வேர்கள் : என்றும் வாழும் உமர்

Vinkmag ad

முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ

அகிலத்தை ஆளுகின்ற அன்பான பேரிறைவா !

ஆரம்பம் உன்பெயரால்; அத்தனையும் உன்னருளால் !

மகிமைக்கு உரியதிரு மென்குரலார் மைதீ. சுல்த்தான்

மன்னவராய் வீற்றிருக்கும் மன்றமிதை வாழ்த்துகிறேன் !

முகில் மட்டும் வானத்தில் வருவதிலே பயனென்ன?

மதியோடு சேர்ந்துவந்தால் மதிப்பாரே ! வியப்பாரே !!

தகைசார்ந்த வெண்ணிலவுக் கவிஞருடன் தமியேனும்,

தன்னடக்கம் கூறுகிறேன் ! துளிமுகிலாய் சேருகிறேன் !

விழுதுகளும் வேருடனே வீற்றிருக்கும் வேளையிலே,

இந்த விழாவிற்கு இந்த விதைபோட்டு விளைவித்த வேந்தர்களைத் தேடுகிறேன் !

விழுமியதோர் நெஞ்சத்தால் நன்றிபல கூறுகிறேன்;

வருங்காலம் உங்களைத்தான் வாழ்த்துமென நம்புகிறேன் !

பழுதின்றித் தமிழுக்குப் பணிசெய்யும் உங்களுக்குப்

பாரெல்லாம் புகழ் சூடும் ! பல்லாண்டு பண்பாடும் !!

செழுமியதோர் தமிழுக்குச் செய்தபணி சாகாது !

சத்தியமாய் சரித்திரமும் எழுதாமல் போகாது !!

காசுக்கு மேல்காசைக் கணக்கின்றிச் சேர்த்துவரும்

காலமிதில் தமிழுக்குக் காலத்தைச் சேர்த்து வைத்து

ஆசிக்கும் பெருமனமே ! அற்புதமே ! அருங்குணமே !!

அனைவர்க்கும் என் நன்றி ! அனைவர்க்கும் என் நன்றி !!

காசினியில் சேர,சோழ, பாண்டியரின் பரம்பரையாய்

கவின்தமிழைக் காத்துவரும் குணமுடையோர் … என் நன்றி !

தூசுக்குச் சமமாகத் தொல்லைகளைத் துரத்திவிட்டு

தூயபணி ஆற்றி நிற்கும் துணிவுடையோர் … என் நன்றி !

மலைநாட்டு நந்தவனம் பூத்தெடுக்க கவிமான்கள்

மண்பூண்ட பொன்போல – முதலிட்ட மதிபோல

இலைமறையாய் காய்மறையாய் இருந்திட்ட நிலை நீக்கி

இங்கழைத்துக் காட்டிவிட்டீர் ! இலக்கியங்கள் கூட்டிவிட்டீர் !

தலைசிறந்த தமிழறிஞர் தமிழகத்தில் மட்டுமல்ல ;

தரணியிலே மிகச்சிறந்த தத்துவத்தின் மேதை, ஞானி

மலையகத்தும் உண்டுயென்று மார்தட்டிச் சொல்லிவிட்டீர் !

மாண்புதனை நாட்டிவிட்டீர் !! மாபுகழை ஈட்டிவிட்டீர் !!!

கணினிகளோ இணையங்களோ இல்லாத காலமதில்

கடல்தாண்டி மலை தாண்டி இதயத்தைத் தூதுவிட்டு

மணியான மாநபிகள் மலர்ந்துவந்த மக்காவில்

மனவிதையை பதியவைத்து மாபெரிய வேருமிட்டு,

மணல் பிளந்து, மேலெழுந்து, விழுமியதோர் மரமாய் நின்று,

மகிமைமிகு நறுமலராய் ‘கவின்சீரா’ பூத்தெடுத்து

பணிவாகத் தென்றலுடன் தேன்தமிழைக் குழைத்து வைத்த,

பெரும்புலவன் உமரைத்தான் பாட்டெடுத்துப் புகழவந்தேன் !

இத்தரையில் எட்டயபுர எழில் மன்னன் அவையில் மட்டும்

இருப்பதிலே பெருமையில்லை எனயிறைவன் எண்ணினனோ ?

பத்தரைமாற் றுப்பொன்னாய் பாரெல்லாம் சுடர்பரப்பும்

பெருமாப் பைத்தமிழில் பாடவைக்க எண்ணினனோ ?

தித்திக்கும் தமிழுக்குள் திருநபியைக் கொண்டுவந்து

தமிழுலகில் மட்டுமின்றித் தரணியெலாம் புகழ் மணக்க

எத்திக்கும் எதிரொலிக்கும் எழிற்சீரா காவியத்தை

இயற்றியதோர் பெரும்புலவ ! நீவாழ்க ! நிதம் வாழ்க !!

தரைநிலவாய்ப் பிறந்து வந்த தாஹார சூல் வரவை

தங்கத்தில் எழுத்தெடுத்து இமயத்தின் முதுகிலிட்டு

திரையின்றிப் பார்த்தாலும் தெளிவாகத் தெரியாது !

தங்கத்தமிழ் மொழிகுழைத்துத் தந்துவிட்ட சீராவால்

அரைகுறையாய் அறிந்தவரும் அனைத்தையுமே அறிந்துவிட்டார் !

அகிலமெலாம் சிராவைச் சுமந்து நின்ற தமிழுக்கும்

உரையெழுதித் திருப்பள்ளி வாசலுக்குள் குடிபுகுந்து

உலகமறை குர்ஆனின் அருகினிலே அமர வைத்தார் !

இலக்கணத்தில் எல்லையிலா வாக்கியங்கள் வார்த்தெடுத்து

இலக்கியத்தைப் பேசுகின்ற நெஞ்சங்களில் குடியமர்ந்தார் !

கலைமறையாம் முஹம்மதின் சரிதையினைக் கவியெடுத்து

கவின் – இஸ்லாம் சமுதாய மனங்களிலே குடிபுகுந்தார் !

இலக்கியங்கள் போதிக்கும் எழிற்கல்வி சாலைகளில்

இவர்படைத்த சீராவால் இளம்நெஞ்சை வருடிவிட்டார் !

உலகுபுகழ் மதினாவின் சர்வகலா நூலகத்தில்

உயர்தமிழை சீராவால் உள்நுழைத்து அமரவைத்தார் !

திருஹிஜ்ரா காண்டமதில் மலர்விழியை நனையவிட்டார் !

திருமணத்துப் படலமதில் காளையரை மகிழவிட்டார் !

இருபுருவம் நெருங்கிநிற்கப் போர்ப்பரணி படலமிட்டார் !

இலட்சியத்து வேட்கைதனை எழில்வேத வரவுலிட்டார் !

இருதயங்கள் இறைஞானம் பெற்றிலங்கி நெறிவாழ

இகபரத்து வாழ்வுதனை இணைத்திணைத்து எழுதிவைத்தார் !

அருந்தமிழை அணிகலனாய் அலங்கரித்தார் அலங்கரித்தார் !

ஆகா..கா அருமைவுமர் பெருமைதனை என்னசொல்வேன் ?

ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறே பதம்போல

உமர்சமைத்த படிகளிலே அரும்சீரா பதமாகும் !

திருநபிகள் வாழ்க்கையினைத் தேந்தமிழில் பாடவந்து –

திருமறைக்கும் நபிமொழிக்கும் அடுத்தயிடம் உமர்பிடித்தார் !

பெருங்காப்பியங்களிலே ஐந்துக்கு அடுத்ததொரு

பெயர் சொல்ல வேண்டுமெனில் சீராவை நான் சொல்வேன் !

அருந்தமிழின் காவியங்கள் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ

அங்குவுமர் சீராவும் அரங்கேறும் ! முடுசூடும் !

அற்புதமே ! அற்புதமே ! உமர்வார்த்த தமிழ் மாலை !

அத்தனையும் அற்புதமே ! தெள்ளுதமிழ் காவியமே !

கற்புநெறி தப்பாது காத்துநிற்கும் பெண்மணிபோல் !

கடுகளவும் இலக்கணங்கள் தவறாத அற்புதமே !

கற்பனையின் வார்த்தையிலும் பொய்வரிகள் புனையவில்லை !

கன்னித்தமிழ் காவியத்தில் கண்ணியங்கள் மீறவில்லை !

சொற் சுவைக்கும் பொருட்சுவைக்கும் பஞ்சங்கள் ஏதுமில்லை !

சொல்லவந்த உமர்படைப்பில் ஈடுமில்லை இணையுமில்லை !

என்றைக்கும் அவர்படைப்பு ஏமாற்றம் கண்டதில்லை !

எவர்படைப்பும் உமர்படைப்பை ஏமாற்றிச் சென்றதில்லை !

இன்றைக்கும், இப்போதும் எழில்குலைந்து நின்றதில்லை !

இனிமேலும் உமர்தமிழைக் குறைசொல்வோர் பிறப்பதில்லை !

என்றைக்கும் எட்டயபுர மண்வாசம் குறைவதில்லை !

ஏழுசுரம் இசைக்கும்வரை உமர்தமிழுக் கழிவுமில்லை !

இன்றைக்கு இது போதும் இது போதும் என்றுரைத்து

இனிமேலும் நான்சொல்ல எனக்கு இனி நேரமில்லை !

News

Read Previous

நறுக்குவோம் பகையின் வேரை

Read Next

சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *