அள்ள அள்ள ஆரோக்கியம்… அசத்தல் கேழ்வரகு!

Vinkmag ad

அள்ள அள்ள ஆரோக்கியம்… அசத்தல் கேழ்வரகு! நலம் நல்லது

கேழ்வரகு

அரிசி தோசைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம்? கேழ்வரகுதான் சிறந்த தேர்வு. கேழ்வரகு, அரிசியைப்போல் கார்போஹைட்ரேட் நிறைந்த ஓர் தானியம். அரிசியில் செய்யக்கூடிய இட்லி, தோசை, இடியாப்பம்… என அத்தனைப் பண்டங்களையும் இதிலும் செய்ய முடியும். அதே நேரம், நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீரோ, உரமோ, பூச்சிக்கொல்லியோ கேழ்வரகுக்குத் தேவை இல்லை. உரமும் பூச்சிக்கொல்லியும் இல்லாததால், உருக்குலைக்காத உணவுச் செறிவை கேழ்வரகு பெற்று இருப்பதுதான் அதன் சிறப்பு. கேழ்வரகுக்கு உரம் போட்டால், வேகமாக செடி உயரமாக வளர்ந்துவிடும். கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனால் உரம் போட மாட்டார்கள். எனவே, எந்தக் கடையில் கேழ்வரகை வாங்கினாலும், இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட தானியம் என நம்பி வாங்கலாம்.

கேழ்வரகு பிறந்தது ஆப்பிரிக்காவில்! அதிக விலை இல்லாத இதுதான், வறுமையில் வாடும் தெற்கு சூடான், செனகல், பெனின் போன்ற ஆப்பிரிக்க நாட்டின் பிரதான உணவு. கேழ்வரகு தமிழகத்தில் பிறக்கவில்லை என்றாலும், தமிழ்ச் சமூகத்தோடும் தமிழ்நாட்டு நிலவியலோடும் நெருக்கமான தொடர்பு உடையது. பல நூற்றாண்டுகளாக நாம் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். கேழ்வரகில் கிட்டத்தட்ட 60 வகைகள் உள்ளன. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் `கேழ்வரகுத் திருவிழா’ எனும் ஒரு விழாவே கேழ்வரகு அறுவடைத் திருவிழாவாக, நம் பொங்கல்போல் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கேழ்வரகின் சிறப்புகள்… பலன்கள்… பயன்படுத்தும் முறைகள்!

* அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங்களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச்சத்தும் அதிகம். பாலைவிட மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. பாலும் அரிசியும் உடம்பை வளர்க்கும்; கேழ்வரகோ, உடல் இளைக்க உதவும். எல்லோருக்கும் ஏற்ற தானியம்… வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய் கால மகளிருக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் மிக மிக அவசியமான உணவு கேழ்வரகு.

* குழந்தைக்கு ஒரு வயதாகும்போது, கேழ்வரகை ஊறவைத்து, முளைகட்டி, பின்னர் அதனை உலர்த்திப் பொடியாகச் செய்துகொள்ள வேண்டும். இந்தப் பொடியில் கஞ்சி காய்ச்சி கொடுத்தால், சரியான எடையில் போஷாக்கோடு குழந்தை வளரும்.

* மிகக் குறைந்த விலையில் சத்தான, சுவையான, ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக நமக்குக் கிடைக்கும் கேழ்வரகில் கஞ்சிவைத்துக் குடிக்கலாம். இதற்கு இணை, ஏதும் இல்லை.

* கேழ்வரகில் `மித்தியானைன்’ (Methionine) எனும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருப்பது, இதன் கூடுதல் சிறப்பு. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப் பராமரிக்கவும் இந்தப் புரதச்சத்து மிக அவசியம். `மித்தியானைன்’ அதிகம் உள்ள ஒரே தானியம் கேழ்வரகு மட்டும்தான். ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட இது மிகவும் உதவும்.

* சமீபத்திய ஆய்வுகளில், மூட்டுவலி முதல் ஆண்மைக்குறைவு வரை பல நோய்களுக்கு கேழ்வரகு உணவு, நல்ல பலன் அளிப்பதாகத் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக, வயோதிக நோய்களுக்கு!

கேழ்வரகு அடை

* கஞ்சியில் தொடங்கி, தோசை, இட்லி, பொங்கல், அடை, புட்டு, இடியாப்பம், களி, கூழ், ஊத்தாப்பம் வரை கேழ்வரகில் சமைக்கலாம்.

* கேழ்வரகு உணவுடன் பாலோ, மோரோ, நெய்யோ சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

கேழ்வரகு தித்திப்பால்
செய்முறை:

சிறிது கேழ்வரகை ஊறவைத்து, அதில் பால் எடுத்து, அத்துடன் பனைவெல்லம் சேர்க்க வேண்டும். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமே கொஞ்சமாக நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்தால், அது கேழ்வரகுத் தித்திப்பால்.

* குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாமல் போகும்போது, ஏழாம் மாதத்தில் திட உணவைத் தொடங்குவது வழக்கம். அந்தப் பருவத்தில் இருந்து, உணவில் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

வீட்டுச் சமையலறைக்கு கேழ்வரகை அழைத்து வாருங்கள். ஆரோக்கியம் என்றும் நம் வசம்!

News

Read Previous

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

Read Next

அயோத்தி ராமன் அழுகிறான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *