மலேரியாவுக்கெதிரான போரில் இலங்கை வென்றது எப்படி?

Vinkmag ad
மலேரியாவுக்கெதிரான போரில் இலங்கை வென்றது எப்படி?
பேராசிரியர் கே. ராஜு

உலக சுகாதார நிறுவனத்தின் தெற்காசியா பகுதிக்கான குழுவின் 69வது சிறப்புக் கூட்டம் கொழும்புவில் இந்த ஆண்டு செப்டம்பர் 5 அன்று நடந்தபோது இலங்கை மலேரியாவிலிருந்து விடுதலை பெற்ற நாடு என அறிவிக்கப்பட்டது. பொது சுகாதாரத்தைப் பேணுவதில் இலங்கையின் சாதனைகளில் இது ஒரு மகுடம் என்றே கூறலாம். தெற்காசியப் பகுதியில் உள்ள 11 நாடுகளில் மலேரியாவை வெற்றி கொண்ட மற்றுமொரு நாடு மால்டிவ்ஸ் மட்டுமே. மலேரியா பரவியுள்ள நாடுகளிலிருந்து மலேரியா இல்லாத நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் அல்லது புலம்பெயரும் தொழிலாளர்கள் வரும்போது மலேரியா ஒட்டுண்ணிகள் அந்த நோயை மீண்டும் கொணர வாய்ப்பு உள்ளதால், தெற்காசியாவிலுள்ள அனைத்து நாடுகளிலும் மலேரியாவை அகற்றினால்தான்  அதை வெற்றி கொண்டுவிட்டதாக நம்பிக்கையுடன் கூறமுடியும்.
மலேரியாவுக்கெதிராக இலங்கை நடத்திய போர் நீண்ட வரலாறுடையது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோதே 1940-களில் மலேரியா தொற்றைக் கட்டுப்படுத்தும் மருந்தாக டிடிடி(DDT)யைப்  பயன்படுத்துவது தொடங்கப்பட்டது. 1911-லிருந்து 2011 வரை உள்ள நூற்றாண்டில் மலேரியா ஒழிப்பு வரலாறு குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையும் அவற்றுக்கு சமமான தோல்விகளையும் சந்தித்தது. கடுமையான வறட்சி, பஞ்சம், மலேரியா ஆகிய மூன்று தாக்குதல்களை  1934-35 ஆண்டுகளில் இலங்கை சந்திக்க நேர்ந்தது. அத்துயரங்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் நோக்கில் 1940-களில் இலவசக் கல்வி, இலவச உடல்நலப் பராமரிப்பு, உணவுப் பொருள்களுக்கு மலிவு விலைக் கடைகள் போன்ற மக்கள்நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. முறையாக டிடிடி மருந்து தெளிப்பது 1945-ல் தொடங்கியது. விளைவாக, 1946-ல் 27 லட்சமாக இருந்த மலேரியா பீடித்தவர்கள் எண்ணிக்கை 1963-ல் 17 லட்சமாகக் குறைந்தது. ஆனால் இந்த வெற்றி தற்காலிகமானதாகவே இருந்தது. 1968-ல் மீண்டும் மலேரியா முழுவீச்சில் தாக்கத் தொடங்கியது. டிடிடியையும் மலேரியாவுக்கெதிரான மருந்துகளையும் தாக்குப்பிடிக்கும் திறன் மலேரியாத் தொற்றுக்கு ஏற்பட்டிருந்தது 1970-களில் தெரியவந்தது. 1980-களில் மலேரியா நோயின் தாக்குதல் டிடிடி-க்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போன்ற அளவுக்கு பரவிவிட்டது. மலேரியாவுக்கு எதிரான மருத்துவம் டிடிடி-க்குப் பதிலாக மாலதியான் என்ற மருந்துக்கு மாறியது. இந்த நோயைப் பற்றியும் அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளையும் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உடல்நலத் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கொசு மருந்து செலுத்தப்பட்ட வலைகள் மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1990-களின் தொடக்கத்தில் மலேரியா தொற்றினை சில குறிப்பிட்ட பகுதிகளுக்குள் சுருக்கிவிட முடிந்தது.
வன்னியில் நடந்த உள்நாட்டுப் போரின் காரணமாக மலேரியாவுக்கெதிரான போராட்டம் பலவீனமடைந்தது. 1998-லிருந்து 2002-க்குள் மக்கள், எல்டிடிஈ போராளிகள், இலங்கைப் பாதுகாப்புப் படையினர் என எல்லோரையுமே பாதிக்கும் அளவில் மலேரியா தொற்று பேரிடராகப் பரவியது. மனிதர்களில் இனவேறுபாடுகளைப் பற்றி மலேரியாவுக்கு என்ன கவலை? ஆனால் 1983-லிருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வந்தாலும் இரு தரப்புமே மலேரியாவை பொது எதிரி எனக் கருதி நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தன. போர் முடிவதற்கு முன்பாகவே மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துவிட்டாலும் போருக்குப் பிறகே இலங்கை மலேரியாவிலிருந்து முழுதும் விடுதலை பெற முடிந்தது.
தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா, மியான்மார் ஆகிய பகுதிகளில் மலேரியா இன்னமும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. இப்பகுதிகளில் கொசுப் பரவலைக் கண்காணிப்பது, மலேரியா பரவுதலைத் தடுக்கும் விதத்தில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், மலேரியா தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துதல், வறுமை ஒழிப்பு, மக்கள் வாழ்க்கைத்தர மேம்பாடு, உள்நாட்டு மோதல்களைத் தவிர்த்தல், பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானம் மற்றும் நல்லுறவு போன்ற பல்வேறு அம்சங்களில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். தெற்காசியப் பகுதியில் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் தடைப்படாமல் இருக்க வேண்டுமானால் மேற்கண்ட அம்சங்களில் கவனம் செலுத்தி இக்கொடிய நோயை தெற்காசியப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளிலிருந்தும் விரட்டியடிக்க வேண்டும்.  மலேரியா ஒழிப்பு என்பது ஓர் உயிரிமருத்துவ அணுமுறை என்பதிலிருந்து மனிதர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையாக மாறுவது மிக மிக முக்கியம்.
( உதவிய கட்டுரை : 2016 டிசம்பர் 4 அன்று ஆங்கில இந்து நாளிதழில் கலிங்கா டூடார் சில்வா எழுதியது)

News

Read Previous

சல்லிக்கட்டு

Read Next

ஜனவரி – 6. வேட்டி தினக் கவிதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *