தீர்ப்பைத் தருவது மக்கள்; தீர்வைத் தருவது இறைவன்

Vinkmag ad

பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு! 

எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தோம். கடந்த 16.05.2014 அன்று நாடு முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்பட்டுவிட்டன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனி ஒரு கட்சியாக மத்தியில் ஆட்சி அமைக்கத் தேவையான 272 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாண்டி பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. மதமாச்சரியங்களைக் கடந்து, அனைவரையும் அரவணைத்து, நாட்டின் வளர்ச்சி இலக்கை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சி நடத்தப்படும் என்று ஜனநாயக ரீதியாக நம்புவோம்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை என்பது மிகப் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. அதிகார துஷ்பிரயோகமும், பணப் பட்டுவாடாக்களும் இந்த தேர்தலில் பெரும்பங்காற்றியிருப்பதை செய்தி ஊடகங்கள் அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டேதான் இருந்தன. இருந்தாலும் என்ன செய்வது? அநியாயங்களையும் அட்டூழியங்களையும் ஆட்சியில் அமர்ந்திருப்போர் கட்டவிழ்த்துவிடுகிறபோது தேர்தல் முடிவுகள் வேறு விதமாகத்தான் மாறும். தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்திட்ட நாமும் இந்த முறை வேலூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

 நம்முடைய இழப்பிற்கு இன்னொரு முக்கியமான காரணம் ‘திட்டமிடப்பட்ட துரோகம்’. இதனை முன்னின்று நடத்தியவர்கள், நமக்கு முன்னால் நடித்தவர்கள் என்று பலரையும் பார்த்துவிட்டோம். 

இதனை அறிந்திருக்கும் நம்மில் பலர் ஆத்திரப்படுவதிலும், ஆவேசப்படுவதிலும் நியாயம் இருந்தாலும் முழுமையாக வெளிப்படுத்த இதுவல்ல தருணம். கூட்டணித் தலைமையும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உளத்தூய்மையோடு பங்காற்றினார்கள் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைப்போம். நம்மைப் பொறுத்தமட்டில் வெற்றியிலும் தோல்வியிலும் நிதானத்தை நிலைநிறுத்துவோம். தடுமாற்றமோ தயக்கமோ கொஞ்சமும் நம்மில் குறுக்கிடாது. இறைவனை நம்பி இருப்பவர்கள் நாம்; அவனுடைய நாட்டத்தையே விரும்பி ஏற்றுக் கொள்பவர்கள் நாம்; நம்முடைய விருப்பம்போல் அமையவில்லை என்றால் ‘‘இறைவனின் நாட்டம் இல்லாமல், எப்படி அமையும்?’’ என்று கேட்பவர்கள் நாம். எனவே அந்த உறுதிப்பாட்டில் நம்முடைய ஈமான் நிலைபெற்றிருக்கிறது.

முஸ்லிம் லீக் தலைவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கிற பாடங்களும், பயிற்சிகளும் பண்பட்டவை. இந்த தேர்தலில் நமக்கு துரோகம் இழைக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆதாரங்களோடு நண்பர்கள் பலரும் தந்திட்ட தகவல்களை நான் மறுக்கவில்லை. வேட்பாளர் என்ற நிலையில் தேர்தல் என்ற போர்க்களத்தில் நிற்கும் நாம் உளத்தூய்மையோடு நண்பர்களையும், உடன் இருப்பவர்களையும் நம்புகிறோம். அந்த நம்பிக்கைக்கு துரோகம் விளைவிப்பவர்களை அடையாளம் காணுவதுதான் கடினம். அதனாலேயே எல்லோரையும் சந்தேகிக்கவும் முடியாது; சந்தேகிக்கவும் கூடாது. வரலாற்றில் பெரும் பெரும் தலைவர்களுக்கும், மகான்களுக்கும் ஏன்; இறைத் தூதர்களுக்கும்கூட அருகில் துரோகிகள் நல்லவர்களைப்போலவே இருந்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை இன்னும் நாம் கூடுதல் எச்சரிக்கையோடு எதிர்காலத்தைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக எழுதிக் காட்டுகிறேன். இந்தத் தேர்தலில் தீர்ப்பைத் தந்தது மக்கள்; ஆனால், தீர்வைத் தருவது இறைவன். நல்ல தீர்வையே வல்ல நாயன் வழங்கியிருக்கிறான்.

அந்தத் தீர்வு இதோ! சென்ற ஐந்தாண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற பொறுப்பில் டெல்லிக்கு அடிக்கடி பயணிப்பது; நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் கலந்து கொள்வது; தொகுதிப் பணிகளில் ஈடுபடுவது; அரசாங்கச் சுற்றுப் பயணங்களில் கலந்து கொள்வது; பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது; தொகுதியிலுள்ள அரசியல் பிரமுகர்களின் குடும்ப வைபவங்களிலும் கலந்து கொள்வது; வெளியூர் நிகழ்ச்சிகளிலும் வெளிமாநில நிகழ்வுகளிலும் பங்கேற்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு மத்தியில்தான் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் பணிகளிலும் ஈடுபட முடிந்தது. நாடாளுமன்றத்தில் சமூகம் சார்ந்த வினாக்களைத் தொடுத்தும் மற்றும் பல்வேறு விவாதங்களில் பங்கேற்றும் செயலாற்றியது ஓரளவுக்கு மனநிறைவு என்றாலும் கட்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட இயலவில்லையே என்கிற மனக்குறை என்னை அவ்வப்போது வருத்திக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் இயன்ற வரையிலும் முஸ்லிம் லீகின் அனைத்து நிகழ்வுகளிலும், பெரும்பாலான கூட்டங்களிலும் கலந்து கொள்ள ஊர், ஊராய் தமிழகம் முழுவதும் பயணித்திருக்கிறேன்; பல நாட்கள் பயணங்களிலேயே சென்றிருக்கின்றன. இல்லம் திரும்பி மனைவி, பிள்ளைகளைப் பார்க்கிறபோது, ‘‘இத்தனை நாட்களாய் உங்களைப் பார்க்கவே முடியவில்லை; எங்கே சென்றீர்கள்?’’ என்று பாசம் ஒழுக பிள்ளைகள் கேட்டபோது பல சமயங்களில் ஊமையாய் நின்றிருக்கிறேன். இப்படியெல்லாம் எழுதிக் காட்டுவது ஏதோ நான் செய்திட்ட தியாகங்களாய் நினைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தியாகம் என்று நம் இயக்கத்திற்கும், நம் சமூகத்திற்கும் எதையும் நான் செய்திடவில்லை. இனி அப்படி செய்திடுவதற்கு ஏற்ப முயற்சி செய்யும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது என்று சொல்லத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்.

நம்முடைய இயக்கத் தலைவர்கள், முஸ்லிம் லீகின் தியாகச் செம்மல்களாய் வாழ்ந்து மறைந்த பரிசுத்த பண்பாளர்கள் காட்டிய வாழ்வு நெறிகளும், அந்நெறிகளில் தோய்ந்திருந்த தியாகச் சுடர்களும் நமக்குப் பயிற்சிப் பாடங்களாய் அமைந்திருக்கின்றன. இவையே நமக்கு நல்ல வழித்தடங்கள். பிறைநெஞ்சே! வேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு எனக்கு எத்தகைய தளர்ச்சியையும் உண்டாக்கிடவில்லை. நண்பர்கள் பலரும் தொடர்ந்து தொலைபேசியில் எனக்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆறுதல் சொல்லக்கூடிய அளவுக்கு உகந்த நிகழ்வு அல்ல இது. என்மீது அவர்களுக்கு இருக்கும் பாசத்தால், பேரன்பால் அப்படிச் சொல்கிறார்கள் என்று மட்டுமே நான் எடுத்துக் கொள்கிறேன். சில சகோதரர்கள் என்னிடத்தில் நேரிலும், தொலைபேசியிலும் பேசுகிறபோது கண்கலங்குகிறார்கள். அவர்களுக்குத்தான் நான் ஆறுதல் சொல்ல வேண்டியதாக நிலைமை மாறிவிடுகிறது. ஏன் இந்த கலக்கம்? மனிதர்கள் என்ன முயன்றாலும் இறுதியில் இறைவன் நாட்டமே நிலைக்கும் தன்மையுடையது. வரலாற்றில் பத்ரு நிகழ்வும் உஹது நிகழ்வும் நமக்கு படிப்பினையல்லவா? பத்ரின் வெற்றி ஆழ்ந்த இறை நம்பிக்கைக்குக் கிடைத்த அங்கீகாரம். உஹதின் முடிவு திருத்தம் செய்து கொள்ளக் கிடைத்த படிப்பினை. நம் பெருந்தலைவர் பெருமானார் அவர்கள் தனது உம்மத்திற்குக் காட்டித் தந்த அளவுகோளல்லவா அது? அந்தப் பாரம்பரிய உணர்வின் வெளிப்பாடே நம் வாழ்வின் எல்லா தலங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். இந்த நெறியைத்தான் முஸ்லிம் லீகின் தலைமை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவு நமக்கு எந்த தளர்வையும், எந்த பின்னடைவையும் ஏற்படுத்தவில்லை; மாறாக வீறுகொண்டு எழச் செய்திருக்கிறது. முஸ்லிம் லீகின் மாணவர் அணி பிள்ளைகள், இளைஞர் அணியின் தம்பிமார்கள், ஆர்த்தெழுந்து நிற்கும் அடலேறுகள் அத்துணை பேரும் கர்ஜித்து நிற்கும் சிங்கங்களாய் சிலிர்த்தெழும் காட்சிகளைக் காண்கிறோம். தாய்ச்சபை முஸ்லிம் லீகின் உதிரத்தில் உணர்ச்சிப் பிரவாகமாய் ஊறிவிட்ட உணர்வு அலைகளையும் காண்கிறோம். இனி என்ன வேண்டும்? தாய்ச்சபை முஸ்லிம் லீகின் எதிர்கால செயல்திட்டங்கள் நமது தலைமையின் வழிகாட்டுதலுக்கேற்ப சிறப்பாய் வடிவமைக்கப்படும்; இத்தகைய செயல்திட்டங்கள் வீரியமாய் செயல்படும் திட்டங்களாக மாற்றப்படும்; இந்த மாற்றத்தால் ஏற்றம் காணக்கூடிய ஏணியாய் முஸ்லிம் லீக் நெஞ்சு நிமிர்ந்து நின்றிடும் வரலாற்றை உருவாக்க என் அருமை மாணவரணி பிள்ளைகளே! இளைஞரணி தம்பிகளே! இனி எனது முழு நேர அணிகலனே நீங்கள்தான். எதிர்காலம் மிகச் சிறப்பாய் மிளிர்கிறது;

எழுங்கள் உணர்வுப் பிழம்புகளாய். நம் தலைவர் தியாகச் சுடர் முனீருல் மில்லத் அவர்களின் வழிகாட்டுதலோடு நம் பொதுச் செயலாளர் இளவேங்கை முஹம்மது அபூபக்கர் அவர்களின் அரவணைப்போடு, நம் தாய்ச்சபை பேரியக்க மூத்தவர்களின் பேரன்போடு சமூகக் களத்தில் இரண்டறக் கலந்திடுவோம்; உங்களில் ஒருவனாய் ஒருங்கிணைந்து முழு நேரமும் உழைத்திட நான் தயாராகிவிட்டேன். அல்ஹம்துலில்லாஹ்.

பிறைநெஞ்சே! நீ தயாராகிவிட்டாயா? பதில் சொல். தாய்ச்சபை முஸ்லிம் லீகின் எதிர்காலம் உன் உழைப்பினில்; சமுதாயத்தின் சங்கநாதமாய் ஒலித்திடும் தக்பீர் முழக்கம் உன் மூச்சினில்; கண்ணியமிக்க நம் தலைவர்களின் கொள்கை வடிவமாய் உன் பேச்சினில் எப்போது சிறக்கப் போகிறாய்? மனம் திறந்து கேள்; கண் திறந்து பார். உன் முன்னால் நான் நிற்கிறேன்; உன்னுடனே நான் பயணிப்பேன். இன்ஷா அல்லாஹ்.

News

Read Previous

அமீரகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவரா நீங்கள் ?

Read Next

துபை ஹோர் அல் அன்ஸ் பகுதியில் வீடு வாடகைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *