ஒளிவிளக்கு – எம்.ஜி.ஆரின் 100வது படம்

Vinkmag ad

ஒளிவிளக்கு. எம்.ஜி.ஆரின் 100வது படம். 1968இல் வெளிவந்தது.

சினிமாப் படங்களில் பீடி சிகரெட் புகைப்பது மாதிரியோ, மது அருந்துவதாகவோ எம்.ஜி.ஆர். நடித்ததேயில்லை. தீய பழக்கங்கள் அண்டாத தூயவராகவே படங்களில் நடித்து நல்ல இமேஜ் ஏற்படுத்தி வைத்திருந்த எம்.ஜி.ஆருக்கு இந்தப் படத்தில் ஒரு சோதனை.

அது என்ன? எம்.ஜி.ஆர். அதை எப்படி எதிர்கொண்டார்? விளக்குகிறார் சினிமா ஆய்வாளர் அறந்தை நாராயணன்:

“கதையில் கதாநாயகன் ஒரு காட்சியில் மதுபானம் அருந்தியே ஆக வேண்டும். எம்.ஜி.ஆர். மது அருந்துவதா? அவரது இமேஜ் என்னவாகிறது? ஆனால் கதைக்கு மது குடித்தேயாக வேண்டும்.

பத்து பதினைந்து அழகிய இளம்பெண்கள் பாடி நடனமாடியபடி மயக்க மருந்தை எம்.ஜி.ஆர். முகத்தில் ஸ்பிரே செய்கின்றனர். மயக்கமடைந்ததும் அவர் பிராந்தியைக் குடிக்கிறார். இதனாலும் தன் இமேஜ் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எம்.ஜி.ஆருக்கு வரவில்லை.

படத்தில், மயக்கம் தெளிந்ததும் எம்.ஜி.ஆருக்கு உள்ளிருந்து இன்னொரு எம்.ஜி.ஆர். (மனசாட்சி) புறப்படுகிறார். எதிரே போய் நின்றுகொண்டு கை நீட்டி “தைரியமாகச் சொல், நீ மனிதன் தானா? இல்லை. நீ ஒரு மிருகம்! இந்த மதுவில் விழும் நேரம் மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும்” என்று பாடி மதுவை எதிர்த்து மனசாட்சி எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்கிறார்.”

1975இல் வெளியான நினைத்ததை முடிப்பவன்  திரைப்படத்தில்கூட “ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து” எனும் பாடலுக்கு இடையில் கதாநாயகி, கதாநாயகனுக்கு மது கொடுப்பார். கதாநாயகனோ அதைக் குடிப்பதுபோல் பாவனை செய்து, கீழே கொட்டி விடுவார். ஆனால் குடித்தது போலவே நடிப்பார்.

இப்படித்தான் எந்தக் காலத்திலும் மக்கள் மத்தியில் தன் இமேஜ் கெட்டுவிடக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். மிகுந்த கவனமுடன் இருந்தார்.

அந்தக் கதாநாயகர் எம்.ஜி.ஆருக்கு நிஜ வாழ்க்கையிலும் மதுவில் துளிகூட நாட்டம் கிடையாது. ஒரு கட்டத்தில் மருந்தாகக் கூட மதுவை அருந்த மறுத்து விட்டாராம்.

முந்தைய தி.மு.க. அரசு மதுக்கடைகளைத் திறந்தபோது அக்கட்சியின் பொருளாளர் எனும் அடிப்படையில் அதற்கு அவர் உடன்பட்டிருக்கிறார். மதுவுக்கு எதிரானப் பிரசாரத்தை எம்.ஜி.ஆர். முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்.

1971 செப்டம்பர் 15 அன்று தன்னுடைய சத்யா ஸ்டுடியோவில் பணியாற்றும் ஊழியர்களை அண்ணா சமாதியின் முன்பு நிற்க வைத்து “நான் என் வாழ்வில் எப்பொழுதும் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட மாட்டேன். இதுவரை சூழ்நிலையின் காரணமாக அப்படி அந்தப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருப்பவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபடுவேன். என் முயற்சியில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பகுதியினரைக் குடிப்பழக்கத்தில் இருந்து மாற்றினேன் என்ற பட்டியலை எங்களை வாழ வைத்த பேரறிஞர் அண்ணாவின் காலடியில் காணிக்கையாக்குவேன். என்தாய், என்சகோதரி, என் குடும்பம், என் நாடு, எல்லாப் பொதுமக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக இன்றையதினம் உறுதியெடுத்துக் கொள்கிறேன்” என சத்தியம் செய்ய வைத்தார்.

அ.தி.மு.க.வை தொடங்கியபோது அதன் கொள்கைகளில் ஒன்றாக, “முழுமையான மதுவிலக்கு என்பதுதான் அதிமுகவின் கொள்கை. இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் இறுதியாக மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மது விசயத்தில் இவ்வளவு உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் மீண்டும் மதுக் கடைகளைத் திறந்ததும், டாஸ்மாக்கை உருவாக்கியதும் மிகப்பெரிய அரசியல் விநோதம். 

 

நன்றி:

மதுவிலக்கு

நேற்று இன்று நாளை

-கோ.செங்குட்டுவன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.

News

Read Previous

ஏறுதழுவல்

Read Next

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.