சென்னையின் வரலாறு

Vinkmag ad

 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக  நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

17 ஆம்  நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான  கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு  அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. சென்னையின் பொருளாதாரம்  பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது.

ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

வரலாறு
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது  உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக  கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு  துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது.

சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.

1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம்  இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது.

1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா  விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது.

புவியியல்
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது. சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ. சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன

கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை  உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது மாநகராட்சியின் தலைவர் மேயர் – சைதை சா. துரைசாமி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது.
தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். மேலும் சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

வட சென்னையில் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும், தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.

இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை , தென் சென்னை ஆகியவை.
தமிழகம், மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை மாநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.

பொருளாதாரம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. 1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது.

மக்கள்
சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் விகிதம் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.

கலாச்சாரம்
சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.

சென்னையில் கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும், சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.

சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.

போக்குவரத்து
சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.

சென்னையில் பறக்கும் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை புறநகர் இருப்புவழி மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – தாம்பரம் ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.

கல்வி
சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன. வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.

சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் ஒன்று. இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது. செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது; 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ 180 கோடி செலவில் கட்டப்பட்டது.

விளையாட்டு
சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் : சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.

எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பை பந்தயத்தொடர் நடந்தது. மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.

உயிரியல் பூங்காக்கள்
கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

373 ஆண்டு வரலாறு கொண்ட மெட்ராஸ் மாநகரம் நல்லது, கெட்டது என நிறைய விஷயங்களைப் பார்த்துவிட்டது. மெட்ராஸையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை இந்த நகரம் சந்தித்த பஞ்சங்கள். பஞ்சத்தால் பறிபோன உயிர்களும், பஞ்சத்தோடு போராடிய உயிர்களும் நிறைய பாடங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றன.

1640 ல் ‘கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள்’ மதராசபட்டிணத்தில் கோட்டை கட்டி குடியேறினர். அடுத்த ஏழே ஆண்டுகளில் மிகக் கொடியதொரு பஞ்சத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது மெட்ராஸ் என்ற நகரம் இந்தளவு விரிவடைந்திருக்கவில்லை. இப்போது இருப்பதில் சிறிதளவே நகரின் மொத்த பரப்பளவாக இருந்தது.

1647, ஜனவரி 21ஆம் தேதியிடப்பட்ட ஒரு ஆங்கிலேயக் குறிப்பு இந்த பஞ்சத்தை பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. ”இந்த சிறிய ஊரிலேயே, 3000 க்கும் குறைவில்லாமல் மனிதர்கள் இறந்திருக்கின்றனர். போர்த்துகீசியக் காலனியிலோ 15,000 மனிதர்கள் இறந்துவிட்டனர். இப்போது நம்மிடம் இருக்கும் நெசவாளர்கள், தச்சர்கள் எல்லாம் மூன்றில் ஒரு பங்காக குறைந்துவிட்டனர். 25 ஆங்கிலப் படை வீரர்கள் இறந்துவிட்டனர், பலர் நோயுற்றுள்ளனர்” என்று அந்த குறிப்பு சொல்கிறது.

இந்த பஞ்ச காலத்தில் கோட்டைக்கு வெளியே சாந்தோம் போன்ற பகுதிகளில் இருந்த பல ஆங்கிலேயர்களும், கோட்டைக்குள் தஞ்சம் புகுந்துவிட்டனர். எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கோட்டையில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதனை சமாளிக்க சூரத்தில் இருந்து அரிசியை வரவழைத்திருக்கிறார்கள். ஒருவழியாக ஓராண்டில் இந்த பஞ்சத்தை சமாளித்து இயல்பு நிலைக்கு மீண்டிருக்கிறார்கள்.

அடுத்த பஞ்சம் 1658 ல் தலையெடுத்தது. அப்போது கோல்கொண்டா, சந்திரகிரி வீரர்களும் மெட்ராஸில் இருந்ததால் அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதேநேரத்தில் வடநாட்டிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதையும் ஒருவழியாக சமாளித்த நிலையில் 17ஆம் நூற்றாண்டின் கடைசிப் பஞ்சம் 1686 ல் வந்தது. ஏற்கனவே இரண்டு பஞ்சங்களைப் பார்த்துவிட்டதால், கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு இதனை சமாளிப்பதில் சற்று அனுபவம் கிடைத்துவிட்டது. நிவாரணப் பணிகளை எப்படி மேற்கொள்வது என அவர்கள் ஓரளவு கற்றுக் கொண்டனர்.

அடுத்து 18ஆம் நூற்றாண்டிலும் பஞ்சங்களுக்கு பஞ்சமில்லை. இதுபோன்ற பஞ்சங்களால் கிராமப்புற மக்கள் பிழைக்க வழி தேடி மெட்ராஸ் நோக்கி படையெடுத்தனர். பல இடங்களில் பொருட்கள் சூறையாடப்பட்டன. வியாபாரிகள் பொருட்களை பதுக்கிவைத்து கொள்ளை லாபம் சம்பாதித்தனர். இவற்றைத் தடுக்க சில ஆணைகள் இடப்பட்டும், பெரிதாக எந்த பலனும் இல்லை. இந்த ஆணைகள் ஆங்கிலேய வணிகத்தை பாதிக்கும் என உணரப்பட்டதால் சிறிது காலத்திலேயே அவை விலக்கிக் கொள்ளப்பட்டன.

1781 ல் வந்த பஞ்சம்தான் மிகவும் கொடுமையானதாக கருதப்படுகிறது. காரணம், அப்போது ஹைதர் அலியின் படையெடுப்பையும் சேர்த்து சமாளிக்க வேண்டி இருந்ததால் துயரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அந்த ஆண்டு இறுதியில் மதராசப்பட்டிணத்தில் 42 நாட்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் மட்டுமே இருந்தன. எனவே ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்கப்பட்டு முதன்முறையாக ரேஷன் முறை அமலுக்கு வந்தது.

இதனிடையே சோற்றுக்கு வழியில்லாமல் பரிதவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இன்றைய ‘ஸ்டான்லி மருத்துவமனை’ இருக்கும் இடத்தில் ஒரு கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்து தங்களின் பசியைப் போக்கிக் கொண்டனர். அடுத்த ஓராண்டில் இந்த இடம் ஒரு சத்திரமாக மாறியது. நிறைய முதியவர்கள் இருந்ததால், அவர்களுக்கு மருத்துவ வசதியும் தேவைப்பட்டது. எனவே இங்கு ஒரு சிறிய மருத்துவமனையும், தொழுநோயாளிகளுக்கான இல்லமும் தொடங்கப்பட்டது. 1799 ல் தொடங்கப்பட்ட இதுதான் உள்ளூர்வாசிகளுக்கென பிரத்யேகமாக உருவான சென்னையின் முதல் நவீன மருத்துவனை. உள்ளூர்வாசிகள் ‘கஞ்சித்தொட்டி மருத்துவமனை’ என்று அழைத்த இதுதான் பின்னாட்களில் ‘ஸ்டான்லி மருத்துவமனை’யாக உயர்ந்தது.

19 ஆம் நூற்றாண்டிலும் அடிக்கடி பஞ்சங்கள் வந்துபோகத் தவறவில்லை. 1824 ல் பஞ்சம் வந்தபோது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மெட்ராஸில் ஒரே ஒரு கடையில்தான் தானியம் விற்கப்பட்டதாம். பல இடங்களில் கலகங்கள் வெடித்ததால் ராணுவத்தை வைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1876 -78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட், இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாக, மரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் ‘பக்கிங்ஹாம் கால்வாய்’ பிறந்தது இப்படித்தான்.

இதுமட்டுமின்றி மேலும் பல புதிய முயற்சிகளும், நிர்வாக சீர்திருத்தங்களும் பஞ்சங்களின் பயனாகவே விளைந்தன. மொத்தத்தில் மெட்ராஸ் மாநகரம் தோன்றிய காலம் முதல் தொடர்ந்து பல பஞ்சங்களை சந்தித்து பல பாடங்களை சேகரித்து வைத்திருக்கிறது. இந்த பாடங்களே இந்த மாநகரை இன்றும் காக்கின்றன.

இனி, புள்ளி விபரம்:

  • முதலில் கிழக்கு இந்திய கம்பனியினரும் ஆங்கிலேயர்களும் ஆண்டபோது மதராசப்பட்டிணம் என பெயரிட்டு ஆண்டனர்.
  • இந்திய விடுதலைக்குப்பிறகு 1956 ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்களை பிரித்தபோது, சென்னை தமிழ்நாட்டின் தலைநகராக ஆனது.
  • ‘சென்னப்ப நாயக்கர்’ என்பவரிடம் இருந்த சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சென்னை என்று அழைக்கப்பட்டது.
  • சென்னையில், வெப்பமும் ஈரபதமும் வருடம் முழுவதும் காணப்படும்.
  • சென்னையின் அதிகபட்ச வெப்பம் 44 பாகை செல்சியஸ்.
  • சென்னையில் தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடமேற்கு பருவமழை சென்னை நகருக்கு மழையை கொண்டுவரும்.
  • சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மில்லிமீட்டர் மழையை பெற்று தருகிறது.
  • சென்னை கடற்கறை மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டு ,மெரினா கடலின் வடகோடியில் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் மெரினா என்று பெயர் .அதற்க்கு தெற்கே அடையார் ஆறு கடலில் கலக்கும் இடம் பெசன்ட் நகர் கடற்கறை (எலியெட் பீச் என்றும் அழைக்கப்படுகிறது.
  • தரமணியில் டைடல் பார்க் மிக பெரிய தொழில் நுட்ப பூங்காவாகும்.
  • வாகன உற்பத்தியில் சென்னை இந்தியாவிலேயே முதல் இடம் வகிக்கிறது. உலக புகழ் பெற்ற வாகன தொழில் நிறுவனங்களான Hyundai, BMW, Ford ஆகியவை சென்னையில் தொழில்சாலைகள் அமைத்துள்ளன.
  • ஆவடியில் இந்திய ராணுவ தொடர்பான பல நிறுவனங்கள் இருக்கின்றன இந்தியாவின்முக்கிய போர் பீரங்கிகள் இங்குதான் தயாரிக்க படுகிறது.
  • St. George Fort முன்பு இங்கு ஒரு மீனவன் வாழை தோப்பு இருந்தயிடத்தில்தான் இப்போது ஜார்ஜ் கோட்டை கட்டினார்கள்
  • அந்த காலத்தில் சென்னை கடற்கரையிலிருந்து பார்த்தால் கூட ரெட் ஹில்ஸ் அடுத்து உள்ள நாகலாபுரம் மலை தெரியும். ஆனால் தற்போது செங்குன்றம் [Redhills] என்னும் இடத்தில இருந்து பார்த்தால் தான் நாகலாபுரம் மலையை பார்க்க முடியும். அந்த அளவுக்கு இப்போது சென்னை (Madras) வளர்ந்து விட்டது.
    அந்த காலத்தில் கப்பலில் வருபவர்கள் நாகலாபுரம் மலையை பார்த்து தான் சென்னை அருகில் வந்து விட்டது என்று தெரிந்து கொள்வர்.
  • கொத்தவால் சாவடி, வால்டாக்ஸ்(Waltax Road), சால்ட் குவட்டேர்ஸ்(Salt Quarters), தண்டையார்பேட்டை, டோல்கேட்(Toll Gate) ஆகிய இடங்கள் வரி வசூல் செய்த இடமாகும்.பிராட்வே முன்பு சிறிய ஓடையாக இருந்த இடத்தை முடி சாலை அமைத்த இடம் தான் BRODWAY ROAD ஆனது.
நன்றி:தினகரன்,தந்தி,யாழ் இணையங்கள்

News

Read Previous

நாவலர் நெடுஞ்செழியன் : நம்பர் 2

Read Next

சகோதரர் அப்பாஸ் ஷாஜஹான் நினைவு கட்டுரைப் போட்டி – 2013 அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *