திக்கெட்டும் தித்திக்கும் திருமறை

Vinkmag ad

திக்கெட்டும் தித்திக்கும் திருமறை
பிறை 18

✍. வி.எஸ்.முஹம்மது அமீன்

‘உங்களால் ஆறாயிரத்துக்கும் அதிகமான வசனங்களைக்கொண்ட நூலை ஒரு புள்ளிகூட மாறாமல் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க இயலுமா?’என்று கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ‘அதெப்படி ஒரு எழுத்துகூட மாறாமல் அம்மாம் பெரிய நூலை மனப்பாடம் செய்வது’ என விழிப்புருவம் உயர உதடுபிதுக்குவீர்கள்தானே..!

ஆனால் உலகத்தில் ஒரே ஒரு நூல் மட்டும் ஒற்றைப் புள்ளிகூட மாறாமல் மனப்பாடம் செய்யப்பட்டுள்ளது.அதுவும் ஒருவர் இருவரால் அல்ல. இலட்சக்கணக்கான மக்களால் மனனம் செய்யப்பட்டுள்ளது.அதுதான் இறைவேதம் திருக்குர்ஆன்.திருமறை இறக்கியருளப்பட்ட அக்காலத்திலும் மனப்பாடம் செய்தார்கள்.தலைமுறை தலைமுறையாக அந்தச் சங்கிலித் தொடரில் இன்றும் மனப்பாடம் செய்தவர்கள் இருக்கின்றார்கள்.மனனம் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

அதனால்தான்ஆயிரத்து நானூற்றுச் சொச்சம் ஆண்டுகள் கடந்தபின்னும் ஒரு எழுத்துகூட மாறாமல் மங்காமல் இன்றும் திருக்குர்ஆன் உயிர்த்துடிப்புடன் வழிகாட்டிக்கொண்டிருக்கிறது.திருக்குர்ஆன் நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டபோதே நபித்தோழர்களால் ஈச்ச இலைகளிலும், மரப்பட்டைகளிலும்,எலும்புத்துண்டுகளிலும் பதிவுசெய்யப்பட்டு வந்தது.அதே வேளையில் நபித்தோழர்கள் தங்கள் இதயங்களிலும் ஆழமாய் பதித்துக்கொண்டனர்.

ஆரம்பகாலத்திலிருந்தே தொழுகை முஸ்லிம்கள் மீது கடமையாகிவிட்டதாலும், திருக்குர்ஆன் ஓதுவது தொழுகையின் கட்டாய அம்சமாகிவிட்டதாலும்,குர்ஆன் அருளப்பட ஆரம்பித்ததும் அதை மனப்பாடம் செய்யும் மரபையும் முஸ்லிம்கள் மேற்கொண்டனர்.குர்ஆனின் திருவசனங்கள் அருளப்பட அருளப்பட முஸ்லிம்கள் அவற்றை மனனம் செய்துகொண்டே வந்தனர்.எழுதப்பட்ட வசனங்கள் ஒன்று திரட்டப்பட்டு தொகுக்கப்பட்டன.

அந்த மூலநூலிலிருந்து புறப்பட்ட பிரதிகள் உலகெங்கும் இன்று வியாபித்துள்ளது.அந்த மூல நூலை ஒருவரை ஓதச்சொன்னால் அவர் எப்படி ஓதுவாரோ அதே உச்சரிப்பில்தான் மக்கா பள்ளியின் தலைமை இமாமும் ஓதுவார்.அதேபோன்று அட்சரம் பிசகாமல்தான் உங்கள் வீட்டருகே இருக்கும் பள்ளியின் இமாமும் ஓதுவார்.ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் நபி(ஸல்)அவர்கள் உச்சரித்ததைப்போல்தான் உங்களைக் கடந்து மதரஸாவிற்குச் செல்கிறானே அந்தப் பாலகனும் உச்சரிப்பான்.

ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் ஐந்துவேளை தொழுவது கட்டாயக்கடமை. அந்தத் தொழுகையில் திருக்குர்ஆனிலிருந்து சில வசனங்களை ஓதவேண்டும். திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ரமலான் மாதத்தில் தராவீஹ் என்று சொல்லக்கூடிய சிறப்புத்தொழுகை தினமும் நடைபெறும்.இந்த தராவீஹ் என்னும் சிறப்புத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுமையாக ஓதப்படும்.ஒரு எழுத்துக்கூட பிசகாமல் இமாமின் இதயத்திலிருந்து துள்ளிவரும் தித்திக்கும் தேமதுரத் திருமறை வசனங்களால் உளம் ஆன்மிக அமுது பருகும்.

உலகின் மூலை முடுக்குகளிலுள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் ரமளான் மாதத்தில் தராவீஹ் தொழுகையில் திருமறை வசனங்கள் உயர்ந்தெழும்.எனவேதான் ரமளான் குர்ஆனின் மாதமென மகிமை கொள்கிறது.
திருக்குர்ஆன் ஓதுவதினால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது?

மாற்றம் இயம்ப ஒரு பிறை
நாளையும் வரும் மறுமுறை🔽

⭕http://www.idealvision.in/?p=3421

News

Read Previous

நாடாளுமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

Read Next

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும் போது ஏற்படும் நோய்கள் இதுதான்..!

Leave a Reply

Your email address will not be published.