உலகிலேயே உயர்ந்த ராஜா

Vinkmag ad
2012ல் துளிர் இதழில் வெளிவந்த கதை….
எஸ் வி வி

குழந்தைகள் கதை

உலகிலேயே உயர்ந்த ராஜா
எஸ் வி வேணுகோபாலன்

ரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம் கூடி விட்டது. நரியை அழைத்து, “நான் தானே உலகிலேயே உயர்ந்த ராஜா ?” என்று கேட்டது.

“அதிலென்ன சந்தேகம், நீங்கள் தான் நீங்கள் தான் ” என்றது நரி.

ஆனால் அதில் திருப்தி அடையாத சிங்கம் அந்த வழியே வந்த மானைப் பார்த்து, “நான் தான் உலகிலேயே பெரிய சிங்கம் என்கிறது நரி, உனது கருத்து என்ன?” என்று கேட்டது.

அதற்கு மான், “அதைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் இந்த நரி சரியான மோசடிப் பேர்வழி” என்று மட்டும் சொன்னது.

உடனே சிங்கத்திற்கு எரிச்சல் ஏற்பட்டது. அப்போது அங்கே வந்த முயலை வழி மறித்து, “நான் தான் உலகிலேயே பெரிய சிங்கம் என்றது நரி. மானோ, நரி ஒரு மோசடிப் பேர்வழி என்கிறது. உனது கருத்து என்ன ?” என்று கேட்டது.

அதற்கு முயல், “அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் மான் ஒரு நேர்மையான விலங்கு” என்று மட்டும் சொன்னது.

சிங்கத்திற்கு இதைத் தாளவே முடியவில்லை. எதிரே வந்த எலியை மடக்கி, “ஏ எலியே, இங்கே பார், நான் உலகின் பெரிய ராஜா என்கிறது நரி. மானோ நரியை மோசடி பேர்வழி என்றது. முயலைக் கேட்டால் மான் ஒரு நேர்மையான விலங்கு என்கிறது. உனது கருத்து என்ன ?” என்று கேட்டது.

அதற்கு எலி, “இதையெல்லாம் நான் என்னத்தக் கண்டேன், முயல் ஒரு போதும் பொய் சொல்லாது” என்று மட்டும் சொன்னது.

இப்போது சிங்கத்தின் கோபம் எல்லையைக் கடக்கும் அளவு வந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து ஒரு பூனை அதன் கண்ணில் பட்டது. அதை அருகே அழைத்து, “இங்கே பார், உலகின் உயர்ந்த ராஜா நான் தான் என்றது நரி. மானோ, நரியை மோசடி பேர்வழி என்றது. முயலைக் கேட்டால் மான் ஒரு நேர்மையான விலங்கு என்கிறது. எலியைக் கேட்டால் அது முயல் பொய்யே சொல்லாது என்கிறது. நீ என்ன சொல்லப் போகிறாய்?” என்று கேட்டது.

உடனே பூனை, “அய்யயோ எலி இந்த வழியாய்த் தான் தப்பிப் போயிற்றா…இன்னிக்கு என் கதி அதோ கதி தான் போலிருக்கு..அடடா..எலியைப் போல அருமையான உணவு உண்டா உலகில்? ” என்று அழ ஆரம்பித்து விட்டது.

சிங்கத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நல்ல வேளையாக ஒரு கரடி வருவதைப் பார்த்தது. பொறுமையாக நடந்த கதை முழுவதையும் அதனிடம் சொல்லிவிட்டு, “நான் உலகிலேயே உயர்ந்த ராஜா என்று நீயாவது ஒப்புக் கொள்கிறாயா ?” என்று பரிதாபமாகக் கேட்டது.

ஹோ என்று உரக்கச் சிரிக்கத் தொடங்கிய கரடி, சிங்கத்தின் கண்களைப் பார்த்ததும் கொஞ்சம் அடக்கிக் கொண்டு, ” உலகில் ஒவ்வொருவருக்கும் அவரவர் வேலை இருக்கிறது, அடுத்தவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க முடியுமா என்ன! ராஜாக்கள் கம்பீரமாக இருக்கவேண்டும், என்னை ஏற்றுக் கொள்கிறாயா, ஏற்றுக் கொள்கிறாயா  என்று இப்படி பிச்சை கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அதே போல் நரி மாதிரி துதிபாடிகளை நம்பிக் கொண்டிருக்கவும் கூடாது” என்று பதில் சொல்லிவிட்டுத் தன் வழியே போய்க் கொண்டே இருந்தது.

தெளிவு பெற்ற சிங்கம் வேகமாகத் திரும்பிப் பார்த்த போது நரி ஓசைப் படாமல் நழுவி ஓடிக் கொண்டிருந்தது.

News

Read Previous

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் !

Read Next

மெல்லினம் – நாவல் – மின்னூல் – பா. ராகவன்

Leave a Reply

Your email address will not be published.