புத்தகம் : வாசிப்பது எப்படி ?

Vinkmag ad

புத்தகம் : வாசிப்பது எப்படி ?
ஆசிரியர் :செல்வேந்திரன் .

📚📚📚🌹📚📚📚

ஏன் வாசிக்க வேண்டும்? எதற்காக வாசிக்க வேண்டும்? வாசிப்பதனால் என்ன பலன் ?.இந்தக் கேள்விகளுக்கு ஆசிரியருடைய பதில்.”வாசிப்பு என்னை துக்கத்தில் இருந்து விடுவித்தது; வறுமையில் இருந்து மீட்டது மேம்பட்ட மனிதனாக்கியது; எங்கும் எதற்கும் அடிமையாகாத சுதந்திர மனிதனாக மாற்றியது; சமூக பொறுப்பு மிக்கவனாக மாற்றியது என்கிறார் .”

புத்தகங்களுக்கு நாம் செய்யும் மரியாதை வாசிப்பை பரவலாக்கி கொண்டே இருப்பதுதான். மாபெரும் சமூக இழிவு பெற்றுப் போட்ட சிறு சிறு குழந்தைகளான தீண்டாமை ,மூடநம்பிக்கை, மதவெறி, இனவெறி, ஊழல், பெண்ணடிமை , இயற்கை வளங்களைச் சுரண்டுதல் போன்றவை மறைய கட்டாயம் வாசிப்பு தேவை.

பெரியாரையும் அம்பேத்காரையும் காந்தியையும் வாசித்த ஒருவன்
முதன்மையாக துறப்பது சாதிய அடையாளத்தைத்தான். ஒரேயொரு சூழியல் நூலை வாசித்துவிட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீசமாட்டான். பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒருபோதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன அரசியலில் அடையாளப்படுத்திக்கொள்ளமாட்டான். சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்களின் மீது ‘ஜூலி ஐ லவ்யூ’ எனக் கிறுக்க மாட்டான். இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்குப் பால் அபிஷேகம் செய்ய முடியாது. நமது அறிதல் முறைகளை, தத்துவங்களை வாசித்துவிட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்டமாட்டான்.

இந்தக் கட்டுமானம் சிதைக்கப்படாமல் இருப்பதற்கு தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வான். உண்மையான சமூக இழிவு என்பது அறியாமையே. மனிதன் பண்பட, இன்னும் மேம்பட்டவனாக மாற, தான் வாழும் பூமியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கையளிக்க அவன் வாசித்தே ஆகவேண்டும்.

வாசிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது? வாசிப்பவர்கள் தகவல் அறிவு மேம்படுகிறது .தொடர்ச்சியான வாசிப்பு அவர்களுடைய சொற்களஞ்சிய ங்களை பெருக்குகிறது. அதனால் தகவல் தொடர்பு திறன் செம்மை ஆகிறது. நல்ல தகவல் தொடர்பு திறன் நல்ல ஆளுமையாக மாற்றுகிறது.

வாசிப்பு இத்தனை பலன்களைத் தந்தாலும் ஏன் வாசிப்பதில்லை?
குடும்ப சூழல், பயிற்சியின்மை, ஆர்வமின்மை, வழிகாட்டல் இல்லை, கவனச் சிதறல்கள் ,கல்விசார்ந்த அழுத்தங்கள் .இத்தனையும் தாண்டி வாசிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக வாசிப்பின் மீது நேசம் வேண்டும் .

மேலும் வாசிப்பை மேம்படுத்த என்னென்ன வழிகள் ?எவ்வாறு வாசிப்பைத் தொடங்குவது? வாசிப்பதற்கான நேரமேலாண்மை, அதனால் ஏற்படும் கவனச் சிதறல்களை எவ்வாறு தவிர்ப்பது ?போன்ற பல பல கருத்துக்களை மிக அருமையாக ஆசிரியர் தந்துள்ளார் .

ஒற்றை வாழ்க்கையில் அத்தனை அனுபவங்களையும் நாம் பெற்றுவிட முடியாது. வாழ்கின்ற ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் அனுபவத்தை பெற வேண்டுமானால் கண்டிப்பாக நாம் வாசிக்க வேண்டும்.

News

Read Previous

தமிழில் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் – நோக்கர்

Read Next

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள்

Leave a Reply

Your email address will not be published.