கோபத்தை அடக்கி ஆளுங்கள் !

Vinkmag ad

 

முபல்லிகா ஏ. ஓ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“மக்களைத் தனது பலத்தால் அதிகமதிகம் அடித்து வீழ்த்துகிறவன் வீரன் அல்ல. உண்மையான வீரன் என்பவன் கோபம் ஏற்படும் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.”

இந்த அறிவுமிக்க அழகிய நபிமொழியை நபித்தோழர் ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். புகாரி நபிமொழிக்கிரந்தத்தில் இப்பொன்மொழி பதிவாகியுள்ளது.

கோபம் என்பது ஷைத்தானின் குணம். சாந்தம் என்பது இறைவனின் குணம். சாந்தி குடி கொண்டிருக்கும் இடத்தில் ஷைத்தான் வரமாட்டான். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டவன். எனவே எப்போதும் ‘எரிபுரி’ என்று திரிவதும் கோபக்கனல் மூட்டுவதுமே அவன் வேலை. இதிலிருந்து தப்பிவிட்டால் – கோபத்தை அடக்கும் குணம் பெற்று விட்டால் அடித்து வீழ்த்தும் வீரனை விட அதிக மதிப்புப்பெற்ற அடக்கி ஆளும் வீரனாக பவனி வர முடியும்.

அழகிய குணத்தார்

மனிதர்கள் செய்யும் குற்றங் குறைகளை மறந்து மன்னித்தும், கோபத்தை அடக்கி ஆளும் வல்லமையும் கொண்டவர்களை அழகிய குணங்கொண்டவர்கள் என்று அல்லாஹ் பாராட்டுகிறான். இவர்கள் பயபக்தியுள்ள – தக்வா தாரிகளான மேன்மக்கள் ஆவார்கள்.

குணம் கொண்ட மனிதனே மனிதரிலும் புனிதன் ஆவான். குணம் கெட்ட மனிதனோ மானிடரிலும் கேடு கெட்ட இழிவானவனாவான். கோபம் கொண்ட மனிதன் நெருப்பை மென்று தின்று கொண்டிருக்கிறான். குணமுள்ள மனிதன் குளிர்ந்த நீரை குடித்துக் கொண்டிருக்கிறான்.

கோபம் வரும் நேரம் நபி மணி (ஸல்) அவர்கள் எழுந்து சென்று “ஒளு” செய்து கொள்வார்கள். தமது தோழர் பெருமக்களிடமும் இப்படியே செய்து கொள்ளச் சொல்வார்கள். இப்படிச் செய்வதால் இருந்த இடத்தை விட்டு மாறுகிறோம். ஷைத்தானின் கோபக்கனலை நீர் ஊற்றி அணைத்து விடுகிறோம்.

மூன்று குணங்கள் வேண்டும் :-

“மூன்று நற்குணங்கள் – பண்புகள் யாரிடம் இருக்கின்றனவே அவருக்கு அல்லாஹ் கியாமத் நாளன்று தன் ரஹ்மத் – அருள் என்னும் நிழலில் இடமளிப்பான். மேலும் அவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.

அந்த நற்குணங்கள் (1) பலவீனமானவர்களிடம் நளினமாக – மென்மையாக நடந்து கொள்ளுதல் (2) பெற்றோர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ளுதல் (3) அடிமைக்கு (பணியாளர்களுக்கு) உதவி உபகாரம் செய்தல் ஆகும்”

என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த மூன்று அறிவுரைகள் கூடிய நபிமொழியை அறிவித்தவர் நபித்தோழர் ஹள்ரத் ஜாபிர் (ரளி) அவர்களாவர். இந்த நபிமொழி “திர்மிதி” நபிமொழிக்கோவையில் இடம் பெற்றுள்ளது.

பலவீனர் – பெற்றோர் – பணியாளர்களிடம் நற்குணத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு “அருள்” என்னும் பிரத்தியேகமான தனது நிழலில் அல்லாஹ் இடமளிக்கிறான். அன்று மறுமை நாளில் வேறு நிழலே இல்லை என்ற நிலை இருக்கும். சூரியன் தலை உயரத்தில் வந்து நிற்கும். வெயிலின் கொடூரம் தாங்க முடியாதபடி இருக்கும். அந்த மறுமை தினத்தை நம்பித்தான் முஃமின்களாகிய நாம் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றைக்கு ஒதுங்க நமக்கு நிழல் வேண்டும்.

பலமானவரிடம் மோதுவதுதான் வீரம். சமமான சக்தியுள்ளவரிடம் தான் பலம் பார்க்க வேண்டும். இது தான் முறை. தனக்குக் கீழே இளைத்தவனிடம் தனது வீரத்தையும் விவேகத்தையும் காட்டுவது வீரனுக்கு அழகல்ல என்பதை இந்த நபிமொழி நயம்பட உரைக்கிறது.

விட்டுக்கொடு

பொதுவாகவே போட்டி என்று வரும் போது அதில் மிகப் பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்வதே அறிஞருக்கு அழகு. ‘விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போகமாட்டான்; கெட்டுப் போகிறவன் விட்டுக் கொடுக்கமாட்டான்’ என்பது அறிஞர்கள் சொன்ன மொழி.

மூடனிடமும் முரடனிடமும் மோதிக்கொள்வதால் கேவலநிலை தான் தேடி வரும். ஒரு முட்டாளுக்கும் அறிஞனுக்கும் போட்டி வந்து விட்டால் ஈட்டிக்குப் போட்டியாக இருவரும் நடந்து கொள்கிறார்கள் என்போம். அப்போது பார்க்கும் மனிதர்கள் மிகமிக இலகுவாகச் சொல்வார்கள்; “அவன் தான் முட்டாப்பயல் – அறிவில்லாதவன் அவனிடம் போய் இந்த அறிவாளி சரிக்குச் சரியாக ஏன் நடக்கிறார்? இவருக்கு எங்கே அறிவு போச்சு? என்பார்கள்.

அறிவாளி நியாயத்தை எதிர்பார்ப்பான். அதற்குரிய அறிவை பயன்படுத்திப் பார்ப்பான். இது உலகில் எடுபடாது. மூடனுக்கும் முரடனுக்கும் அறிவு இராது. அவன் முரட்டுப் பிடியில் நிற்பான். இதைக் காணும் நடுநிலையாளர்கள் நியாயம் பேசுவதை விட்டு விட்டு அறிஞனுக்கு புத்தி சொல்லப் போவார்கள்.

அழகிய குணம்

“(பயபக்தி உடையவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் இறைவனின் பாதையில் (தர்மமாக) செலவிடுவார்கள். மேலும் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் குற்றங்களை மன்னித்துக் கொள்வார்கள். இப்படிப்பட்ட அழகிய குணமுடையோரையே அல்லாஹ் நேசிக்கிறான்”

-அல்குர்ஆன் (3 :134)

கோபத்தை அடக்கி ஆள்பவர்களையும், பிறர் செய்யும் தவறுகளை மன்னிப்பவர்களையும் அல்லாஹ் நேசங் கொள்கிறான் என்ற கருத்தை திருக்குர்ஆனின் “ஆல இம்ரான்” அத்தியாயத்தின் 134 ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நீண்ட சம்பவம்

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு “பனூமுஸ்தலிக்” என்ற இடத்தில் ஓர் இஸ்லாமியத் தற்காப்புப் போர் நடந்தது. இந்தப் போரில் நபிமணி (ஸல்) அவர்களும், அவர்களின் துணைவியார் அன்னை ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்களும் கலந்து கொண்டார்கள்.

வெற்றி கொண்ட பின் ஓரிடத்தில் ஓய்வுக்காக போர்ப்படை தங்கியிருந்தது. அப்போது அன்னை ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் சுய தேவைக்காகச் சிறிது தூரம் பாலைவனத்தில் சென்று வந்தார்கள். வரும் வழியில் அவர்களின் கழுத்து மாலை கீழே விழுந்து விட்டதைத் தெரிந்து மீண்டும் சென்று தேடிப் பார்த்துத் தாமதமாக வந்தார்கள். அதற்குள் போர்ப்படை அந்த இடத்தை விட்டும் சென்று விட்டது.

அன்னை ஹள்ரத் ஆயிஷா நாயகி (ரளி) அவர்கள் ஒல்லியான உடம்பு உடையவர்கள். அவர்கள் வந்து இருப்பார்கள் என்று நினைத்து அவர்களின் ஒட்டக் அம்பாரியை பாதுகாவலர்கள் தூக்கி ஒட்டகத்தில் வைத்துக் கட்டிவிட்டார்கள். அவர்கள் அதில் இருப்பதும் இல்லாததும் தெரிய முடியவில்லை.

படைகள் சென்றபின் அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை எடுத்துவர ஒரு நபர் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி அன்று ஹள்ரத் ஸப்வான் இப்னு முஅத்தலுஸ் சுலமி (ரளி) என்ற ஸஹாபி பின்னால் வந்து கொண்டு இருந்தார்கள். ஹள்ரத் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தனது ஒட்டகையை அமர வைத்து அதில் ஏற்றி ஹள்ரத் அன்னை ஆயிஷா (ரளி) அவர்களை அழைத்து வந்தார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தார்கள். ஹள்ரத் ஸப்வான் (ரளி) ஒட்டகையில் ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்கள் வந்ததைக் கண்டபோது தான் அவர்கள் காணாமல் போய் விட்டு வந்தது எல்லோருக்கும் தெரிந்தது.

குழப்பக்காரர்கள் ?

இந்த சம்பவத்தை நபிகளாரின் எதிரியான முனாபிக் அப்துல்லாஹ் இப்னு உபை சந்தேகச் சம்பவமாகப் பேசி குழப்பம் செய்து விட்டான்.

ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் (ரளி) அவர்கள் தனது உறவினர்களில் இரண்டு அனாதைகளை வளர்த்தார்கள். அவர்களில் ஒருவர் “மிஸ்தாக்” என்பவர். இந்த மிஸ்தாக்கும் முனாபிக் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவனோடு சேர்ந்து ஹள்ரத் அன்னை ஆயிஷா நாயகி (ரளி) அவர்களைப் பற்றி குறை பேசினார். இந்த சம்பவம் சில நாட்கள் விமர்சிக்கப்பட்டது.

அல்லாஹ் தனது திருமறையாம் குர்ஆனில் ஹள்ரத் ஆயிஷா நாயகி (ரளி) அவர்கள் புனிதமானவர்கள் என்பதை வஹீ மூலம் தெளிவுபடுத்தி அறிவித்து விட்டான். இதோடு அந்தப் பேச்சு முடிவடைந்து விட்டது.

தனது மகன் ஹள்ரத் ஆயிஷா (ரளி) அவர்களைப் பற்றி ஒரு முனாஃபிக்கோடு சேர்ந்து குறை கூறிய ‘மிஸ்தாக்’ என்பவருக்கு அளித்து வந்த உதவிகளை கோபம் கொண்டு அபூபக்கர் (ரளி) அவர்கள் நிறுத்தி விட்டார்கள். மேலும் சிலரும் அவருக்கான உதவிகளை நிறுத்தி விட்டனர்.

இறைநேசர்கள் …

“கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் குற்றங்களை மன்னித்துக் கொள்வார்கள். இப்படிப்பட்ட அழகிய குணமுடையோரையே அல்லாஹ் நேசிக்கிறான் …” என்ற இறைவசனம் இறங்கிய பின் ஹள்ரத் அபூபக்கர் (ரளி) அவர்கள் தனது கோபத்தை மறந்து “மிஸ்தாக்” என்பவருக்கு முன்பை விட அதிகமாக உதவிகள் செய்தார்கள்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்வதும் – இன்னா செய்தவர்க்கும் இனியவையே செய்யாக்கால் என்ன பயன் சால்பு தரும்? என்பதையும் உணர்ந்த அந்த மனிதப் புனிதர்கள் – தான் பெற்ற கண்மணி ஹள்ரத் ஆயிஷா (ரளி) நாயகியைக் குறை கூறியவர்களையே மன்னித்து கோபத்தை அடக்கி மேலான நன்மைகள் செய்திருக்கிறார்கள். இதுதான் பயபக்தியுடைய மேன்மக்களின் அருங்குணம்.

 

 

News

Read Previous

ஞானியின் ஆதங்கம் !

Read Next

`ரமளான் நோன்பு’ புதிய வரலாற்று தோற்றத்தை நிச்சயம் உருவாக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *