அறிவோம் இஸ்லாம் : கொள்கை விளக்கம்

Vinkmag ad
அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
8.      கொள்கை விளக்கம்
முஸ்லிம்கள் யார்? அவர்கள் கொள்கை என்ன? என்பதற்கு 1,400 ஆண்டுகளுக்கு முன்னால் வரலாற்றில் பதிவான நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்வது பொருத்த மாக இருக்கும்.
முஸ்லிம்களுக்கு எதிராக மக்கா மாநகர் குரைஷிகளின் தொல்லைகள், எல்லை மீறிப்போயின. அவர்கள் அளித்த இன்னல்கள், சித்ரவதைகளில் சிக்கி ஆரம்பகால முஸ்லிம்கள் கடும் அவதி அடைந்தனர்.
அப்போது அபிசீனியா நாட்டை நஜ்ஜாஷி என்ற கிறிஸ்தவ மன்னர் ஆண்டு வந்தார். குரைஷிகளின் கொடுமைகளுக்கு முடிவு கட்ட அந்த நாட்டில் போய் அடைக்கலம் தேடுமாறு அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
‘இப்போது நீங்கள் அனுபவித்து வரும் துயரங்களில் இருந்து அல்லாஹ் (இறைவன்) உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வரை, நீங்கள் அபிசீனியாவுக்குச் செல்லுங்கள். அநீதியால் துயருறாத மக்களைக் கொண்ட நாட்டின் மன்னரை நீங்கள் அங்கு காண்பீர்கள். அது மதங்களில் நேர்மை கொண்டதொரு நாடு’ என்று நபிகளார் கூறினார்கள்.
அதன்பேரில் சில முஸ்லிம்கள் அபிசீனியா சென்று அடைக்கலம் பெற்றனர். இதுவே இஸ்லாத்தின் முதல் ‘புலம் பெயர்வு’ ஆகும்.
இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்த குறைஷிகளில் சிலருக்கு இது தெரிய வந்தது. அவர்கள் அம்ர் என்பவரையும் அவருக்குத் துணையாக இன்னொருவரையும் அனுப்பி வைத்தனர். அவர்கள் அந்த நாட்டுக்குச் சென்று மன்னரிடம், முஸ்லிம்களைப் பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி ‘பற்ற’ வைத்தனர். அவர்களை நாட்டை விட்டே அனுப்புமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு முன்னதாக மந்திரிகளுக்கும் அவருடைய ஆலோசகர்களுக்கும் கணிசமான ‘அன்பளிப்பு’களை வழங்கி அவர்களை ‘கை’க்குள் போட்டுக் கொண்டனர். இதனால் இந்த விவகாரம் மன்னரின் முன்பு வந்தபோது மந்திரிகளும், ஆலோசகர்களும் அம்ருக்கு ஆதரவுக் ‘கரம்’ நீட்டினர்.
இதற்கு நஜ்ஜாஷி மன்னர் உடனடியாக உடன்படவில்லை. ‘இறைவன் பெயரால் நாம் அவர்களுக்கு துரோகம் இழைக்க முடியாது. ஏனைய அனைவரிலும் என்னையே தேர்ந்தெடுத்து என்னிடம் வந்து அடைக்கலம் தேடியுள்ள அவர்களை நாம் கைவிட்டு விட முடியாது. முஸ்லிம்களை இங்கே அழைத்து இவர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறியாமல் அவர்களை ஒப்படைக்க நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று உறுதியாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அடைக்கலம் பெற்று அபிசீனியாவில் குடியேறிய முஸ்லிம்களை அழைத்து வருமாறு மன்னர் ஆணையிட்டார்.
அவர்களிடம், ‘நீங்கள் புதிதாக ஏற்றுள்ள இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள்’ என்றார்.
அப்போது அந்தக் குழுவின் தலைவராக ஜபர் இப்னு அபூதாலிப் இருந்தார். அவர் மன்னரிடம் கூறியதாவது –
‘அரசரே! நாங்கள் அறியாமையிலும், ஒழுக்கக் கேட்டிலும் இருந்தோம். சிலைகளை வணங்கிக் கொண்டும், செத்ததைத் தின்று கொண்டும் வாழ்ந்து வந்தோம். எல்லாவிதமான அட்டூழியங்களையும் செய்து கொண்டிருந்தோம். உறவின் கயிறுகளை அறுத்தோம். அண்டை வீட்டாரை வெறுத்தோம். எம்மில் வலியவர்கள், எளியோரை வருத்தி வந்தோம். எங்களில் இருந்தே ஒரு தூதரை இறைவன் எங்களிடம் அனுப்பும் வரை நாங்கள் இவ்வாறே இருந்து வந்தோம். அந்தத் தூதரின் பரம்பரை, சத்திய வழி, நேர்மை, தூய்மை இவற்றைப் பற்றி நாங்கள் நன்கறிவோம்’.
‘ஒரே இறைவனை வணங்கும்படி அவர் எங்களை அழைத்தார். எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்த சிலைகளை வணங்கக் கூடாது என்று எடுத்துரைத்தார். உண்மையைப் பேச வேண்டும்; கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்; நம்பி ஒப்படைக்கப்பட்ட இன்னொருவரின் அமானிதத்துக்கு துரோகம் செய்யக்கூடாது என்று உபதேசித்தார்’.
‘பெற்றோரிடமும், சுற்றத்தாரிடமும் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும்; குற்றம் புரிவதில் இருந்தும் ரத்தம் சிந்துவதில் இருந்தும் நாங்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்றார்’.
‘தீமை செய்யக்கூடாது; திருடக்கூடாது; பெண்களை அவமானப்படுத்தக்கூடாது; பொய் சத்தியம் செய்யக் கூடாது; பொய் சாட்சி கூறக்கூடாது; விபசாரம் புரியக் கூடாது என்று எடுத்துக் கூறினார்’.
‘ஒரே இறைவனுக்காகவே எங்கள் வணக்கம் இருக்க வேண்டும் என்றும், தொழுகை, நோன்பு, ஜகாத் என்னும் கட்டாயக் கொடை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்’.
‘நாங்கள் அவரை நம்பினோம். அவர் இறைவனிடம் இருந்து கொண்டு வந்த உபதேசங்களைப் பின்பற்றி நடந்தோம்’.
‘ஆனால் குறைஷி குலத்தைச் சேர்ந்த சிலர், எங்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். எங்கள் நம்பிக்கையையும், மார்க்கத்தையும் விட வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தனர். எங்களுக்குத் தாங்க முடியாத துயரங்களைத் தந்தனர். சிலை வணக்கத்திற்கும் அழிவுப் பாதைக்கும் திரும்ப வேண்டும் என்று எங்களை வற்புறுத்தினார்கள்’.
‘அதனால் நாங்கள் உங்கள் நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளோம். உங்கள் பாதுகாப்பில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். உங்கள் மீதும், நீதியின் மீதும் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களைப் பய முறுத்தும் எங்கள் எதிரிகளிடம் இருந்து எங்களை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’.
இதைக் கேட்ட மன்னர் நஜ்ஜாஷி, ‘உங்கள் வழியில் நீங்கள் செல்லுங்கள்; எங்கள் நாட்டில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். உங்களில் ஒருவரையும் நான் துயருக்கு உள்ளாக்க மாட்டேன்’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
மன்னரிடம் ஜபர் அளித்த பதில், ‘எது இஸ்லாம்; யார் முஸ்லிம்கள்’ என்ற கேள்விக்கு விடையாக – பாதுகாக்கப்பட்ட ‘பத்திரமாக’ இன்றைக்கும் திகழ்கிறது.

News

Read Previous

தமிழே நீ இருந்தால் !

Read Next

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

Leave a Reply

Your email address will not be published.