கால்நடை வளர்ப்பு

Vinkmag ad

கால்நடை வளர்ப்பு
இனப்பெருக்க
மேலாண்மை

கால்நடைகளில் மலட்டுதன்மை – காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுதன்மை இந்திய பால் பண்ணைத்தொழிலில், பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணமாகும். சினைபிடிக்காத கறவை மாட்டினை பராமரிப்பது பால்பண்ணை விவசாயிகளுக்கு பொருளாதார சுமையாகும். பெரும்பாலான நாடுகளில் சினை பிடிக்காத மாடுகளை இறைச்சிக்காக அனுப்பி விடுவார்கள்.

கறவை மாடுகளில், 10 – 30 % பால் கறவை காலத்தினை மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகள் பாதிக்கிறது. கறவை மாடுகளில் கருவுறும் தன்மையினை அதிகரிக்கவும், கன்று ஈனும் விகிதத்தினை அதிகரிக்கவும் காளை மற்றும் கறவை மாடுகளுக்கு முறையாக தீவனத்தினை அளித்து நோய்கள் இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.

சினைபிடிக்காத்தற்கான காரணங்கள்

கறவை மாடுகள் சினைபிடிக்காததற்கு காரணங்கள் பல உள்ளன. மலட்டுதன்மை அல்லது கருவுறாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து குறைவு, தொற்று நோய், பிறவிக்கோளாறுகள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் கருமுட்டை வெளிவருவதில் குறைபாடுகள் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கும்

சினைப்பருவ சுழற்சி

பசு மற்றும் எருமை மாடுகளில் சினைப்பருவ சுழற்சியானது 18-21 நாட்களுக்கு ஒரு முறை 18-24 மணி நேரம் இருக்கும். ஆனால் எருமை மாடுகளில் இந்த சுழற்சிக்கான அறிகுறிகள் எதுவும் அதிகமாக வெளிப்படுத்தப்படாமல் இருக்கும். சினைப்பருவ சுழற்சி காலத்தில் விவசாயிகள் மாட்டினை காலையிலிருந்து இரவு வரை 4-5 முறை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். சினைப்பருவ காலத்தில் இருக்கும் கறவை மாட்டினை சரியாக கண்டறியாமல் இருப்பது மாடுகளில் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணமாகும். சினைப்பருவ சுழற்சி அல்லது சினை பருவ காலத்தில் இருக்கும் கறவை மாடுகளை கண்டறிதலில் மிகத் திறமை அவசியம். எவர் ஒருவர் தன் கறவை மாடுகளை பற்றிய பதிவேடுகளை பராமரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு கறவை மாடு வளர்ப்பில் நல்ல இலாபம் கிடைக்கும்.

அறிகுறிகள்

மாடுகள் கத்திக்கொண்டே இருக்கும்.மற்றொரு மாட்டின் மீது தாவும்.கண்ணாடி நிறத்தில், கெட்டியாக திரவம் அறையிலிருந்து வழிந்தோடும்.தினமும் கொடுக்கும் பாலைவிட, பாலின் அளவு சற்று குறைவாகவே இருக்கும்.மிகுந்த சுறுசுறுப்பாக இருக்கும்.மாடுகள் வளர்ப்போர் மேற்சொன்ன சினை பருவ அறிகுறிகளை நன்கு தெளிவுற தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை வராமல் இருக்க சில துளிகள்

📌கறவை மாடுகள் சினைப்பருவ காலத்தில் இருக்கும் போதே சினை ஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்க்கவேண்டும்.
📌சினைப்பருவத்திற்கு வராத மாடுகளை கால்நடை மருத்துவர் மூலம் சோதித்து அதற்கு மருநத்துவம் அளிக்க வேண்டும்.
📌மாடுகள் ஆரோக்கியத்தினை பேண 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். சரியான இடைவெளியில் செய்யப்படும் குடற்புழு நீக்கத்திற்கான சிறு முதலீடு, பெரும் இலாபத்தை அளிக்கும்.கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் சக்தி, புரதம், கனிமம், மற்றும் விட்டமின்கள் கலந்த சரிவிகித தீவனமாக இருக்க வேண்டும்.
📌கறவை மாடுகளுக்கு சரிவிகித தீவனத்தினை கொடுப்பதால் அவற்றின் கருவுறும் தன்மை, ஆரோக்கியமான சினை காலம், பாதுகாப்பான கன்று ஈனல், குறைவான தொற்றுநோய்களின் தாக்கம் மற்றும் ஆரோக்கியமான கன்று பெறுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
📌கிடேரி கன்றுகளுக்கு அவற்றின் இளம் வயதிலிருந்தே சரிவிகிதத் தீவனத்தினை அளித்தால் சரியான வயதில் சரியான எடையுடன் (230-250 கிலோ) இனப்பெருக்கத்திறனை அடையும். இதன் மூலம் அவற்றின் கருவுறும் தன்மை அதிகரித்து இனப்பெருக்கத்திற்கும் ஏற்றதாகவும் இருக்கும்
📌சினையாக இருக்கும் போது அதிகமான அளவு பசுந்தாள் தீவனம் அளித்தால் பிறக்கும் கன்றுகளில் குருட்டுத் தன்மையை தடுப்பதுடன் கன்று ஈன்றவுடன் நஞ்சுகொடி கறவை மாட்டின் கருப்பையிலிருந்து போடாமல் இருப்பதையும் தடுக்கும்.
📌மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கும் போது அந்த காளைகளின் இனப்பெருக்கத்திறன் பற்றிய விவரங்களை கேட்டறிந்து பின் மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கவேண்டும்.
📌மாடுகளை சுகாதாரமான முறையில் இனவிருத்தி செய்து, சுகாதாரமான இடத்தில் கன்று ஈனச்செய்வதன் மூலம் அவற்றின் கருப்பையில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
📌மாடுகளுக்கு சினை ஊசி போட்டு 60-90 நாள் கழித்து கால்நடை மருத்துவர் மூலம் சினைப்பரிசோதனை செய்து மாடுகள் சினையாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் .
📌மாடுகள் கருவுற்று இருந்தால், பின்னர் மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தாது. பசுவுக்கு சினைக்காலம் 280 நாட்கள், எருமை மாட்டிற்கு 300 நாட்கள்.
📌சினைக்காலத்தின் கடைசி கட்டத்தில் தேவையற்ற அயற்சிகள் மற்றும் ஓரிடத்திலிருந்து மாடுகளை மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லுதல் கூடாது.
📌மற்ற மாSulaiman Haryana:
டுகளிலிருந்து சினையுற்ற மாடுகளை தனியாக பிரித்தது வைத்து நன்றாக தீவனமளித்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.
📌கன்று பிறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன் பால் கறப்பதை நிறுத்தி போதுமான தீவனம் மற்றும் உடற்பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் சினை மாட்டின் உடல் நலம் பராமரிக்கப்படுவதுடன், சரியான உடல் எடையில் நலமான கன்று ஈனுதல், குறைந்த நோய் தொற்று போன்ற நன்மைகளும் கிடைக்கும். இதனுடன் கன்று ஈன்ற பின்பு மாடுகள் விரைவில் சினைப்பருவ சுழற்சியினை அடைவதற்கும் வழிவகுக்கும்.
📌கறவை மாடு கன்று ஈன்று அடுத்த 4 மாதங்களில் அல்லது 120 நாட்களில் மீண்டும் சினைஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்த்தல் போன்ற முறைகளின் மூலம் இனப்பெருக்கத்திற்கு அவற்றை உட்படுத்தலாம். இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு கன்று என்ற இலாபகரமான பால்பண்ணைத் தொழிலை நடத்தலாம்.

ேலும் தகவல் அறிய
விரிவாக்க கல்வி இயக்ககம், TANUVAS. சென்னை -600051, தமிழ்நாடு,
தொலைபேசி 044-25551586

News

Read Previous

சிறுநீர் பாதையில் எரிச்சல் ,குத்தல்,அடைப்பு நீங்க…

Read Next

மருத்துவ முறையை மாற்றுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *