பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி வெற்றிபெற…

Vinkmag ad
பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி வெற்றிபெற…
பேராசிரியர் கே. ராஜு

இது 2018-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை. இன்றும் பொருத்தமாகவே இருக்கிறது.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஆர். வாசுதேவன் 2018-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். அவரும் அவரது குழுவினரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உறுதியான சாலை போடுவதற்குப் பயன்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்ததற்காகவே இந்த விருது.

பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சுழலை மாசுபடுத்தாமல் மறுசுழற்சி செய்வது ஒரு நன்மை எனில் சாலைகள் போட தாருடன் கலந்து பயன்படுத்துவதால் உறுதியான சாலைகள் கிடைப்பது இரண்டாவது நன்மை. ஆனால் நம் நாட்டின் துயரமே இம்மாதிரியான கண்டுபிடிப்புகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் எந்தவித ஆர்வமும் காட்டாமலிருப்பதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன் அரசிடமிருந்து 3.75 லட்ச ரூபாய் உதவியைப் பெற்று சுதேசி பெண்கள் சுயஉதவிக் குழுவினர் (SHG) மதுரை ஐயர்  பங்களா அருகில் குப்பையிலிருந்து துகள்களாக்கப்பட்ட பிளாஸ்டிக்கைத் தயாரிக்க ஒரு சிறு ஆலையை நிறுவினர். டாக்டர் வாசுதேவன் குழுவினர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தின் மூலம் இத்துகள்களை தாருடன் கலந்து சாலைகள் போடப் பயன்படுத்த முடியும். மதுரை மாவட்டத்தில் சுதேசி எஸ்எச்ஜி குழுவினர் மட்டுமே இவ்வகையான பணியைச் செய்து வருகின்றனர். ஆனால் அரசிடம் பிளாஸ்டிக் துகள்களை விற்பது அவ்வளவு எளிதாக இல்லை. அவற்றை வாங்கிக் கொள்ள அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் அக்குழுவின் செயலாளர் ஜி.போதி லட்சுமி.

“மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையும் மதுரை மாநகராட்சியும் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு சில தடவைகள் மட்டுமே பிளாஸ்டிக் துகள்களை வாங்கிக் கொண்டனர். ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியருக்கோ மாநகராட்சி கமிஷனருக்கோ மனு கொடுக்க வேண்டியுள்ளது.. அது மட்டுமல்ல அடிக்கடி நினைவூட்டவும் வேண்டியுள்ளது. அதன் பிறகு ஒரு சிறிய அளவில் துகள்களை வேண்டாவெறுப்பாக வாங்கிக் கொள்வார்கள். மாவட்ட நிர்வாகம் 2017 பிப்ரவரியில் துகள்களை வாங்கிக் கொண்டதோடு சரி” என்று தன் வேதனையைக் கொட்டுகிறார் போதி லட்சுமி.

“பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு கிலோ 7-லிருந்து 10 ரூபாய் வரை கொடுத்து வாங்கி மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் துகள்களை ஒரு கிலோ 30 ரூபாய்க்கு எஸ்எச்ஜி விற்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரிப்பதிலும் தூளாக்குவதிலும் கணிசமான அளவில் இழப்பு ஏற்படுகிறது. ஒரு கி.மீ. சாலை போட தாருடன் ஒரு டன் பிளாஸ்டிக் துகள்கள் தேவைப்படும்” என்று கூறுகிறார் போதி லட்சுமி.

“திடக் கழிவு மேலாண்மை பற்றி அதிகம் பேசப்பட்டாலும் மதுரை மாநகராட்சியிடமிருந்தும் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும் மறுசுழற்சி செய்வதற்காக பிளாஸ்டிக் கழிவுகளைப் பெறுவதில் மிகுந்த சிரமம் உள்ளது. மொத்தக் கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரிப்பதும் எளிதல்ல. சானிட்டரி நாப்கின்களையும் பிற கழிவுகளையும் பிளாஸ்டிக் குப்பைப் பைகளில் பலர் சேர்த்து விடுகின்றனர். கடின உழைப்புக்குப் பிறகும் எங்களது மறுசுழற்சி ஆலையிலிருந்து ஆலை நடத்தத் தேவையான பணத்தை ஈட்டுவது சிரமமாகவே உள்ளது. டாக்டர் வாசுதேவன் அவர்களின் முயற்சியினால் மகாராஷ்ட்ராவுக்கும் கேரளாவுக்கும் பிளாஸ்டிக் துகள்களை எங்களால் விற்க முடிந்தது” என்கிறார் எஸ்எச்ஜி குழுவினரில் ஒருவரான எம்.வளர்மதி.

“பல மாநிலங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்று சாலைகள் போடத் தொடங்கிவிட்டாலும் தமிழ் நாட்டில் அண்மைக் காலத்தில் இதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பல சாலைகள் மோசமான நிலையில்  உள்ளன. (மற்ற மாவட்டங்களில் மட்டும் என்ன வாழ்கிறதாம்?). எங்களது கண்டுபிடிப்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்டால்  பத்மஸ்ரீ விருது கிடைத்ததைக் காட்டிலும்  நான் மகிழ்ச்சியடைவேன். காரணம், அப்படி பயன்படுத்தப்பட்டால் சாலைகள் மேலும்  உறுதியாகும். பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பதிலிருந்து தடுக்கப்பட்டு அவற்றை மறுசுழற்சி செய்வதும் நடந்துவிடும். இவ்விரண்டு விதங்களில் மக்களுக்கு அது நன்மை பயக்கும் என்பதைப் புரிந்துகொள்ள அதிக விளக்கம் தேவையில்லை”  என்கிறார் டாக்டர் வாசுதேவன்.

மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மேற்கண்ட நிலைமை இருப்பது உண்மைதான் என ஏற்றுக் கொள்கிறார். அனைத்து சாலை போடும் திட்டங்களிலும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க உடனடியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியும் அளிக்கிறார்.

பார்க்கலாம்.

(2018 ஜனவரி 28 ஆங்கில இந்து நாளிதழில் திரு. பொன் வசந்த் தந்துள்ள அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டது)

News

Read Previous

ஆற்றங்கரை

Read Next

கேள்வியும் நானே பதிலும் நானே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *