வைரஸ் எனும் எதிரி

Vinkmag ad
வைரஸ் எனும் எதிரி

வைரஸ்கள் என்றழைக்கப்படும் நுண்ணுயிர்கள் உயிரினங்களுக்குப் பல்வேறு நோய்கள், பாதிப்புகள் வரக் காரணமாக இருப்பவை. ஒரு செல் உயிரினங்களான பாக்டீரியாக்களும் கூட இவற்றினால் பாதிக்கப்படுவது உண்டு. வைரஸ்களை எலெக்ட்ரான் மைக்ராகோப் போன்ற பெருக்கிக் கருவிகளின் (magnifiers) மூலமாக மட்டுமே பார்க்க முடியும். அவ்வளவு சிறியவை. பாக்டீரியாக்களை விடச் சிறியவை. (பாக்டீரியாவின் அளவு ஒரு மில்லிமீட்டரில் 1000-த்தில் ஒரு பகுதி இருக்கும் ; வைரசின் அளவோ 10000-த்தில் ஒரு பகுதி என்பதிலிருந்து 100000-த்தில் ஒரு பகுதி வரையே இருக்கும்).

அனைத்து உயிரினங்களும் செல்களினால் ஆனவை. உயிரினத்தின் மிகச் சிறிய பாகமே ‘செல்’ எனப் புரிந்து கொள்ளலாம். வைரஸ் ஒரு செல்லிற்குள் நுழைந்து வளரக் கூடியது ; அது மட்டுமல்ல, எண்ணிக்கையிலும் பெருகக் கூடியது. இதன் காரணமாக வைரஸை ஒரு நுண்ணுயிர் எனக் கருதலாம். அதே சமயம், செல்லை விட்டு வைரஸ்கள் வெளியே வந்து விட்டால் அவை வளர்வதில்லை. இதனால் அவற்றை உயிரற்ற பொருட்களாகவும் கருத இடமிருக்கிறது. இப்படி ஒரு குழப்பம் இருப்பதால், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் கலவையாக இவை எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

1888-இல் மேயர் என்பவர் வைரஸ்களைக் கண்டுபிடித்தார். வைரஸ்களுக்கு இதுதான் வடிவம் என்று ஒன்றைக் குறிப்பிட முடியாது. அவை பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள், மரங்கள் என எல்லா உயிரினங்களிலும் தாவரங்களிலும் அவை நோயைப் பரப்புகின்றன. பெரியம்மை, சின்னம்மை, போலியோ, மம்ப்ஸ், எய்ட்ஸ், ரேபீஸ், சென்னைக் கண் (மெட்ராஸ் ஐ), பக்கவாதம், சில வகைப் புற்று நோய்கள் போன்ற பல்வேறு கேடுகளை வைரஸ்கள் நமக்குத் தருகின்றன. அவை தமக்குள் வேலைப் பிரிவினை வேறு செய்து கொள்கின்றன. உதாரணமாக, அம்மை நோயைத் தரும் வைரஸ் இன்ஃபுளூயன்சா நோயைத் தராது. “அது வேற டிபார்ட்மெண்ட். அதில் நான் தலையிடுவதில்லை” என்று (சமயங்களில் நமது நீதிமன்றங்கள் கூறுவது போல) கூறிவிடும். வேறு வகை வைரஸ்கள் தக்காளி, வாழைப்பழம், கரும்பு போன்ற பயிர்களையும் தாக்குகின்றன. இதிலும் மிருகங்களைத் தாக்கும் வைரஸ்கள் தாவரங்களைத் தாக்குவதில்லை.

பாக்டீரியாக்களில் கூட நமக்கு நன்மை தரக் கூடிய சில ரகம் உண்டு. ஆனால் வைரஸ்களில் அந்தப் பேச்சே கிடையாது. ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரிதான். அனைத்துமே நமக்குக் கேடு விளைவிப்பவை. மனிதகுலத்தின் மிகப் பெரிய எதிரியாக இவை வலம் வருகின்றன. வைரஸ் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மருத்துவ உலகில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

News

Read Previous

இ -புக் பயனும் மின்கவி சேவையும்

Read Next

ஆட்டோக்காரருக்கு ஒரு சல்யூட் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *