சொல்லின் செல்வர் எம்.எம். பீர் முஹம்மது சாகிப்

Vinkmag ad

A

-சேயன் இபுறாகிம், கடையநல்லூர்

கணுக்காலுக்கு மேலே கட்டிய வெள்ளைக் கைலி, ஜிப்பா போன்ற சட்டை, தோளில் குறுக்கே போடப்பட்ட பெரிய மெல்லிய துணியிலான துண்டு, தலையில் தொப்பி, தோளிலே ஒரு பை இத்தகைய ஒரு தோற்றப்பொலிவுடன் காட்சி அளித்தவர் இரவணசமுத்திரம் மர்ஹூம் எம்.எம்.பீர் முஹம்மது சாஹிப் அவர்கள். அது அரசியல் கூட்டமாக இருந்தாலும் சரி, சமுதாயக் கூட்டமாக இருந்தாலும் சரி, இலக்கியக் கூட்டமாக இருந்தாலும் சரி அவரது தோற்றப்பொலிவில் மாற்றம் இருக்காது.

“சொல்லின் செல்வர்” என்று காயிதெ மில்லத் அவர்களாலும் ‘செந்தமிழ்த் தேனருவி’ என டாக்டர் கலைஞர் அவர்களாலும் பாராட்டப்பட்ட இரவணசமுத்திரம் பீர் முஹம்மது சாஹிப் அவர்கள் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சென்று தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் புகழ் பரப்பியவர். இஸ்லாத்தின் மாண்புகளை எடுத்தியம்பியவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகளை நயம்படி உரைத்தவர்.

எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினாலும் அது பிற சமயத்தார் நடத்தும் நிகழ்ச்சியானாலும் சரி ‘இன்னா ஃபதஹ்னா லக ஃபத்ஹன் மூபினா (நிச்சயமாக நாம் உங்களுக்கு வெற்றியைத் தந்தோம்) என்ற இறை வசனத்துடன் தான் தனது உரையைத் தொடங்குவார். அதைத் தொடர்ந்து ‘எல்லாம் வல்ல அல்லாஹ்வை மொழி, மெய் ஆத்மாவால் வணங்கிப் பணிந்து நற்குணத்தின் தாயகம் நானிலத்தின் நாயகம் எம் பெருமான் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் அவர்களுக்கு முன் உலகத்தில் தோன்றிய எண்ணற்ற நபிமார்களையும், அவர் தம் அருமைத் தோழர்களையும் இறை நேசச் செல்வர்களையும், இறையருள் பெற்ற அடியார்களையும், மெய்நிலை கண்ட ஞானி முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜெய்லானி (ரஹ்) அவர்களையும் போற்றிப் புகழ்ந்து அவர்கள் தம் அனைவருடைய ஆத்ம் ஆசியையும் வேண்டிப் பெற்றவனாக என் உரையைத் துவக்குகிறேன்’ என்பார்.

பொது நிகழ்ச்சிகளில் திருக்குர்ஆனைப் பற்றி கூறும் போதெல்லாம் ‘காலத்தால் மாறாத – காலத்தின் கோலத்தால் சிதையாத காலத்துக்கும், கருத்துக்கும் ஏற்ற ஞானப் பெரும் கருவூலமாம் திருக்குர்ஆன்’ என்று சொல்வதும் அவரது வழக்கமாகும். உச்ச தொனியில் அழகிய தழில் ஆற்றொழுக்கு போன்ற நடையில் மணிக்கணக்கில் மேடைகளில் பேசும் ஆற்றல் அவர் பெற்றிருந்தார். அவரது உரையில்  திருக்குர்ஆன் வசனங்கள் இருக்கும் – நபிகளாரின் பொன்மொழிகள் இருக்கும் – அரசியல் கருத்துக்கள் இருக்கும் – புள்ளி விவரங்கள் இருக்கும். ‘கேட்டார் பிணிக்கும் தகையவாய்’ என்ற வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாய் அவரது உரை அமைந்திருக்கும். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் உரையாற்றிய பிற பேச்சாளர்கள் உணர்ச்சிகரமான கருத்தாழமிக்க கருத்துக்களை வெளியிடும் போது ‘ஆஹா ஆஹா’ என்று குதூகலித்துக் குரல் எழுப்புவது அவரது வாடிக்கையாகும். ஒரு அரை நூற்றாண்டுகாலம் அவர் தமிழக மேடைகளில் வலம் வந்தார். தனது வசீகரமான கருத்துக்களால் மக்களின் மனம் கவர்ந்தார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, அவர் முஸ்லிம் லீக் வேட்பாளராக மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். (தி.மு.க. கூட்டணி) தனது அண்டை தொகுதியான சேரன்மகாதேவியில் அப்போதைய சபாநாயகர் திரு. செவலபாண்டியன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும், திரு. எஸ். ரத்தினவேல் பாண்டியன் தி.மு.க. வின் வேட்பாளராகவும் களத்தில் நின்றனர்.

தனது தொகுதியின் தேர்தல் பிரசாரத்திற்கு இடையிலேயே தி.மு.க. வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக சேரன்மகாதேவி சென்ற அவரிடம் தி.மு.க. கூட்டணியினர் திரு. செல்லப் பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் அத் தொகுதியில் செய்து வரும் அராஜக நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறினர். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடைசியாக உரையாற்றிய அவர், செல்லப்பாண்டியனை எச்சரிக்கும் விதமாக சட்டமன்றம் செல்லாப் பாண்டியன், தேர்தலில் இனிநில்லா பாண்டியன், அடியாட்களை வைத்து மிரட்டும் பொல்லாப் பாண்டியன்’ என்று கூறவே ஒட்டு மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது.

சட்டமன்ற பணி

1967 ஆம் ஆண்டு மேலப்பாளையம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1967 முதல் 1971 வரை சட்டமன்றத்தில் சிறப்புற பணியாற்றினார். தனது நாவன்மையால் சட்டமன்ற நடவடிக்கைகளில் தனித்துவம் மிக்கவராக விளங்கினார்.

18-3-1967 அன்று சட்டமன்றத்தில் தனது கன்னிப்பேச்சை நிகழ்த்திய அவர் அண்ணா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களைக் குறிப்பிட்டுப் பேசியதாவது –

‘மதியையும், நிதியையும் நல்லறக் கருத்துக்களை செழித்துக் கொழிக்கிற ‘நாவலரையும்’ ‘மாதவத்தையும், முத்தான சாமியையும், உண்மையைச் சாதிக்கும் ‘பாஷா’ வையும் நித்தியமாகிய சத்தியத்தையும்’ உறுதுணையாகக் கொண்டிருக்கும் அறிஞர் அண்ணாவின் அமைச்சரவை’ இந் நாட்டிற்கு நன்மைகள் பல நல்க இறைவன் அருளைப் பிரார்த்தித்து அமர்கிறேன்.

அவர் பதவி வகித்த நான்கு ஆண்டு காலத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு தர வற்புறுத்தியும், பள்ளிக்கூடங்களில் மார்க்க போதனைக்கு வழி செய்ய வேண்டியும், மதுவிலக்கை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தியும் உரையாற்றினார்.

மேலும் கைத்தறி நெசவாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகள் பற்றியும், சேலம் உருக்காலை அமையவேண்டியதன் அவசியம் பற்றியும், நெல்லையில் தொழிற் பயிற்சிக் கல்லூரி அமைக்க வேண்டியும் மாநில சுயாட்சியின் தேவை பற்றியும் பல்வேறு கால கட்டங்களில் விரிவாக உரையாற்றினார். அவரது உரையில் சிலேடைகளுக்குப் பஞ்சம் இருக்காது.

தி.மு.க. ஆட்சியின் போது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது பற்றிய விவாதம் சட்டமன்றத்தில் வந்த போது மதுவிலக்கு ஒத்திவைப்பு எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் – எப்போது இந்த ஒத்திவைப்பு ரத்து செய்யப்படும் என்று அவர் வினா தொடுத்தபோது அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்கள் சிலேடையாக “இப்போதைக்கு இல்லை” என்று கூறினார். உடனே அவர் இப்போ ‘தைக்கு’ இல்லை என்றால் ‘மாசியிலோ, பங்குனியிலோ’ என்று சிலேடையாகவே எதிர்கேள்வி எழுப்பி சட்டமன்றத்தில் கலகலப்பூட்டினார்.

கடையநல்லூருடன் தொடர்பு

கடையநல்லூருக்கும் மர்ஹூம் எம்.எம்.பீர் முஹம்மது அவர்கட்கும் நிலவிய உறவும் பந்தமும், மிகவும் ஆழமானது. 1960 – 70 களில் கடையநல்லூரில் மாதம் ஒரு முஸ்லீம் லீக் பொதுக்கூட்டம் நடைபெறும். ‘முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் ஊரில் உரக்கக் கேட்ட காலமது. எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடையநல்லூர் வருகை தந்து முஸ்லிம் லீக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார். அவரது வெண்கலக் குரல் உரை கேட்க மக்கள் பெருமளவு கூடுவர்.

1962 அல்லது 1963 ஆண்டு என்று எனக்கு நினைவு, கடையநல்லூர் மெயின் பஜாரில் செயல்பட்டு வந்த ‘கமருல் இஸ்லாம் சங்கம்’ அல்லிமூப்பன் தென்வடல் தெருவில் உள்ள கட்டிடத்திற்கு (முஸ்லிம் மாணவர் மன்றம் செயல்பட்ட இடம்) மாற்றப்பட்டபோது நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் ‘ஸ்பெயினில் முஸ்லிம்கள் 400 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக அரசாட்சி செலுத்தியதையும், கார்டோபா பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் பற்றியும், பின்னர் ஒற்றுமையின்மை காரணமாக அங்கு முஸ்லிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்ததையும் இஸ்லாம் ஸ்பெயினிலிருந்து விரட்டப்பட்ட சோக வரலாற்றையும் உணர்ச்சி ததும்ப எடுத்துரைத்தார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எனக்கு அவரது உரை இன்றைக்கும் நினைவிருக்கிறது.

1967 –ல் நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது நான் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மேலப்பாளையம் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குக் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த அவரை தேர்தல் முடிவுகள் வந்து ஒன்றிரண்டு நாட்கள் கழித்து சில நண்பர்களுடன் இரவண சமுத்திரத்திலிருந்து அவரது இல்லத்திற்குச் சென்று கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தேன். தனது வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர் மேலப்பாளையம் தொகுதியில் இருந்த பிராமணர்கள் தனக்கு ஒட்டு மொத்தமாக வாக்களித்த செய்தியை மகிழ்ச்சியுடன் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.

ஒரு முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு பிராமணர்கள் வாக்களித்ததே அவரது பெரு மகிழ்ச்சிக்குக் காரணம்.

22-1-81 அன்று இந்த ‘செந்தமிழ்த்தேன் அருவி’ தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. தனது இறப்பினை முன்கூட்டியே அறிந்து கொண்ட காரணத்தால் தானோ என்னவோ அதற்கு முன் நடைபெற்ற பல கூட்டங்களில் அவர் மெளத்தை ஹயாத்தாக்குவது எப்படி (மரணத்தை வாழ வைப்பது எப்படி?) என்ற தலைப்பில் பேசி வந்தார். அவரது உரை கேட்ட மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

தனது ஆயுளின் இறுதி நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்தபோது தம்மைப் பார்க்க வந்தோரின் பார்வையில் படும்படி கட்டிலுக்கு அருகில் கீழ்க்கண்ட வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.

‘அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனிடம் உங்கள் அனைவருக்காகவும் துஆ செய்கிறேன். எனக்காக நீங்கள் ‘துஆ’ செய்யுங்கள். நான் இவ்வுலகில் இருந்த காலத்தில் தங்களின் மனம் புண்படும்படி நடந்திருந்தாலோ அல்லது பேசியிருந்தாலோ என்னை மன்னித்துக் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

சாகும் தருவாயிலும் எத்தகைய நயத்தக்க நாகரீகம் கொண்டவராக அவர் விளங்கினார் என்பதை அறியும் போது நமது கண்கள் பனிக்கின்றன.

குறிப்பு: இதில் குறிப்பிட்டுள்ள சில நிகழ்ச்சிகள் கடையநல்லூர் சிராஜ் மாத இதழ் வெளியிட்டுள்ள சொல்லின் செல்வர் அல்ஹாஜ் எம்.எம். பீர் முஹம்மது நினைவு மலரிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

 

நன்றி :

மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் 2011 லிருந்து

News

Read Previous

துபாயில் இலவச சட்ட உதவி பெற …

Read Next

இதய நலம் காப்போம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *