மாணவர் சாவில் மர்மம்: பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் தாற்காலிக பணி நீக்கம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தாலுகா திருவரங்கத்தில் பள்ளி மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பள்ளியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியின் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா திருவரங்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தவர் வேளானூரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சதீஷ்காந்த் (15). அப்பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில்  வியாழக்கிழமை (ஜன. 2 ஆம் தேதி) மாணவர் சதீஷ்காந்த், தான் தங்கி இருந்த விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் தலைமையில் போலீஸார் விசாரணை செய்து சதீஷ்காந்தின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதன் பிறகு மருத்துவமனை வளாகத்தில் மாணவர் சதீஷ்காந்த்தின் உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்தனர்.

பின்பு ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமலைச்சாமி, தாசில்தார் திருநீலகண்ட பிள்ளை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு மாணவர் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து திருவரங்கத்தில் திங்கள்கிழமை காலையில் மாணவர் சதீஷ்காந்தின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பள்ளியின் முன்பு திரண்டனர்.

அவர்கள் மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதால் பள்ளி தாளாளர் வின்சென்ட்டி ராஜா, தலைமை ஆசிரியர் பீட்டர் ராயப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளியின் முன்பு கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் குணாளன், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை, முதுகுளத்தூர் தாசில்தார் மோகன், டி. எஸ்.பி. நடராஜன் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்பு பள்ளியின் தாளாளர் வின்சென்ட்டிராஜா, தலைமை ஆசிரியர் பீட்டர் ராயப்பன் ஆகியோர் மீது தாற்காலிக பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும்,

மேலும் இறந்த மாணவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அரசு நிதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் குணாளன் தெரிவித்தார். ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை, முதுகுளத்தூர் தாசில்தார் மோகன், டி.எஸ்.பி. நடராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்தனர்.

இதன் பின்பு போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

தாயார் ஆட்சியரிடம் புகார்

இந்த நிலையில் உயிரிழந்த சதீஷ்காந்தின் தாயார் பி. சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் அவர்கள், சதீஷ்காந்த் தூக்கிட்டு இறக்கவில்லை.

சாவில் மர்மம் உள்ளது. எனவே பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், விடுதி காப்பாளர்கள் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

News

Read Previous

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் – மின்னூல்

Read Next

தாய்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழுக்கு 18வது இடம்

Leave a Reply

Your email address will not be published.