ஆண்களை ஆபத்தில் தள்ளாதீர்

Vinkmag ad

 

முபல்லிகா ஏ.ஒ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் தருவான். அவர்களில் ஒருவர், தகுதியும் அழகுமுடைய ஒரு பெண் தம்மை (தவறான உறவுச் செயலுக்கு) அழைத்த போதும் ‘நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்’ என்று கூறியவர் ஆவார்”.

ஆனாலும் கற்பைப் பேண வேண்டும் என்ற அழகிய ஒழுக்கத்தை அற்புதமாக விளக்கிச் சொல்லும் இந்த நபி மொழியை ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் “முஸ்லிம்” கிரந்தத்தின் பதிவாக நமக்கு அருளியிருக்கிறார்கள்.

உலகிலேயே அதிகமாகப் பேசப்படுவது பெண்ணினத்தின் கற்பைத்தான். அதிகமென்ன? சொல்லப்போனால் முழுக்க முழுக்க பேசப்படுவது என்றே கூறலாம்.

பெண்ணுக்கு மட்டும்தான் கற்புணர்வு உள்ளது போலவும், ஆணுக்கு அது தேவையில்லை என்பது போலவும் தான் உலகம் நினைத்துக் கொண்டு இருக்கிறது.

பெண் மட்டும் கற்பு நிலை தவறிவிடக்கூடாது – ஆணுக்கு அதுவெல்லாம் சட்டமில்லை என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள்.

“ஆணுக்கும் கற்புண்டு; பெண்ணுக்கும் சொத்துண்டு” என்பது தான் இஸ்லாத்தின் விதி. இதை ஆண்குலமும் நினைப்பதில்லை. பெண் குலமும் நினைப்பதில்லை. கற்புரிமை பற்றி ஆண்குலம் கவலைப்படுவதில்லை. சொத்துரிமை பற்று பெண்குலமும் அக்கறைப்படுவதில்லை.

கற்பு என்றால் என்ன?

மேலும் கற்பு என்பது திருமணத்துக்கு முன்பு மட்டுந்தான் என்றும், திருமணத்திற்குப் பின்பு அது கணக்கில் வைக்கப்படுவதல்ல என்றும் உலகம் நினைக்க ஆரம்பித்து விட்டது.

கற்பு என்பது “கன்னித்தன்மை” யோடு இருப்பது என்பது அல்ல. அது சாவது வரை “கண்ணியத்தன்மை” யோடு இருக்க வேண்டியது என்பதை பெண் சமுதாயம் உணர வேண்டும்.

ஓர் ஆணும், பெண்ணும் சேர்ந்து கெட்டுப் போய் விட்டால் அந்தப் பெண்ணை மட்டுமே ஒழுக்கம் கெட்டவள் என்பதும், அந்தப் பெண்ணை மட்டுமே சமுதாயத்தில் ஒதுக்கி வைப்பதும், அந்தப் பெண்ணுக்கு மட்டுமே தண்டனை அளிப்பதுமே கட்டப் பஞ்சாயத்தினர் ஆண்டாண்டு காலமாகச் செயல்பட்டு வரும் ஈன முறையாக இருந்து கொண்டிருக்கிறது.

கற்பு நெறி தவறிவிட்ட எந்த ஆணுக்கும் எந்தப் பெண்ணுக்கும் ஒரே நிலை தண்டனையைத்தான் ஷரீஅத் சட்டம் வகுத்துத் தந்திருக்கிறது. மனிதர்கள் செய்வது போல ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை.

பெண்களின் பாடம் எது?

இன்றைய காலத்துப் பெண்மணிகளுக்கு காணாத நிகழ்ச்சிகளைக் கண்டுவிட்டு வேண்டாத விபரீதங்களை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். இன்றைய தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளும், நாடகங்களும் அதற்கு உற்சாகம் ஊட்டுவது போல அமைந்து விடுகின்றன.

இன்றைய தொலைக்காட்சிகளின் பாடம் எல்லாம் அதைக் கண்டு புத்தி படிக்கும் பாடமாக இல்லை. அதைக் கண்டுவிட்டு ஏதோ காணாததைக் கண்டு விட்ட மிதப்புக்குப் பெண்களை தள்ளிக் கொண்டு போய் நிறுத்தி விடுகிறது.

பெற்றோரை எதிர்த்துப் பேசுவது ! சகோதரர் சொல்லை மதிக்காமல் நடப்பது ! மாமியாரைக் கொடுமைப்படுத்துவது ! மாமனாரைக் கொடுமைப்படுத்துவது ! மாமனாரை பேடியாக சித்தரிப்பது ! முடிந்தால் கட்டிய கணவனையே அடிமைப்படுத்துவது !

இது போன்ற காட்சிகளைக் கண்டு விட்டு பல பெண்கள் அத்துமீறிய நிலையில் குடும்பத்தில் நடக்கத் துணிந்து விடுகிறார்கள்.

பள்ளியில் படிக்கும் இளம் வயதுப் பெண்களும் இம்மாதிரிக் காட்சிகளால் தடம் மாறிச் செல்வதும் நடைமுறைக்கு வந்து விட்டது.

ஆணைக் கொண்டு பெண்ணுக்கும், பெண்ணைக் கொண்டு ஆணுக்கும் நபி மணி (ஸல்) அவர்கள் அன்றே ஜாடை காட்டி விட்டிருக்கிறார்கள்.

தகுதியும், அழகுமுள்ள பெண் தம்மை அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று சொல்பவனுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதை உறுதியிட்டுச் சொல்லி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் அப்படி ஒரு வார்த்தையைக் கூறி ஒதுங்கி விலகும் ஆண் மகன் தான் உத்தம சத்திய ஒழுக்க சீலன், மாவீரன் !

 

ஒழுக்கம் இல்லாத நட்பு

வெவ்வேறு ஊர்களிலிருந்து ஒரே கல்லூரியில் படிப்பதற்கு ஒரு மாணவனும், ஒரு மாணவியும் வந்திருந்தார்கள். மாணவன் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். மாணவி தனது உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். இருவருமே ஒரே வகுப்பு. மாணவர் ஏழைக் குடும்பத்தவர். மாணவியோ வசதிகள் படைத்த குடும்பத்தவள். ஒரே வகுப்பில் கல்வி பயில்வதன் மூலம் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

மாணவியின் வசதியால் மாணவர் அவளுக்கு வயப்பட்டார். விடுமுறை நாட்களில் மாணவி தங்கியிருக்கும் அவளின் சித்தி வீட்டுக்கு மாணவரை அழைத்து வந்து பழக்கம் காட்டினாள். இது சகஜமாகப் போய்விட்டது.

ஒரு சமயம் அந்த மாணவியின் சித்தி குடும்பம் வேறு ஒரு ஊருக்கு திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டார்கள். சனிக்கிழமை சென்றவர்கள் திங்கட் கிழமை தான் வருவதாக இருந்தது. அச்சந்தர்ப்பத்தில் வசதியும் வாய்ப்பும் உள்ள மாணவியின் அழைப்பையேற்று அந்த மாணவர், வீட்டுக்கு வந்து இரண்டு தினங்கள் இருவர் மட்டுமே அந்த ஒரே வீட்டில் தங்கி இருந்தனர் (?)

சில மாதங்களில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் தெரிந்தது. மருத்துவரிடம் காண்பிக்க…. அதிர்ச்சியான தகவல் ஒன்று தெரிந்தது. அதற்குக் காரணம் யார் என்று கேட்கும் போது அந்த ஏழை மாணவனைக் கைகாட்டிவிட்டாள் மாணவி.

மாணவியின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அந்த மாணவனை அடித்து நொறுக்கி பெண் காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டார்கள்.

 

ஆணுக்கே அவமானம் ?

காவல் நிலையத்திலும் அம்மாணவன் அடிபட்டு, மிதிபட்டு, அவமானப்பட்டு தண்டனை அனுபவிக்கும் நிலையாகி விட்டது. அதோடு அவனுடைய தன்னம்பிக்கை போய் – மானம் போய் – மரியாதை போய் – கல்வி கற்கும் காலம் போய் – சில ஆண்டுகள் ஜெயிலில் கிடந்து ஒன்றுக்கும் உதவாதவனாக ஆகி விட்டான்.

வசதியும் வாய்ப்பும் உள்ள பெண்ணை நம்பிக் கெட்டதால் தானே இந்த இழிநிலை? அவள் அழைத்த போது அல்லாஹ்வை அஞ்சி இருந்திருந்தால் இந்த இழிநிலை வருமா? இந்த அவமானம் வருமா?

உலகில் யாரையும் நம்பி நல்லவழியில் செல்லலாம். அதில் வெற்றி கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆனால் யாரையும் நம்பி தீய வழியில் செல்லக் கூடாது. அப்போது இறைவன் கூடக் காப்பாற்றாமல் போய் விடுவான்.

 

நன்றி :

குர்ஆனின் குரல்

ஜுன் 2013

 

News

Read Previous

கவிஞர் கருத்தான் தாயார் வஃபாத்து

Read Next

முருங்கைக் கீரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *