வேண்டுவது அட்டை அல்ல..மருத்துவம்

Vinkmag ad

வேண்டுவது அட்டை அல்ல..மருத்துவம்

 

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்திய சுகாதாரத்துறை யில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தேசிய டிஜிட்டல் சுகாதாரத்திட்டம் துவக்கப்படும் என்றும் அனைவருக்கும் தனித்தனி மருத்துவ அட்டை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

 

ஏற்கெனவே ஆதார் அட்டையை அறிமுகப் படுத்தியபோதும் இதுஒரு மிகப்பெரிய புரட்சி என்றுதான் வாய்ப்பந்தல்போட்டார்கள். ஆனால் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகளை  அந்தத் திட்டம் உருவாக்கியது மட்டுமல்ல, குடி மக்களுக்கு அதனால் பெருமளவு பலன் எதுவும் இல்லை என்பதே நமது அனுபவமாகும். இன்னமும் கூட இந்தியாவில் மருத்துவ வசதி பெறாத கிராமங்கள் உள்ளன. அதற்கு முன்னுரிமை தராமல் இன்னும் சொல்லப்போனால் ஒட்டுமொத்த சுகாதாரத்துறை யையும் தனியாருக்குத்தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் நிலை யில் ஆளுக்கொரு மருத்துவ அட்டையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஏற்கெனவே இருக்கிற அட்டைகளில் மேலும் ஒன்று கூடும். அவ்வளவுதான்.

 

பொது சுகாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் மூன்று சதவீத மாவது ஒதுக்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதை நிறைவேற்றத் தயாராக இல்லாத மத்திய அரசு மேலும் ஒரு அட்டையை அறிமுகப்படுத்துவதையே தன்னு டைய சாதனையாகக் கருதுகிறது.

 

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தந்து கொண்டிருக்கும் பிரதமர் மோடி, சுயசார்பு இந்தியா என்ற கனவை  நனவாக்க 130 கோடி இந்தியர்களும் உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று தன்னுடைய உரை யில் கூறியிருக்கிறார். பொதுத்துறை நிறுவன ங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கைவளம் அனைத்தையும் சூறையாட வழிசெய்து விட்டு சுயசார்பு இந்தியா என்று முழக்கமிடுவதால் மட்டும் என்ன லாபம்? இப்படியே போய்க்கொண்டிருந்தால் சுயசார்பு என்பது வெறும் கனவாகவே மாறிவிடும்.

 

கடந்த ஆண்டு சுதந்திர தினவிழாவின்போது ஜல் ஜீவன் என்ற திட்டத்தை அறிவித்தேன்; இதன் மூலம் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம்  வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டிருந்தால் அதன் மொத்தக் கணக்கை மத்திய அரசு வெளியிடட்டும்.

 

சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதன் ஒரு பகுதியாகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவின் கூட்டாட்சித் தன்மைக்கு எதிராக மொழித் திணிப்பையும், கல்வித்துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியாரிடம் தருவதை நோக்கமாகக் கொண்டும், கல்வித்துறையை மதவெறிமயமாக்குவதை இலக்காகக் கொண்டும்  உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை சுயசார்பு இந்தியாவை உருவாக்கப்பயன்படாது. மாறாக அறிவு வளர்ச்சியை பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளும் என்பதே உண்மை.  ஆகஸ்ட் 15 கொரோனா தடுப்பு மருந்துஅறிமுகப் படுத்தப்படும் என்று ஏற்கெனவே கூறியிருந் ததை மட்டும் பிரதமர் வசதியாக மறந்துவிட்டார்.

(நன்றி ஆகஸ்ட் 17 தீக்கதிர் நாளிதழின் தலையங்கம்)

News

Read Previous

புதிய ஆசிரியன் வாசகருடன் ஓர் உரையாடல்

Read Next

எஸ்பிபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *