நபிகளார் போற்றிய சகோதரத்துவம்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
39. நபிகளார் போற்றிய சகோதரத்துவம்
‘மனிதர்களே! உங்களை ஓர் ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் படைத்தோம்’ என்ற திருக்குர்ஆன் முன்மொழிந்த இந்த வசனத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது சொற்பொழிவுகளில் அடிக்கடி வழி மொழிந்தார்கள்.
மக்காவை வெற்றி கொண்டபோது இறை இல்லமான கஅபாவை வலம் வந்து ‘தவாப்’ செய்தபிறகு நபிகளார் பேசுகையில், “மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராய்ப் பிரிகிறார்கள். ஒருவர் நல்லவர்- இறையச்சம் உள்ளவர்.  இன்னொருவன் தீயவன்- நற்பேறற்றவன்.   அன்றி மனிதர்கள் அனைவரும் ஆதமின் மக்களே!  என்றார்கள்.
தம் இறுதி ஹஜ் பயணத்தில் நபிகளார் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது கூறியதாவது:-
‘மக்களே! எச்சரிக்கையுடன் இருப்பீராக. உங்கள் அனைவரின் அதிபதி ஒருவனே! அரேபியனுக்கு அரேபியர் அல்லாதவனை விடவோ, அரேபியர் அல்லாதவனுக்கு அரேபியனை விடவோ, கருப்பனுக்கு வெள்ளையனை விடவோ, வெள்ளையனுக்கு கருப்பனை விடவோ இறையச்சத்தைப் பொறுத்தே தவிர எந்தவித மேன்மையும் இல்லை. இறைவனிடத்தில் மிகுந்த மதிப்புள்ளவர் உங்களில் மிகுந்த இறையச்சம் உள்ளவரே!’
இவ்வாறு நபிகளார் கூறினார்கள்.
ஆன்மிகத் தந்தையாகவும், போர்ப்படைத் தளபதியாகவும், அரசியல் தலைவராகவும் விளங்கிய நபிகளார், தன்னைப் பின்பற்றிய அன்பர்களைச் சீடர்கள் என்றோ, மாணவர்கள் என்றோ தொண்டர்கள் என்றோ ஒருபோதும் அழைத்ததில்லை. அவர்கள் அனைவரையும் ஸஹாபிகள் (தோழர்கள்) என்று அழைத்து சமரச நெறிக்கு மெருகூட்டினார்கள். உலக சரித்திரத்தில் நபிகளாருக்கு முன்பு இத்தகைய தோழமை உணர்வை யாரும் தோற்றுவிக்கவில்லை என்பதே வரலாறு கூறும் உண்மையாகும். இன்றைக்கு பொதுவுடமைவாதிகள் தங்களை ‘காம்ரேடு’ (தோழர்) என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். இந்தப் பெருமைகளுக்கெல்லாம் முன்னோடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ஆவார்.
சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்க விரும்பிய நபிகளார், ‘மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப்போல சமமானவர்கள்’ என்று உவமை நயத்தோடு உரைத்தார்கள். சீப்பில் ஒரு பல் உயர்ந்து இன்னொரு பல் தாழ்ந்திருந்தால் அது தலையைக் கிழித்து புண்ணாக்கி விடும். பண்பட்ட சமுதாயம் அமைய வேண்டு மானால் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலை வேண்டும் என்பதை இந்த உவமை மூலம் விளக்கினார்கள்.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களோடு அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு யூதரின் இறுதி ஊர்வலம் அந்த வழியாகச் சென்றது. இதைக் கண்ட நபிகளார் எழுந்து நின்றார்கள். இதைப் பார்த்த தோழர்கள், ‘இறைத்தூதரே! நமது கொள்கைகளை எதிர்க்கும் ஒரு யூதரின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதற்கு நீங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும்?’ என்று வினா எழுப்பினார்கள். அதற்கு நபிகளார், ‘அவர் மனிதராயிற்றே’ என்று பதில் அளித்தார்கள்.
மதங்களைப் பொறுத்தவரை மாறுபாடுகள் இருந்தாலும் மனிதர்கள் என்ற அளவில் நாம் வேறுபாடுகள் இல்லாதவர்கள் என்பதை இந்தச் சம்பவம் தெளிவுபடுத்துகிறது.
கருப்பர் இனத்தைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்கள் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு அடிமையாக இருந்தவர். ஏக இறைக் கொள்கையை நபிகளார் எடுத்துரைத்தபோது பிலால் இஸ்லாத்தில் இணைந்தார். இதனால் மதிப்பும் மரியாதையும் கவுரவமும் அவரோடு இணைந்தன. நபிகளாரும் தோழர்களும் சேர்ந்து கட்டிய ‘மஸ்ஜிதுன் நபவி’ பள்ளிவாசலில் முதன் முறையாக தொழுகைக்கான அழைப்பை (பாங்கு) சொல்லும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கு இஸ்லாம் எடுத்துரைத்த சமத்துவமே காரணம்.
மரணத்தின் போதும் இஸ்லாம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக் கொள்வதில்லை. பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மரணம் அடைந்து விட்டால் அவர் களுக்கு தைக்கப்படாத வெள்ளை உடையே அணிவிக்கப்படும். மரண ஊர்வலத்தில் அலங்கார ஊர்திகளைப் பார்க்க முடியாது; ஆரவாரத்தைக் கேட்க முடியாது. மரணம் அடைந்தவரை அடக்கமான முறையில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் முறையே உலகெங்கும் உள்ள முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ளது.
அறிவுரைகள் வெறும் பேச்சளவோடு நின்று விடாமல், உலகளாவிய சமத்துவ, சகோதரத்துவ சமுதாயத்தை உருவாக்கிக் காட்டிய உன்னத மார்க்கமாக இஸ்லாம் திகழ் கிறது. இந்த உலகம் முழுவதும் பரவி இருந்த பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களையும், மொழி பேசுபவர்களையும் கொள்கை அடிப்படையில் இணைத்து ஒரே சமுதாயமாக (உம்மத்) உருவாக்கிய பெருமை நபிகளாருக்கு மட்டுமே உண்டு.
‘வணங்கி வாழ்வோம்; பிறரோடு இணங்கி வாழ்வோம்’ என்ற லட்சிய முழக்கத்துடன் இஸ்லாம் செயல்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தபோதிலும் ‘எம்மதமும் சம்மதம்’ என்று சம்மதம் சொல்வதில் முஸ்லிம்களுக்கு சம்மதம் இல்லை. இதற்கு இஸ்லாம் கூறும் ஏகத்துவ கொள்கையே காரணம் ஆகும்.
‘வணங்குவதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை.’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அதனால் ‘எம்மதமும் சம்மதம்’ என்பதை ஏற்க முடியாவிட்டாலும், ‘எம்மதத்தினரும் சம்மதம்’ என்பதற்கு மனப்பூர்வமான சம்மதம்.
‘கூறி விடுவீராக! ஓ! நிராகரிப்பாளர்களே! நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்குவதில்லை. நான் யாரை வணங்குகிறேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்’ (திருக்குர்ஆன்-109:1) என்று திருமறை கூறுகிறது.
இந்த இறை வசனம், மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக திகழ்கிறது.

News

Read Previous

விசா பெற வழிகாட்டும் இணையத்தளங்கள்!……..

Read Next

தேனும் லவங்கப் பட்டையும்

Leave a Reply

Your email address will not be published.