இஸ்லாம் காட்டும் சமத்துவம்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
38. இஸ்லாம் காட்டும் சமத்துவம்
சமுதாயத்தில் காணப்படும் போலியான ஏற்றத் தாழ்வுகளும், மொழியின் பெயராலும், இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஒரு மனிதனைத் தீண்டத்தகாதவனாகக் கருதுவதும் இயற்கைக்கும், இறைவன் படைப்புக்கும் முரண்பட்டது; மாறுபட்டது.
மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையரின் குழந்தைகள். இதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவார்கள். இதன் அடிப்படையில் நிறத்தால் மாறுபட்ட மனிதர்களையும், இனத்தால் பிளவுபட்ட சமூகத்தையும், மொழியால் வேறுபட்ட நாட்டவரையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது, இஸ்லாம்.
இஸ்லாம் கூறும் ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகளும் சமத்துவத்திற்கு அடித்தளம் அமைக்கிறது என்பதை முந்தைய அத்தியாயங்களில் கண்டோம்.
இந்த அத்தியாயத்தில் இஸ்லாம் போதித்த சமத்துவத்தை, நபிகளார் தமது வாழ்நாளில் சொல்லிலும், செயலிலும் சாதித்துக் காட்டிய சமத்துவ சகோதரத்துவ சமுதாயத்தை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இவ்வுலகில் இஸ்லாம் மிக வேகமாகப் பரவுவதற்கு ஏகத்துவமும், சமத்துவமும், சகோதரத்துவமுமே காரணமாகும்.
இறைவன் சன்னிதானத்தில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே! உலக மக்கள் அனைவரும் ஆதம்-ஹவ்வாவின் மக்களே! எனவே அனைவரும், ஒரே குலத்தை, ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க முடியுமே தவிர அவர்களுக்குள் பாகுபாடும், வேறுபாடும் தோன்றுவதற்கு வாய்ப்பு இல்லை; இப்படி இருக்க ஒருவர் மற்றவரை விட நான்தான் உயர்ந்தவன்; நான்தான் மேன்மையானவன் என்று எப்படி உரிமை கொண்டாட முடியும்?
காற்றையும், நீரையும், நெருப்பையும், சூரியனையும், சந்திரனையும் இறைவன் எல்லோருக்கும் பொதுவாகவே வழங்கி இருக்கின்றான். பிறப்பு, உண்ணுதல் உறங்குதல், நடத்தல், தூங்குதல், தும்முதல், இறத்தல் போன்ற ஒரே விதமான செயல்பாடுகளையே அனைத்து மனிதர்களுக்கும் இறைவன் அளித்துள்ளான்.
புத்தர் சொன்னதைப்போல், ‘எவர் ரத்தமும் சிவப்புதான்; எவர் கண்ணீரும் உப்புதான்’.
மனிதர்களுக்கிடையே உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற பாகுபாட்டை இஸ்லாம் உடைத்தெறிகிறது. ‘இறையச்சம் உள்ள மனிதனே உயர்ந்தவன்’ என்று அது உரக்கச் சொல்கிறது.
‘மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணில் இருந்தும் பெண்ணில் இருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிகக்கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்ட வர்கள் தாம். திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்’ (திருக்குர்ஆன்-49:13) என்பது இறைமறை வசனம்.
இதற்கு இஸ்லாமிய சிந்தனையாளரும், திருக்குர்ஆன் விரிவுரையாளருமான மவுலானா சையித் அபுல் அஃலா மவுதூதி (ரஹ்) விரிவான விளக்கம் அளிக்கிறார்; வியப்புக்குரிய விளக்கம். அது வருமாறு:-
இனம், மொழி, நாடு, தேசியம் ஆகிய குரோதங்களும், மாச்சரியங்களும் தாம் இந்த உலகத்தில் குழப்பங்கள் தோன்றுவதற்கு என்றென்றும் மூல காரணங்களாக இருந்து வந்திருக்கின்றன. இத்தகையதொரு படுமோசமான வழிகேட்டை இந்தத் திருவசனம் தகர்த்தெறிகிறது.
இந்த வசனத்தில் இறைவன் எல்லா மனிதர்களையும் அறைகூவி அழைத்து மூன்று முக்கிய அடிப்படை உண்மைகளை ரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளான்.
முதலாவதாக உங்கள் அனைவரின் மூலக்கூறும் ஒன்றே; ஒரே ஆண் ஒரே பெண்ணில் இருந்துதான் உங்கள் மனித இனம் முழுவதும் தோன்றியுள்ளது. இன்று உலகில் காணப்படும் உங்கள் இனங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு பூர்வீக இனத்தின் கிளைகளே ஆகும். அந்தப் பூர்வீக இனம் ஒரு தாய் தந்தையில் இருந்து தொடங்கியதாகும். இந்தப் படைப்புத் தொடரில் எந்த இடத்திலும் நீங்களாகக் கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த வேற்றுமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.
ஒரே இறைவனே உங்களைப் படைத்தான். பலவித மனிதர்களைப் பலவித கடவுள்கள் படைக்கவில்லை. ஒரே மூலப்பொருளால்தான் நீங்கள் உருவாகி இருக்கிறீர்கள். சில மனிதர்கள் மட்டும் ஏதோ ஒரு தூய்மையான உயர்ந்த மூலப்பொருளாலும், வேறு சிலர் ஏதோ சில தூய்மையற்ற – தாழ்ந்த மூலப்பொருளாலும் உருவாக்கப்படவில்லை.
இரண்டாவதாக, பூர்வீகத்தில் ஒரே இனமாக இருந்தபோதிலும், நீங்கள் பல சமுதாயங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து விட்டிருப்பது ஓர் இயற்கையான விஷயமாகும். உலகம் முழுவதும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே குடும்பம் ஒதுக்க முடியாது என்பது வெளிப்படையான ஒன்றாகும்.
மனித இனம் பெருகப்பெருக எண்ணற்ற குடும்பங்கள் தோன்றுவதும், பின் பல கோத்திரங்கள், பல சமுதாயங்கள் உருவாவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. இதைப் போன்றே மனிதன் பூமியின் பல பகுதிகளில் வசிக்கத் தொடங்கிய பின்னர் உடல் அமைப்பு, நிறம், மொழி, நடை உடை பாவனைகள், வாழ்க்கை முறைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டேயாக வேண்டி இருந்தது.
ஆனால் இந்த இயல்பான வேற்றுமை நம்மிடம் வேண்டுவது, இவ்வேற்றுமையின் அடிப்படையில் உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆண்டான்-அடிமை, மேலோன்-கீழோன் என்னும் பாகுபாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்ப தல்ல. இறைவன் மானுட சமூகங்களைப் பல்வேறு சமுதாயங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தது அவர் களிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமும் ஒத்துழைப்பும் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
மூன்றாவதாக, ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்கும் இடையே சிறப்பு அல்லது உயர்வுக்கான அடிப்படை ஏதேனும் இருக்கிறது அல்லது இருக்க முடியும் என்றால் அது ஒழுக்கச் சிறப்பே ஆகும்.
மேற்கூறிய இந்த விளக்கத்தின் மூலம் தீண்டாமையைத் தீண்டாத மார்க்கம் இஸ்லாம் என்பது தெளிவாகிறது.

News

Read Previous

தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள்

Read Next

இறைவனாய் வாழுகின்றார் !

Leave a Reply

Your email address will not be published.