நூல் விமர்சனம்

Vinkmag ad

பிப்ரவரி மாத செம்மலரில் வெளியான நூல் விமர்சனம்

முனைவர் ச.சீ.இராஜகோபாலன் எழுதிய

கல்வி நேற்று இன்று நாளை

முனைவர் ச.சீ.இராஜகோபாலன் தமிழகம் நன்கறிந்த கல்வி யாளர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு அவரின் பங்களிப்பு அளவற்றது. பணியில் சேர்ந்த உடனேயே ஆசிரியர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். கோவை சர்வஜன மேனிலைப் பள்ளியில் 23 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். தலைமை ஆசிரியர்களைப் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்த பெருமைக்குரியவர். ஏ.எல்.முதலியார் குழு, கோத்தாரி குழு என்று பல்வேறு அரசுக்குழுக்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைகள் நல்கியவர். கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கல்விப் பயணம்  மேற்கொண்டவர்.

தன்னுடைய 90 வயதிலும் அயராது இயங்கிக் கொண்டிருக்கும் இந்நல்லாசிரியரை எல்லோரும் எஸ்.எஸ்.ஆர் என்று அன்புடன் அழைக்கிறார்கள். தமிழ்வழிக் கல்வி, ஆசிரியர்-மாணவர் உறவு, மாணவர்களின் உரிமைகள், ஆசிரியர்களின் கடமைகள் பற்றி யெல்லாம் பல ஊடகங்களில் எழுதிவருபவர். எஸ்.எஸ்.ஆர் புதிய ஆசிரியன் இதழில் தொடர்ந்து எழுதிவந்த கல்வி தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து மதுரை திருமாறன் வெளியீட்டகம் இந்த அரிய நூலினை வெளியிட்டுள்ளது. புதிய ஆசிரியன் இதழின் ஆசிரியர்கே.ராஜுஇந்நூலுக்கான முன்னுரையில், “எஸ்.எஸ்.ஆருடன் உரையாடும்போதும்,அவரதுகட்டுரைகளைப்படிக்கும்போதும் அவரது அபாரமான நினைவாற்றல் நம்மை பிரமிக்கவைக்கிறது” என்கிறார். தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது மாணவர்களிடம் அவர் காட்டிய அக்கறை அலாதியானது. மாணவர்களது நடத்தை விதிகளை அவர்களே உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரத்தை வழங்கியவர்.

முப்பத்தாறு கட்டுரைகளுடன் வெளிவந்துள்ள இந்நூல் கல்வி குறித்த பல சந்தேகங்களுக்கும் விடையளிக்கிறது. ஆசிரியர் கல்வி, தேர்வு முறைகள், கல்விக் கொள்கை, பாடத்திட்டம் உருவாக்கம், பொது நுழைவுத்தேர்வு, தனிப் படிப்பு, கல்வி நிர்வாக அமைப்பு, அரசுப் பள்ளிகளின் தரம், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களின் நிலைமை என்று கல்வித்துறையின் அனைத்துப் பரிமாணங்கள் குறித்தும் கட்டுரைகளில் எஸ்எஸ்ஆர் அலசுகிறார். கல்வி அளிக்க அரசுகள் தம் பொறுப்பிலிருந்து விலகி தனியார் வசம் ஒப்படைக்க முற்படுவது பேராபத்தில் முடியும் என்பதை வலியுறுத்துகிறார். வட மாநிலங்களில் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ்சின் ஒரு பிரிவான விஸ்வ இந்து பரிஷத் பல்லாயிரம் கிளைகள் மூலம் மதவாதப் பள்ளிகளை நடத்தி வரும் அபாயத்தைச் சுட்டிக் காட்டு கிறார்.

கட்டுரைகள் அனைத்தும் பொருத்தமான படங்களுடன் பாங்குடன் வெளிவந்துள்ளன. ஆசிரியப் பணியில் ஈடுப்பட்டுள்ளோர் அனைவரின் கைகளிலும் தவழவேண்டிய நூலிது.

பெ.விஜயகுமார்

வெளியீடு : மதுரை திருமாறன் வெளியீட்டகம், 21,சாதுல்லா தெரு, தி.நகர், சென்னை-17.  விலை:ரூ.150/-

News

Read Previous

‘வாழ்க்கையை எந்தக் கோணத்தில்”..

Read Next

விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *