தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக

Vinkmag ad
தொழிலாளர் ஒற்றுமை     ஓங்குக 
 
வங்கி ஊழியர் ஒற்றுமை  ஓங்குக 
 
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்      வாழ்க 
ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம்
அநீதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
ஆட்சியாளர் பண்ணுகிற
ஆர்ப்பாட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
மோடி அரசின் தவறான
கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
படுதோல்வியை வெற்றி என்னும்
கொண்டாட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.
நவம்பர் எட்டு கறுப்புதினம்
ஆட்சிக்கு எதிரான வெறுப்புதினம்
பொறுப்பற்ற அரசைக் கண்டித்து
எதிர்ப்பாளர் கொதிப்புதினம்
பணமதிப்பு நீக்கம் என்று
நவம்பர் எட்டில் சொன்னார்கள்
ஆட்சியாளர்கள் சொன்னார்கள்
திடீரென்று சொன்னார்கள்
நள்ளிரவு நேரம் தொடங்கி
ஆயிரம் ரூபாய் ஐநூறு ரூபாய்
செல்லாதென்று சொன்னார்கள்
ஆட்சியாளர்கள் சொன்னார்கள்
நவம்பர் எட்டில் சொன்னார்கள் ‘
திடீரென்று சொன்னார்கள்
கையில் இருக்கும் நோட்டுக்களை
செல்லாது போன பணத்தாள்களை
பத்தாம் தேதிக்குப் பிறகுசென்று
வங்கியில் கொடுத்து மாற்றென்றார்கள்
கணக்கில் செலுத்தி மறந்திடென்றார்கள்
எத்தனை எத்தனை நிபந்தனைகள்
எத்தனை எத்தனை கட்டளைகள்
எத்தனை எத்தனை உத்தரவுகள்
எத்தனை எத்தனை மாற்றம் அதனில்
இந்தக்கொடுமை கண்டதுண்டா
இந்தக் கேவலம் கேட்டதுண்டா
இதற்குமுன்பு பார்த்ததுண்டா
இப்படி எங்கும் படித்ததுண்டா
நாடுமுழுவதும் குழப்பங்கள்
இனம்புரியாத நடுக்கங்கள்
வரிசையில் வந்து நின்றோர்க்கெல்லாம்
வலிகள் வேதனை துயரங்கள்
ஒவ்வொரு நாளும் துன்பவிடியல்
ஒவ்வோர் இரவும் கண்ணீர்க்கதைகள்
ஒவ்வொரு  வீட்டிலும் திண்டாட்டம்
வங்கிகள் அனைத்திலும் பெருங்கூட்டம்
என்ன காரணம் சொன்னார்கள்
என்ன நோக்கம் சொன்னார்கள்
எதைச் சொல்லி மடக்கினார்கள்

எல்லா வற்றையும் முடக்கினார்கள்

சத்தியம் செய்தார் சபதம் செய்தார்
நமது பிரதமர் சூளுரைத்தார்
ஆங்கரித்தார் ஓங்கரித்தார்
துணிச்சலான வேலை என்றார்
நூறு நாளில் முடிப்பேன் என்றார்
கறுப்புப் பணத்தைப் பிடிப்பேன் என்றார்
கள்ளப்பணத்தை ஒழிப்பேன் என்றார்
தீவிரவாதம் அழிப்பேன் என்றார்
லஞ்சம் ஊழல் துடைப்பேன் என்றார்
துல்லியமான தாக்குதல் என்றார்
இலக்கை வீழ்த்தி முடிப்பேன் என்றார்
நடக்கவில்லை என்றால் என்னை
தண்டியுங்கள் தயார் என்றார்
ஆனால் இங்கே நடந்தது என்ன
அன்றாட வாழ்க்கை சுருண்டது என்ன
நகர முடியாத வரிசையில்நின்று
நாளும் பலபேர் சரிந்தது என்ன
இருக்கும் கோடி பிரச்சனைகளுக்கு
ஏதாவது தீர்வு சொல்லாமல்
தேவையற்ற பிரச்சனை ஒன்றை
தெருத்தெருவாய் கூட்டியது என்ன
வயதானோர் ஊனமுற்றோர்
கர்ப்பிணிகள் நோயாளிகள்
பாட்டாளிகள் உழைப்பாளிகள்
அன்னாடங்காய்ச்சி அப்பாவி மக்கள்
திருமணச் செலவு குடும்பச் செலவு
போக்குவரத்து துணிமணி கணக்கு
எந்தவொரு தேவைக்காகவும்
காசே இல்லை கடனும் இல்லை
பையிலிருக்கும் கையிலிருக்கும்
மதிப்பிருக்காது சகிப்பதுண்டா
இருக்கும் பணத்தைத் தொலைத்துவிட்டு

இடியிறங்கித் தவிப்பதுண்டா

காத்திருந்த வரிசையில் சரிந்து
காலமானோர் எத்தனை பேர்
வங்கியில் அஞ்சல் அலுவலகத்தில்
மரித்த ஊழியர் எத்தனைபேர்
வாராக்கடனை வசூலிக்க
மறுக்கும் அரசே மத்திய அரசே
கோடிக்கணக்கில் வரி ஏய்ப்போரைக்
கொஞ்சுகின்ற மத்திய அரசே
கறுப்புப்பணம் எங்கேயிருக்கும்
ஆட்சியாளர்க்குத் தெரியாதா
கள்ளப்பணத்தை ஒழிப்பதற்கு
இதுவா வழி புரியாதா?
கேள்வி கேட்டால் முறைத்தார்கள்
நியாயம் கேட்டால் சபித்தார்கள்
தவறைச் சுட்டிக் காட்டியபோது
மிரட்டினார்கள் அரட்டினார்கள்
பணமதிப்பு நீக்கத்தாலே
வேலையிழந்தோர் பல லட்சம்
பணமதிப்பு நீக்கத்தாலே
ஆலைமூடல் தொழில்நிறுத்தம்
பணமதிப்பு நீக்கத்தாலே
பறிபோனது வாழ்வாதாரம்
பணமதிப்பு நீக்கத்தாலே
பாழாய்ப்போனது பொருளாதாரம்
பணக்கற்றை கிட்டத்தட்ட
மொத்தம் திரும்ப வந்ததென்று
ரிசர்வ் வங்கி சொன்ன பிறகும்
ஒப்பிட மறுப்பதைக் கண்டிக்கிறோம்
எந்த நோக்கமும் ஈடேறவில்லை
கொண்டாட்டமென்ன கேட்கின்றோம்
எந்த இலக்கும் எட்டவில்லை
பம்மாத்தென்ன கண்டிக்கிறோம்

பொய்த்துப்போன நடவடிக்கையை

வெற்றி என்று கொண்டாடும்

மனசாட்சியற்ற மத்திய அரசே

மமதை கொண்ட மத்திய அரசே

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

அதிகாரப்போக்கைக் கண்டிக்கிறோம்

மக்கள் நலனில் அக்கறையின்றி

நடந்துகொள்வதைக் கண்டிக்கிறோம்

நவம்பர் எட்டு கறுப்புதினம்
மக்கள் மனத்தின் கொதிப்புதினம்
ஆட்சியாளர் கொடுமைக்கு எதிராய்
அணிதிரள்வோம் தினம்தினம்
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
தொழிலாளர் ஒற்றுமை ஜிந்தாபாத்
வாழியவே வாழியவே
மக்கள் ஒற்றுமை வாழியவே !

News

Read Previous

தமிழ் இன்று தவிக்கிறதே!

Read Next

உலக இறுதி தீர்ப்புநாள்-திருக்குரான், விஞ்ஞானம் உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *