நறுக்குவோம் பகையின் வேரை

Vinkmag ad

மலேஷிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை

நறுக்குவோம் பகையின் வேரை

முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங் கேட்டால்

ஆற்ற விளைவது நாடு !

பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு !

“மிகுந்த பொருள்வளம் உடையதாகவும், மக்கள் எல்லோரும் விரும்பத் தகுந்ததாகவும், கேடில்லாததாகவும், மிகுந்த விளை பொருளை ஈட்டித்தருவதுமே நாடாகும். மேலும் “பிற அண்டை நாட்டு மக்கள் தன் நாட்டில் குடியேறுவதால் ஏற்படும் சுமைகள் ஒன்று சேர்ந்து தன்மீது விழும்போது அதில் விழாமல் எழுந்து நின்று, ஆளும் அரசருக்கு இறைப்பொருளையெல்லாம் தரத்தக்கதே நாடு”

ஒரு நாட்டில் இலக்கணத்தை ஒன்றரை வரிகளிலே வெளிப்படையாகக் கூறிவிட்டான் தமிழறிஞன் வள்ளுவன். வள்ளுவனாரின் வாக்கையும் நம் மலேசியத் திருநாட்டின் வாழ்க்கையையும் ஒன்றினைத்துப் பார்க்கும்போது வள்ளுவனின் கற்பனையிலே ஒரு நாடு எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே நிலைத்திருக்கிறது நம் நாடு !

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? வளம் பெருகி வருவோரை எல்லாம் வாழவைக்கும் வள்ளல் பூமி அல்லவா நமது மலேசியம்? அயலக மக்களெல்லாம் அக மகிழ்ந்து வருகை தரும் நாடல்லவா நம் தாய் பூமி? கேடு விளைவிக்க நாடி நின்றோரையும் கெடுக்க எண்ணாத பொன் மனம் கொண்டதல்லவா நம் கண்ணியப் பூமி? ஈயம், தேயிலை, இரப்பர், பெட்ரோல், செம்பனை போன்ற கனி வளங்களை ஈந்து தருவதல்லவா எங்கள் தாய் பூமி?

வள்ளுவன் சொன்ன நாடு நூற்றுக்கு நூறு நமது நாடே என்று பெருமிதத்துடன் எண்ணத் தோன்றுகிறது நமக்கு ! உண்மை தானே?

ஆங்கில ஏகாதிபத்தியத்தை அமைதியாக அனுப்பி வைத்து விட்டு நம் முன்னோர்கள் நம் முன்னேற்றத்திற்காகப் பட்ட பாட்டை நியாய உள்ளம் மறவாது. காட்டை அழித்து நாடாக்கி, மலையைப் பிளந்து ரோடாக்கி, (செம்) பனையைப் பிழிந்து எண்ணையாக்கி இன்னும் எத்தனையோ செல்வங்களையும், சுகங்களையும் சொல்ல முடியாத உயர்வுகளையும் நமக்குத் தந்து நிற்கிறது நமது அரசாங்கம்.

வெள்ளையனை வெளியேற்றாமல் இருந்திருந்தால் இத்தனை சுகங்களும் நம்மைத் தேடி வந்திருக்குமா? அந்நிய ஆதிக்கத்தை அடியோடு அடி மண்ணோடு அகற்றி இராவிட்டால் இத்தனை செல்வங்களையும் நாம் பெற்றிருப்போமா? நிச்சயமாக முடியாது ! சத்தியமாக முடியாது !

விளையும் செல்வங்கள் நம்மை வந்து சேராது ! அது வெள்ளையன் நாடு சென்று விடும். நமது உழைப்பை மூலதனமாகக் கொண்டு நம்மை ஆண்டு அனுபவித்து, ஆட்டிப்படைத்து, நம் சிவப்புக் குருதியை வெள்ளை வியர்வையாக வெளியாக்கி நாம் உழைத்தெடுத்துக் கொடுத்த விலைமதிப்பில்லாத கனி வளங்களையெல்லாம் கப்பலேற்றிக் கொண்டு போய் விட்டிருப்பான் வெள்ளையன்.

விடுதலைக் காற்றை சுவாசித்து இருக்க முடியாது ! உயர்வு தரும் கல்விச் செல்வத்தை கற்றறிந்து கொள்ள முடியாது ! சுதந்திரப் பேச்சு, சுதந்திர எழுத்து, சுதந்திர உணர்வு, சுதந்திரச் செயல்பாடு, வாழ்வின் உயர்வு இவை எதற்குமே வழி பிறந்திருக்காது !

ஆகா ! இன்று எத்தனை பெரிய இன்பத்தில் இந்நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா? அதை வரிகளால் வடித்தெடுத்துக் கொடுக்க முடியாது ! வெயிலில் வெந்து கொண்டிருப்பவனுக்குத்தான் நிழலின் அருமை தெரியும் என்பது போல… இன்னும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல் மன்றாடிக் கொண்டிருக்கும் மக்களைக் கேளுங்கள் சுதந்திரத்தின் சுதந்திரத்தை ! சொல்வார்கள் ! சொல்வார்கள் !

