சூழலைப் பாதுகாத்தல்

Vinkmag ad

சூழலைப் பாதுகாத்தல் – இஸ்லாமிய ஷரீஆவின் மகாஸிதுகளில் ஒன்று

 

ஜக்கிய நாடுகள் சபையின் சூழல் பாதுகாப்பு பற்றிய முதலாவது மாநாடு,  1972 ம் ஆண்டு,  சுவீடன் நாட்டின் ஸ்டாக் ஹோம் நகரில் நடைபெற்றது முதல் உலகில் சூழல் பற்றிய கரிசனை பெரிய முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இது தொடர்பில் உலகளவில் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு 1992 ம் ஆண்டு பிரேஸிலில் நடைபெற்ற பூமி உச்சி மாநாடு. இதில் சுமார் 178 நாடுகள் பங்கு கொண்டு சுற்றுச் சுழல் மற்றும் அபிவிருத்திக்கான ரியோ பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சூழல் பாதுகாப்பு குறித்து இன்றைய உலகின் கவனம் இந்தளவு குவிக்கப்படுவதற்குக் காரணம்,  மனிதனே தனது கரங்களால் தான் வாழும் பூமியை நாசம் செய்து கொண்டமை என்பது தெளிவானது.

அல்குர்ஆன் கூறுகிறது,  “மனிதர்கள் தமது கரங்களாலேயே செய்து கொண்ட அநியாயங்களால் கடலிலும் தரையிலும் நாசம் ஏற்பட்டுவிட்டது,  அவர்கள் தாம் செய்தவற்றின் பிரதிபலனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக,  சிலசமயம் அவர்கள் தமது சுயநிலைக்கு மீண்டு வருவார்கள்” (ரூம்-41). இந்தவசனம் மனித நடத்தைகளில் ஏற்படும்  சீர்குழைவுகளை மாத்திரமன்றி பௌதீக சூழலில் ஏற்படும் பாதிப்புகளையும் இணைத்தே பேசுகிறது. ஏனெனில் இமாரதுல் அர்ழ் எனும் பூமியை அபிவிருத்தி செய்தல்,  மனிதனது அடிப்படைப் பணி. அந்தப் பணியில் நடைபெறும் அத்துமீறல்கள்,  தவறுகள் என்பன பூமியில் மனிதவாழ்வை நிச்சயமற்றதாக்கி விடவல்லன. அத்தகைய ஒரு அத்துமீறல்தான் தற்போது நடைபெற்றுள்ளது. எனவே மனிதன் மீண்டும் சுயநிலைக்கு திரும்பும் வகையில் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறான்.

கலாநிதி அப்துல் மஜீத் நஜ்ஜார் அவர்கள் குறிப்பிடுவது போல்(1) அடிப்படையில் இஸ்லாமிய போதனைகள் அனைத்தும் சூழலைப் பாதுகாக்கும் பணியை மனிதனுக்கு வெகுவாக வலியுறுத்துகின்றன. அதனை ஷரீஆவின் மகாஸிதுகளில் ஒன்றாகவே முன்வைக்கின்றது. ஆனாலும் ஆரம்ப கால மகாஸித் அறிஞர்களது கவனத்திற்கு அது பெரிதும் வரவில்லை. காரணம் இன்று போல் அன்று சூழலுக்கு பெரியளவு பாதிப்பு நிகழ்ந்திருக்கவில்லை. அந்தப் பெரிய பூமிக்கு இந்தச் சிறிய மனிதன் பெரிதாக என்ன பாதிப்பை ஏற்படுத்தி விடப் போகிறான்? என்று சிந்தித்திருப்பார்கள். ஆனால் பூமியில் மனித வாழ்வே பாதிக்கப்படும் அளவுக்கு சூழலில் பாதிப்பு ஏற்பட்டு வருவது நவீன காலத்தின் அவதானம் என்ற வகையில் இதன் ஷரீஆ முக்கியத்துவம் அன்றைய நாளை விடவும் இன்றுதான் மிகவும் முக்கியம் பெறுகிறது. எனவே சூழலைப் பாதுகாத்தல் என்பது இஸ்லாமிய ஷரீஆவின் முக்கிய மகாஸிதுகளில் ஒன்று என்ற கருத்தை நவீன அறிஞர்கள் முன்வைத்திருக்கிறார்கள். அது குறித்த ஒரு எளிமையான விளக்கத்தை முன்வைப்பதே இந்தப் பத்தியின் நோக்கம்.

சூழல் என்பதன் பொருள்(2)

சூழல் என்பது – எளிமையாகச் சொன்னால் – மனிதன் வாழ்வதற்குரிய இடத்தைக் குறிக்கிறது. அது காடுகள்,  மலைகள்,  மரம் செடி கொடிகள்,  காற்று,  நீர்,  வானம்,  பறவைகள்,  மிருகங்கள் போன்ற இயற்கைச் சூழலையும் உள்ளடக்கியிருக்கிறது. மனிதனால் உருவாக்கப்படும் கட்டடங்கள்,  வீதிகள்,  தோட்டங்கள்,  நீர்நிலைகள் போன்றனவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. அதுபோல் உயிருள்ளவற்றையும் உயிரற்றவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது.

மனிதனைச் சூழ்ந்திருக்கும் இந்த ஒவ்வொன்றும் மனிதனில் நேர்மைய தாக்கத்தையும் எதிர்மைய தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியன. மனிதனில் மாத்திரமன்றி இவை ஒவ்வொன்றும் பிறவற்றில் தாக்கம் செலுத்தக் கூடியதாகவே அல்லாஹ் படைத்திருக்கிறான். அந்தவகையில் சூழல் என்பது இவை ஒவ்வொன்றினதும் நேர் எதிர் தாக்கங்களின் வலையமைப்பு. அது மனித வாழ்வில் நன்மை தீமை,  முன்னேற்றம் பின்னடைவு,  எழுச்சி வீழ்ச்சி,  நோய் ஆரோக்கியம் போன்ற எல்லாவகையான தாக்கங்களையும் விளைவிக்கும்.

மேற்சொன்ன விளக்கத்திலிருந்து நாம் புரிந்து கொள்வது,  எம்மைச் சுற்றியிருக்கம் அல்லாஹ்வின் படைப்புக்களும் மனிதனின் உருவாக்கங்களும் மாத்திரமன்றி அவை ஏற்படுத்தும் தாக்கங்களையும் இணைத்துத்தான் சூழல் என்ற சொல்லின் பொருள் கொள்ளப்படுகிறது.

பாதுகாப்பு என்பதன் பொருள்(3)

இமாம் ஷாதிபி அவர்கள்,  மார்க்கத்தைப் பாதுகாத்தல்,  உயிரைப் பாதுகாத்தல்,  அறிவைப்பாதுகாத்தல்,  பரம்பரையைப் பாதுகாத்தல்,  செல்வத்தைப் பாதுகாத்தல் என்ற,  ஷரீஆவின் அத்தியவசிய ஜந்து மகாஸிதுகள் பற்றிப் பேசும் பொழுது,  பாதுகாத்தல் என்பதன் பொருள் என்ன என்பது பற்றியும் விளக்குகிறார். பாதுகாத்தல் என்பது இரண்டு வகையில் நிகழ முடியும்,  முதலாவது,  நேர்மையப் பக்கம்,  அதனை வளர்ச்சியடையச் செய்தல். அதாவது அதன் அடிப்படைகளைப் பலப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்தல். இரண்டாவது,  எதிர்மையப் பக்கம்,  அதனை அழிவுகளில் இருந்து பாதுகாத்தல்,  அதாவது அதற்கு ஏற்படக் கூடிய அல்லது ஏற்படும் என்று எதிர்பார்க்கக் கூடிய பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்தல்.

அந்தவகையில் பாதுகாத்தல் என்பது,  ஒரு விடயத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்த்தல் என்பது மாத்திரமன்றி குறித்து விடயத்தை உரிய முறையில் வளர்ச்சியடையச் செய்தல் என்பதும் உள்ளடங்குகிறது என்பதைப் புரியலாம்.

சூழல் பாதுகாப்பு ஒரு மக்ஸத்

சூழல் பாதுகாப்பு,  இஸ்லாமிய ஷரீஆவின் மகாஸிதுகளில் ஒன்று என்பது,   ஏலவே குறிப்பிடப்பட்டது போல்,  அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் இவ்விடயம் மிகுந்து வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் இஸ்லாம் மனிதவாழ்வை சூழலுடன் இணைத்துத்தான் நோக்கியிருக்கிறது. சூழலைத் தவிர்த்து மனித வாழ்வு தனித்துப் பயணிக்க முடியாது. உலகில் மனிதவாழ்வு நிலைத்திருக்க வேண்டும் எனின் சூழலும் நிலைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. அந்தவகையில் மனிதவாழ்வின் இருப்புக்காக உலகில் பாதுகாக்கப்பட வேண்டிய அம்சங்களை இஸ்லாம் அதன் இயல்பான ஓட்டத்திலேயே பேசிச் சென்றிருக்கிறது. சூழல் பாதுகாப்பும் அதில் ஒன்று.

சூழல் பாதுகாப்பு என்பது ஷரீஆவின் மகாஸிதுகளில் ஒன்று என்பது எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது என்பதை பின்வரும் நான்கு அடிப்படைகள் மீது நின்று விளக்கலாம் என்று நினைக்கிறேன்.

  1. சூழல் அல்லாஹ்வை வணங்குகிறது : இது அல்குர்ஆனும் சுன்னாவும் முன்வைக்கின்ற ஒரு அடிப்படையான சிந்தனை. வானங்கள் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு சுஜுது செய்வதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. “அல்லாஹ் படைத்துள்ளவற்றை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமும் சாய்ந்து,  அல்லாஹ்வுக்கு சுஜுது செய்து,  அடிபணிகின்றன. வானங்கள் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மலக்குகளும் அல்லாஹ்வுக்கு சுஜுது செய்கின்றன,  அவர்கள் பெருமையடிப்பதில்லை” (நஹ்ல் – 48, 49).

மனிதர்களைப் போல் அனைத்துப் படைப்புக்களும் அல்லாஹ்வுக்கு தஸ்பீஹ் செய்வதாகவும் அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. “வானங்கள் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு தஸ்பீஹ் செய்கின்றன அவன் அறிந்தவன் கண்ணியமானவன்” (ஹஷ்ர் 01).

இந்த வசனங்கள் சூழலுக்கும் படைப்பாளனுக்கும் உள்ள உறவை விளங்கப்படுத்துகிறது. சூழலும் அல்லாஹ்வை வணங்குகிறது,  ஆனால் அந்த வணக்கம் எவ்வாறு அமைகிறது என்பதைத்தான் மனிதனால் உணர்ந்து கொள்ள முடியாதிருக்கிறது. மனிதனும் சூழலும் அல்லாஹ்வின் படைப்புக்கள் என்றவகையில் ஒன்றுபடுகிறார்கள் மாத்திரமன்றி அல்லாஹ்வை வணங்குவதிலும் ஒன்று படுகிறார்கள். அந்தவகையில் மனிதனுக்கும் சூழலுக்கும் இடையில் ஒரு நட்புறவே கட்டியெழுப்பப்படுகிறது. சூழல் மனிதனின்எதிரியல்ல,  நண்பன். அதனால் சூழலை வளப்படுத்துவதும் பாதுகாப்பதும் மனிதனது கடமையாகிறது.

  1. சூழல் மனித நலனுக்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது : இந்த சூழல் மனித நலனுக்காகவும் அவனது தேவைகளை நிறைவு செய்யும் வகையிலேயே படைக்கப்பட்டிருக்கிறது என்பது,  அல்குர்ஆன் சூழல் குறித்து முன்வைக்கும் மற்றொரு முக்கிய சிந்தனையாகும்(4). அல்குர்ஆன் கூறுகிறது,  “உங்களுக்கு பூமியில் அதிகாரத்தைத் தந்தோம்,  அதில் உங்களுக்கு வாழ்வதற்கான எல்லா வழிவகைகளையும் செய்தோம்,  நீங்கள் குறைவாகவே நன்றி தெரிவிக்கிறீர்கள்” (அஃராப் – 10).

மற்றோர் இடத்தில் வருகிறது “நீங்கள் விரும்பியவாறு வளைந்து கொடுக்கும் வகையில் பூமியை நாங்கள்தான் வடிவமைத்தோம்,  அதன் பல்திசைகளிலும் பரந்து சென்று அல்லாஹ்வின் ரிஸ்க்கைப் பெற்றுக் கொள்ளுங்கள்,  இறுதியில் அவனிடமே மீண்டு வரவேண்டும்” (முல்க் – 15).

மனிதன் வாழும் சூழல்,  மனிதன் பயன்படும் வகையில்தான் அல்லாஹ்வால் அமைக்கப்பட்டிருக்கிறது. மனிதனது தேவைகளை நிவர்த்திக்கும் வகையிலேயே காணப்படுகிறது. இதனால்தான் பூமி மனிதனுக்கு வசப்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று அல்குர்ஆன் கூறுகிறது. இதுதான் பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலான பிரதானமான தொடர்பு வடிவம். இதனால்தான் பூமியை வளப்படுத்துதல் அல்லது அபிவிருத்தி செய்தல் என்பது மனிதனது பிரதான பணிகளுள் ஒன்றாக அமைகிறது. அல்குர்ஆன் கூறுகிறது,  “அவன்தான் உங்களை பூமியில் இருந்து படைத்து அதனை வளப்படுத்துமாறு கேட்டுக் கொண்டான்” (ஹுத் – 61) என்கிறது.

இமாரதல் அர்ழ் என்று அல்குர்ஆன் குறிப்பிட்ட,  பூமியை அபிவிருத்தி செய்தல் எனும் சிந்தனை,  சூழலைப் பாதுகாத்தல் எனும் கருத்தில் பிரதான ஒரு இடத்தைப் பெறுகிறது. ஏனெனில் ஏலவே குறிப்பிடப் பட்டது போல் சூழல் பாதுகாப்பு என்பது வெறுமனே பாதிப்புகளில் இருந்து பாதுகாத்தலை மாத்திரம் குறிக்க மாட்டாது. மாற்றமாக சூழலை அபிவிருத்தி செய்தலையும் உள்ளடக்கியிருக்கிறது. அந்தவகையில் மனிதப்படைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக காணப்படும் இமாரதுல் அர்ழ் சிந்தனை,  சூழல் பாதுகாப்புக் குறித்த சார்பு சிந்தனையை வலியுறுத்துகிறது. இந்தப் பின்புலத்தில்தான் நபியவர்கள் மரம் நடுதலையும் விவசாய அபிவிருத்தியையும் முக்கியமாய்ப் பேசியிருக்கிறார்கள். உதாரணமாக “ஒரு முஸ்லிம் ஒரு பயிரை நாட்டுகிறான்,  அதிலிருந்து யாரேனும் சாப்பிட்டாலும் சரி,  திருடினாலும் சரி,  ஒரு பறவையோ மிருகமோ சாப்பிட்டாலும் சரி,  யாரேனும் அதிலிருந்து எடுத்துக் கொண்டாலும் சரி அனைத்துமே அவனுக்கு ஸதகாவாக அமைந்து விடும்” என்றார்கள் (முஸ்லிம்).

அது போல் மற்றொரு தடவை “தரிசு நிலம் ஒன்றை யார் அபிவிருத்தி செய்கிறாரோ அது அவருக்கே சொந்தமாகும்” என்றார்கள் (திர்மிதி). இங்கு சூழல் அபிவிருத்தியை நபியவர்கள் தூண்டியிருப்பதைக் காணலாம்.

  1. சூழல் ஒரு சமநிலை வலையமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது : இந்தச் சூழலின் ஒவ்வொரு உறுப்பும்,  ஒன்று மற்றொன்றுடன் இயைந்து செல்லக் கூடியதாகவும் ஒன்று மற்றொன்றை முழுமைப்படுத்தக் கூடியதாகவும் பரஸ்பரம் ஒத்துழைக்கக் கூடியதாகவுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது அனைவரும் அறிந்திருக்கக் கூடிய ஒரு எளிய உண்மை. அதுபோல் சூழலின் ஒவ்வொரு உறுப்பும் அதற்கேயுரிய பருமனும் அளவும் வேகமும் கொண்டதாகவே காணப்படுகிறது. உரிய அளவை விடவும் அதிகரிக்கவோ குறையவோ மாட்டாது. அவ்வாறு நடைபெறும் எனின் அது மனித வாழ்வின் அழிவுக்கே காரணமாக அமைந்து விடும். இதுவும் அல்குர்ஆன் சூழல் குறித்து முன்வைக்கும் மற்றொரு அடிப்படையான உண்மை. அல்குர்ஆன் கூறுகிறது,  “பூமியை நாம் விரித்து வைத்திருக்கிறோம்,  அதில் மலைகளை அமைத்திருக்கிறோம்,  அதில் ஒவ்வொன்றையும் சமநிலையில் முளைக்கச் செய்திருக்கிறோம்,  பூமியில் உங்களுக்கு வாழ்க்கைக்கான எல்லா வசதிகளையும் செய்துள்ளோம்,  நீங்கள் அவனுக்கு ஒரு போதும் உணவளிக்க முடியாது,  ஒவ்வொரு விடயமும் எமது களஞ்சியத்தில் இருக்கிறது,  அதிலிருந்து தேவையான அளவில் மாத்திரமே நாம் இறக்கிவைக்கிறோம்” (ஹிஜ்ர் – 19, 20, 21).

இந்த அல்குர்ஆன் வசனம்,  பூமியில் எதுவும் தேவையின்றி,  ஒரு ஒழுங்கின்றி மேலதிகமாகப் படைக்கப்படவில்லை. அனைத்தும் உரிய அளவுடன் உரிய நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளன என்பதை மிகவும் தெளிவாக சொல்கின்றது.

இதனால்தான் சூழலின் சமநிலையைப் பேணுமாறும்,  அதில் குளறுபடிகளை ஏற்படுத்தக் கூடாது எனவும் அல்குர்ஆன் கூறுகிறது “வானத்தை உயர்த்தி சமநிலையில் வைத்தான்,  அந்த சமநிலையை மீறிவிடவேண்டாம்,  சமநிலையை நீதியாகப் பேணுங்கள்,  அதில் குறைபாடு செய்யாதீர்கள்” (ரஹ்மான் – 7, 8, 9).

  1. சூழலை சீர்குழைக்கும் எந்த நடவடிக்கையிலும் மனிதன் ஈடுபடக் கூடாது :பூமியில் பஸாது செய்யக் கூடாது என்பது அல்குர்ஆன் மிகுந்து வலியுறுத்தும் ஒரு உண்மை. இங்கு பஸாது என்பது,  கலாநிதி அப்துல் மஜீத் நஜ்ஜார் அவர்கள் கூறுவது போல்(5) தனித்து ஒழுக்க ரீதியான சீரழிவுகளை மாத்திரம் சுட்டவில்லை மாற்றமாக மனிதன் வாழும் சூழலுக்கு விளைவிக்கும் பாதிப்புக்களையும் முக்கியமாகக் குறித்து நிற்கின்றது. அல்குர்ஆன் முனாபிக்களுடைய செயற்பாடுகள் பற்றிப் பேசும் பொழுது,  “அவர்கள் நபியவர்கள் சபையில் இருந்து திரும்பிச் சென்றால் பூமியில் நாசங்களை ஏற்படுத்துவர்,  விளைநிலங்களையும் கால்நடைகளையும் அழித்து விடுவர்,  அல்லாஹ் நாசம் செய்வோரை விரும்புவதில்லை” (பகரா – 205). இந்த வசனத்தில் பஸாது என்பது குறிப்பாக சூழலுக்கு ஏற்படுத்தப்படும் சேதத்தையே குறித்து நிற்கின்றது.

மற்றோர் வசனத்தில் “பூமியில் அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு அதில் நாசம் செய்யாதீர்கள்” (அஃராப் – 56) என்கிறது. இந்த வசனத்தில் சூழலை அபிவிருத்தி செய்வதுதான் மனிதனது அடிப்படைக் கடமை. அதனை செய்ய முற்படுகின்ற போது கூட சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் அபிவிருத்தியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்துக் காட்டப்படுகிறது.

சூழலை சீர் குழைக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் இஸ்லாம் தடுத்துள்ளது(6). அதனை பின்வருமாறு விளக்க முடியும்.

முதலாவது,  சூழலின் உறுப்புக்களை அழித்தலை இஸ்லாம் தடுத்துள்ளது. இங்கு அழித்தல் என்பதன் பொருள்,  ஒரு விடயத்தை மனிதனுக்கு எந்தப்பயனையும் கொண்டு வராத வகையில் அழிவுக்குற்படுத்துவதையே குறிக்கின்றது. மனிதனது அடிப்டைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சூழலின் உறுப்புக்கள் பயன்படுத்தப்படுவதை இஸ்லாம் தடுக்கவில்லை. தாவரங்கள்,  நீர்நிலைகள்,  உயிரினங்கள் போன்ற எந்த உறுப்பைப் பொறுத்தவரையும் இதே விதியையே இஸ்லாம் பின்பற்றுகின்றது. இதனால் தான் நபியவர்கள் ஒரு தடவை இவ்வாறு கூறினார்கள்,  “ஒருவர் எந்தப் பயனுமின்றி ஒரு குருவியைக் கொலை செய்தாலும் மறுமையில் அந்தக் குருவி அல்லாஹ்விடம் முறையிடும்,  இவன் என்னை பயனின்றிக் கொலை செய்தான்,  தனது தேவைக்காகக் கொல்லவில்லை என்று கூறும்” என்றார்கள் (நஸாஇ).

இரண்டாவது, சூழலின் ஒரு உறுப்பை மனித நலனுக்காகப் பயன்படுத்துகின்ற போதிலும்,  அதில் எல்லை மீறி நடந்து கொள்வதையும் இஸ்லாம் தடுத்துள்ளது. இங்கு எல்லை மீறுதல் என்பதன் பொருள் சூழலின் சுயமான மீள்சூழற்சியும் சாத்தியமற்றுப் போகும் வகையில் பயன்படுத்துதல்,  அதாவது ஒரு பொருளின் நிர்ணய அளவை விடவும் அதிகமான பயன்பாட்டிற்கு அதனை உற்படுத்துதல் என்பதாகும்.

இதனால்தான் இஸ்லாம் வீண்விரயத்தைத் தடுத்தமையைக் காணலாம். அல்குர்ஆன் கூறுகிறது “விண்விரயம் செய்யாதீர்கள்,  ஏனெனில் அவர்கள்தான் ஷெய்தானின் சகோதரர்கள்” (இஸ்ரா – 26, 27). என்கிறது. அதுபோல்; அளவுக்கு மீறிய ஆடம்பரத்தை இஸ்லாம் தடை செய்தமையும் இந்தப் பின்புலத்திலாகும். நபியவர்கள் கூறினார்கள்“கால்நடை மேய்ப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயர்மாடிகளைக் கட்டுவது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று” என்றார்கள் (புகாரி).

முன்றாவது,  சூழலை மாசுபடுத்துவதை இஸ்லாம் தடைசெய்துள்ளது. மனிதப் பயன்பாட்டை தடை செய்யும் வகையில் அல்லது மனிதனுக்குப் பாதகங்களைக் கொண்டுவரும் வகையில் சூழலின் எந்த உறுப்பும் மாசு படுத்தப் படுவதை இஸ்லாம் விரும்பவில்லை. நபியவர்கள் வாழ்ந்த காலத்திலேயே மிக எளிமையாக இந்த உண்மைகள் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு தடவை பொது இடங்களில் மலம் கழிப்பது தொடர்பாக கூறும் போது,  “சாபத்தைக் கொண்டுவரக் கூடிய மூன்று விடயங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்,  அவை நீர்நிலைகளில் மலம் கழித்தல்,  பொது வீதிகளில் மலம் கழித்தல்,  நிழல்களில் மலம் கழித்தல்” என்றார்கள் (அபூதாவூத்). மலம் சூழலை பெரிதும் மாசுபடுத்தக் கூடிய ஒரு காரணி என்பது தெளிவானது.

மேற்கூறப்பட்ட நான்கு அடிப்படைகளும்,  சூழல் என்பது உலகில் மனிதவாழ்வுடன் எந்தளவுக்குப் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதையும்,  ஒன்றில் ஏற்படும் பாதிப்பு மற்றையதையும் பாரியளவில் பாதிக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. அந்தவகையில் இது இருப்பு சம்பந்தப்பட்ட ஒரு விடயம்,  மனிதவாழ்வின் நீடித்த இருப்பு சூழலின் இயல்பு நிலை பேணப்படுவதிலும் தங்கியிருக்கிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான் இது மகாஸித்களில் ஒன்றாக மாறுகிறது. மனித வாழ்வில் நிலையாகப் பேணப்பட வேண்டிய ஒரு பண்பையே நாம் மகாஸித் என்கிறோம்.

(1). நஜ்ஜார்,  அப்துல் மஜீத். (2012). மகாஸிதுஷ் ஷரீஆ பிஅப்ஆத் ஜதீதா. டியூனிஸியா: தாருல் கர்ப் அல் இஸ்லாமி. பக்கம் 207-212.

(2). அல்மன்ஸீ,  முகம்மத் அல்காஸிம். (2013). மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா வல் இஃலானுல் ஆலமி லிஹிமாயதில் பீஆ. மகாஸிதுஷ் ஷரீஆ வல் இத்திபாகி;ய்யாதுத் துவலிய்யா,  மஜ்மூஅது புஹுஸ். லண்டன் : முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸ் அல் இஸ்லாமி,  மர்கஸு திராஸாத் மகாஸிதிஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா. பக்கம் 280, 281.

(3). அஷ்ஷாதிபி,  அபூ இஸ்ஹாக் இப்ராகீம் இப்னு மூஸா. (2015). மகாஸிதுஷ் ஷரீஆ. செம்மையாக்கல் : அஸ்ஸஹ்மரானி,  அஸ்அத். பெய்ருத் : தாருன் நபாஇஸ். பக்கம் 15.

(4). அல்கர்ளாவி,  யூசுப் அப்துல்லாஹ். (2001). ரிஆயதுல் பீஆ பீ ஷரீஅதில் இஸ்லாம். கெய்ரோ : தாருஸ் ஷுரூக். பக்கம் 12-14.

(5). நஜ்ஜார்,  அப்துல் மஜீத். (2012). மகாஸிதுஷ் ஷரீஆ பிஅப்ஆத் ஜதீதா. டியூனிஸியா: தாருல் கர்ப் அல் இஸ்லாமி. பக்கம் 209 – 211.

(6). மேலது. பக்கம் 212 – 230.

News

Read Previous

அவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..

Read Next

பெண்ணுக்கு விஷேடமான ஒரு பணி இருக்கின்றதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *