தற்கால இலக்கியம் பற்றிய வாசிப்பு அவசியம்

Vinkmag ad

மொழியும், இலக்கியமும் மாறி வரும் நிலையில், ஒரு பண்பாட்டின் மொழி வளத்தைக் காண தற்கால இலக்கியம் பற்றிய வாசிப்பு அவசியம் என, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றுவரும் சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கின் 2-ம் நாள் நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் இணை இயக்குநர் பாண்டுரங்கன், சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ், குறும்படம் மற்றும் ஆவணப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் துறை வல்லுநர்களாகக் கலந்து கொண்டனர்.

“தமிழ்நாட்டின் தமிழ்மொழிக் கலைத் திட்ட அமைப்பு பற்றிய ஒரு கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் பாண்டுரங்கன் பேசுகையில், தமிழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்டம், பாடச்சுமை குறைப்பு, தமிழ் எழுத்து வடிவத்தில் கவனம் செலுத்துதல், வண்ணங்களைப் பயன்படுத்தி எளிதில் புரிய வைத்தல் போன்ற முறைகள் சிறப்பானவை எனக் குறிப்பிட்டார்.

“பின் நவீனத்துவப் பார்வையில் தமிழ் இலக்கிய வாசிப்பு’ என்ற தலைப்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசுகையில், ஆசிரியர், மாணவர் உறவிலும், பாராம்பரிய கற்றல் முறைகளிலும் நெகிழ்வு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்களுக்குக் கற்பித்தலோடு, மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளும் தன்மையைப் பின் நவீனத்துவப் பார்வை உருவாக்கியுள்ளது.

ஆசிரியர்கள், எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு, பிற நாட்டுச் சொல் வழக்குகளையும், வட்டார வழக்குகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

“கற்றல், கற்பித்தலில் தற்கால தமிழிலக்கியத்தின் பயன்பாடு’ என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில்,  நம்முடைய நெடுங்கால இலக்கிய மரபு பெரும்பான்மையும், பக்தி இலக்கியமும் சார்ந்ததாகவே இருந்தது.

தற்கால இலக்கியத்தில்தான் உரைநடை செல்வாக்குப் பெற்றது. உரைநடை மரபோடு பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைப் பதிவுகளும் பேச்சு போன்ற கருத்துகளை அறிமுகப்படுத்தி, புதிய போக்கை மேலெடுத்துச் சென்றன. மொழியும், இலக்கியமும் மாறி வருகிற நிலையில், ஒரு பண்பாட்டின் மொழி வளத்தைக் காண தற்கால இலக்கியம் பற்றிய வாசிப்பு அவசியம்.

மனித உணர்ச்சியைப் படைப்பிலக்கியத்துக்குள் கொணருகிறபோது, இலக்கண வரையறைகள் மீறப்படுகின்றன.

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகியோரின் படைப்புகளிலிருந்து குழுóதைகளுக்குக் கற்பிக்கத்தக்க கதைகளும், மேற்கோள்களும் ஏராளமாக உள்ளன. தற்காலப் படைப்புகளை வகுப்பறைக்குள் நடத்துகிறபோதுதான், மாணவர்கள் ஆசிரியரின் கட்டுப்பாட்டிலிருந்து, விலகி தங்களுடைய சுய அனுபவங்களைப் பொருத்தி பார்த்து புரிந்து கொள்கின்றனர்.

அதேபோல, மரபு மீது கால மாற்றங்கள் கோரும் நிபந்தனைகளைக் கட்டுடைத்து எழுதுவதும் தற்கால படைப்புகளில்தான் நடந்துள்ளன. இப் போக்குக்கு உதாரணமாக ராமாயணக் கதையைக் கட்டுடைத்து புதுமைப்பித்தன் எழுதிய “சாப விமோசனம்’ கதை முதல் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கிரேக்கத்து முயல்’ கதை வரை காட்டலாம். கந்தர்வன் போன்றோர் எழுதிய கதைகளிலிருந்து மக்களின் மரபுகளையும் மொழி வளத்தினையும் அறிய முடியும் என்றார்.

News

Read Previous

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்

Read Next

பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூருக்கு ஷார்ஜாவில் நகரத்தார் சங்கத்தில் அளித்த வாழ்த்துப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *