தீர்வுகளை சிந்திக்காத உள்ளம் தான் உணர்ச்சிகளை கொட்டும்

Vinkmag ad

தீர்வுகளை சிந்திக்காத உள்ளம் தான்
உணர்ச்சிகளை கொட்டும்.
=======================
CMN SALEEM
======================
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய இந்த உம்மத்தின் கிரீடத்தில் மிளிரும் மூன்று வைரங்களில் பைத்துல் முகத்தஸ் என்ற வைரம் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை கி.பி.636 துவங்கி 450 ஆண்டுகள் தனது ஆளுகையில் வைத்திருந்த முஸ்லிம் சமூகம் கி.பி.1095 இல் படையெடுத்து வந்த சிலுவை யுத்தக்காரர்களிடம் பறிகொடுத்தது.

முகம் கொடுத்து ஸலாம் சொல்லிக் கொள்ளாத குழு சண்டைகள், புரையோடிப்போன கோஷ்டி பூசல்கள், தலைமைக்கு கட்டுப்படும் இஸ்லாமிய ஒழுக்கத்தை மீறியது, அலாதியான உலக இன்பங்களில் மூழ்கி ஊறிப்போன கோழைத்தனம், அறிவையும் ஆற்றல் திறனையும் அந்தந்த காலத்திற்கேற்ப நவீனப்படுத்தாத அலட்சியப்போக்கு இவைதான் அன்றைய முஸ்லிம் சமூகம்.

இந்த அநாகரிகமான வாழ்க்கை முறைக்கு கிடைத்த தண்டனை தான், உலகத்திற்கு தலைமை வகித்த உம்மத்தின் கண்ணியத்தை சிதைத்த அந்த அவமானகரமான நிகழ்வு.வெட்கி தலைகுனிந்து நின்ற முஸ்லிம் சமூகம் காலப்போக்கில் தனது தவறுகளை திருத்திக் கொண்டதால், ஒருங்கிணைந்து தனது ஆற்றலை வலிமைப்படுத்தி கொண்டதால், பறிகொடுத்த விலைமதிப்பில்லாத பொக்கிஷமான ஜெருசலேம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி.1195 இல் மீண்டும் கிடைத்தது. இழந்த கண்ணியம் திரும்பியது.

வரலாற்றை வெறும் தகவல்களாக படித்து பரப்பும் அதிமேதாவிகளுக்கு இதுவும் ஒரு சம்பவம். அவ்வளவுதான்.வரலாற்று நிகழ்வுகளை எச்சரிக்கையாகவும் படிப்பினையாகவும் பார்க்கும் களப்போராளிகளுக்கு இந்த சம்பவம் நம்பிக்கையளிக்கும் ஒரு மகத்தான எழுச்சியின் துவக்கம்.

இந்திய முஸ்லிம்கள் தங்களது கடந்தகால தவறுகளை திருத்திக் கொள்ளாமல், இன்றைய நமது கீழான சமூக பொருளாதார நிலையை மேம்படுத்திடத் தேவையான தொலைநோக்குத் திட்டங்களை சிந்திக்காமல், நமது விருப்பத்திற்குரிய பிள்ளைகள் மற்றும் பொருளாதார வளங்களை அந்தப்பாதையில் பயன்படுத்தாமல், மிகப் பொறுமையாக நீண்ட காலத்திற்கு களப் பணியாற்றாமல் இந்த நாட்டில் இழந்த ஒரு துரும்பை கூட இந்த உம்மத்தால் மீட்டெடுக்க முடியாது என்பது தான் ஜெருசலேம் வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து நாம் பெரும் படிப்பினைகள்.

குடியரசு இந்தியாவில் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு, தெருவில் போட்டு அடித்துக் கொலை செய்து அதை ஊடகங்களில் ஒளிபரப்பினால் கூட ஏன் என்று கேட்க நாதியாற்று கிடக்கும் இந்திய முஸ்லிம்களின் கல்வி சமூக பொருளாதார வாழ்க்கை நிலையை ஓரளவிற்கு அறிந்த யாருக்கும் இன்றைய ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் அல்லது அதற்கு பிரியங்கா காந்தியின் ஆதரவெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.

தீர்வுகளை சிந்திக்காத உள்ளம் தான் உணர்ச்சிகளை கொட்டும்.

CMN SALEEM

News

Read Previous

இரங்கல் செய்தி

Read Next

சுண்ணாம்பு

Leave a Reply

Your email address will not be published.