று நினைத்தனர். இந்தப் பார்வையில் இருந்துதான் இஸ்லாம் அடிப்படையில் வேறுபட்டு நிற்கிறது. பெண் வீட்டிலும் சரி வெளியிலும் சரி மனித இனத்தைப் பாதுகாக்கும் மையநிலைப் பணியைச் செய்பவள் அது ஒரு முக்கியமான இன்றியமையாத பணி. அவளது படைப்பியல்புடன் இயைந்து செல்லும் பணி என்கிறார். அந்தவகையில் பெண்ணுக்கு விஷேடமான,  ஒரு உன்னதப் பணி இருக்கிறது. அந்தப் பணியை அல்குர்ஆனும்,  சுன்னாவும் எவ்வாறு விளங்கப்படுத்துகிறது என்பதை அடுத்து நோக்குவோம்.

கலாநிதி ஸலாஹ் சுல்தான் அவர்கள் கூறுவது போல்,  அல்குர்ஆனில் பெண் குறித்து அல்லது பெண் பற்றி ஆயிரத்து முன்னூற்றி எழுபத்தி எட்டு (1378) தடவைகள் பேசப்பட்டுள்ளன. அவற்றை மொத்தமாகத் தொகுத்து நோக்குகின்ற பொழுது அவற்றில் பெரும்பாலானவை பெண்ணை வீட்டுடன் சம்பந்தப்பட்ட ஒரு பாத்திரத்தின் மூலமே அடையாளப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக தாய்,  மனைவி போன்ற பாத்திரங்கள் அழுத்தமாகப் பேசப்படுகின்றன. சுமார் ஒன்பது நூறு (900) இடங்களில் பெண்ணை மனைவியாகவும்,  தாயாகவும்,  முரப்பியாவாகவும் அல்குர்ஆன் சித்தரிப்பதாகக் குறிப்பிடுகிறார். உதாரணமாக அல்குர்ஆன் தொகுக்கப்பட்டுள்ள ஒழுங்கில் பார்க்கும் போது,  அல்குர்ஆனில் பெண் குறித்த முதல் குறிப்பு சுவர்க்கத்தில் கிடைக்கும் தூய்மையான மனைவிமார் என்பதாகத்தான் அமைந்துள்ளது. “அவர்களுக்கு சுவர்க்கத்தில் தூய்மையான மனைவிமார் கிடைப்பர்” என்கிறது. (பகரா – 25). அதுபோல் மனித வாழ்வு தொடங்கப்படுவதற்கான முதல் கட்டளையைக் கூறும்போதும் “நீயும் உனது மனைவியும் சுவர்க்கத்தில் வசியுங்கள்” (பகரா – 35) என்கிறது. இங்கும் பெண் குறித்த பதிவு மனைவி என்ற பாத்திரத்தைப் பிரதிபளிக்கிறது. அடுத்து அல்குர்ஆனின் இறுதியில் பெண் குறித்த பதிவும் மனைவி என்ற பாத்திரத்தைப் பிரதிபளிப்பதைக் காணலாம். அபூலஹபின் மனைவி குறித்துக் கூறுகிறது ‘அவனது மனைவி விறகு சுமப்பவள்” (மஸத் – 4) என்கிறது.

அடுத்து பெண்ணைக் குறிப்பதற்கு அல்குர்ஆன் ‘விளைநிலம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. “உங்களது பெண்கள் உங்களுக்கு விளைநிலம்” (பகரா 223) என்கிறது. இந்த சொல் வெறுமனே பெண்ணை பிள்ளை பெறுகின்ற ஒரு கருவியாக சித்தரிக்கவில்லை. உண்மையில் மனித இனத்தின் இருப்பிற்கு அடிப்படையாக இருப்பவள்,  அதனை வளர்த்துப் பாதுகாப்பவள் என்ற உயர்ந்த பொருளையே அது தருகிறது. அந்தவகையில் இவை ஒவ்வொன்றும் பெண்ணுடைய உருவாக்கம் எனும் மையப் பணியை உணர்த்துகின்றன.

அடுத்து,  இதே சிந்தனையை வலியுறுத்தும் இரண்டு ஹதீஸ்களை மாத்திரம் உதாரணத்திற்காக இந்த இடத்தில் அடையாளப்படுத்துகிறேன். முதலாவது ஹதீஸ்,  நபியவர்கள் கூறினார்கள் “நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். அதுபற்றி நீங்கள் வகை சொல்வதற்குரியவர்கள் ஒரு ஆட்சித் தலைவன் தனது மக்களுக்குப் பொறுப்பானவன்,  அது பற்றி அவன் வகை கூற வேண்டும். ஆண் தனது குடும்பத்திற்குப் பொறுப்பானவன். அது பற்றி அவன் வகை கூற வேண்டும். பெண் தனது கணவனது வீட்டுக்கும் பிள்ளைகளுக்கும் பொறுப்பானவள். அதுபற்றி அவள் வகை கூறக் கடமைப்பட்டவள் ஒரு பணியாள் தனது எஜமானனின் சொத்துக்களுக்குப் பொறுப்பானவன் அது பற்றி அவன் வகை கூற வேண்டும்” (புஹாரி,  முஸ்லிம்).

இந்த ஹதீஸைப் பொதுவில் பார்க்கின்ற பொழுது இரண்டு முக்கிய கருத்துக்களைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று,  இந்த ஹதீஸ் ஆட்சித் தலைவர்,  ஆண்,  பெண்,  பணியாள் போன்ற சில பிரதான பாத்திரங்களைக் குறிப்பிட்டு,  அந்தந்தப் பாத்திரங்களுக்குரிய பிரத்தியேகமான பணி என்ன என்பதையும் அது வகை சொல்வதற்குரிய ஒரு கடமை என்பதையும் சொல்கிறது. அந்தவகையில் ஒவ்வொருவருக்கும் தனது பாத்திரத்தைப் பிரதிபளிக்கும் ஒரு விஷேட பணி இருக்கிறது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இரண்டு,  இங்கு குறிப்பாக பெண்ணின் பணியைப் பற்றிப் பேசுகின்ற பொழுது, கணவனின் வீடு,  பிள்ளைகள் என்ற விடயத்தை ஹைலைட் பண்ணி சொல்கிறது. அந்தவகையில் பெண் என்பவள் வீட்டைக் கட்டியெழுப்புபவள்,  அது அவளது விஷேட பணி என்பது வலியுறுத்தப்படுகிறது.

இரண்டாவது ஹதீஸ்,  நபியவர்கள் கூறினார்கள் “ஓட்டகத்தில் சவாரி செய்யும் பெண்களில் – இது அறபுப் பெண்களைக் குறிக்கிறது – குறைஷிப் பெண்களே சிறந்தவர்கள். அவர்கள் தமது பிள்ளைகளில் மிகுந்த இரக்கம் காட்டுவர். கணவனையும் அவனது சொத்தையும் சிறந்த முறையில் பராமரிப்பர்” என்றார்கள். (புஹாரி).

இந்த ஹதீஸிலும் பெண்ணின் வீட்டைக் கட்டியெழுப்புதல்,  மனித பரம்பரையை வளர்த்தெடுத்தல் எனும் அடிப்படைப் பணி குறித்துக்காட்டப்படுகின்றது. அத்துடன் அந்தப் பணியைச் செய்வதுதான் பெண்ணுக்குரிய சிறப்பு என்பதையும் இவ்வாறு செய்யும் குறைஷிப் பெண்கள் தான் சிறந்தவர்கள் என்ற சிலாகிப்பு மூலம் உணர்த்தியுள்ளதைக் காணலாம்.

அடுத்து,  பெண் குறித்த சில உயிரியல் ரீதியான ஆய்வுகளைப் பார்க்கின்ற பொழுது,  பெண்ணின் விஷேட பணி குறித்த மேற்படி சிந்தனையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருப்பதையும் அவதானிக்கலாம். உதாரணத்திற்காக சில விடயங்களை இங்கு அடையாளப்படுத்துகிறேன்.

  • ஆண்கள் அதிகம் முன்னோக்கிய பார்வை கொண்டவர்கள். பெண்கள் அதிகம் அகன்ற பார்வை கொண்டவர்கள். ஆண்கள் மொத்தப் பார்வை பார்ப்பார்கள். பெண்கள் விரிவான பார்வை பார்ப்பார்கள்.
  • ஆண்களிடம் திட்டமிடல்,  ஒழுங்குபடுத்தல் திறன் அதிகம் வெளிப்படும். பெண்களிடம் கற்பனை,  புத்தாக்கத்திறன் அதிகம் வெளிப்படும்.
  • ஆண்களிடம் ஆற்றல்கள் விருத்தியடைவதற்கு  அதிகம் காலமெடுக்கும். பெண்களிடம் விரைவில் முதிர்ச்சி தென்படும்.
  • ஆண்கள் பொருத்தமான தீர்வுகளைக் கண்டடைவதில் வல்லவர்கள். பெண்கள் பொருத்தமான தீர்வுகளை அமுல்படுத்துவதில் தேர்ந்தவர்கள்.
  • ஆண் உடல் மொழியைக் குறைவாகக் கையாள்வான். பெண் அதிகமாகக் கையாள்வாள்.
  • ஆண் உபதேசத்தை ஆதிக்கமாகப் பார்ப்பான். பெண் உபதேசத்தைப் பங்கு கொள்ளலாகப் பார்ப்பாள்.
  • ஆண் குறைவாகவே தியாகம் செய்ய முன்வருவான். பெண் அதிகமாகத் தியாகம் செய்வாள்.
  • ஆணின் தைரியம் வீட்டுக்கு வெளியில் அதிகம் வெளிப்படும். பெண்ணின் தைரியம் வீட்டினுள் அதிகம் வெளிப்படும்.
  • ஆணிடம் அன்பு என்பது வாழ்வின் ஒரு பகுதி மட்டும். பெண்ணிடத்தில் முழுவாழ்வும் அன்புதான்.
  • ஆண் தனது பிள்ளைகளை அதிகம் தூர இருந்து பராமரிப்பான். பெண் நெருங்கி நின்று பராமரிப்பாள்.

இவை சில உதாரணங்கள் மாத்திரமே. இவை ஒரு போதும் ஆணினதோ அல்லது பெண்ணினதோ சிறப்பு வேறுபாட்டை குறிக்கவில்லை. மாற்றமாக ஆண் என்ற படைப்பினதும் பெண் என்ற படைப்பினதும் உயிரியல் வேறுபாட்டையே குறிக்கின்றன. இந்த உயிரியல் வேறுபாடு சொல்லும் செய்தி என்னவெனின்,  உலக வாழ்வில் ஆணும் பெண்ணும் ஒரே பணியை மீட்டி மீட்டி செய்யவரவில்லை அல்லது எதிர் எதிரே நின்று போட்டி போட்டுக் கொள்ள வரவில்லை. மாற்றமாக ஆணிடம் ஒரு பிரத்தியேகம் இருக்கிறது. பெண்ணிடம் ஒரு பிரத்தியேகம் இருக்கிறது. இந்த இரண்டும் நடைபெறுகின்ற பொழுதுதான் உலக வாழ்வு முழுமை பெறுகிறது.

மேற்சொல்லப்பட்ட உயிரியல் வேறுபாடுகள் பெண்ணுக்கான விஷேட பணியான மனித இனத்தை வளர்த்துப் பாதுகாக்கும் பணி அல்லது வீட்டைக் கட்டியெழுப்புதல் எனும் பணியுடன் இயைந்து செல்வதைக் காணலாம். இதுதான் அல்லாஹ்வின் படைப்பாற்றல்.“படைத்தவன் அறியமாட்டானா?” ( முல்க் – 14 ) என அல்குர்ஆன் அல்லாஹ்வின் படைப்பிற்கும் உலகின் செயற்பாட்டிற்கும் இடையிலான தொடர்பை இவ்வாறுதான் விளங்கப்படுத்துகிறது.

சமநிலை எங்கே இருக்கிறது?

சமூக வாழ்வில் மனிதன் என்ற நிலையிலும் முஸ்லிம் என்ற நிலையிலும் ஆணும் பெண்ணும் சமமான அந்தஸ்த்தையே பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்குரிய பணிகளில் வேறுபாடுகள் இருக்கின்றன. அந்தவகையில் பெண்ணுக்குரிய விஷேட பணி வீடு சார்ந்து காணப்படுகின்றது. மேற்கண்டவாறு சொல்கின்ற பொழுது,  சிலர் எனவே வீடு பெண்ணுக்குரியது,  சமூகம் ஆணுக்குரியது என்று பிரித்து விடுகின்றனர். இதுதான் சமநிலை என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. எளிமையாகச் சொன்னால் ஆணுக்கு வீட்டிலும் ஒரு கடமை இருக்கிறது. பெண்ணுக்கு சமூகத்திலும் ஒரு கடமை இருக்கிறது.

பெண்ணின் பணிக்குரிய சமநிலையை இரண்டு எல்லைகளுக்கு நடுவில் நின்று புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் பெண்ணுக்கு வீடு சார்ந்த ஒரு மைய நிலைப் பணியை முன்வைத்தது,  இது ஒரு எல்லை. மறுபுறத்தில் பெண்ணின் சமூகப் பங்களிப்பு தடுக்கப்படவோ மறுதலிக்கப்படவோ கூடாது என்றது,  ஒரு மனிதன் என்ற நிலையிலும் முஸ்லிம் என்ற நிலையிலும் அது அவளது அடிப்படை கடமை என்று இஸ்லாம் சொன்னது, இது மற்றொரு எல்லை. இந்த இரண்டு எல்லைகளுக்கும் நடுவில்தான் பெண் தனது செயற்பாட்டுக்குரிய சமநிலையைப் பேண வேண்டியவளாகின்றாள். இங்கு வரையறுத்த ஒரு பிரிகோட்டை முன்வைக்க முடியாது. இஸ்லாம் அவ்வாறு வரையறுக்கவுமில்லை. இது கால,  இட,  ஆள்,  சமூக,  கலாச்சார வேறுபாடுகளுக்கு ஏற்ப கூடிக் குறைய இடம் இருக்கிறது. ஏனெனில் இஸ்லாம் ஆள், சூழல்,  கலாச்சார வேறுபாடுகளை என்றும் கவனத்திற் கொள்கிறது. அதனால் தான் ‘வழக்காறு’ என்ற விடயத்திற்கு இமாம்கள் சட்டவாக்கத்திற்கான மூலாதாரப் பெறுமானத்தை வழங்கினார்கள். அந்தவகையில் பெண்ணின் செயற்பாட்டுச் சமநிலையை வரையறை செய்வதில் ஆள், சூழல் வேறுபாடுகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. மேற்சொன்ன இரு எல்லைகளும் மீறப்படக்கூடாது என்பதுவே முக்கியமானது.

ஒரு பெண்ணின் சமூகப் பணி சமூகத்திற்குத் தலைமை வழங்குதல் எனும் எல்லை வரையில் செல்ல முடியும். ஆனால் அது அவளது வீட்டைக் கட்டியெழுப்புதல் எனும் பணிக்கு விலையாய் அமைந்து விடக்கூடாது. உலகம் முழுவதிலும் இந்த யதார்த்தத்தைத் தான் நாம் பார்க்கிறோம். அதேநேரம் மேற்சொன்ன எல்லைகள் மீறப்படுகின்ற பொழுது ஏற்படும் அபாயத்தையும் இன்று உலகம் உணரத் தொடங்கியுள்ளது. மேற்குலக அறிவியலாளர்கள் பெண்ணை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர வேண்டியதன் அவசியம் குறித்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். மறுபுறத்தில் பெண்ணின் சமூகப் பணி மறுக்கப்பட்டதன் விளைவை,  எல்லை மீறிய பெண்ணிலைவாத சிந்தனைகளின் தோற்றத்தில் கண்டு கொள்ளலாம்.

கலாநிதி ஜமீலா திலூத் அவர்கள் கூறுவது போல்,  உலகில் தீவிர பெண்ணிலைவாத சிந்தனைகளை மூன்று நிலைகளில் அவதானிக்கலாம். முதலாவது உலகில் ஆண் இருக்கவே கூடாது,  அப்பொழுதுதான் பெண் சந்தோசமாக வாழலாம் என்கிறது. இரண்டாவது உலகில் ஆணை விடவும் பெண்ணே சிறந்தவள் என்கிறது. மூன்றாவது இவற்றை விட சற்று இறங்கி வந்து,  உலகில் ஆணும் பெண்ணும் சமம்,  எனவே உலகில் ஆணின் அதே பணிகளை பெண்ணுக்கும் சமமாகப் பகிர வேண்டும் என்கிறது. இந்த மூன்று நிலைகளும் சமநிலை தவறிய வாதங்களே,  இஸ்லாத்தின் பார்வையிலேயே உண்மையில் சமநிலை இருக்கிறது.

சமநிலைப்படுத்தல் எனும் போது,  இங்கு மற்றொரு விடயத்தையும் நாம் புரிந்து கொள்வது அவசியமானது. அதாவது பெண்ணின் சமூகப் பணி என்று சொல்லும் போது அதனை பெண் தொழில் செய்யும் உரிமையாக மாத்திரம் புரிந்து கொள்ளவும் கூடாது. பெண் தொழில் செய்வதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆனால் பெண்ணின் சமூகப் பணி என்பதை வீட்டுக்கு வெளியில் அவள் செய்யும் ஒரு தொழில் அல்லது தொழிலுக்காக வெளிச் செல்லல் என்ற மட்டத்துடன் சுருக்கி புரிந்து கொள்ளக் கூடாது. இன்று பலரது கோரிக்கைகளும் போராட்டங்களும் தொழிலை மையப்படுத்தி மாத்திரம் அமைந்திருப்பது அவதானத்திற்குரியது. கலாநிதி ஜமீலா திலூத் சொல்வது போல்,  பெண்ணின் சம உரிமையை,  அவள் செய்யும் ஒரு தொழில் என்றதொரு வட்டத்தில் சுருக்கியமையில் முதலாளித்துவ சிந்தனைக்கு ஒரு பெரிய பங்கிருக்கிறது. அவர்களது பொருளாதார நலன்களுக்காக இத்தகைய ஒரு சிந்தனை கட்டமைக்கப்பட்டது என்கிறார்.

பெண்ணின் சமூகப் பணியை தொழிலைத் தாண்டி விசாலமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இந்த இடத்தில்தான் மனித இனத்தின் இருப்பையும்,  பண்பாட்டையும்,  நேர்த்தியையும் தாங்கி நிற்கின்ற பெண்ணின் பணி முக்கியத்துவம் பெறுகிறது. அது கலாநிதி கமாலுத்தீன் இமாம் குறிப்பிடுவது போல்,  வீட்டில் தொடங்கி சமூகத்தில் விரிவடைகிறது. மாத்திரமன்றி பெண்ணின் உயிரியல் சார்ந்த சிறப்பம்சங்களின் பங்கு சமூக வாழ்வின் சமநிலை ஓட்டத்திற்கு அவசியமானது. அவை பெற்றுக் கொள்ளப்படவும் வேண்டும். ஒரு பெண் தனது தொழிலைத் தாண்டி அறிவுப்பணி செய்ய முடியும். ஒரு பெண் தனது தொழிலைத் தாண்டி செல்வ விருத்தியில் ஈடுபட முடியும். ஒரு பெண் தனது தொழிலைத் தாண்டி தலைமைத்துவத்தை வழங்க முடியும்.

அத்துடன் சமூகப் பணிக்கு வரும் சகோதரிகளுக்கும் என்னிடத்தில் ஒரு உபதேசம் இருக்கிறது. உங்களது பணியின் சமநிலை பேணல் குறித்த சுயவிசாரணை கட்டாயம் அவசியமானது. எனது பயணத்தில் நான் தொடர்ந்தும் சரியான சமநிலையில்தான் இருக்கிறேனா என்பதை அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த விடயத்தில் உங்களுக்குக் கருத்துச் சொல்ல மிகவும் பொருத்தமானவர்கள் யார் தெரியுமா? உங்கள் கணவரும் உங்கள் பிள்ளைகளும்தான். அவர்களது அபிப்ராயத்தை அடிக்கடி பெறுங்கள். நீங்கள் சரியான சமநிலையைக் கண்டு கொள்வீர்கள்.

இறுதியாக,  நிறைவு செய்ய முன்னர்,  இந்தக் கட்டுரைத் தொடர் பெண் குறித்த பார்வையை முன்வைப்பதை நோக்காகக் கொண்டதனால்,  இங்கு ஆணின் பணி என்ன என்பதும்,  ஆணின் பணிக்கும் பெண்ணின் பணிக்கும் இடையிலான சமநிலை என்ன என்பது குறித்தும் பேசப்படவில்லை. உண்மையில் அதனையும் இணைத்துப் பேசுகின்ற பொழுதுதான் இந்த சிந்தனை இன்னும் முழுவடிவம் பெறுகிறது என்பது திண்ணம். ஆனாலும் அதனை பிரிதொரு சந்தர்ப்பத்திற்கு விட்டு விட்டு விடை பெறுகிறேன்.

அல்லாஹ்வே போதுமானவன்.

உசாத்துணைகள் :

  1. அல்மர்அது வல்முஷாரகா அஸ்ஸியாஸிய்யா வத்தீமுக்ராதிய்யா – கலாநிதி அலி முஹியத்தீன் அல் கரதாஇ.
  1. மர்கஸுல் மர்ஆ பில் ஹயாதில் இஸ்லாமிய்யா – கலாநிதி யூசுப் அல் கர்ளாவி.
  1. அல்மர்அது வர்ரஜுல் பைனல் மகாம் வல் மஹாம் – கலாநிதி ஸலாஹ் சுல்தான்.
  1. மஹாராதுல் இஜ்திஹாத் அல் மகாஸிதி – யூடியூப் உரைகள் – ஷெய்க் ஸாலிம் அஷ்ஷெய்கி.
  1. மகாஸிதுஷ் ஷரீஆ வல் அஹ்வால் அஷ்ஷக்ஸிய்யா – யூடியூப் உரை- கலாநிதி கமாலுத்தீன் இமாம்.
  1. அல் பர்கு பைனல் ஜின்ஸைன் – கலாநிதி ஸலாஹ் அர்ராஷித்.
  1. அல் பர்கு பைனல் மர்அதி வர்ரஜுல் – நூர்ஹான் இப்ராகீம் அப்துல்லாஹ்.
  1. அத்துகூரி வந்நிஸவி : இஷ்காலிய்யதுஸ் ஸுனாஇய்யாத் பில் பிக்ரில் முஆஸிர் – கலாநிதி ஜமீலா திலூத்,  கட்டுரை,  மீம் மெகஸின் வெப்தளம்.

News

Read Previous

சூழலைப் பாதுகாத்தல்

Read Next

இஸ்லாத்தின் “சமய நல்லிணக்கம்” ஒர் ஆய்வு..

Leave a Reply

Your email address will not be published.