நூல் மதிப்புரை

Vinkmag ad

நூல் மதிப்புரை

அம்ருதா (வரலாற்றுப் புதினம்)

ஆசிரியர்: திரு. வெ. திவாகர்

 

சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், வல்லமை மின்னிதழின் ஆசிரியர்குழு ஆலோசகர் என்ற பன்முகங்கள் கொண்டவர் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரு. வெ. திவாகர். அவருடைய சமீபத்திய வெளியீடாக வந்திருக்கின்றது வரலாற்றுப் புதினம் ‘அம்ருதா.’

 

வம்சதாரா, திருமலைத்திருடன், எஸ்எம்எஸ் எம்டன் 22/09/1914 ஆகிய அருமையான வரலாற்றுப் புதினங்களை ஏற்கனவே எழுதி வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் திரு. திவாகர். இவருடைய திருமலைத்திருடன் புதினத்தைப் படித்து அக்கதையில் உள்ளத்தைப் பறிகொடுத்த வாசகர்கள், ’அபயன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முதற்குலோத்துங்கன், சோழ அரசனான வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எழுதவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுக்க, அதனைப் பூர்த்தி செய்யுமுகத்தான் இப்புதினத்தை எழுதியுள்ளார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

 

’அம்ருதா’ புதினம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்குமுன் இக்கதையின் பின்னணியைச் சுருக்கமாய்க் கூறிவிடுவது பொருத்தமாயிருக்கும் என எண்ணுகின்றேன்.

 

விஜயாலயச் சோழரால் கி.பி. 850-இல் தொடங்கப்பட்ட பிற்காலச் சோழவம்சம் அதன்பின்னர் ஆல்போல் செழித்து அறுகுபோல் வேரூன்றி வளர்ந்தது. முதலாம் இராசராசனின் காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியும், பெருமையும் பெற்ற சோழராட்சி, அடுத்துப் பட்டமேறிய அவருடைய திருமகனான முதலாம் இராசேந்திரன் காலத்தில் தென்னகம் மட்டுமல்லாது கிழக்காசிய நாடுகளிலும் பல்கிப் பரவிற்று. இவ்வாறு மீப்பெரு வளர்ச்சி கண்டுவந்த சோழர் தொல்குடி, முதலாம் இராசேந்திரனின் மூன்றாவது மைந்தனான வீரராசேந்திரன் அரியணை ஏறி ஆட்சிசெலுத்தியவரைத் தந்தைவழி மரபிலேயே நீடித்தபோதிலும், அடுத்த பட்டத்துக்குரியவனாக மாமன்னர் முதலாம் இராசேந்திரன் தேர்வு செய்திருந்தது, தன்னருமை மகளான அம்மங்காதேவியின் புதல்வன் அபயனென்னும் முதற் குலோத்துங்கனையே!

 

ஆனால் விதியாலும், உள்நாட்டுச் சதியாலும் ஆட்சி வீரராசேந்திரனின் மகன் அதிராசேந்திரனுக்குச் சென்றுவிடுகின்றது. இந்நிலையில் பாட்டனாரின் அபிமானத்துக்குரியவனும், சோழநாட்டு மக்களின் அன்புக்குரியவனுமான அபயனின் நிலை என்ன? அவனால் அதிராசேந்திரனை வென்று ஆட்சியைக் கைப்பற்றமுடிந்ததா? என்பவற்றையெல்லாம் வெகுசிறப்பாக அம்ருதாவில் விவரித்துள்ளார் புதின ஆசிரியர்.

 

நண்பர்களே! ஒரு கதையின் வெற்றியில் ஐம்பது விழுக்காடு கதைக்களத்தைச் சரியாய்த் தேர்வு செய்வதில்தான் இருக்கின்றது எனக் கூறலாம். அவ்வடிப்படையில் பார்த்தால், மகோன்னதமான நிலையிலிருந்த சோழசாம்ராஜ்யம் ஒரு பலத்த சரிவைச் சந்திக்கும் வேளையில், வீரமும் விவேகமும் வாய்ந்த அக்குலத்தோன்றலொருவன் அதனை எப்படிச் சீர்செய்து ஆட்சியை நேர்செய்கின்றான் எனும் வரலாறு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அத்தகைய சிக்கலான காலகட்டத்தைக் கதைக்கருவாகத் தெரிவுசெய்த ஆசிரியரின் திறமையை எண்ணி வியக்கின்றேன். கதைக்களத்தைப் போலவே கதையையும் சிறப்பாகவும், வெகுநேர்த்தியாகவும் அவர் நகர்த்திச் செல்லும் பாங்கு அவரை ஓர் தேர்ந்த கதாசிரியராய் முத்திரை குத்த வைக்கின்றது.

 

இனி அம்ருதாவைச் சற்று ஆராய்வோம்.

 

சோழமன்னன் அதிராசேந்திரனை மணப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காம்போய நாட்டு இளவரசியும், கண்டோர் மயங்கும் கட்டழகியுமான கதாநாயகி அம்ருதா, வேங்கி நாட்டின் விஜயவாடிகைக்குக் (இன்றைய விஜயவாடா) கப்பலில் வந்திறங்குவதிலிருந்து கதை தொடங்கி வாசகர்களின் இரசனைக்கு விருந்தாய் ஒன்பான் சுவைகளையும் (நவரசம்) அள்ளி வழங்கியபடி வளர்ந்து செல்கின்றது. கதையில் இடம்பெற்றுள்ள மாந்தர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் நம் உள்ளத்தைக் கொள்ளையிடுகின்றனர்.

 

கதாநாயகனும் வேங்கிநாட்டுக்கு அரசனாக முடிசூட்டப்பட்டவனுமான அபயன் தன் நேர்மை, குறும்புத்தனம், வீரம் முதலியவற்றால் நம்மைக் கவர்கிறானென்றால், அவனுடைய அத்யந்த நண்பனும், வேங்கியின் காவற்படைத் தலைவனுமான நாராயணன் தன்னுடைய அசகாயச் சூரத்தனத்தாலும், சமயோசிதத்தாலும் நம்மைக் காந்தம்போல் ஈர்க்கிறான். சோழர்குலத்தின் குருவாக வருகின்ற அகோரசிவாசாரியார் தன்னுடைய புத்திக்கூர்மை, சோழகுலத்தின் நலனில் காட்டும் அளவற்ற அக்கறை, தெய்வபக்தி முதலியவற்றால் நம்மை வசீகரிக்கின்றார்.

நற்குணங்களால் இவர்கள் நம் நெஞ்சில் இடம்பிடிக்கின்றார்கள் என்றால், துர்க்குணங்களாலும் நம் கவனத்தைப் பெறுகின்றனர் வேறுசிலர். சாளுக்கிய அரசனான விக்கிலன் (எனும் ஆறாம் விக்கிரமாதித்தன்), வேங்கியின் அரசைக் கைப்பற்ற நினைக்கும் விஜயாதித்தன், போத்தராஜு, ஜனநாதன், மணவாளன் போன்றோர் இவ்வகையினர்.

 

ஆண்களின் பாத்திரப்படைப்புக்களை விஞ்சும் வகையில் பெண்பாத்திரங்கள் கதையில் மிளிர்வது பாராட்டத்தக்கது. சான்றாக, சோழ மக்களின் பெருமதிப்புக்குரியவராக விளங்கும் அபயனின் தாய் அம்மங்காதேவி, இளகிய மனமும் இளமை நலமும் வாய்க்கப்பெற்ற சேரஇளவரசி இளவழகி, மருத்துவத்துறையில் ஆழ்ந்த அறிவும், ’மக்கள் சேவையே மகேசன் சேவை’ எனும் உயர்ந்த குறிக்கோளும் கொண்ட இனியபெண் மலையவாசினி, தில்லையம்பலவனிடம் தீராத காதல்கொண்டு அவன் திருப்பதியங்களைப் பாடுவதில் பெருமகிழ்வுகாணும் விக்கிலனின் மனைவியும், சோழநாட்டு இளவரசியுமான யாமினி, அத்தை அம்மங்கைக்குச் சேவை செய்வதிலேயே இன்பமெய்தும் அபயனின் மனைவி மதுரா(ந்தகி) எனப் பெண்களின் பங்களிப்பைக் கணிசமான அளவில் இப்புதினத்தில் காணமுடிகின்றது.

வெறும் அலங்காரப் பதுமைகளாகப் பெண்களைக் காட்டாமல், தங்கள் உரிமைக்குக் குரல்கொடுக்கும் துணிச்சலும், சுயமரியாதையும் கொண்டோராய் அவர்களை ஆசிரியர் படைத்திருப்பது அவருடைய பெண்ணியச் சிந்தனைகளின் வெளிப்பாடாய்த் திகழ்கின்றது. இதற்கே ஆசிரியரைத் தனியாய்ப் பாராட்டலாம்!

 

கதைக்குள் மற்றொரு கதையாய் நாயன்மார்களில் முதன்மையானவராய்க் கருதப்படும் ’தம்பிரான் தோழரான’ சுந்தரமூர்த்தி நாயனார், திருவொற்றியூர் திருத்தலத்தில் சங்கிலி நாச்சியாரை மணந்த வரலாறு சுவையாகப் பேசப்பட்டுள்ளது. இவ்வரலாற்றை மிகச்சரியான இடத்தில் பொருத்தியிருக்கும் ஆசிரியரின் நுண்மாண்நுழைபுலம் போற்றத்தக்கது.

இவையேயன்றி, திடுக்கிட வைக்கும் திருப்பங்கள், திகைக்க வைக்கும் மர்மங்கள், மகிழவைக்கும் நகைச்சுவைகள், நெகிழவைக்கும் தியாகச் செயல்கள் என்று பல்வகைச் சம்பவங்களும் கதையில் இடம்பெற்றுக் கதைக்கு வலுவூட்டுகின்றன.

 

இறுதியாகச் சில வரிகள்….வரலாற்றுப் புதினங்கள் படைப்போர் மிகவும் அருகிவரும் காலமிது. காரணம்…மற்ற கதைகளைப்போல் நினைத்ததையெல்லாம் வரலாற்றுப் புதினங்களில் எழுதிவிட முடியாது. யாருடைய வரலாற்றை எழுதுகின்றோமோ அவர்களைக் குறித்த வரலாற்று ஆவணங்கள், பதிவுகள் அனைத்தையும் முதலில் திரட்டவேண்டும். கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் போன்றவையும் இதில் அடக்கம். இதற்கு அசாதாரண உழைப்பும் தளராத ஊக்கமும் தேவை.

 

வரலாற்று ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு கதையெழுதிவிட முடியுமா? நிச்சயம் முடியாது! நிகழ்ந்த வரலாற்றை, ’வரலாற்றுப் புதினமாக்க’ நகாசு வேலைகள் நிறையச் செய்தாக வேண்டும். அதற்குக் கற்பனைப் பாத்திரங்களின் துணை மிகஅவசியம். கதையின் நம்பகத்தன்மையும், ஓட்டமும் கெடாதவகையில் கற்பனைப் பாத்திரங்களையும், அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் உண்மைச் சம்பவங்களோடு அழகாகவும் அளவாகவும் இணைக்கவேண்டும். எத்துணைக் கடினமான செயலிது? இதனைத் திறம்படச் செய்வதற்கு வறட்சியற்ற கற்பனை வளமும், மதியூகமும் வேண்டும் ஓர் எழுத்தாளனுக்கு! அப்போதுதான் வரலாற்றுப் புதினத்தை வகையாகச் சமைக்க முடியும்.

 

இப்பண்புகள் அனைத்தும் இறையருளால் ஒருங்கே வாய்க்கப்பெற்றுள்ள புதின ஆசிரியர் திரு. திவாகர், தெவிட்டாத அமுதவிருந்தாய் அம்ருதாவைப் படைத்துள்ளதில் வியப்பேது! ஆசிரியரின் இவ்வரிய முயற்சியை வரவேற்பதும், இப்புதினத்தை வாங்கிப் படிப்பதுமே நாம் அவருக்குச் செய்யவேண்டிய கைம்மாறாகும்.

 

வாசக அன்பர்களே! தமிழர்களின் பொற்காலமாய் மின்னிய சோழர்களின் காலத்தை, அவர்களின் வரலாற்றை நம்கண்முன்னே காவியமாய் நிறுத்தியிருக்கும் அம்ருதாவை அவசியம் வாங்கிப் படியுங்கள்! ஆனந்தம் அடையுங்கள்!

 

நான்கு வரலாற்றுப் புதினங்களை வரிசையாய் எழுதி ’வரலாறு’ படைத்திருக்கும் திரு. திவாகர் மேலும் பல அருமையான நூல்களை யாத்து அன்னைத் தமிழுக்கு அணிசெய்வாராக!

 

அம்ருதாவைப் பெற:
பழனியப்பா பிரதர்ஸ்
கோனார் மாளிகை
25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 600014
தொலைபேசி: 04428132863/43408000
புத்தகத்தின் விலை: ரூ. 335/

மேலதிகத் தகவல்களுக்கு ஆசிரியர் திரு. வெ. திவாகரைத் தொடர்பு கொள்ளவும்.
ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: vdhivakar@rediffmail.com   

(இப்புதினம் தொடங்குவது சித்ராபௌர்ணமியின் அடுத்த நாளிலிருந்தே; புதினத்தின் மதிப்புரையையும் நான் சித்ராபௌர்ணமியன்று வெளியிடுவது ஓர் எதிர்பாராக் காலஒற்றுமையே! (it’s an accidental coincidence indeed!))  🙂

அன்புடன்,

மேகலா

News

Read Previous

குடும்பம்

Read Next

வாழ்க்கைத் துணைவி தேவை

Leave a Reply

Your email address will not be published.