டென்ஷனை குறைக்க வழி

Vinkmag ad

டென்ஷனை குறைக்க வழி
 

 

உலகமானது இன்று விஞ்ஞான ரீதியில் எவ்வளவோ முன்னேறியிருப்பது உண்மை தான். ஆனால், மக்கள் நிம்மதியில்லாமல், மாநிலங்களிடையே, பல்வேறு நாடுகளிடையே போட்டி, கலவரங்கள், ஒருவருக்கு ஒருவர் ஆட்சி செய்ய முற்படுவது போன்ற காரணங்களால் பதட்டமும், டென்ஷனுமாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

சாதாரணமாக ஜலதோஷத்தை விட இந்நோய் அதிகம் பேரிடம் காணப்படும். தீராத பெருநோயாக இருக்கிறது. தேவையில்லாத ஒரு பயம், நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பீதி. ஆங்காங்கு நடைபெறும் சில விபத்துக்கள், ரயில் விபத்துகளில் பலபேர் மரணம் என்று ஊடகங்களில் வெளிவரும் செய்திகளைக் கண்டு நாமும் விபத்தில் சிக்கி இறந்துவிடுவோமோ என்ற தேவையற்ற அச்சம், ஓடி, ஆடி, கை நிறையச் சம்பாதித்தாலும், நாளை பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் இதே மாதிரி சௌகரியமாக வாழ முடியுமா? மனைவி, மக்கள் , நம்மை, மதிப்பார்களா? வெளியில் கௌரவமாக இருக்க முடியுமா?… உடம்புக்கு திடீரென பாதிப்பு வந்து விட்டால் என்ன செய்வது?

பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமே! அவர்கள் வேலையில் சேர்ந்து நம்மைப் பாதுகாப்பார்களா! பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டுமே! சத்திரத்தை “புக்” செய்த பின்பு தானே கல்யாணத்திற்கே நாள் குறிப்பிட வேண்டியிருக்கு. சத்திரம் கிடைக்குமா? நல்ல மாப்பிள்ளையாக அமைய வேண்டுமே? கொடுத்த இடத்தில் பெண் நிம்மதியாக இருப்பாளா? என்று பெற்றோருக்குக் கவலை.

எங்கே நிம்மதி அங்கே உனக்கோர் இடம் வேண்டும் என்று தான் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான பேர் இப்படி டென்ஷன், ஹைபர்டென்சன் போன்ற நோயால் அதிகப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

சிட்டி பஸ்ஸூக்காக காத்துக் கொண்டிருப்போம். நாம் போக வேண்டிய பஸ்ஸைத் தவிர மற்றதெல்லாம் வரும் சே! எனக்கு அதிர்ஷ்டமே இல்லை. பஸ்ஸே வரமாட்டேன் என்கிறது. மினி பஸ்ஸில் போகலாம் என்றால், டிக்கெட் வசூல் தான், அவர்களது குறிக்கோளாக இருப்பதால், கண்ட, கண்ட இடங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வதற்காக வெகு நேரம் காத்திருப்பதால், மினி பஸ் நமக்கு வசதியாக இல்லை. சரி ஒரு பஸ்ஸில் ஏறி, அடுத்த பஸ்ஸில் மாறிச் செல்வோம் என்றால் அதற்கு மனம் இடம் தரவில்லை. போதாக்குறைக்கு மனைவியுடன் பஸ் ஸ்டாப்பில் நின்றிருப்பது வேறு கஷ்டம். ஆட்டோவில் போகலாம் என்றால், உடனே மனைவி ‘பணம் என்ன கொட்டியா கிடக்கு. கொஞ்சங்கூட பொறுமையே கிடையாது. தம்முடைய பஸ் வரட்டும்” என்பார். நான்கு பேர் மத்தியில் மனைவியுடன் வாதாடிக் கொண்டிருக்க மனம் இல்லாமல் ஒரே சங்கடம். இது ஒரு டென்ஷன்.

இப்படிப் பல காரணங்களால் தேவையில்லாமல் நாம் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.

ஒரு சிறுகதை, கிராமவாசி ஒருவர் முதன் முறையாக ரயிலில் பிரயாணம் செய்தார். ஒருவர் 20 கிலோ எடைக்கு மேல் சுமை எடுத்துச் செல்லக்கூடாது என்பது ரயில்வே விதி. அவரிடமோ 30 கிலோ எடையுள்ளள மூட்டை இருக்கிறது. அதனை இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார். ரயில்வே டிக்கெட் பரிசோதகர் வந்து, இது என்ன மூட்டை கூடுதலாக சுமை இருக்கும் போல இருக்கே. இதற்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்றார். கிராமவாசிக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது. டிக்கெட் பரிசோதகரிடம் வாதாடிக் கொண்டிருந்தார். “உங்களுடன் அதிக நேரம் நான் வாதாடிக் கொண்டிருக்க முடியாது. என் வேலையை கவனிக்க வேண்டும். ஒன்று கூடுதல் சுமைக்காக பணம் செலுத்துங்கள். இல்லை ரயிலில் இருந்து இறங்கிவிடுங்கள் என்றார். கிராமவாசி உடனே அந்த மூட்டையைத் தன் தலைமேல் வைத்துக் கொண்டார். பரிசோதகர் இது என்ன கூத்தாக இருக்கிறது. தலையில் தூக்கி வைத்துக்கொண்டால் டிக்கெட் வாங்காமல் இருக்க முடியுமா?

“ஐயா! நான் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கியிருக்கிறேனே. ரயில் பெட்டியில் மூட்டை வைத்தால்தானே டிக்கெட் வாங்க வேண்டும். அதனால்தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டேன்” என்றார் அந்த கிராமவாசி.

இது சிரிப்பதற்குரிய விஷயமல்ல அந்தக் கிராம வாசியைப் போலத்தான் நாமும் பல சந்தர்ப்பங்களில் தேவையில்லாமல் மனச்சுமையைச் சுமந்து கொண்டிருக்கிறோம்.

பிராங்களின பெலிமர் என்ற மேலைநாட்டு தத்துவ அறிஞர் “Main Currents of Western Thought” என்ற நூலில் நமது இன்றைய காலகட்டத்தை “கவலையும் பரபரப்புமான யுகம்” என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதான்.

யாரும் அமைதியாக இல்லை. மகிழ்ச்சியாக இல்லை. ஏதோ ஒரு நிர்பந்தத்திற்கு ஆளாகி தவிக்கவே செய்கிறார்கள். மனிதர்களின் வாங்கும் சக்தியோ, செல்வச் செழிப்போ வளர்ந்திருக்கும் அளவிற்கு மனதில் நிம்மதியில்லை; மகிழ்ச்சியில்லை. வசதி, வாய்ப்புகள் பெருகியும் மனநிறைவைத் தரவல்லை என்பதுதான் உண்மை.

இங்கு எங்கு பார்த்தாலும் பதவி ஆசை. போட்டோ போட்டி, பணம் ஒன்றே குறி என்று அந்தப் பணம் எப்படிக் கிடைத்தாலும் அதை அடைந்தே தீர்வது என்ற வெறி என்று நமது டென்ஷனை அதிகரிக்கச் செய்தவற்கான காரணிகள ஏராளம்.

ஆன்மீகமே அருமருந்து என்று ஆன்றோர்கள் கூறியிருப்பதெல்லாம், இந்த கால கட்டத்திற்கு ஒவ்வாதது. பகுத்தறிவுக்கும் பொருந்தாது என்பது விதண்டாவாதம். ஆனால் பழங்காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழவில்லை.

வாழ்வதன் சுவை திருப்தி குறைந்து போய்விட்டது. ஸ்விடன் நாடு தான் உலகிலேயே தனிநபர் வருமானம் அதிகமுள்ள நாடாகும். சகலவசதிகளும் உள்ள இந்த நாட்டில் தான் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.

விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் தன்மை, விழிப்புணர்வு, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை போன்ற தார்மீகப் பண்புகள் எல்லாம் குறைந்து விட்டன.

அரசியல்வாதிகள் – தங்கள் சுயநலத்திற்காக மக்களைச் சண்டைக் கோழிகளாக்கி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டம் நாட்டில் அதிகமாகிவிட்டது. பந்த், மறியல், ஸ்டிரைக் என்று ஏதாவது பிரச்னைகளுக்காக மக்களைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

டென்ஷன் தான் பல்வேறு நோய்களுக்கும் மூலகாரணம் என்பது ஏனோ யாரும் புரிந்து கொள்ளவில்லை. இதனால் தூக்கத்தைப் பறிகொடுத்துவிட்டு பறிதவிக்க வேண்டியிருக்கிறது. இது மேலும் நமது உடல் நலனை பாதிக்கிறது.

சரி! இந்த டென்ஷனலிருந்து விடுபடுவது எப்படி? இதோ சில யோசனைகள்.

முதலில் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே அன்றி கவலைபடுபவதற்கல்ல என்று நினையுங்கள். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. அதனால் பிரச்னையே வாழ்க்கையாவது தான் சிலரது சோகம்.

நீங்களே உங்களுக்கு உற்ற நண்பர்கள். நீங்களே உங்களுக்குப் பகை என்று கீதை சொல்வதை நினைவில் கொள்ளுங்கள். நமது மேன்மைக்கும், தாழ்வுக்கும் நாமே தான் காரணமேயன்றி, யாரும் பொறுப்பல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எல்லோரிடமும் அன்பாகப் பழகுங்கள். விட்டுக் கொடுத்து அனுசரித்துச் செல்லுங்கள். ஒரு போதும் பிறரைக் குறைசொல்லாதீர்கள். முடிந்தால் பிறருக்கு உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் சும்மா இருந்துவிடுங்கள்.

நீங்கள் உலகத்தைத் திருத்தப் போகும் தலைவனாக ஒருபோதும் நினைத்துக் கொள்ளாதீர்கள். பிறருக்கு வலியச் சென்று ஆலோசனை கூறுகிறேன் என்று வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்.

கேட்டால் மட்டும் சொல்லுங்கள். அதுவும் இது என்னுடைய கருத்து உங்களுக்கு உதவுமானால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பேசுங்கள்.

Mind your own Business, உங்கள் வேலைகளை நீங்கள் பார்த்துக் கொண்டு செல்லுங்கள் அனாவிசயமாகப் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள். Don’t Poke Your Nose Unnessarily.

எதிர்மறையான எண்ணங்களை விட்டொழியுங்கள். நல்லதையே நினையுங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று நம்புங்கள். நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

இயற்கை நியதி என்னவென்றால் நல்லதை நினைத்தால் நல்லபடியே எல்லாம் நடக்கும். ஆகவே ஒரு போதும் கவலைப்பட வேண்டாம்.

மனிதப் பிறவி இறைவன் கொடுத்த பிரசாதம். லாபமாகக் கருதுங்கள். வளமோடு வாழ முற்படுங்கள். சுற்றுச்சூழலும், உங்களது குடும்பத்தாரும், நண்பர்களும் மற்றவர்களும் ஏடாகூடமாக நடந்து கொண்டாலும் அதனால் நீங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். Take it Easy.

நமக்கு ஏதாவது கஷ்டம் வந்து விடுமோ என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்கு கஷ்டம் வருகிறது என்றால் நமக்கு வரக்கூடாதா?

கஷ்டமும், நஷ்டமும், இன்ப, துன்பமும் இல்லாத வாழ்க்கை இல்லையே. சுழற்சி வட்டம் போல மாறி, மாறி வந்து கொண்டு தான் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Better Never Trouble Until Trouble Troubles You என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தையைப் போல மனம் இருந்தால் உங்களுக்கு ஒரு போதும் துன்பம் இல்லை.

உங்கள் வழி நேர்மையாக இருந்தால் அந்த வழியிலேயே தொடர்ந்து செல்லுங்கள். பிறர் யோசனை கூறினால், மறுக்காமல், எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முடிவே உங்களுக்கு நன்மை பயக்கும். Take your own Decision and stick on to it. அமைதியாக எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள். யாருக்கும் வராத பிரச்சனை நமக்கு வந்துவிடவில்லை. அதனை தைரியமாக சமாளிக்கலாம் என்று நம்புங்கள். மன உறுதியுடன் அந்தப் பிரசனையை எதிர்கொள்ளுங்கள். காலம் மனப் புண்ணை ஆற்றும் அருமருந்தாகும். அதனால் ஆறப்போடுங்கள். பின்பு அந்தப் பிரச்சனை பிரச்சனையாகவே தோன்றாது. இதற்குப் போய் வீணாக அலட்டிக் கொண்டோமே என்று எண்ணத் தோன்றும்.

இயற்கை உணவுகள் பரபரப்பையும், டென்ஷனையும் குறைக்கும் பழரசங்கள் குறிப்பாக மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ், இளநீர் நன்மை பயக்கும்.

ஆசனங்கள், பிராணயாமம், தியானம் செய்யப் பழகுங்கள். இவை பலன் தரும். தினசரி காலை, மாலை இரு நேரமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது தியானத்தில் அமருங்கள். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் தியானம் செய்ய பழகும் போது மனம் எளிதில் வசப்படும்.

ஆரம்பத்தில் எண்ண ஓட்டத்தில் மனம் அடங்காமல் உளைச்சல் அதிகமாகத் தான் இருக்கும். மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் வெறும் குப்பை அவற்றைப் புறம் தள்ளுங்கள். இந்த எண்ணங்களுக்கு நான் ஆட்பட மாட்டேன் என்று உறுதியாக நம்புங்கள்.

கோபம், பொறாமை, எரிச்சல், வெறுப்ப, கவலை போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் புறம் தள்ளுங்கள்.

எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். அமைதியாக இருப்பேன். என்பது போன்று எண்ணத் தொடங்குங்கள். இதை நிறைவான எண்ணங்கள் ஆழ்மனதில் பதியப் பதிய டென்ஷனும், பரபரப்பும் குறைந்து நிம்மதி அடைவீர்கள்.

இனிய இசை கேட்டல், நம்பிக்கை தரும் நூல்களை வாசித்தல், சற்று நேரம் வெளியே உலாவி வருதல், சமவயதுடைய நண்பர்களுடன் அளவளாவுதல், குடும்பத்தாருடன் மனம்விட்டுப் பேசுதல், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடல் இவையாவும் டென்ஷனைக் குறைக்க உதவும்.

யோக நித்திரை என்ற மனதையும், உடலையும் இளைப்பாறச் செய்யும் (Relaxation Therapy) பயிற்சியை மேற்கொள்வது நலன்தரும்.

இவையாவும் பலன் தராமல் போனால் மனநல மருத்துவரை நாடி தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்

News

Read Previous

தாழ்வு மனப்பான்மை

Read Next

ஷாமினா பந்தல்

Leave a Reply

Your email address will not be published.