ஞானியின் ஆதங்கம் !

Vinkmag ad

 

-கே.இ.எஸ். சுல்தான் சாஹிபு காதிரி

 

காஸ்பியன் கடலிலிருந்து பஞ்சாப் வரை தமது பேரரசை நிறுவிய மஹ்மூது கஸ்னவீ கலை, இலக்கியம், அறிவியல் துறைகளுக்கு முக்கியத்துவமளித்து ஆட்சி செய்து வந்தார். உலகப்புகழ்பெற்ற ஷாஹ்நாமா என்னும் நூலை எழுதிய பாரசீகப் பெரும் கவிஞர் புலவர் ஃபிர்தவ்ஸ் இந்த மன்னரவையில் பணியாற்றியர்தாம்.

கற்றோரை மதித்துப் போற்றும் இயல்புடைய மஹ்மூத் கஸ்னவீ சிறந்த ஒழுக்க சீலர். சன்மார்க்கத் துறையிலும் ஆன்மீகத் துறையிலும் தம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்ட இவர் மதிநுட்பம் நிறைந்த இராஜ தந்திரியாகவும் வலிமைமிக்க போர் வீரராகவும் திகழ்ந்தார் என்பது மட்டுமல்ல. இவர் அல்லாஹ்வின் அருள் பெற்ற மன்னர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஞானவள்ளல் ஹள்ரத் அபுல் ஹசன் கர்கானி என்னும் ஞானாசிரியரின் முக்கியச் சீடர்களுல் ஒருவராகத் திகழ்ந்தார் மன்னர் மஹ்மூத் கஸ்னவீ. இவர் இந்தியாவின் மீது படையெடுப்பதற்காகத் தம் ஞானாசிரியரிடம் அனுமதி வேண்டினார். பல முறை வேண்டியும் அனுமதி கிடைக்கவில்லை.

சில வாரங்களுக்குப்பின் தன் ஷைக் (ஞானாசிரியர்) அவர்களை அணுகி மிகவும் பணிவுடன் தம் எண்ணத்தை வெளியிட்டுக் கெஞ்சினார். இம்முறை தம் சீடர்மீது இரக்கம் கொண்ட ஷைக் அபுல் ஹசன் கர்கானி, தம் மேலங்கி (சட்டை) யைக் களைந்து சீடரின் கையில் கொடுத்து அனுமதியும் வழங்கினார்.

கண்ணியமிக்க ஷைக் நாயகம் அவர்களின் மேலங்கியையும் நல்லாசியையும் பெற்றுத் திரும்பிய அரசர் மஹ்மூத் கஸ்னவீ, உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. கால தாமதத்தை விரும்பாத அந்தக் கர்மவீரர் படையணிக்குத் தாமே தலைமையேற்றுப் போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்.

இரண்டு படைகளும் கடுமையாகவே போரிட்டுக் கொண்டிருந்தன. கஸ்னவீ தம் படை வீரர்களுக்குச் சிம்மக்குரல் கொடுத்து உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார். சற்று நேரத்துக்கெல்லாம் எதிரிப்படையின் பலம் ஓங்கி நின்றது. இருப்பினும் மன்னரின் படையணி கொஞ்சமும் சளைக்காமல் போராடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் சற்றும் எதிர்பாரா வண்ணம், எதிரிப் படைகள் மன்னர் மஹ்மூத் கஸ்னவியின் படையைச் சுற்றி வளைத்துக்கொண்டு மூர்க்கத்தனமாகத் தாக்கத் தொடங்கி விட்டன.

போர்க்களத்தின் போக்கை நன்கு அறிந்துகொண்ட மன்னரின் இதயத்தில் மின்னல் போல ஒளி தோன்றி மறைந்தது. சற்றும் தாமதிக்காமல் போர்க்களத்தைவிட்டு விலகி ஒதுக்குப்புற ஓடையை நோக்கித் தமது வெண்புரவியை விரைவாகச் செலுத்தினார். உளூச் செய்துகொண்டு இரண்டு ரக்அத் நஃபில் தொழுகையை பக்தியோடு தொழுதுவிட்டு, தம் ஷைகின் மேலங்கியைக் கையில் ஏந்திய வண்ணம், இறைவா, என் ஷைகின் இந்தச் சட்டையின் பொருட்டால் எனக்கு வெற்றியைத் தந்தருள்வாயாக என்று மனமுருகிப் பிரார்த்தனை புரிந்து விட்டு வெண்புரவி ஏறிப் போர்க்களம் நோக்கிப் பாய்ந்தார்கள்.

சிறிது நேரத்தில் போர்க்களத்தின் நிலைமை திசைமாறிவிட்டது. பகைவர்கள் புறமுதுகு காட்டி ஓடத் தொடங்கினார்கள். இறுதியில் மாமன்னர் வெற்றி வாகை சூடினார். வெற்றிக்களிப்பில் தம் நாடு திரும்பிய மன்னர் கஸ்னவீ, தம் ஷைகைச் சந்தித்து, தங்களின் (முபாரக்கான) சிறப்பான சட்டையால் எனக்கு வெற்றி கிடைத்தது. அதனைக் கையில் ஏந்திய வண்ணம் இறைவனிடம் வெற்றியைத் தந்தருளும்படி வேண்டினேன். அவ்வாறே இறைவன் வெற்றியை அளித்தான் என்று தெரிவித்தார்.

தம் சீடரின் கூற்றைச் செவிமடுத்த ஞான வள்ளல் ஷைக் அபுல் ஹசன் கர்கானி அவர்கள், எனது சட்டையை உனது வெற்றிக்குத்தான் பயன்படுத்தினாயா? அதன் பொருட்டால் இந்திய மக்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீ இறைவனிடம் வேண்டியிருக்கக் கூடாதா? நீ அன்று அவ்வாறு வேண்டியிருந்தால் அப்படியே நிகழ்ந்து இருக்குமே என்று கூறினார்.

 

News

Read Previous

இலவச கண் சிகிச்சை முகாம்

Read Next

கோபத்தை அடக்கி ஆளுங்கள் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *