கல்லறையில் துயிலும் கள்ளிப் பூக்கள்

Vinkmag ad

கல்லறையில் துயிலும் கள்ளிப் பூக்கள்
————-+—+—-+—+++———
(விளைபொருள் வினியோக சட்டத்திருத்த மசோதாவை அரசாங்கம் நிறைவேற்றிய போது விவசாயிகளின் புரட்சி வெடித்தது (1-12-2020) அப்போது ஏற்பட்ட எனது உணர்வு)
விவசாயம் ஒரு வரம்
விவசாயம் ஒரு அறம்
விவசாயம் ஒரு தவம்
விவசாயம் ஒரு தத்துவம்

ஏரை கையில் பிடித்து
ஊரை வாழச் செய்தாய்
உலகம் உயத்து வாழ
உன் உயிரைப் பணயம் வைத்தாய்

நீ கலப்பையில் கால் வைத்தால்
நிலமிசை கவளத்தில் கைவைக்கும்
உலகம் வாழ உழவே தலை
உழவன் வாழ இங்கே எதுவும் இலை

தொழுதுண்டு வாழ்வாரை விட
உழுதுண்டு வாழ்வாரே மேல்
வள்ளுவன் சொன்னான் அதையே
வாடிய பயிர் கண்டு வாடினேன் என வள்ளலாரும் வருந்திச் சொன்னார்

பல்லுயிர் ஓம்ப பயிர் செய்து
பண்படுத்திய நிலம் தன்னில்
விளைச்சல் காணா விவசாயி வேதனையில் உழல்வது நன்றோ

ஒட்டிய வயிற்றோடு உழவன்
ஓட்டிய கலப்பையில் உயிர் கதிர்கள்
ஓங்கி வளராத காரணத்தால்
ஓங்கவில்லை உழவன் வாழ்வு

கரிசல் காட்டின் கள்ளிப் பூக்கள்
கல்லறையில் உறங்குகின்றன
உழைத்தவன் வாழ்வை முடித்துக் கொண்டான்
உண்டவன் ஏனோ அவனை மறந்து விட்டான்

காணும் பொங்கலை காண
கடற்கரைச் செல்லும் உறவுகளே அவர்
கல்லறையைப் போய் பாருங்களேன் அவர்
கவலைகள் நீங்க எதாகிலும் செய்யுங்களேன்

விலைபொருள் திருத்த சட்டமென
விவசாயி வாழ்வை சீர்குலைத்ததால்
வீதியில் நின்று அவன் போராடுகிறான்
விளைவுகள் ஏதும் வருமா என ஏங்குகிறான்

ஒரு காலம் விரைவில் வரும்
உழவன் என ஒருவன் இல்லாமல்
உயிர் வாழ ஒன்றும் கிடைக்காமல்
உலகம் சுழற்சியை நிறுத்திக் கொள்ளும்

இனி நாமாவது ஒரு விதி செய்வோம்
இல்லாமை இல்லா உழவன் வாழ்வை
இவ்வுலகில் மீண்டும் கட்டமைப்போம்
இன்புற்று அவர் வாழ வழி செய்திடுவோம்

கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

போதிமர தத்துவங்கள்

Read Next

கேள்வி மற்றும் கலைஞரின் Thug Life பதில்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *