தவ்ஹீத் -ஏகத்துவத்தால் மனித சமூகம் அடைந்த நன்மைகள் என்ன ?

Vinkmag ad

ரமளான் சிந்தனைகள்
தவ்ஹீத் -ஏகத்துவத்தால் மனித சமூகம் அடைந்த நன்மைகள் என்ன ?

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com

இஸ்லாமிய மார்க்கத்தின் மூலாதாரம் தவ்ஹீத் – ஏகத்துவம் ஆகும்.
வணக்கங்கள்,வழிபாடுகள்,நேர்ச்சைகள் ஆகியன அனைத்தும் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும்.

பூமி, ஏழு வானங்கள்,சூரியன்,சந்திரன்,மற்றும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்தையும் படைத்து,பரிபாலித்து காப்பவனும்,அவற்றை அவற்றை அழிப்பவனும் அழிக்க சக்தி பெறுபவனும் அல்லாஹ் ஒருவனே.அல்லாஹ்வை தவிர மற்ற எவருக்கும் அல்லது எவற்றுக்கும் இதில் சக்தி உண்டு என்று நம்புவதோ அல்லது அல்லாஹ்வுக்கு இந்த காரியங்களை நிகழ்த்துவதில் யாருடைய உதவியும் இருக்கிறது என்று நம்புவதோ ஷிர்க் – இணைவைத்தல் என்று சொல்லப் படும்

 

அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னிப்பான்,ஆனால் தனக்கு இணை வைப்பதை மட்டும் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். என்று குர்ஆன் கூறுகிறது.

 

குர்ஆனில் அதிகமாக வலியுறுத்தி சொல்லப் படுவது ஏகத்துவம் ஆகும்.ஏகத்துவ நம்பிக்கை இல்லாத வாழ்க்கை தோல்வி அடைந்து விடும்.

 

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தோன்றிய மக்கா சமூகத்தில் ஏகத்துவத்துக்கு எதிரான அனைத்து நம்பிக்கையுள்ள மக்களும் வாழ்ந்தார்கள்.அவர்களிடம் நபி அவர்களின் மக்காவின் பதிமூன்று ஆண்டுக் காலத்தில் முதல் அழைப்பும்,முழு நேர உழைப்பும் ஏகத்துவம் பற்றியே இருந்தது

 

இறைத்தூதர் ஈஸா (அலை ) அவர்களை நபியாக ஏற்று அவர்களின் ஏகத்துவ கொள்கையை மார்க்கமாக பின்பற்ற வேண்டிய கிறிஸ்தவ சமூகம் அவர்களை இறை மகன் என்று கூறி வணக்கம், மற்றும் வழிபாடுகளில் இறைவனுக்கு நிகராக அவர்களையும் நம்பி இறைவனுக்கு இணை வைப்பை மேற்க் கொண்டு இருந்தது.அதற்க்கு முன் அனுப்பப் பட்ட இறைத்தூதர் உஜைர் (அலை )அவர்களை யூத சமூகமும் அவ்வாறே நம்பி வழிப் பட்டு வந்தது.மக்காவின் மக்களோ நாளுக்கொரு சிலைகளை வணங்கி அவை தம்மை அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கும் என நம்பினர்.மேலும் வானவர்களை அல்லாஹ்வின் பெண் மக்கள் என்று நம்பி வந்தனர்.நெருப்பு,சூரியன்,சந்திரன் என இயற்கைப் பொருட்களை இறை வடிவமாக நம்பி வந்த மக்களும் அங்கே இருந்தனர்.இறைவனே இல்லை என்ற நாத்திக மக்களும் அங்கே இருந்தனர்.இத்தனை கொள்கைகளும் தவறானவை என்பதை குர்ஆனின் பெரும்பாலான வசனங்கள் பேசுகின்றன.எகத்துவம் –தவ்ஹீத் என்னும் அல்லாஹ்வின் ஒருமை அவனது பண்புகள் பற்றி கீழ் காணும் சூரா இக்லாஸ் மனித குலத்துக்கு அவை விளக்குகிறது .

 

நீர் கூறுவீராக;அவன் அல்லாஹ் ஒருவனே அல்லாஹ் [யாவற்றை விட்டும்] தேவையற்றவன் யாவும் அவன் அருளையே எதிர்ப்பார்த்திருக்கின்றன அவன் எவரையும் பெறவில்லை எவராலும் பெறப்படவுமில்லை மேலும் அவனுக்கு நிகராக எவருமில்லை [சூரா இக்லாஸ்]
ஏக இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் அவனுக்கு இணை வைக்கக் கூடாது என்பதை குர்ஆனின் பல வசனங்கள் வலியுறுத்துகின்றன.அறிந்து கொள்! அல்லாஹ்வை தவிர வேறு இறைவனில்லை, அல்லாஹ்விற்கு இணை வைக்காதே.மேலும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும் என்ற குர்ஆனின் வசனங்கள் ஏகத்துத்தை மற்ற அனைத்து நற்காரியங்களுக்கும் அடிப்படையான ,அவசியமான விஷயமாக முன்னிலைப் படுத்தி பேசுகின்றன.

 

குர்ஆன் மேலும் குப்ர் – நிராகரிப்பையும் கண்டிக்கிறது. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நிராகரிக்கிறீர்கள்.நீங்கள் உயிரற்றவர்களாக இருந்தீர்கள்.அவனே உங்களுக்கு உயிரளித்தான்.பின்னர் உங்களை அவன் மரணமாக்குவான்.பின்னர் மீண்டும் அவன் உயிர் கொடுப்பான்.மீண்டும் அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப் படுவீர்கள் என்கிறது குர்ஆன்.
மனித குலத்தின் இம்மை மறுமை என்னும் ஈருலக வாழ்க்கையின் வெற்றிக்கும் முக்கிய காரணம் தவ்ஹீத் ஏகத்துவமே ஆகும்.ஏகத்துவம் இல்லாத நமது வாழ்க்கை உயிரற்ற உடலுக்கு ஒப்பானதாகும்.வரலாறு நெடுகிலும் இறைதூதர்கள் ஏகத்துவ கொள்கை மனித சமூகத்தில் நிலைக்க மிகுந்த உழைப்பு செய்திருக்கிறார்கள்.ஒவ்வொரு காலத்திலும் மனித சமூகத்தின் ஒரு பிரிவு அதில் நிலைத்து நின்றது. அதன் மறு பிரிவோ அதை விட்டும் பாதை தடுமாறி சென்றது.
உங்கள் இறைவன் ஒருவன்,நீங்கள் ஒரே சமுதாயம்தான் என்கிறது குர்ஆன்.இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டு வேறுப் பட்ட தெய்வக் கொள்கையை தூக்கி எறிந்து ஒரே இறை கொள்கையை ஏற்று ,வேறுப் பட்ட இனங்கள் மற்றும் குலங்களாக இருந்த சமூகம் ஒரே அணியில் ஒன்றுப் பட்டு திரண்டதன் விளைவு ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பதினான்காம் நூற்றாண்டு வரை பூமிப் பந்தின் முக்கால்வாசிப் பகுதியை தங்கள் காலடியில் கொண்டு வந்தது.இன்றும் சாதி,நிறம்,குலம் ஆகிய ஏற்றத்தாழ்வு மற்றும் இழிவை விட்டும் இஸ்லாமிய சமூகம் பாதுகாக்கப் பட்டது.

 

 

தவ்ஹீத் என்னும் ஏகத்துவம் மூலம் அல்லாஹ்விற்கு மட்டுமே தம்மை அடிமை என்று பிரகடனம் செய்து அவன் முன் மட்டுமே தலை சாய்த்ததன் மூலம் மனித சமூகத்தின் பெறும் பகுதி இயற்கைப் பொருட்கள்,பேய் பிசாசு,மத குருமார்கள்,அரசர்கள்,மேல் சாதி வர்க்கங்கள் ஆகியவற்றின் முன் தலை சாய்ப்பது தவிர்க்கப் பட்டது .தனி மனித விடுதலை மற்றும் சுயமரியாதை உறுதி செய்யப் பட்டது .

 

விஞ்ஞான ஆராய்ச்சிப் படி பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பதை ஐரோப்பாவின் கிறிஸ்தவ சமூகம் மதத்துக்கு முரணானதாக கண்டது.எவ்வாறெனில் அவர்களின் நம்பிக்கைப் படி தேவனான இயேசு இறங்கிய பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பது கடவுளை இழிவுப் படுத்துவது என நம்பினர்.எனவே ஐரோப்பாவின் பண்டைக் காலம் முதல் மத்தியக் காலம் வரை விஞ்ஞானிகள் பலர் படுகொலை செய்யப் பட்டனர்.மேலும் உலகெங்கும் படைப்பாளனை விட்டு விட்டு படைப்புக்களான சூரியன் சந்திரன் உட்பட இயற்கைப் பொருட்களை புனிதமானதாக,சக்தியானதாக மனித சமூகத்தின் பெரும்பகுதி அவற்றைப் பற்றி சிந்திப்பது மற்றும் கேள்விகள் கேட்பது இறைவனை நிந்திப்பதாக அமையுமோ என பயந்தது.அதனால் அறிவியல் வளர்ச்சி தடைப் பட்டது.

 

ஏழாம் நூற்றாண்டில் இறங்கிய குர்ஆன் அதாவது தவ்ஹீத் அல்லாஹ்வை மட்டுமே ஒருமைப் படுத்தி நம்புமாறும் மற்றும் அவனை மட்டுமே வணங்குமாறும் கட்டளையிட்டதன் விளைவு உலகம் மற்ற அனைத்துப் பொருட்களையும் உற்றுப் பார்க்கத் தொடங்கியது. இவ்வுலகின் சூரியன் சந்திரன் உட்பட அனைத்தும் மனிதனுக்காக படைக்கப் பட்டுள்ளது.அவை அவனுக்கு வசப் படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளது.அவன் அவற்றைப் பற்றி ஆராய வேண்டும் என்ற குர்ஆனின் கட்டளைகள் எட்டாம் நூற்றாண்டில் தொடங்கி பதினான்காம் நூற்றாண்டு வரை ஆயிரக்கணக்கான விஞ்ஞான கண்டுப் பிடிப்புக்களை உலகுக்கு தந்தது.அடுத்து விஞ்ஞானத்தின் பக்கம் நெருங்கி வந்த ஐரோப்பா வெகு இலகுவாக அதன் உச்சத்தை நெருங்க வழி வகுத்தது.சுருங்கக் கூறின் நாம் பார்க்கும் விஞ்ஞான உலகின் வசதி வாய்ப்புக்கள் அனைத்தும் தவ்ஹீத் என்னும் இஸ்லாமின் ஏகத்துவ கொள்கை ஏற்ப் படுத்திய தாக்கமே ஆகும்.

 

என்னுடய தொழுகையும்,குர்பானியும் என் வாழ்க்கையும் என் மரணமும் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்விற்கே உரியது என்று நபியே கூறுவீராக என்ற குர்ஆனின் கட்டளை ஒவ்வொரு முஸ்லிமும் வாழ்வின் எடுத்துக் கொள்ள வேண்டிய தவ்ஹீத் என்னும் ஏகத்துவத்தின் உறுதி மொழியும் பின்பற்ற வேண்டிய வாழ்வின் வழியுமாகும்.

News

Read Previous

ரமலான்‬ ‪‎மாதத்தின்‬ ‪‎சிறப்புகள்‬

Read Next

களறிகறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *