மற்ற உலோகங்களுக்கு இல்லாத கிராக்கி தங்கத்திற்கு மட்டும் ஏன்?

Vinkmag ad
2006-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன்

மற்ற உலோகங்களுக்கு இல்லாத கிராக்கி தங்கத்திற்கு மட்டும் ஏன்?

பண்டைக் காலத்திலிருந்தே இந்தப் பளபளப்பான மஞ்சள் உலோகம் (மஞ்சள் பிசாசு என்று கூட இதை சிலர் அழைப்பார்கள்) மனிதர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்து வந்திருக்கிறது. செல்வத்தின் அடையாளமாகவும் காலகாலமாக இது இருந்து வருகிறது.

ஒரு பொருள் மதிப்பு மிகுந்ததாக செல்வாக்குடன் இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அது மிக தாராளமாகக் கிடைத்துவிடக் கூடாது ! ( நெப்போலியன் காலத்தில் அலுமினியம் மதிப்பு மிகுந்த உலோகமாக இருந்திருக்கிறது. அது தாராளமாகக் கிடைக்கத் தொடங்கிய பிறகு அதன் மதிப்பு கீழே இறங்கி விட்டது).  இரண்டாவது, அது நமக்கு எப்படிப் பயன்படுகிறது என்பது ; மூன்றாவதாக அது நம்மைக் கவரக் கூடியவகையில் அழகாக இருக்க வேண்டும் ; நான்காவதாக, அது காற்றினாலோ தண்ணீரினாலோ பாதிக்கப்படக் கூடாது.

தங்கத்திற்கு இந்த நான்கு கல்யாண குணங்களும் அற்புதமாக அமைந்து விட்டன. அது மிகச் சிறிய அளவில் அரிதாகவே கிடைக்கிறது. பூமிக்கடியில் கிடைக்கும் அதனுடைய தாதுப் பொருட்களிடமிருந்து அதைப் பிரித்து எடுப்பது எளிதானதல்ல. அதனுடைய நிறமும் அழகும் கண்ணைப் பறிக்கக் கூடியதாக இருக்கிறது.  அது வெப்பம், குளிர்ச்சி, காற்று, ஈரப்பதம் போன்ற எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. `தகதக தங்க வேட்டை என்றால் மக்கள் அலைமோதுகின்றனர். பல அமிலங்கள் கூட தங்கத்தைப் பாதிப்பதில்லை. அக்வா ரிஜியா (நைட்ரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் இரண்டின் கலவை) என்ற திரவத்தில் மட்டும் அது கரைந்து விடும்.  மேற்கண்ட காரணங்களினால் தங்கம் விலை உயர்ந்த உலோகமாக உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்து கொண்டு நம்மை மிரட்டுகிறது. உலகத்தில் தயாராகும் மொத்த தங்க உற்பத்தியில் பெரும்பகுதி ஆபரணங்கள் செய்வதற்கே பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டுக் கோவில்களில் உள்ள கடவுள் சிலைகள் தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. இதில் ஆண் கடவுள், பெண் கடவுள் என்ற பேதம் இல்லை. தங்கத்தின் விலை பொதுவாக ஏறிக்கொண்டே வருவதால் ஒருவரின் தங்கக் கையிருப்பு அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. சில மருந்து வகைகள் செய்வதற்கும் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. 1914-ஆம் ஆண்டு வரை பல்வேறு நாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்வதற்கு தங்கம்தான் அடிப்படையாக இருந்தது. இன்றும் கூட, ஒரு நாட்டின் தங்கக் கையிருப்பு முக்கியமானதாகவே இருந்து வருகிறது.

News

Read Previous

பேரன்பு

Read Next

பகத்சிங் – விடுதலை எழுச்சியின் விடிவெள்ளி

Leave a Reply

Your email address will not be published.