மருத்துவ முறையை மாற்றுங்கள்…

Vinkmag ad

மருத்துவ முறையை
மாற்றுங்கள்…

டாக்டர்…
வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி
வாய் திறப்போம்!

நாக்கை நீட்டு என்பீர்கள்!
கல்கத்தா காளியாய்
நாக்கை நீட்டுவோம்!

முதுகைத் திருப்பி
மூச்சிழு என்பீர்கள்!
அப்போது தான்
உண்மையாய் சுவாசிப்போம்!

அவ்வளவு தான்!
அஞ்சேல் என்று அருள் வாக்கு சொல்வீர்கள்!

வாசிக்க முடியாத கையெழுத்தில்
வாயில் வராத பெயரெழுதி
காகிதங்கிழிப்பீர்கள்!

மூன்று வேளை… என்னும்
தேசிய கீதத்தை
இரண்டே வார்த்தையில்
பாடி முடிப்பீர்கள்!

போதாது டாக்டர்!

எங்கள் தேவை
இதில்லை டாக்டர்!

நோயாளி, பாமரன்!
சொல்லிக்கொடுங்கள்!

நோயாளி, மாணவன்!
கற்றுக் கொடுங்கள்!

வாய்வழி சுவாசிக்காதே!
காற்றை வடிகட்டும் ஏற்பாடு
வாயிலில்லையென்று
சொல்லுங்கள்!

சுவாசிக்கவும்
சூத்திரமுண்டு!
எத்துணை பாமரர்
இஃதறிவார்?

சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரை தொட வேண்டும்!
தரையெங்கே தொடுகிறது?
தலை தானே தொடுகிறது!

சொல்லிக் கொடுங்கள்!

சாராயம் என்னும்
திரவத்தீயைத் தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!

கல்லீரல் என்பது கழுதை!
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது!
பயமுறுத்துங்கள்!

ஒருகால்வீக்கம்?
உடனேகவனி!
யானைக்காலின் அறிகுறி!

இரு கால் வீக்கம்?
இப்போதே கவனி!
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்!

வாயிலென்ன
ஆறாதப்புண்ணா?

மார்பகப் பரப்பில்
கரையாதக் கட்டியா?

ஐம்பது தொட்டதும்
பசியேயில்லையா?

சோதிக்கச் சொல்லுங்கள்!

அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னாவெழுதியிருக்கலாம்!

நோயாளியை
துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்!

நோயொன்றும் துக்கமல்ல!

அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது!

சர்க்கரையென்பது
வியாதியல்ல!
குறைபாடென்று கூறுங்கள்!

செரிக்காதவுணவும் எரிக்காத சக்தியும்
சுடுகாட்டுத்தேரின் சக்கரங்களென்று
சொல்லுங்கள் டாக்டர்!

ஊமை ஜனங்களிவர்
உள்ளொளியற்றவர்!
பிணி வந்து இறப்பினும்
முனி வந்து இறந்ததாய் முணங்குவர்!

சொல்லிக் கொடுங்கள்!

யோகம் என்பது
வியாதி தீர்க்கும் வித்தையென்று
சொல்லுங்கள்!

உயிர்த்தீயை உருட்டியுருட்டி
நெற்றிப் பொட்டில் நிறுத்தச்சொல்லுங்கள்!

உணவு முறை திருத்துங்கள்!

தட்டில் மிச்சம் வைக்காதே!
வயிற்றில் மிச்சம்வை!

பசியோடு உட்கார்!
பசியோடு எழுந்திரு!

சொல்லுங்கள் டாக்டர்!

அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்!

பச்சையுணவுக்கு
பாடம் நடத்துங்கள்!

மருந்தையுணவாக்காதே!
உணவை மருந்தாக்கு!

மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியேவா!

கோணாத ஒருவன்
கூனனானான்! ஏனாம்?

அவன் டப்பாவுணவுகளையே
உட்கொண்டதுதானாம்!

ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை! ஏனாம்?

அவன் உப்பில்லாவுணவுகளையே
உட்கொண்டதுதானாம்!

ஆரோக்கிய மனிதனுக்குத்தேவை
அரைகிராம் உப்புதானே!

மனிதா…

உப்பைக் கொட்டிக்கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே!
செடிகொடியா நீ?

சிந்திக்கச்சொல்லுங்கள்!

உண்மை இதுதான்!

மனிதனைத்தேடி மரணம் வருவதில்லை!
மரணத்தைத் தேடியே மனிதன் போகிறான்!

டாக்டர்…
எல்லா மனிதரையும்
இரு கேள்வி கேளுங்கள்!

“பொழுது
மலச்சிக்கலில்லாமல்
விடிகிறதா?

மனச்சிக்கலில்லாமல்
முடிகிறதா?”

-வைரமுத்து

News

Read Previous

கால்நடை வளர்ப்பு

Read Next

தமிழ்க் கற்றல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *