அதிகாரமும் பெண்களும்

Vinkmag ad
அதிகாரமும் பெண்களும் 
— முனைவர் எஸ்.சாந்தினிபீ
இன்றைய நமது பெண்களும் அன்றைய நாளின் பெண்சமூகமும் நம் முன்னே போட்டி போடுகின்றன யாருக்கு முன்னிலை? அப்படி என்ன சாதித்தார்கள்? என்ற கேள்வியால் உயரும் புருவங்களுக்கும் நெளியும் நெற்றிச் சுருக்கங்களுக்கும் விடை தேடுவோம். சுயமாகப் பொருளீட்டிய, அரசுக்கு வரி கட்டிய பெண்கள் நாம் அடிமைப்பட்ட 18ம் நூற்றாண்டுக்கு முன்னரும் வாழ்ந்தனர். இதற்கான சாட்சி சொல்வது நாட்டில் பாதிக்கும் மேலாக உள்ள தமிழ் கல்வெட்டுகளாகும். இன்றும் வாழ்கின்ற இவ்வகை பெண்களுக்கு உதாரணமோ, சாட்சியோ தேவையில்லை. இன்றும் நாட்டின் முப்படைகளிலும் நேர்கொண்ட பார்வையோடு வீறுநடைபோடும் பெண்ணை பலவீனமானவளாகக் கட்டமைத்தது எப்படி?
துணை இழந்தும், தன்னலத்தைப் புறந்தள்ளி பொது நலத்திற்காக வாழ்வின் ஒரே பற்றுக்கோடான இளம் மகனையும் போருக்கு அனுப்பியவள் சங்க காலத்தில் மட்டுமேவா வாழ்ந்தாள்? இல்லையே, மனித சமுதாயத்தாலும், இயற்கையாலும் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாரா விபத்துகளினால் தனித்து நின்று, தான் பெற்றவர், தன்னை பெற்றவர்- ஏன், உற்றார், உறவினர், எல்லோரின் துன்பத்திலும் துணை நின்று, ஒற்றைப் பெண்ணாக குடும்பச் சுமையை தன் தோள்களில் சுமப்பவர் எண்ணிலடங்கோர். கண் முன்னே வாழ்ந்துகாட்டிக் கொண்டிருந்தாலும், பெண் கொழுகொம்பின் துணையின்றி வாழ இயலாத ‘கொடி’யென வளர்ந்த வருணனைகள் எதற்காக? அவளின் மன உறுதியைக் குலைத்து பலகீனப் படுத்தவா?
உலகளவில் எந்த சமயத்தையும் தோற்றுவிக்காதவள் பெண் என்று வரலாறு இருக்கும் போது, எல்லா மதத் தொடர்பான சடங்குகளும் அவள் மீது திணிக்கப்பட்டு, பொருளற்ற கலாச்சாரச் சின்னங்களைக் காக்கும், சுமக்கும் சுமைதாங்கிக் கல்லாக வாழ்க்கையில், கட்டாயப் படுத்தும் எழுதாச் சட்டங்கள் எங்கனம் நடைமுறையில் நிலவுகிறது?
விட்டுப் பிரிந்த கணவனின் வருகைக்காக வழிமீது விழி வைத்து, இமைக்க மறந்து பார்த்த கண்கள் பூத்துப்போக, வாழாவெட்டியெனப் பட்டம் சுமந்து, குடும்பத்தின் மானம் பறக்கவிட்ட பழியே தனக்கான பட்டமென, தன்னையே நொந்து, கண்ணீரும் கம்பலையுமாய் காலம் கடத்தாமல், வீட்டுக்குத்தான் கதவு ஊருக்கில்லை கீழிருக்கும் மண்ணும் மேலிருக்கும் வானமே எல்லையென கலையையும் படைப்பாற்றலையுமே வாழ்வாக வாழ்ந்த பெண்கள் கடந்து போன சங்ககால வரலாற்றில் மட்டுமா காணப்படுகின்றனர்? தொடர்ந்து இன்றுந்தானே கண் முன் வாழ்ந்து வருகிறார்கள்? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உண்மை இப்படியிருக்க, கணவனைச் சுற்றி மட்டுமே அவளின் வாழ்க்கை இயங்க இயலுமென்ற பொய்யான நிழல் பிம்பங்கள் சமூகத்தில் தொடர்ந்து உலா வருவதற்கு யார் காரணம்?
உலகின் பல நாடுகளுக்கும் தனித்துப் பறந்து சென்று பெரும் பதவிகளைப் பொறுப்புடன் செயல் படுத்தும் பெண்களின் திருமணத்திற்காகவும், மகப்பேற்றிற்காகவும் வயதானாலும் விமானத்தில் பறக்கும் கடமை தவறா பெற்றோர் பலர் நம்மிடையே வாழும் அதே காலகட்டத்தில் பயனற்ற, அறிவியலுக்கு எதிரான மிகைப்படுத்தப் பட்ட மாய வலைகளைத் தன்னை சுற்றிப் பின்னிக்கொள்வதும், அந்த வலையிலே தன் குடும்ப உறுப்பினர் மற்றும் சமூகத்தையும் சிக்க வைத்து ஆணவக் கொலைகள் நடப்பதும் இதே நாட்டில் எப்படி அரங்கேறுகிறது?
சோழப் பேரரசில் பணி புரிந்த ‘அதிகாரிச்சி’ (பெண் அதிகாரிகள்) பலர் இன்றும் இந்திய இறையாண்மை பணி முதல், சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பொதுமக்களின் குறை தீர்க்க குரல் கொடுக்கும் பலர் நம் கண்முன் வாழ்கிறார்கள். இதே காலகட்டத்தில் பெண்கள் வன்புணர்வுக்குப் பலியாவதும், திருமணத்தை முன் வைத்து நடத்தப்படும் அநீதிகளும் குறையவில்லை.
விவசாயத்தைச் சார்ந்த வாழ்வியலின் போது வேட்டியே ஆடையாக வாழ்ந்த ஆண்சமூகம், பணியின் தன்மைக்கேற்ப தன் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டது முறையே. மாற்றுச் சிந்தனையின்றி சரியே என தலையசைத்த அதே சமூகத்தில், இன்று ஆண் செய்யும் அத்துணைப் பணிகளில் பெண் நுழைந்திருப்பது தெரிந்ததே. ஆனால் அவளின் ஆடை மாற்றத்தைக் குறித்து நடக்கும் அரசியலுக்கும் எதிர்ப்புக்கும் எல்லையேயில்லை. இருபாலினருக்கும் நீதி ஒன்றெனப் பார்க்க சமுதாயம் ஏன் மறுக்கிறது?
சாதாரணமாக தள்ளுவண்டியில் வணிகம் செய்யும் ஆடவனும், மேற்கத்திய சாயலில் தன்னை மாற்றிக் கொண்டது தான் இன்றைய நடப்பு. இம்மாற்றம் ஓசையின்றி நடந்து விட்டது. ஆனால், பெண்ணை மட்டும் இத்தனை பெரிய விவாதத்திற்கு உட்படுத்துவதும் அதே சமூகம். இப்படி மாற்றுப் பார்வைக்கு நம்மை ஆளாக்கும் சக்தி எதுவோ?
கி.பி. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கோயிலில் பணிபுரியும் பெண்களிடையே ஒரு கருத்து முரண்பாடு தலை தூக்கியது. பணியின் படிநிலைத் தொடர்புடையது. இதற்காக கோயிலில் பணிநிறுத்தம் நடத்தினர் அதுவும் 30 ஆண்டுக்காலம் நீடித்தது. மூன்று முறை பல்வேறு படிநிலையிலிருந்த சமயம், அரசு சார்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாது இறுதியில் மன்னரே வந்து பிரச்சினையை முடித்து வைத்தார். இந்த நிகழ்வு சென்னை, திருவொற்றியூர் சிவன் கோவிலில் ஏற்பட்டதை அங்கிருக்கும் கல்வெட்டே இன்றும் சொல்கிறது.
முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்று நம் ஆர்வத்தைத் தூண்டும் வேறு ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறது. கோயில் பணிக்காக அரசால் நியமனமான சில பெண்கள் ஏதோ சூழலால் அரண்மனைப் பணியில் நுழைக்கப்பட்டனர். இந்த முறைகேட்டை மன்னனின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர் இப்பெண்கள். இதை விசாரித்து மன்னனும் மீண்டும் அவர்களைக் கோயிலுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். முடிசூடிய, அதிகாரமிக்க பேரரசர்களின் காலத்திலேயே தன் குரலுயர்த்தி இடர்ப்பாடுகளை முடித்துக் கொண்டவள் பெண். இதன் தொடர்ச்சியாக அவளின் குரல் எல்லாப் போராட்டங்களிலும் இன்றும் கேட்கமுடிகிறது. அதே பெண்குரல் வீடுகளில் நசுக்கப்படுவது எப்படி?
எல்லையில்லாது பெருகிக் கொண்டே போகும் இக்கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியது அவசியம். பெண்ணின் வலிமையைப் புரிந்து கொள்வதும் முக்கியமாகும். இத்தகைய இடை வெளியைக் குறைக்க அரசும் மக்களும் இணைந்து செயலாற்றினால் இப்பொன்னாளை வெகு விரைவில் தொட்டு விடலாம். அந்நாளே ‘பெண்’ நாளாகும்.
முனைவர் எஸ். சாந்தினிபீ,
பேராசிரியர், வரலாற்றுத் துறை,
அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம்,
அலிகர், உத்திரப் பிரதேசம்

News

Read Previous

இரட்டைக் காப்பியங்களில் முடிவெடுக்கும் திறன்

Read Next

ஏப்ரல் 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *