காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களின் பதில் சொல்லும் பாங்கு

Vinkmag ad
பதில் சொல்லும் பாங்கு

************************************

1947-இல் பெருந்தலைவர்கள் பலரும் இ.யூ.மு.லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயங்கியபோது அதைத் துணிந்து ஏற்றுக்கொண்டவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப்அவர்கள்.

(01.)அப்போது இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி இல்லை;அதற்குரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த பதவி,’கவர்னர் ஜெனரல்’ பதவியாகும்.அன்று கவர்னர் ஜெனரலாக இருந்தவர் லூயிஸ் மவுண்ட்பேட்டன். அவர், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் ஸாஹிப் அவர்களை அழைத்து அப்போதிருந்த இந்தியச் சூழ்நிலையில் முஸ்லிம் லீகைத் தொடர்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கொண்டிருந்த கவலையைத் தெரிவித்ததுடன் லீகைக் கலைத்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

சொல்லப்போனால் அது ஒரு மறைமுக உத்தரவு-மிரட்டல்-வற்புறுத்தல் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.யாராக இருந்தாலும் சற்றேனும் யோசிக்கவும் தயங்கவும் வைக்கும் ஒரு சிக்கலான நிலைமை. கவர்னர் ஜெனரலோடு ஒத்துப்போனால் எத்தனையோ பயன்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிச்சயம் கிடைக்கும்.

ஆனால் இவை எதுவும் காயிதே மில்லத் அவர்களை அணுவளவும் பாதிக்கவில்லை.தம் தரப்புக்குரிய பதிலைச் சொல்லத் தயங்கவும் இல்லை.மரியாதையோடும் உறுதியோடும் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் சொன்ன பதில் இதுதான்:

”தங்களுக்கென்று ஒரு சபை இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு,சமுதாயத்தினுடையதேயன்றி என்னுடையதல்ல.

***********************************************

(02.) 1948-மார்ச் மாதத்தில் முஸ்லிம் லீக் கௌன்சில், முஸ்லிம் லீகைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்தது.அப்போது இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேரு, காயிதே மில்லத் அவர்களை அழைத்து, முஸ்லிம் லீகைக் கலைத்துவிடுமாறு கூறினார்.இதுவும் கவர்னர் ஜெனரல் கூறிய சொல்லையும் சூழ்நிலையையும் போன்றதுதான்.அப்போதும் மரியாதையோடு காயிதே மில்லத் அவர்கள் இப்படிச் சொன்னார்:

“பண்டிட் ஜீ ! முஸ்லிம் லீகுக்குப் புத்துயிர் கொடுத்து,தொடர்ந்து நடத்தவே நான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளேன்.அதைக் கலைத்துவிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பெறவில்லையே! ”

***************************************************

(03.) இதனால் உள்ளார்ந்த சினமுற்ற நேரு சென்னை வரும்போதெல்லாம் (இங்குதானே காயிதே மில்லத் அவர்கள் வாழ்ந்துவந்தார்) “முஸ்லிம் லீக் ஒரு செத்த குதிரை-பொருட் காட்சியில் இருக்க வேண்டிய பொருள்-அதனை எல்லா வகையிலும் எதிர்க்கப் போகிறேன்”- என்றெல்லாம் முழங்குவார்-அதாவது மிரட்டுவார்.இதைக் கேட்டு மிரண்டவர்கள் உண்டு. பொறுத்திருந்த காயிதே மில்லத் அவர்கள் ஒரு கட்டத்தில் இதற்கும் ஓர் இறைநம்பிக்கையாளனுக்கே உரிய முறையில் பின்வருமாறு பதிலடி கொடுத்தார்:

”தானே இறைவன் எனக் கூறிக்கொண்ட நம்ரூதின் முன் இப்ராஹிம்(அலை) என்ற முஸ்லிம் அஞ்சி நடுங்கவில்லை. தானே இறைவன் எனக் கூறிக்கொண்ட ஃபிர்அவ்னையே மூஸா(அலை) என்ற முஸ்லிம் எதிர்த்து நின்றார்.அந்தப் பேரரசர்கள் கண்ஜாடை காட்டினாலே ஒருவனுடைய தலை காணாமல் போகும்.அத்தகைய அதிகாரம் இந்த நேருவுக்குக் கிடையாது. அப்படி இருக்கும்போது ஒரு முஸ்லிமாகிய நான் நேருவின் பூச்சாண்டிகளுக்கு ஏன் அஞ்ச வேண்டும்?”

*****************************************************

இத்தகைய இறைநம்பிக்கையும் பண்பும் உறுதியும் மிக்க ஒரு தூய தலைவர் உருவாக்கி வளர்த்த வரலாற்றுப் பேரியக்கம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்!

இதில் சமுதாய ஆர்வமுள்ள எல்லாருக்கும் உரிமையும் பங்கும் உண்டு.இதற்காக அதிகம் பாடுபட்டவர்கள் பதவிப் பொறுப்பில் இருப்பார்கள்.மற்றவர்கள் அவர்களுக்கு உதவிப் பொறுப்பில் இருப்பவர் ஆவர்.

இதை என்றும் எல்லாரும் நினைவு கூர்வோம்.இயன்ற பங்களிப்பைச் செய்துவருவோம்-இயலாதோர் துஆவையாவது தொடர்ந்து செய்வோம்.ஏனெனில்-

இது இறைவன் இந்திய முஸ்லிம்களுக்காக ஏற்படச் செய்த முதல் அரசியல் கட்சி-தாய்ச் சபை… …. ….

——————–ஏம்பல் தஜம்முல் முகம்மது.

******************************************************************************************

Yembal Thajammul Mohammad's photo.
Yembal Thajammul Mohammad's photo.
Yembal Thajammul Mohammad's photo.

·

 

News

Read Previous

அனுமதியின்றி வாகனங்களில் கட்சிக்கொடி: வழக்குப் பதிவு

Read Next

ரியாத்தில் பணிபுரிந்து வரும் அப்துல் காதருக்கு பெண் குழந்தை

Leave a Reply

Your email address will not be published.