தனது மரணத்தின் அறிகுறியை பெற்றவளுக்கு உணர்த்திய 3 வயது சுவனப்பறவை ஃபர்ஸான்!

Vinkmag ad

farsanதனது மரணத்தின் அறிகுறியை பெற்றவளுக்கு உணர்த்திய 3 வயது சுவனப்பறவை ஃபர்ஸான்!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரபுக்கள் தெருவை சேர்ந்த எனது அருமை நண்பர் அப்துல்சமதுவின் பேரனும் ஹசன்பாஸித் உடைய மகனுமான 3 வயது பாலகன் ஃபர்ஸான் நேற்று(22.08.2019) பகல் வஃபாத்தானார் என்ற செய்தி நம்மை சோகத்தில் ஆழ்த்தியது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்….

சுறுசுறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த ஃபர்ஸான் நேற்று காலையில் வழக்கம் போல் எழுந்து தனது தாயிடம் என்னை குளிப்பாட்டுமா எனக்கூறியதும், பிள்ளைக்கு உடம்பு கசகசனு இருக்கு போல? அதனால் தான் குளிக்க வைக்க சொல்கிறான் என நினைத்த தாய் குழந்தையை குளிப்பாட்டினார்.

பிறகு தலையை துவட்டி விட்டதும் எனக்கு புது உடை தான் போடனும்னு அடம்பிடிக்கவே பாலகனின் விருப்பம் போல் புத்தாடை அணிவித்தார் அவனது தாய்; எனக்கு சென்ட்(அத்தர்) போட்டு விடுமா எனக்கூறியதும் அவன் ஆசைப்படி அத்தரும் தடவி விட்டார் அவனது தாய்.

ஏம்மா எனக்கு கண்ணுக்கு மை விடல? அதுவும் போட்டு விடுமானு குழந்தை விருப்பப்பட்டு கேட்கவே இரண்டு கண்களுக்கும் சுர்மா என்னும் மை போட்டு விட்டார் அவனது தாய்.

பிறகு நறுமண வாசனையோடும் புத்தாடையோடும் இருந்த பாலகன் ஃபர்ஸான், உம்மா நான் தூங்கப்போறேன் எனக்கு அவ்வல் கலிமா சொல்லி என்னை தூங்க வைம்மானு சொன்னதும் தாயும் அவனுக்கு ஷஹாதா கலிமாவை சொல்லி அவனை தூங்க வைத்தார்.

அமைதியாக உறங்கிய பாலகன் ஃபர்ஸானின் இருமல் சத்தம் வரவே ஓடிசென்று பார்த்தனர் அவனது குடும்பத்தார்; அப்போது குழந்தை ஃபர்ஸான் வாந்தி எடுக்கிறான்; பயந்து போன அவன் தாய் பிள்ளையை தூக்கி கொண்டு மருத்துவமனை செல்கிறார்; அங்கே குழந்தை மரணித்து விட்டதாக சொல்லி விட்டனர்.

எல்லாமே அந்த ஒரே நாளின் பகல் பொழுதுக்குள்ளாகவே நடந்து முடிந்து விட்டது; குழந்தையின் மரணத்தை தாங்க முடியாத அவனது தாய் காலையில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நினைவுப்படுத்திப் பார்க்கிறார்; தனது மரணத்தின் அறிகுறியைத்தான் குழந்தை நம்மிடம் சொல்லி விட்டுச் சென்றானோ? என்று வேதனையோடு சொல்லி அழுகிறார்.

வயது மூன்று தான் என்றாலும், கலிமா சொல்வதிலும் வீட்டுக்குள் நுழையும் போது சலாம் சொல்லி நுழைவது போன்ற மார்க்க விசயத்தில் ஆர்வம் கொண்டவனாகவும், எப்போதும் சிரித்த முகத்தோடு புன்னகைப் பூக்கும் புதுமலராகவும் துரு,துருவென ஓடி விளையாடிக் கொண்டிருந்த பாலகன் ஃபர்ஸானின் திடீர் மறைவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

3 வயது பாலகனை இழந்து தவிக்கும் அவனது பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கு நாம் எப்படி தான் ஆறுதல் கூறினாலும் அவர்களின் மனம் அமைதிப் பெறுவது கடினமே; இத்தகைய சூழலில் அல்லாஹ்வின் அழகிய ஸப்ரன் ஜமீல் என்னும் பொறுமையை குழந்தை ஃபர்ஸானின் குடும்பத்தார் பெறுவதற்கு நாம் பிரார்த்தனை செய்வோம்.

“அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள்”. (அல்குர்ஆன் 13:22)

நாளை மறுமையில் தனது பெற்றோர்களின் நன்மை தராசில் அமர்ந்து பெற்றோருக்காக சுவனத்தை யாசிக்கும் சுவனப்பறவை ஃபர்ஸானை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

குழந்தை ஃபர்ஸானை இழந்து தவிக்கும் எனது உற்ற நண்பர் அப்துல்சமது மற்றும் குழந்தையின் பெற்றோர்கள்,குடும்பத்தார்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன அமைதியை கொடுப்பானாக.
-கலங்கிய கண்களுடன்: கீழை ஜஹாங்கீர் அரூஸி.
(23.08.2019)

News

Read Previous

தாய்மொழி வழிக் கல்வி இயக்கம் தேவை!

Read Next

குறிக்கோள் இல்லா வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published.