அப்படிப்பட்ட சுதந்திரத்தை அடைந்து விட்டோம் என்று ஆனந்தப் பாட்டுப்பாடி அகமகிழ்ந்து நிற்கும் இந்நாளில் – இந்தச் சுதந்திரத்திற்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்பதை இதயத்தில் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பாடுபட்டுத் தேடிப் பெற்ற இந்த சுதந்திர நாட்டுக்கு நம்மால் என்ன நன்மை விளையப் போகிறது? நாம் என்ன செய்தோம் இந்த நாட்டுக்கு? நாம் என்ன செய்யப் போகிறோம் இந்த மண்ணுக்கு? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் இந்த மக்களுக்கு? என்ற உரத்த சிந்தனை நம் உள்ளத்தைத் தட்ட வேண்டும்.

வெளிநாட்டில் வெறுங்கையை ஏந்தாமல் தன்னிறைவோடு வாழச் செய்த நம் தலைவர்களுக்கு என்ன காணிக்கை செலுத்தப் போகிறோம்? மண்ணைப் பொன்னாக்கி வளமான வாழ்வு தந்து கொண்டிருக்கும் நம் அரசுக்கு என்ன விசுவாசம் காட்டப் போகிறோம்? வேதனை வாழ்வை வேரறுத்து இன்ப வாழ்வைப் பொங்கச் செய்த நம் அரசருக்கு அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு மக்கள் அனைவருக்கும் நாம் செய்யப் போவது தான் என்ன

நாடென்ன செய்தது நமக்கு என்ற விதண்டாவாதம் பாராமல் நாமென்ன செய்தோம் அதற்கு என்ற சிந்தனை ஓட்டத்தை செயல் வடிவமாக்கிப் பாருங்கள்

உண்ணும் உணவை வழங்கும் மண்ணுக்கு, உயர்வு கூட்டும் என்ன செயல் நம்மிடம் இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். தாய் பூமியின் பெருமையை வெளி நாடு விளங்கும் நமது முயற்சிக்கு என்ன வடிவம் கொடுத்திருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். நம் இரத்தத்தின் உடன் பிறப்புக்களான நாட்டு மக்களுக்கு என்ன நன்மை நம்மால் விளைந்திருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். இதில் ஒன்றையேனும் நாம் உணர்ந்து செயல்பட்டிருந்தால் நாம் தான் உண்மையான சுதந்திர புருசர் ! உண்மையான மண்ணின் மைந்தர் ! இதுவரை இந்த செயல் உணர்வு நம்மிடம் இல்லை என்றால் இன்றிருந்து அதைச் செயல்படுத்த சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இது நம் சுதந்திரத்திற்குச் செய்யும் நன்றியாகும்.

நமது சொல்லால், செயலால், எழுத்தால், நம் நாட்டு மக்களுக்கு எந்தத் துன்பமும் துயரமும் உண்டாகாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் “சுகவாழ்வு வாழத்தான் சுதந்திரத்தைப் பெற்றோமே தவிர – நாம் சுகமாக இருக்க இன்னொருவன் சுதந்திரத்தை அழித்துப் பார்க்க அல்ல” என்ற உணர்வு நம் உள்ளத்தை தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

வெளி நாட்டான் பகையின் வேர்களை அறுத்து எரிந்த நாம் இனி உள் நாட்டுப் பகையினையும் , சமூக விரோத சக்திகளையும், உயர்வுத் தடைகளையும் அழித்தொழித்து வெற்றி காண வேண்டும். வீர மிக்கத் தமிழர் பரம்பரை விவேகத்தில் சோடை இல்லை என்பது உலகறிந்த விஷயம்.

“நறுக்குவோம் பகையின் வேர் சிறுத்தைப் பெருங் கூட்டம்

நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசு அறைவாய் !

குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி

கூண்டோடு போயிற்று ! கொண்டா முரசம் !

நறுமலர் சோலையின் நரிபுக விட மாட்டோம் !

நாம் தமிழர் நாம் தமிழர் என்று முரசு அறைவாய் !

வெறிகொண்டு புகுமிந்த அயலார் ஆட்சி

வேரற்றுப் போயிற்று கொண்டா முரசம் !”

அன்று பாவேந்தன் பாரதி தாசன் அறைந்த அதே முரசை இன்றும் தட்டி நம் இனத்துக்கு உணர்வூட்டு தமிழா ! விழுந்து கிடந்ததெல்லாம் போதும் ! இனி விழித்தெழுந்து வீறு நடை போட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் விழுமிய பணியாற்றும் உணர்வோடு கூடி வாழ்ந்து கோடி நன்மை பெற சுதந்திர உணர்வோடு சேர்ந்து வாழ ஒன்று கூடி வாழ வாருங்கள் சகோதரர்களே !

வாழ்க சுதந்திர மலேசியா !

News

Read Previous

ம‌ஸ்க‌ட் த‌மிழ் முஸ்லிம் ச‌ங்க‌ இஃப்தார் நிக‌ழ்ச்சி

Read Next

வேர்கள் : என்றும் வாழும் உமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *