ஃப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து

Vinkmag ad

அறிவியல் கதிர்

ஃப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து
பேராசிரியர் கே. ராஜு

ஃப்ளூ என அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா தொற்று நோய் அடிக்கடி நம்மைப் பார்க்க வரும் விருந்தினர்.   மூக்கொழுகுதல், காய்ச்சல், தசைவலி, தலைவலி, இருமல், தும்மல் போன்ற பாதிப்புகள் இந்தத் தொற்று பீடித்திருப்பதற்கான அறிகுறிகள். ஒருவர் இருமும்போது அல்லது தும்மும்போது அவரிடமிருந்து தொற்றுக் கிருமி காற்றில் கலக்கிறது. கிருமி கலந்த தூசுப்படலத்தைச் சுவாசிக்கும்  இன்னொருவருக்கு அது பரவுகிறது. ஃப்ளூ பெரும் பகுதி மக்களைத் தாக்கும்போது அது கொள்ளை நோயாகிறது. ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சத்திலிருந்து 50 லட்சம் மக்கள் வரை இந்தக் கொள்ளை நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 5 சதத்திலிருந்து 10 சதம் மக்கள் வரை நிமோனியா காய்ச்சலினாலோ, மூச்சுக்குழல் அல்லது இதயரத்த நாளங்கள் தொடர்பான நோய்களாலோ பலியாகின்றனர்.
சில பத்தாண்டுகளுக்கொரு முறை ஃப்ளூ காய்ச்சலுக்கு வெறி வந்துவிடுகிறது. நீண்டகாலமாகவே தொற்று நோய்களில் மிக ஆபத்தான நோயாக இன்ஃப்ளூயன்சா கருதப்பட்டு வந்திருக்கிறது. கி.மு. 5ஆம் நூற்றாண்டிலேயே இதைப் பற்றி கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 12, 14, 15, 17வது நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்தத் தொற்றுநோய் பற்றிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. ஆனால் 1932ஆம் ஆண்டில்தான் இன்ஃப்ளூயன்சா கிருமி அடையாளம் காணப்பட்டது. 1918ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் ஃப்ளூ 5 கோடி பேர்களைப் பலி கொண்டது. 1957-58இல் ஆசிய ஃப்ளூ 10 லட்சம் பேர்களையும், 1968-69இல் ஹாங்காங் ஃப்ளூ 10 லட்சம் பேர்களையும் பலி கொண்டது. 2009ஆம் ஆண்டில் பரவத் தொடங்கிய பன்றிக் காய்ச்சல் (ஃப்ளூவின் ஒரு அவதாரம்தான்) அவ்வப்போது பரவி மனிதர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நோய்க்கு எதிராக பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் விரைவிலேயே அந்த மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தியை கிருமி பெற்றுவிடுவதால், புதிய மருந்துகளை உருவாக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
நோய்த் தொற்றை எதிர்த்து இரு வழிகளில் போராட முடியும். ஒன்று மருந்துகள், மற்றொன்று தடுப்பு மருந்துகள். வெளியிலிருந்து தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உடலின் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வேலையை தடுப்பு மருந்துகள் செய்கின்றன. நோயை உருவாக்கும் கிருமியின் பகுதியை உடலில் செலுத்தும்போது அது தடுப்பு மருந்தாக செயல்படுகிறது. ஒரு முதிர்ந்த நச்சுயிரி (virion) உடலில் நுழையும்போது தடுப்பு மருந்திலுள்ள மூலக்கூறுகள் அதை அடையாளம் கண்டு அழித்தொழிக்கின்றன. தாக்கும் கிருமி ஆன்டிஜன் எனவும் பாதுகாக்கும் மூலக்கூறுகள் பிறபொருளெதிரிகள் (antibodies)  எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஆன்டிஜனை எதிர்த்துப் போராடி அதை விரட்டியபிறகு, மீண்டும் அது தாக்க வந்தால் தடுப்பு மருந்தில் உள்ள பிறபொருளெதிரிகள் மீண்டும் தாக்குதலைத் தொடுத்து உடலுக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. இப்படித்தான் ஒரு முறை அம்மை நோய் பீடித்தவருக்கு மீண்டும் அந்த நோய் வராமல் தடுப்பு மருந்து பாதுகாப்பைக் கொடுக்கிறது. இதே மாதிரியானதொரு தடுப்பு மருந்தினை ஃப்ளூ நோய்க்குத் தயாரிக்க முடிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு மருந்தைத் தயாரிக்க ஃப்ளூவின் மரபணுத் தன்மை தடையாக இருக்கிறது. ஃப்ளூ கிருமியின் மரபணுத் தன்மையைப் புரிந்துகொண்டால் தான் பிரச்சனைக்குத் தீர்வைக் கண்டுபிடிக்க முடியும். இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம் நுண்ணுயிரிகளில் உருவாகும் திடீர் மாற்றங்கள் (viral mutations)தாம். மரபியல் விஞ்ஞானத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஃப்ளூ நோய்க்குப் பொருத்தமானதொரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வழிகாட்டியிருக்கிறது. ஜூலை 2016 ட்ரீம் 2047 இதழில் இந்தக் கட்டுரையை எழுதியுள்ள டாக்டர் அஷேஸ் நந்தியும் அவரது குழுவினரும்  அமினோ அமிலங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பு மருந்தைக் (peptide vaccine) கண்டுபிடிப்பதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்  அடைந்துள்ளனர்.
புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்து மக்களுக்குக் கிடைக்கும்படிச் செய்யாவிடில் இன்ஃப்ளூயன்சா உயிர்களைப் பலி வாங்கும் நோயாகவே நீடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெப்டைட் தடுப்பு மருந்து இந்தத் திசையில் உதவக்கூடும். பாரம்பரியமான தடுப்பு மருந்துகளைக் காட்டிலும் பெப்டைட் தடுப்பு மருந்துகள் ஃப்ளூ போன்ற தொற்றுநோய்களைத் தடுப்பதில் முக்கியப் பங்கினை ஆற்றும் என்ற எதிர்பார்ப்பு மருத்துவ உலகில் ஏற்பட்டிருக்கிறது. வரவேற்போம்

News

Read Previous

தம்பிகள்

Read Next

போக்குவரத்து பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published.