தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

Vinkmag ad

dawoodshaதாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

பெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார்ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார்.

ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.

அல்ஹாஜ் தாவூத்ஷா (ஆங்கிலம் : B. Dawood Shah)(1885,மார்ச்சு 29 – 1969, பிப்ரவரி 24) சிறந்த இதழாசிரியர். எழுத்தாளர்; சீர்திருத்தவாதி; சிறந்த சொற்பொழிவாளர்; கம்பராமாயணச்சொற்பொழிவு ஆற்றியதால் “இராமாயண சாயபு” என அழைக்கப்பட்டவர்; இந்திய விடுதலைப் போரில் பங்கு பெற்றவர்.

இளமை

கும்பகோணம் நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா. அந்தக் காலத்தில் கிழ்மாந்தூர் “நறையூர்’ என்று அழைக்கப்பட்டது. எனவே இவர் “நறையூர் தாவூத்ஷா’ என அழைக்கப்பட்டார். நாச்சியார் கோயிலில் இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கி, பின்னர் கும்பகோணம் “நேடிவ்’ உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கணித மேதை ராமானுஜம் உற்ற நண்பரானார். சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பின்போது அவருக்குத் தத்துவப் பாடம் கற்பித்தவர் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவராகஇருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் உ. வே. சாமிநாதையர். கல்லூரியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்று பரிசுகளைக் குவித்தார். தமிழ்ச் சங்கத் தேர்வில் முதல்நிலை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார் அவர். உ.வே.சா அவர்களின் அன்புச் சீடராக இருந்ததால் பா. தாவூத் ஷாவின் உரைநடையில் தமிழ் தாத்தாவின் சாயலைக் காணலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழா மலரில் ‘இஸ்லாம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை பரவலான வரவேற்பைப் பெற்றது.

1909-ஆம் ஆண்டு “சபுரா’ என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். 1912-ஆம் ஆண்டில் நாச்சியார் கோயிலிலேயே முதன் முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர் இவர்தான். மதுரை தமிழ்ச் சங்கத்தில் தேர்வு எழுதி முதல் மாணவனாகத் தங்கப்பரிசும் பெற்றார். 1915-இல் இவருடைய மனைவியை இழந்தார். ஆட்சியர் பணிக்குத் தேவையான துறைத் தேர்வெழுதி 1917-ல் துணை நீதிபதியாக பணியாற்றினார். பின்பு மைமூன் பீவி என்பவரை மறுமணம் செய்து கொண்டார் ஒன்பது ஆண்டுகள் வரை அரசுப் பணியில் இருந்தார். கிலாபத் இயக்கத்தில் ஈடுபடவேண்டிய காரணத்தால் பணியை விட்டு வெளியேறினார்

இந்திய விடுதலைப் போரில் பங்கு

1921 இல் விழுப்புரத்தில் துணை நீபதியாக (சப் மாஜிஸ்ட்ரேட்டாக) இருந்தபோது கிலாபத் இயக்கக் காரணத் தாலும் இஸ்லாம் ஆர்வத்தாலும் உதறித் தள்ளி விட்டு வெளியேறினார். அப்பொழுது இவரின் பெயர் உதவி ஆட்சியர்(டெபுட்டி கலெக்டர்)பணிக்கு உயர்த்தப்பட வேண்டிய பரிந்துரையில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தாவூத்ஷா, இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு, ஊர் ஊராகச் சென்று உரையாற்றினார் . 1934-ஆம் ஆண்டில் காங்கிரஸ் பிரசாரத்திற்காக “தேச சேவகன்’ என்ற வார இதழை சென்னையில் நடத்தினார். உரையாற்றுவதில் வல்லுநராக இருந்த தாவூத்ஷா, சென்னை நகரத் தெருக்களிலும், வெளியூரிலும் கூட்டங்கள் நடத்தி, மகாத்மா காந்தியின்கொள்கைகளையும் தேச விடுதலையின் அவசியத்தையும் தெளிவுபடப் எடுத்துச் சொல்லி வந்தார். அவரின் கடுமையான உழைப்பினால், சென்னை மாவட்டக் காங்கிரஸின் தலைவரானார். பிறகு சென்னை நகரசபையின் நகரத் தந்தையாகவும் நியமிக்கப்பட்டார். மூதறிஞர் ராஜாஜி, சேலம் மருத்துவர் பெ. வரதராஜுலு நாயுடு, மறைமலையடிகள், திரு. வி. க.போன்றோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

உரை திறன்

நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாக்களில் பல ஊர்களில் பல மேடைகளில் தொடர்ந்து பேசிவந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கம்பராமாயணம்சொற்பொழிவும் செய்துவந்தார். இதனால் மக்கள் இவரை, “இராமாயண சாயபு’ என்றே அழைத்தனர்.

இதழாசிரியர்

1920-இல் “தத்துவ இஸ்லாம்” என்ற பெயருடன் மாதப் பத்திரிகை ஒன்றை வெளியிட்டார். இந்த இதழ் 1923 ஜனவரியில் “தாருல் இஸ்லாம்” என்று மாற்றப்பட்டது. “தாருல் இஸ்லாம்’ என்றால் “முஸ்லிம் உலகம்” என்று பொருள். 1922 பிப்ரவரி மாதம் லண்டனுக்கு சமய உரையாற்றச் சென்றார். அங்கே “இஸ்லாமிய ரெவ்யூ’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அவர் தமது சொந்த ஊரான நாச்சியார் கோவிலில் பத்திரிகைப் பணியைத் தொடங்கினார். எனினும், 1923 ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கிய தாருல் இஸ்லாமே சாதனை இதழாகப் பெயர் பதித்தது. தாருல் இஸ்லாம் இதழுடன் 1932-ஆம் ஆண்டில் ‘ரஞ்சித மஞ்சரி’ என்ற பொழுதுபோக்கு (மாத) இதழையும் நடத்தினார். ‘தாருல் இஸ்லாம்’ நாளிதழை தாவூத்ஷாவின் நண்பரான சுதேசமித்திரன் ஆசிரியர் சி.ஆர்.சீனிவாசன் தவறாமல் படித்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ். எஸ். வாசன், தாருல் இஸ்லாம் இதழுக்கு விளம்பரம் கொடுத்து, வாராவாரம் ஆனந்த விகடனைத் தாவூத்ஷாவுக்குத் தொடர்ந்து இலவசமாக அனுப்பி வந்தார். அத்துடன், தாருல் இஸ்லாம் இதழைத்தொடர்ந்து படித்தும் வந்தார்.

சென்னையில் “கார்டியன்’ என்ற அச்சகத்தை தாவூத்ஷா விலைக்கு வாங்கினார். சொந்த அச்சகம் வந்ததும் தாருல் இஸ்லாம் வார இதழாக மாற்றப்பட்டது. 1934-இல் இருமுறை இதழாக வெளிவந்தது. பிறகு நாளிதழாக மாற்றப்பட்டது. 1941-ஆம் ஆண்டு சென்னையில் முஸ்லிம் லீக்மாநாடு நடந்தபோது காலை, மாலை என இரு வேளையும் வெளியான ஒரே இதழ் “தாருல் இஸ்லாம்’ ஒன்றுதான். இவ்விதழ் மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஆயிரக்கணக்கில் விற்பனையாயின.

1920 ஆம் ஆண்டில் 64 பக்கங்களுடன் வெளிவந்த தாருல் இஸ்லாம் இதழ், பல புதிய இதழ்களின் தோற்றத்திற்கு உந்துசக்தியாக அமைந்தது. தலையங்கங்கள். அரிமாநோக்கு, கண்ணோட்டம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், சட்ட, மருத்துவக் கட்டுரைகள், கவிதை, கதை, தொடர்கதை, கேள்வி – பதில், வாசகர் கடிதம், துணுக்குகள் முதலான பல்சுவை அம்சங்களுடன் பவனி வந்தது தாருல் இஸ்லாம்.

இதழில் ‘எங்கேனும் ஓரெழுத்துப் பிழையேனும் கண்டு பிடித்துத் தருவோர்க்கு இரண்டணா அஞ்சல் தலை பரிசு’ என்று அறிவித்ததார். மேலும் தம் பத்திரிகையில் அச்சுப்பிழை திருத்துவதற்கென்றே புலவர் செல்வராஜ் என்ற தமிழ்ப் புலவரையே நியமித்தும் வைத்திருந்தார்.

இடைக்காலத்தில் இதழ் தொழில் நட்டமடைந்ததால், 1947-இல் மாத இதழாக வெளியிட்டார். திரைப்பட விமர்சனம், திரைச் செய்திகள், கலைஞர்களின் பேட்டி ஆகியவையும் அதில் வெளிவந்தன. இஸ்லாமியர் ஒருவர் நடத்தும் பத்திரிகையில் திரைச்செய்திகள் வெளிவருவது அந்தக் காலத்தில் அதிசயமாகப் பேசப்பட்டது. தமது 70-வது வயதில் தாருல் இஸ்லாம் இதழை நிறுத்திவிட்டார்.

எழுத்து

1934-ஆம் ஆண்டு அரசியல்சீர்திருத்தங்கள் பற்றி “வரலாற்று தொகுப்பு’ என்ற நூலை வெளியிட்டார். 1937-இல் “எல்லைப்புற காந்தி கான் அப்துல் கஃப்ஃபார் கான்’ என்ற நூலை சத்தியமூர்த்தியின் முன்னுரையுடன் புத்தகமாக வெளியிட்டார்.

1905-ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் “சுதேச நன்னெறிச் சங்கம்’ என்ற சங்கத்தைத் தொடங்கி ஒரு நூலகம் நடத்தினார். அவருடைய சொற்பொழிவுகளை 1919-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் “கமலம்’ என்ற பெயரில் சிறு சிறு வெளியீடுகளாக வெளியிட்டார்.இவர் எழுதிய முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு, அபூபக்கர் சித்திக்’ என்ற இவருடைய நூல்கள் பள்ளிகளில் இடம்பெற அரசாங்கம் அனுமதி அளித்தது.

மறைவு

தமிழ் எழுத்தாளர் சங்கம் தாவூத்ஷாவின் தமிழ்ப் பணியைப் பாராட்டி 1963 இல் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், சீர்திருத்தவாதியாகவும், சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த தாவூத்ஷா, 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-அன்று சென்னையில் தன்து 84-ஆம் வயதில் காலமானார். சென்னை மாநகராட்சி அவருடைய மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. நகரமன்ற உறுப்பினராக இருந்த ரங்கூன் சுலைமான் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். பாலர் அரங்கம் என முன்னர் அழைக்கப்பட்ட கலைவாணர் அரங்கில் இரங்கல் கூட்டம் ஒன்றும் நடத்தப் பட்டது. அன்றைய அமைச்சர் சாதிக் பாட்சா, சட்டமன்ற உறுப்பினர் ரவண சமுத்திரம் பீர் முஹம்மது, பேராசிரியர் கா. அப்துல் கபூர் முதலானோர் உரையாற்றினர்.

News

Read Previous

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்!

Read Next

வேப்ப மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *