உணவையே மருந்தா தர்றோம்….

Vinkmag ad
ரெ.சு. வெங்கடேஷ் படங்கள்: தி. குமரகுருபரன்

இயற்கை

‘உணவே மருந்து’ என்பதை உலகுக்குச் சொன்னது தமிழகம்தான். ஆனால், இன்றைக்கு நுகர்வுவெறி காரணமாக… பாரம்பரியத்துக்கு பால் ஊற்றியதன் விளைவால், ஆரோக்கியத்துக்கு பாடை கட்டிக் கொண்டிருக்கிறோம், இதே தமிழகத்தில்! பல்வேறு நாடுகளும் நம் சிறுதானிய உணவில் இருக்கும் அற்புதங்களை உணரத் தொடங்கி இருக்கும் நிலையில்… நாம் இன்னமும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் நோய்களை வாங்கக் காத்திருக்கிறோம். இந்நிலை மாறவேண்டும் என நினைக்கும் இயற்கை ஆர்வலர்கள், இயற்கை விளைபொருட்கள், சிறுதானிய உணவுகள் எனப் பாரம்பரியப் பழக்கங்களை இளைய தலைமுறையிடம் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில், சென்னையில், மூலிகைச் சாறு மற்றும் உணவுகள் மூலமாக ஆரோக் கியம் பரப்பி வருகிறார்கள், ‘தாய்வழி இயற்கை உணவக’த்தைச் சேர்ந்த நண்பர்கள்.

‘உணவே மருந்தாக… மருந்தே உணவாக!

சென்னை, சைதாபேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஜீனிஸ் சாலை எப்போதும் பரபரப்பாக ஆட்கள் பறந்து கொண்டிருக்கும் இடம். மாலைவேளைகளில் இங்குள்ள போண்டா, பஜ்ஜி, ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் ஈக்களைப் போல மக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். இவற்றுக்கு அருகிலேயே… சிறிய தள்ளுவண்டி ஒன்றில், ‘உணவே மருந்தாக மருந்தே உணவாக’ என்ற வாசகத்தோடு… ‘சளி நீங்க தூதுவளை சூப்’, ‘கொழுப்பைக் கரைக்க கொள்ளு சூப்’, ‘மூட்டு வலி நீங்க முடக்கத்தான் சூப்’, ‘ஆயுள் நீட்டிக்க தேன்நெல்லி’ என சிலேட்டுகளில் எழுதி தொங்கவிடப்பட்டிருக்கும் தாய்வழி இயற்கை உணவகத்திலும் கூட்டம் அலைமோதுவது ஆச்சர்யமே!

நம்மாழ்வார் நினைவாக..!

உணவகத்தை நடத்தி வரும் மகாலிங்கத்திடம் பேசினோம், ”ஆரோக்கியமான வாழ்வுக்கு இயற்கை உணவுதான் ஏற்றதுனு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்லுவாரு. அந்த வார்த்தைகள்தான் இந்தக் கடை தொடங்கக் காரணமா இருந்தது. நண்பர்கள் சரவணன், ரவி ரெண்டு பேரோடயும் சேர்ந்து… இயற்கையாகக் கிடைக்கும் விளைபொருள்களை வெச்சு ஆரோக்கியமான உணவுப் பொருளை மக்களுக்கு கொடுக்கலாம்ங்கிற முடிவோட இந்த ஜனவரியிலதான் ஆரம்பிச்சோம். இதுக்கு, மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு.

காலையில, அருகம்புல் சாறு, நெல்லிக்கனிச் சாறு, வாழைத்தண்டு சாறு, மூலிகை கலந்த துளசி டீ, கறிவேப்பிலைச் சாறு, கேரட் கீர், பீட்ரூட் கீர் விற்பனை செய்றோம். மாலையில், தேன் நெல்லி, 7 வகை காய்கறிகள் கலந்த சூப், முடக்கத்தான் சூப், கொள்ளு சூப், முருங்கைக்காய் சூப், தூதுவளை சூப், மணத்தக்காளி சூப்பும் கொடுக்குறோம். இதை சாப்பிடறதால ஏற்படுற நன்மைகள் பத்தின துண்டு பிரசுரத்தையும் கொடுக்குறோம். பக்கத்துலயே சிறுதானிய உணவகத்தையும் ஆரம்பிச்சிருக்கோம். அதுல, இரவு நேரங்கள்ல சிறுதானிய தோசை, மூலிகை இட்லி, மூலிகை தோசைனு கொடுக்கிறோம்.

தினமும் 1,500 ரூபாய்…!

இதை ஆரம்பிக்கறதுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளதான் முதலீடு செஞ்சோம். ஒரு நாளைக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், சிறுதானியங்கள் வாங்க மொத்தமா 2 ஆயிரம் ரூபாய் செலவாகுது. இயற்கை அங்காடிகள்ல காய்கறிகளை வாங்கிக்கிறோம். சாறு வகைகள், சூப் வகைகள்ல ஒரு நாளைக்கு 20 லிட்டர் தயாரிக்கிறோம். 200 மில்லி சூப் 15 ரூபாய்னு விற்பனை செய்றோம். தோசை 30 ரூபாய்னும் மூலிகை இட்லி 5 ரூபாய்னும் விற்பனை செய்றோம். ஹோட்டல்ல விக்கிற விலையைவிட குறைவுதான். ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் வருது. செலவெல்லாம் போக 1,500 ரூபாய் லாபமா கையில நிக்குது. இப்பத்தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமா எங்க பக்கம் திரும்ப ஆரம்பிச்சுருக்காங்க. சிலர் ரெகுலரா வர ஆரம்பிச்சுட்டாங்க. மெரினா கடற்கரையிலும் ஒரு கிளை தொடங்கி இருக்கோம். அங்கேயும் நல்ல வரவேற்பு” என்றார் மகாலிங்கம் மகிழ்ச்சியுடன்.

கொள்ளு தோசை… மூலிகை இட்லி…!

அவரைத் தொடர்ந்த ரவி, ”நாங்க எந்த உணவுப் பொருள்லயும் ரசாயனத்தைச் சேர்க்கிறதில்ல. மூலிகைகள், கீரைகள்லருந்து எடுக்கப்பட்ட சாறுகளைத்தான் வடிகட்டி விற்பனை செய்றோம். நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பட்டை, சோம்பு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லிதான் சேக்குறோம். பொதுவா சூப் ருசியாக இருக்கறதுக்காக மைதா மாவு சேர்ப்பாங்க. நாங்க அதை சேர்க்கறதில்ல. கொள்ளு தவிர எல்லா சிறு தானியங்களையும் ஒண்ணா சேர்த்து அரைச்சு பொடியாக்கி… கைக்குத்தல் அரிசி, கருப்பு உளுந்து சேர்த்து, அரைச்ச மாவுல கலந்து தோசை செய்றோம். கருப்பு உளுந்து எலும்புக்கு நல்லது. இந்த சிறுதானிய தோசையில் எல்லா சத்துக்களுமே இருக்கு. இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகம் இருக்குறதால, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

எடையைக் குறைக்கணும்னு நினைக்கறவங் களுக்காக கொள்ளு தோசை தயாரிக்கிறோம். மூலிகைச் சாறை மாவோடு கலந்து மூலிகை இட்லி தயார் செய்றோம். மக்களுக்கு, நோய்க்கான மருந்தை நாங்க தரல. ஆனா, உணவையே மருந்தா தர்றோம்” என்றார் புன்னகையோடு!

தொடர்புக்கு, மகாலிங்கம்,
செல்போன்: 97907-04074

 

பசுமை விகடன் – 25 May, 2014

News

Read Previous

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து

Read Next

மெர்ஸ் வைரஸ் குறித்து ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *