பிலாலுடைய பாங்கு

Vinkmag ad

உமர் رضي الله عنه அவர்கள், நபி ﷺ அவர்களிடம் கேட்டார்கள்,
யா ரசூலல்லாஹ் ﷺ பிலாலுடைய பாங்கு சரியில்லை என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

பிலால் “அஷ்ஹது” என்பதற்குப் பதிலாக, “அஸ்ஹது” என்று சொல்கிறார்.

பிலால் அவர்கள் அப்படித்தான் பாங்கு சொல்லுவார்கள் என்று நபி ﷺ அவர்களுக்கும் தெரியும்.

உமையா என்பவனிடம் பிலால் அவர்கள் அடிமையாக இருந்தபொழுது, அவர்களின் நாவில் நெருப்புக் கங்கை வைத்து வேதனை செய்தான் உமையா. அதிலே பாதிக்கப்பட்ட அவர்களின் நாவிலே “ஷீன்” வராது.

உமரே! அதற்கு என்ன செய்யலாம்? என நபி ﷺ அவர்கள் கேட்டார்கள்.

யா ரசூலல்லாஹ் ﷺ, வேறு முஅஜ்ஜினை மாற்றிவிடலாம் என்று துணிந்து சொல்லிவிட்டார்கள்.

இந்த வார்த்தையை வேறு யாரும் சொல்லியிருந்தால் நபி ﷺ பெரிதாக எடுக்கமாட்டார்கள். உமர் رضي الله عنه அவர்கள் ஒரு ஆலோசனையை கொண்டுவந்தார்கள் என்றால், அதற்குப் பிறகு அல்லாஹ் அதையே சட்டமாக கொண்டுவந்துவிடுவான்.

எனவே, ஒருவேளை இது அல்லாஹ்வின் கருத்தாக இருக்குமோ என நபி ﷺ அவர்கள் எண்ணினார்கள்.

சரி, கூப்பிடுங்கள் பிலாலை.
பிலால் رضي الله عنه வந்தார்கள். இனி நீங்கள் பாங்கு சொல்லவேண்டாம் என்று சொன்னவுடன், சரி நாயகமே! என்று பிலால் அவர்கள் சென்று விட்டார்கள்.

இரவு அனைவரும் தூங்குகிறார்கள். இரவு …நீண்டுகொண்டே செல்கிறது. தஹஜ்ஜுத் நேரம் கடந்து வெளிச்சம் வரவேண்டும்.

நபி ﷺ அவர்கள் வானத்தின் வெளிச்சத்தைப் பார்க்கிறார்கள். வானம் வெளிச்சம் தரவில்லை.

மீண்டும் தஸ்பீஹ் செய்கிறார்கள். வெளிச்சம் வரவில்லை.

இரவு நீண்டுகொண்டே செல்வதால் உமர் رضي الله عنه அவர்கள் பயந்தவர்களாக பள்ளியை நோக்கி ஓடிவருகிறார்கள்.

அல்லாஹ்வின் வஹீயை எதிர்பார்த்து நபி ﷺ அவர்கள் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தபொழுது, வலது பக்கத்தில் வந்து உட்கார்ந்திருந்தது…
“ஜிப்ரயீல் عَلْيْهِ السَّلَامُ.”

யா ரசூலல்லாஹ்! இரவு நீண்டுகொண்டே போகிறதே என்றா நினைக்கிறீகள்.
இல்லை நாயகமே, இரவை பிலாலுக்காக அல்லாஹ் நிறுத்திவைத்திருக்கிறான் நாயகமே!

ஒவ்வொரு நேர பிலாலின் பாங்கிற்காக ஒவ்வொரு மலக்குமார்களும் ஏங்கிக் கிடப்போம் நாயகமே!

இனி பிலால் பாங்கு மேடையில் ஏறினால் மட்டுமே பூமியில் பகல். இல்லையென்றால் பகல் இல்லை என்று அல்லாஹ் சொல்லிவிட்டான் நாயகமே!

உங்கள் முடிவை மாற்றுங்கள் நாயகமே! சொல்லிவிட்டு ஒரு வார்த்தைச் சொன்னார்கள்,

“யா ரசூலல்லாஹ்!صلى الله عليه وسلم அல்லாஹ் தன் சட்டத்தையே உடைக்கிறான்.

இனி பிலால் ‘ஸீன்’ என்று சொன்னாலே, அல்லாஹ்விடம் ‘ஷீன்’ நாயகமே.!”

துடித்துப்போன صلى الله عليه وسلم அவர்கள், பிலால் எங்கே? எனத் தேடுகிறார்கள்.

பிலால் அவர்கள் வீட்டிற்கு கூடச் செல்லாமல், மஸ்ஜிதுன் நபவியிலே சுஜுதில் அழுதுகொண்டிருக்கிறார்கள், “யா அல்லாஹ்! நான் என்ன பாவம் செய்தேன்”.

இந்த உலகத்தில் பாக்கியங்கள் பறிக்கப்படுவதற்கு பாவங்கள் தான் காரணமாக இருக்கும்…

” நாம் விளங்கவேண்டிய விஷயம், மஸ்ஜிதோடு தொடர்பில் இருப்பவரோடு அல்லாஹ்வின் தொடர்பும் நெருக்கமாக இருக்கும் .”

துவரங்குறிச்சி முஹையத்தீன் ஆண்டவர் பள்ளிவாசலின் (1917 – 2017) நூற்றாண்டு விழாவில், அனைவரின் கண்களையும் குளமாக்கிய “மௌலவி A.U. அபூபக்கர் உஸ்மானி” அவர்கள் (சென்னை) ஆற்றிய உரையிலிருந்து.!

News

Read Previous

விமர்சிக்கும் உலகம் இது!

Read Next

மானம் காப்போம்….மகுடமும் காப்போம்

Leave a Reply

Your email address will not be published.