இதயங்களின் இருப்பிடம் முதுகுளத்தூர்

Vinkmag ad

எத்தனையோ தேசங்கள்
இயன்றளவு பார்த்தாகிவிட்டது
ஆறோடும் ஊர்களையும்
நீரோடும் சோலைகளையும்
அருவிபாயும் ஓசைகளையும்
அலைபாயும் கடலோரங்களையும்
கண்களால் கண்டாகி விட்டது
காதுகளால் கேட்டாகி விட்டது

எங்களின் இதயத்திற்கு இதமாய்
உள்ளங்களின் ஓய்வுத் தலமாய்
எங்கள் ஊர்போல்
எங்கும் இல என்பேன்
சொல்லும்படி ஒன்றும் இல்லை
சொல்லா திருப்பதற்கும் இல்லை
வறட்சிதான் வறுமைதான்
வாழ்வில் தானன்றி இதயங்களில் இல்லை

நகரமா என்றால் இல்லை
கிராமமா அதுவும் இல்லை
இரண்டிலும் இடைப்பட்டது
ஏறத்தாழ ஒரு சதுரகிலோ மீட்டர்
ஏம் இதயங்கள் வாசம் செய்யும் கூடாரம்
நானறிந்த வரையில் எல்லா ஜாதியினரும் உண்டு
நயமொடு இணைந்த கதம்ப மாலை போல்
நறுமனம் கமழும் வாசைன உண்டு

மாலையின் கோர்iவில் சில நெருடல்களும் உண்டு
மாலைச்சூரியனாய் அவை சரிவதும் உண்டு
இரத்த சொந்தங்களினும் மிகுந்த
மற்ற சொந்தங்களும் உண்டு
உறவின் முறை கூறி கண்ணியமாய்
உரிமை கொண்டாடும் பண்பாடும் உண்டு
நட்பை நல்லுயிராய் காக்கும் பல
நல்ல உள்ளங்களும் உண்டு

சோலைவனத்தின் பைங்கிளிபோல்
சாலைப் பயணத்தை திரும்பிப் பார்த்திட்டால்
எம் இனிய ஊர் எமை
வளர்த்து அமுதூட்டிய தருணங்கள் அவை
இதயப் பைகளில் நினைவுக் குவியல்களாய்
எங்களுக்குள் குவிந்து கிடக்கின்றன
ரமளான் மாதத்தில் நோன்புக்கஞ்சி என்றால்
பங்குனி மாதத்தின் நீர்மோரும் வாயில் புளிக்கும்

தீபாவளித் திருநாள் பலகாரம் என்றால்
ஈகைத்திருநாளின் பிரியாணி ஊரெங்கும் மனக்கும்
அதிகாலை துவங்குவதை அறிவிப்பது
அழகிய பாங்கோசை என்றால்
அடுத்ததாக வரும் கோவில் சுப்ரபாதமும்தான்
ரமளான் மாதத்தின் இரவு ‘பைத்’ நெஞ்சில் நிலைத்திருப்பது
ரமளான் முப்பது நாளும் நிகழும் இரவுத் தொழுகை
நோன்புக்கஞ்சி காய்ச்சும் சேக்காதி பக்கீர்

நோன்புக்கஞ்சி குடிக்கும் அந்த ஈயக்கோப்பை
நோன்புக் கால சீசன் வடைக் கடைகள்
கணீர் குரலால் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பழைய மோதினார்
கண்ணுறக்கம் இல்லாத இரவு ‘பைத்’ தின் சுண்டல் மற்றும் லட்டு
மங்கிய பச்சை வண்ணப் பிறைக்கொடி
முன்னும் பின்னும் பிடிக்கப்படும் லாந்தர் விளக்கு
பைத்துப் பாடல்களை பாடிய நாங்கள்
‘பாங்கு சொன்னால் வருவேன் பணிந்து உனைத் தொழுவேன்,

அணிவகுத்துப் பாடி வரும் சிறார் கூட்டம்
அனைத்துமே சந்தோச தருணங்கள்
இன்றையவர்களுக்கு கொடுப்பினை இல்லை
ஊருக்கே நீர் கொடுத்த மதரஸா கிணறு இன்றில்லை
ஊர் கூடிய கூட்டாஞ்சோறு இப்பொழுது இல்லை
ஊர்க்கண்மாயின் வெள்ளரித் தோட்டங்கள் இல்லை
ஊர் எல்லையின் ‘பொட்டையம்மா’ பம்ப்புசெட் இல்லை
ஊருக்கே சேதி சொல்லும் ‘தண்டோரா’ இல்லை

எல்லாமும் இதயத்தின் பசுமை நினைவுகளாய் இல்லாமல் இல்லை
எங்கள் சிறுவயதின் நினைவுக் குதிரைகளை
எண்ணக் கடிவாளங்களால் தட்டி விட்டால்
எங்கள் பாதம் படிந்திடாத மண்தான் உண்டுமா:
ஓடி விளையாடாத தெருக்கள் தான் உண்டுமா?
மிதிவண்டியின் ரப்பர் டயர்தான் வாகனம்
அடிநீள கருவேல குச்சிதான் என்ஜின்
இனிமேலும் இது உதவாது என்று முடிவு செய்து

சைக்கிள்கடை ரஹீம் தூக்கி யெறியும்
சைக்கிள் டயரை அடையும் எங்கள் இன்பமோ
சொல்லில் அடங்காதது சொல்ல முடியாதது
சைக்கிள் டயரின் பின்புறம் குச்சியால் தட்டிட
அது முன்புறமாக நகர ஆரம்பிக்க
எங்கள் இன்பமோஏரோப்ளேன் பைலட் கூட அடையமுடியாதது
இடதுபுறம் திருப்ப வேண்டுமா குச்சியை வலது ஓரத்தில் தட்டி
வலதுபுறம் செல்ல இடது புறம் தட்ட வேண்டும்

காலில் செருப்பு கிடையாது வெய்யிலும் தாக்காது
விளையாட்டு மோகத்தில் தாகமோ பசியோ அண்டிடாது
மிக்சர்கடை நாடார் தரும் ஓசி மிக்சர்
அல்வாக்கார நன்னா தரும் ஓசி அல்வா
பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் நிறைந்து வழியும் நீர்த்தொட்டியில்
சுண்டு விரலை ஒட்டி வைத்து மற்ற விரல்களை விரிக்க
பெருவிரலின் நுனியில் நீர்பாயும்
வாய்திறந்து அனைவரும் தாகசாந்தி பெற்றுவிட்டு

வடக்குவாசல் செல்வியம்மன் கோவில் நோக்கி
கூழ் வேண்டி நடைபயணம் (டயர் பயணம்)
கூழ் வருவதற்கு முன் தாத்தா ஜோதிகிருஷ்ணன்
ஆற்றும் உரைதனை கேட்டு அமர வேண்டும்
அனைவரும் பொருமையிழந்து கூச்சல் போடும்வரை
அவரும் நிறுத்திவிட மாட்டார்
‘இனியவை நினைவுகளோ அல்லது
நினைவுகள் மட்டும்தான் இனியவைகளோ?’

கூரைகள் வேயப்படாத கவின்மிகு கூட்டுக்குடும்பம்
கல்விக்கும், சிந்தனைக்கும் காவியக் கூடம்
நாலாபுறமும் அமைந்திருக்கும் கிராமக் குடும்பங்களுக்கு
நலனாய் ஒளியாய் திகழும் தாய்வீடு இந்த முதுவை
கிராமங்களின் பிள்ளைத் தேனீக்கள் எல்லாம்
கல்வித் தேன் பருகுவது இந்த மண்ணிற்கும் பெருமை
வேற்றுமையிலே காண்பதல்ல ஒற்றுமை
ஒற்றுமையின் உயர்வுதான் இங்கு ஒற்றுமை

கிழக்கின் சூரியன் தனது கண்களைக் கசக்கி
கண்விழிப்பது ‘மெட்ஸ்’ ஆசிரியர் கல்லூரி என்றால்
மாலைநேரக் கதிரவன் அந்தி வேளையில்
மஞ்சம் நாடி தலைசாய்பபதோ அரசினர் உயர்நிலைப் பள்ளியிலே
கல்வியையும் கல்வியாளர்களையும் காலங்காலமாய் உலகிற்களிக்கும்
கல்விச்சோலை பள்ளிவாசல் ‘பள்ளிக் கூடம் நடுயாயகமாகும்’
வடக்கின் எல்லையில் வரவேற்று நிற்கிறது
உயர்திரு ’சோ.பா’ கட்டிய கலை, அறிவியல் கல்லூரி

தொழிற்கல்வி கற்பிக்கும் கிழக்கின் ரஹ்மானியா ஐ.டி.ஐ
தியாக உருவாம் ரஹ்மானியா எத்தீம் சிறுவர் இல்லம்
இன்னும் கிருஷ்தவர் மேனிலைப் பள்ளி
அதனைத் தொடர்ந்து எண்ணற்ற டிரஸ்ட்டுகளின் ஆங்கிலப்பள்ளிகள்
மேற்கு மற்றும் தெற்கின் பார்வை எல்லையாம்
பெரிய பள்ளிவாசலின் மினாரா கோபுரம் அதன் மெட்ரிக் பள்ளி
எங்கும் கல்வி வசம்தான் அதன் வாசம்தான்
அனைவரின் இணைந்த வாழ்க்கைதான்

விநாயகர் திருக்கோவில் மற்றும் அதன் கரும்பலகை வாசகம்
ஊரின் வயதைக் கூறி நிற்கும் அரசமரம்
ஞாயிற்றுக் கிழமைகளின் ஜெபக் கூட்டங்கள்
வுpநாயகர் சதுர்த்தி: பூச்சொரிதல் விழா: மீலாடி நபி
ஒன்று சேர்த்து முப்பெரும் விழா எடுக்கும் ஓட்டுனர் சங்கம்
ஒன்றையேனும் மறந்திடுமா எம் நெஞ்சம்
எம்மோடு இருந்துவிட்டு இல்லாமல் போனவர்கள்
இப்பொழுது இல்லாமல் போனவற்றை பட்டியலிட்டால்
எனது எழுதுகோல் தாங்கிடுமா?

மடியில் குழந்தைகளை ஏந்தி மாலைநேரம் தோறும்
மக்கள் கூட்டம் வருமே பள்ளிவாசல் நோக்கி
சேட் ஆலிம்ஷாவிடம் ஓதிப்பார்க்க வேண்டி
சிறுவர் முதல் பெரியோர் வரை காத்துநிற்பார்களே
பள்ளிவாசலின் மையவாடியில் முளைத்திருக்கும்
பல அரியவகை மூலிகை தேடி வரும் மாற்றுமத சகோதர்கள்
சமுக ஒற்றுமை சகிப்புத் தன்மை சகோதர சகவாழ்வு
சாந்தமான குடும்பம் இந்த முதுவை

இருந்தது, இல்லாமல் போனதில் என் நினைவில் இருப்பது
இறைவன் பெட்டிக்கடை, சூனாவானா பச்சை பல்பு கடை
கேபிஎஸ் போண்டா, மத்ரஸா கிணறு, பிச்சை வடை கடை
கோடி உண்டு நினைவில் கேட்போருக்கு பொறுமை வேண்டுமே

பள்ளிக்கூட நாட்களின் இனிமையை
பால்சுவைதான் இன்னும் நாவினிக்குமே
எந்நேரமும் கையில் பிரம்பு வாயில் சுருட்டு
எங்கள் மதிப்பிற்குரிய லியாக்கத்தலி ஹெட்மாஸ்டர்
இடது கையால் விலாசும் வருசை வாத்தியார்
அன்னையின் வடிவான அபரஞ்சி டீச்சர்
நெற்றி நிறைந்த குங்குமப்பொட்டு ஐந்தாம் வகுப்பு சரசுவதி டீச்சர்
நாகலிங்கம் எனும் மொச்சக்கொட்டை வாத்தியார்

ஆறாம் வகுப்பின் பாண்டி ஆசிரியர்
தமிழம்மா, தமிழ்த்தாய், தமிழய்யா
தேசிய நல்லாசிரியர் அப்துல் காதர்
மாநில நல்லாசிரியர் புலவர் நாகூர்கனி
இவர்கள் உலகக்கல்வி அறிவித்தோர்களில் சிலர்
இன்னும் நான் மறந்திருந்தால் மாணவனை மன்னிப்போர் ஆசிரியர்
மறுமைக் கல்விதனை பயிற்றுவித்த சான்றோர்கள்
மறைந்த இபுறாகிம்ஷா ஆலிம் ஜபருல்லாஹ் ஆலிம் துவங்கி

இன்றைய நாள்வரை முஸ்லிம் இளைஞர்களை
இடைவிடாத தனது வெள்ளிமேடை குத்பா பேருரைகளால்
அரும்பாடு பட்டு அவர்களை வடித்துக் கொண்டிருக்கும்
அன்பிற்கினிய அஹமது பஷீர் சேட் ஆலிம் அவர்கள்
தன்னால் பெயர் சூட்டப்பெற்ற குழந்தை வளர்ந்து வாலிபனாகி
தன் முன்னால் வந்து நின்ற போதிலும்
ஞாபகமாக முழுப்பெயர் கூறி விழித்திடும் அன்பாளர்
ஞானம் என்பது பெறுவதல்ல பிறர்க்குத் தருவது
இயன்றவரை சமுதாயத்திற்காக உழைத்து, உழைக்கும்
ஒப்பற்ற மனிதர் என்றால் அவரையே இனங்காட்டலாம்

இன்னும் அந்த முதுவை மண் ஈன்றெடுத்துள்ள
ஏராளம் ஏராளம் சான்றோர்களின் பட்டியல் உண்டு
மாணவர்களை நண்பர்களாக்கி நல்வழி பயிற்றுவிக்கும்
முத்தான ஆசிரியர் பெருமக்கள் எமை ஏற்றிவிட்டு
மண்ணிலே கால்பதித்து நின்று கொண்டு அழகு பார்ப்போர்
சின்னஞ்சிறு பருவத்தின் சிறகடிக்கும் நினைவுகளே
சிந்தையை உருக வைத்திடும் சுவாசங்களே
சிறுவயதே சிறு நினைவே சிதறிடா இன்பமே

சிறார்கள் ஒன்று கூடி வீடுதோறும்
மழைச் சோறு சேகரித்து வந்து
முஉதாட்டி ஒருவரை நடுவில் அமர்த்தி
மழை வேண்டி ஒப்பாரி வைக்க
‘மழையே மலர்க்கனியே மழைச்சோறு போடுங்க
மான ராசா (வின்னை ஆற்பவன்) மழை இறக்கி வைக்கட்டும்’

”ஒரு கொடியை தூக்கி தூக்கி
ஒரு கடகம் பாகற்காய்
கறிக்குப் பத்தல (போதுமானதாக இல்லை)
பொறிக்கப் பத்தல
கண்ணானூரான் பாகற்காய்”

இன்றில்லை இதுவெல்லாம் இன்றில்லை
எம் நெஞ்சம் ஒருபோதும் மறந்திடு மில்லை

பள்ளிவாசலின் மையவாடி அதில்
குலைகுலையாம் தென்னம் பிள்ளை

வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் ஏலமிடும் கேபிஎஸ்
”கேட்கிறீர்களா கேட்கலையா விட்றப்போறேன்
ஒரு தரம் ரெண்டு தரம் மூனு தரம் ”

இதயங்களின் நினைவுகளே எமைத் தொடருமே
இன்று மையவாடி எம்மவர்களால் நிறைந்து வழிந்துவிட்டது
எமக்கு இடம் கிடைக்குமா கிடைக்காதோ

முஸ்லிம் மாணவர் நற்பணி இயக்கம் என்றும்
உமர் முக்தார் நற்பணி மன்றம் என்றும்
சதாம் உசேன் நற்பணி இயக்கம் என்றும்
மாணாக்கர்கள் ஒன்று கூடிய தருணங்கள்

எழுத்துக்களால் ஏட்டினை நிரப்பி வைத்துவிட்டேன்
இவற்றில் எண்ணிலடங்காதவை இனி
எழுத்துக்களாக மட்டும்தான் வாழ்ந்திடும்
இதயப் பையே எமக்கு அமைதி தா….

கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அரசியல் பங்களாக்கள்
கலைஞர்கள், கவிஞர்கள், காவல் அதிகாரிகள்
மருத்துவர்கள், இராணுவ அதிகாரிகள்
முதுகுளத்தூர் ஈன்றெடுத்த முத்துக்கள்
எல்லா ஜாதியினருக்கும் நீதி கூறும்
உள்ளுர் பஞ்சாயத்து மற்றும் ஊர் நிர்வாகம்
தீவுகளையும் கிராமங்களையும் நிர்வகித்து
ஆண்டுவிட்டு காலம் சென்ற கண்ணியவான்கள்

கடல் கடந்து பொருள்தேடித் தந்து
குடும்பம் காப்பது மட்டுமன்றி
தொலைநோக்குடன் சிந்தித்து
வலைத்தளங்களால் பெரும்பான்மை
தமிழ் உள்ளங்களை இணைத்து
தமிழுக்குத் தொண்டாற்றிடும்
தன்னலமில்லா ‘முதுவை கூகுள் குழுமம்’

முத்துக்களை முஉடிவைத்திருப்பது கடல்
முத்துக்களால் நிறைந்திருப்பது முதுவை

இதயத்தின் நினைவுகள் தொடர்கின்றன
இன்றோடு முடிவுறாது எமது ஊரின் பெருமை

மு  –  ‘மு’டியும் எனும் நம்பிக்கையை
து  –  ‘து’ளியும் சந்தேகமின்றி
வை –  உன் மீது ‘வை’

தேசம் வாழட்டும்
மத மாச்சர்யம் ஒழியட்டும்
ஓற்றுமையின் உயர்வுதனை
உலகே அறியட்டும்
வாழ்க வையகம்
வாழ்க தேசியம்
வாழ்க தமிழகம்
வளர்க முதுகுளத்தூர்.

அல்ஜீரிய பாலைவனத்தில் இருந்து
முதுவை சல்மான்

muthu mohamed
dateMon, Apr 12, 2010 at 11:01 AM
subjectabout MUDUKULATHUR ARTICLE BY MR.SALMAN

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்  சல்மான் அவர்கள் கட்டுரை என்பதைவிட
நினைவுகள் அற்புதமாக இருந்தது.

அவர்கள் எழுதாத எனது நினைவுகள் முதுகுகுளத்தூர்.

முஸ்லிம் பள்ளிவாசல் பள்ளியின் ஆசிரியர்கள்;

திரு.சாமுவேல் மற்றும் அவரது மனைவி
திரு.ஜோசப்  மற்றும் அவரது மனைவி
திரு.சிங்கராஜ் அவர்கள்
ஜனாப்.சேக் தாவுத் அவர்கள்
திரு.செல்லம் அவர்கள்.
பி டி வாத்தியார் அவர்கள்
வாத்தியார் அவர்கள் (மண்பாண்டம் கடை வைத்து இருந்தர்கள்)

அரசியலில்    சுப்பையா பிள்ளை அவர்கள், (காந்தி சிலையின் மாடல்)
அருணகிரியா பிள்ளை அவர்கள்
அப்துல்லா அவர்கள்(கொக்கி என்றும் அழைப்பர்)
ஆத்மநாத பிள்ளை அவர்கள்

கடைகளில்.
அலியார் ஹோட்டல்
சின்ன காசிம் கடை
பெரிய காசிம் கடை
ரொட்டிக்கடை
கடலைக் கடை
பலசரக்கு கடை (பாண்டி வாத்தியார் குடும்பம்
ஸ்டுடீயோ போட்டோ
பானு ஸ்டோர்
மாடசாமி ஸ்டோர்
ஜமால் ஜவுளிக்கடை
சவுக்கத் அலி ஹோட்டல்

பள்லிவாசலில்

பே லெவை (பெயர் எனக்கு தெரியாது)
கிட்டிகம்பு அசரத்
குருவி மோதினார்.

வஸ்ஸலாம்
அன்புடன்

MS MUTHU  MOHAMED

From: MUHAMMAD ISMAEL ISMAEL
Date: 2010/4/11

நேற்று, இன்று முளைத்த கல்விநிறுவனங்கள் எல்லாம் இதில் இடம் பெறச்செய்த முதுவை சல்மான்; முதுவை மா நகரை முழுமையாக வலம் வரவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அனைவரும் உயர் கல்வி பெறும் வகையில் 2004ல் இருந்து பல அரசு பல்கலைகழகங்களோடு இணைந்து முதுவையிலேயே தொலைநிலைக் கல்விமைய்யம் இய்ங்கிக்கொண்டு இருக்கிறது; மேலும் முதுவையிலேயே படிப்பு மைய்யம் (PCP CLASS) மற்றும் தேர்வுமைய்யமாகவும் செயல் படுகிறது. 2004க்கு முற்ப்பட்ட காலம் வரை நம் பகுதி மக்கள் மதுரை, இராமநாதபுரம் ஆகிய நகரங்களுக்கு சென்றே இந்த வசதி யை பெற்றார்கள், தற்பொழுது இந்த வசதி நம் முதுவை மாநகரிலேயே. இந்த சேவையை நம் பகுதிக்கு கொண்டு வந்த நிறுவணம் (AHIMSAA INTEGRATED & CHARITABLE TRUST) இந்த தகவலை இங்கே இடம் பெறச்செய்வதற்க்கு காரணம் புகழுக்குகோ, பெருமைக்கோ அல்ல நிணைவூட்டல் மட்டுமே என்ற சிந்தனையோடு,

இதனை இயக்கும் அ.முஹம்மது இஸ்மாயில்.
(நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தயை விடுங்கள்)

வ அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் முத்து முகமது:

முத்துக்களை சேர்த்து மாலையாக கோர்க்க முனைந்தேன்.
முத்தொன்று விடுபட்டு விட்டதை அறிகின்றேன்.
முத்தாய்ப்பாய் சுட்டி காட்டியதற்கு நன்றி.

முதுவை சல்மான்
ரியாத்
salmanhind007@yahoo.co.in

admin

Read Previous

இன்னுமா கைக்கூலி?

Read Next

வாலிப வயதை வீணாக்காதீர் !

Leave a Reply

Your email address will not be published.