அறிவோம் இஸ்லாம் — திருக்குர்ஆன்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
5. திருக்குர்ஆன்
இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பாக திருக்குர்ஆனுக்கும், ‘ஹதீஸ்’ என்னும் நபிமொழிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
திருக்குர்ஆன் வசனம் என்பது இறை வாக்கு. அது அகிலத்தைப் படைத்துக் காக்கும் அல்லாஹ்வின் உரை.
நபி பட்டம் பெறுவதற்கு முன்பு, நபிகளார் தனிமையை இனிமையாய் ஏற்று மக்காவில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ‘ஹிரா’ குகையில் இறைச்சிந்தனையில் ஈடுபட்டிருந்தார்கள். ஒருநாள்& இருள் சூழ்ந்திருந்த அந்தக் குகை திடீரென்று ஒளிமயமாகக் காட்சியளித்தது.
நபிகளார் முன்பு, வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி ‘ஓதுவீராக’என்றார்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நான் ஓதியவன் அல்லனே!’என்றார்கள்.
மீண்டும் அதே குரல், ‘ஓதுவீராக’.
‘நான் எதை ஓதுவது?’என்று நபிகளார் கேட்க, ‘ஓதுவீராக! நபியே! படைத்த உம் இறைவன் திருப்பெயர் கொண்டு! உறைந்த ரத்தக் கட்டியில் இருந்து மனிதனை அவன் படைத்தான், ஓதுவீராக!'(திருக்குர்ஆன்-96:1) என்ற இறை வசனம் இறங்கியது.
நபிகளாரின் நாற்பதாவது வயதில் ரமலான் மாதத்தின் பிந்தைய இரவுகளில் ஓர் இரவில் திருக்குர்ஆன் முதன்முறையாக அருளப்பட்டது. இதைத் தொடர்ந்து இறைச்செய்தி (வஹீ) வரத் தொடங்கியது. நபிகளாரின் இறுதிக் காலம் வரை அதாவது 63 வயது வரை விட்டு விட்டும், தொடர்ந்தும் இறைச்செய்திகள் வரலாயிற்று. இவ்வாறு அருளப்பெற்ற வேத அறிவிப்புகளின் மொத்த தொகுப்புதான், திருக்குர்ஆன்.
இந்த அருள் மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தபோதிலும், குர்ஆன் என்ற பெயரே சிறப்புப் பெயராக விளங்கி வருகிறது.
‘குர்ஆன்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘ஓதப்பட்டது, ஓதக் கூடியது, ஓத வேண்டியது’ என்று பொருள்.
நபிகளாருக்கு வானவர் ஜிப்ரீல் மூலமாக இந்த வேதம் ‘ஓதப்பட்டது.’ இந்த வேதமே இந்த உலகில் அதிக மக்களால் ‘ஓதக்கூடியது’. இந்த வேதம் மனித சமுதாயம் தனது மேன்மையைக் கருதி, ‘ஓத வேண்டியது’ போன்ற பொருளைக் கொண்டிருப்பது சிந்தனைக்குரியதாகவும், நயக்கத்தக்கதாகவும் உள்ளது.
திருக்குர்ஆன் அறிவுக் கருவூலமாய், அருள் சுரக்கும் பெட்டகமாய், அன்பார்ந்த கட்டளையாய், வழிபட்டோருக்கு நற்செய்தியாய்,  வழி தவறியோருக்கு அச்சமூட்டும் எச்சரிக்கையாய் விளங்குகிறது.
குர்ஆன்- இது அருளப்பட்ட மூல மொழியான அரபு மொழியிலேயே உலகெங்கும் உள்ள மக்களால் ஓதவும், முழுவதும் மனனம் செய்யக்கூடிய வகையிலும் உள்ள ஒரே வேத நூலாக விளங்குகிறது.
அதன் மூல மொழியைத் தெரியாதவர்கள்கூட அதை ஓதக் கேட்டால், அவர்களது உள்ளத்தைக் கவர்ந்து, உணர்வைக் கிளறி கண்களில் நீர் கசியச் செய்யும் ஓசை நயம் கொண்டதாகத் திருக்குர்ஆன் திகழ்கிறது.
திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில், ‘மனிதர்களே’, ‘ஆதமுடைய மக்களே’ ‘இறை நம்பிக்கையாளர்களே’ என்று விளித்து அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். குர்ஆன், ஒரு நாட்டினருக்கோ, ஒரு மொழியினருக்கோ, ஓர் இனத்திற்கோ என்றில்லாமல் உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக அருளப்பட்டது என்பதை இந்த வரிகள் நிரூபிக்கின்றன.
ஆணவத்தாலும், அறியாமையாலும் அழிந்து போன ஆது, ஸமூது போன்ற& சரித்திரத்திற்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பதால் கடந்த காலத்தையும், மனித வாழ்வின் தினசரி நிகழ்வுகளில் சின்னஞ்சிறு பிரச்சினைகளுக்குக்கூட வழிகாட்டுவதால் நிகழ்காலத்தையும், மறு உலக வாழ்க்கையையும், எதிர்காலத்தின் முன்னறிவிப்புகளையும் கூறுவதால் வருங்காலத்தையும் ஆக முக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வேத நூலாகத் திருக்குர்ஆன் திகழ்கிறது.
உலகிலே ஐந்தில் ஒரு பகுதியினருடைய வாழ்வின் ஒளிவிளக்காக இந்த ஒப்பற்ற வேதம் விளங்கி வருகிறது.
இந்தத் திருக்குர்ஆன் அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டிருக்கும் அளவுக்கு உலகில் வேறெந்த வேதமும், எந்த நூலும் ஆய்வு செய்யப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
எந்தவிதமான நவீன கருவிகளும், அறிவியல் சாதனங்களும் இல்லாத காலத்திலேயே தீர்க்கமாகத் திருக்குர்ஆன் ஆய்வு செய்யப்பட்டு, அதன் வசனங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதால், இந்தக் குர்ஆன் எக்காலத்திலும், எவராலும் மாற்ற முடியாத அற்புதமான அமைப்பைக் கொண்டதாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
திருக்குர்ஆன் 114 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் 83 அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை. 31 அத்தியாயங்கள் மதீனாவில் அருளப்பட்டவை.
திருக்குர்ஆனில் சிற்சில இடங்களில் உள்ள ஒரு வசனத்தை இரு வசனங்களாகவும், இரு வசனங்களை ஒரு வசனமாகவும் சிலர் கணக்கிடுவதுண்டு. இதனால் இதில் உள்ள வசனங்கள் எத்தனை என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. என்றபோதிலும் நம்மிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட வசனங்களின் எண்ணிக்கை 6666 ஆகும்.

News

Read Previous

திருநங்கை

Read Next

வானத்தைவிடப் பரந்து விரிந்தது

Leave a Reply

Your email address will not be published.